Sunday, January 13, 2008

அறுவடைப் பெருநாள் அல்லது உழவர் பண்டிகையான பொங்கல் எப்படிப் புத்தாண்டாகும்..?!



தமிழர்கள் உட்பட இந்திய உபகண்ட மக்களின் உணவுத் தேவைகளை நெல்லே அதிகம் பூர்த்தி செய்துள்ளது. இதற்கு ஒளவையார் காலத்துப் பாடல்களே சான்று. "வரப்புயர நீருயரும் நீருயர நெல்லுயரும்.. நெல்லுயரக் கோன் உயர்வான்" என்று..அன்றே ஒளவை உழவுத்தொழிலின் முக்கியத்துவத்தை அது மக்கள் மத்தியில் கொண்டுள்ள செல்வாக்கை எடுத்துச் சொல்லிவிட்டார்.

நெல்லை மக்கள் பெரும்போகத்தின் (மானாவாரி) போதே அதிகம் பயிருடுகின்றனர். காரணம் பெரும்பாலும் அவர்களை மழையை எதிர்பார்த்து இப்பயிர் செய்கையை ஆரம்பிப்பதால். இலங்கை மற்றும் தென்னிந்தியா வாழ் தமிழ் மக்கள் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காற்றின் மூலமே அதிக மழை வீழ்ச்சியைப் பெறுவதால் புரட்டாதி தொடங்கி மார்கழி வரையான மாரி காலத்தை உள்ளடக்கி நெல்லினைப் பயிருட்டு.. ஏறத்தாழ தை மாதத்தில் அறுவடை செய்து கொள்கின்றனர்.



பாரம்பரிய நெற்பயிற் செய்கை வடிவம்.

நெற்பயிர் என்பது சூரிய ஒளியைக் கொண்டு அதன் இலைகளில் உள்ள பச்சையயுருமணிகள் எனும் கலப் புன்னங்கத்ததில் நடக்கும் ஒளித்தொகுப்பு எனும் செயற்பாட்டின் மூலம் சூரிய ஒளிச்சக்தியை இரசாயன சக்தியாக (குளுக்கோஸ் அப்புறம் மாப்பொருள்)மாற்றுகிறது. நெல்மணியை அரசியாக்கி அந்த மாப்பொருளையே நாம் உணவாக்கிக் கொள்கின்றோம். அந்த மாப்பொருளே எமது உடலியக்கத்துக்கு அவசியமான சக்தியின் பிரதான முதலாக உள்ளது.

இதனடிப்படையில் தான் தைத் திங்களில்,பயிர் விளைநிலங்களில் நல்ல விளைச்சலைப் பெற்ற மகிழ்ச்சியில் மக்கள் உழவர் திருநாளை புதுத்தானியங்கள் கொண்டு பொங்கலிட்டு சூரியனுக்கு நன்றி செலுத்தி, உறவுகளுக்கு உணவு பரிமாறி.. பாரம்பரிய பொழுதுபோக்கு விளையாட்டுக்களை நடத்திக் கொண்டாடுகின்றனர்.

அவர்கள் இதைப் புதிய ஆண்டின் தொடக்கமாகக் கருதி கொண்டாடுவதில்லை. பொங்கல் பண்டிகை முழுக்க முழுக்க உழவர்களின் திருநாள்.



தமிழ்நாடும் தமிழர்கள் வாழும் இலங்கையின் ஒரு பகுதியும். (தமிழ்நாடு பற்றிய மேலதிக தகவல் இங்கு)

தமிழர்கள் மட்டுமன்றி உழவுத் தொழில் செய்யும் பிற தென்னிந்திய மாநில மக்களும் இந்தப் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். அதுமட்டுமன்றி இந்திய உபகண்டத்தோடு பூமியின் மத்திய கோட்டை அண்மித்த நாட்டு மக்களும் இவ்வகையான உழவர் பண்டிகையைக் கொண்டாடும் குறிப்புக்களும் உண்டு.

"While Pongal is predominantly a Tamil festival, similar festivals are also celebrated in several other Indian States under different names. In Andhra Pradesh, Kerala, and Karnataka, the harvest festival Sankranthi is celebrated. In northern India, it is called Makara Sankranti. In Maharashtra and Gujarat, it is celebrated on the date of the annual kite flying day, Uttarayan. It also coincides with the bonfire and harvest festival in Punjab and Haryana, known as Lohri. Similar harvest festivals in the same time frame are also celebrated by farmers in in Burma, Cambodia, and Korea."

http://en.wikipedia.org/wiki/Pongal

பண்டைய காலத்தில் தமிழர்களின் பிரதான தொழிலாக உழவுத் தொழில் இருந்த காரணத்தால்.. இப்பண்டிகை தமிழர்களின் பண்டிகையாக இனங்காணப்பட்டு கொண்டாடப்படுகிறது. ஆனால் தமிழர்கள் மட்டுமே உழவர் திருநாள் அல்லது அறுவடைப் பெருநாளைக் கொண்டாடுகிறார் என்பது தவறான ஒரு எண்ணக்கரு.

உழவுத் தொழிலின் சிறப்பினைச் செப்பி.. அந்த தொழில்மூலம் பெறப்பட்ட நல்ல விளைச்சல் கண்டு மகிழ்ந்து அவ்விளைச்சலுக்கு உதவிய சூரியனுக்கு (இயற்கைக்கு) பொங்கலிட்டு நன்றி செலுத்தி ஊர் கூடி உணவுண்டு களித்தலே பொங்கலின் சிறப்பு ஆகும். அதுவே தமிழர் பாரம்பரியமும் ஆகும்.



மாட்டுப் பொங்கல் நிகழ்வில் கெளரவிக்க சோடிக்கப்பட்டுள்ள காளை.

மறுநாள் மாட்டுப் பொங்கல் என்று உழவுத் தொழிலுக்கு உதவிய கால்நடைகளுக்குக் கூட பொங்கலிட்டு நன்றி செய்யும் நிகழ்வைச் செய்து தமிழர்கள் தாங்கள் பிற உயிர்கள் மீதும் இரக்கம் கொண்டவர்களாக, அவற்றின் நலனில் அக்கறை உள்ளவர்களாக.. அவற்றுக்கு நன்றி செய்யும் பரோபகாரிகளாக இருந்ததையும், இருப்பதையும் வெளிக்காட்டியே வந்துள்ளனர்.

இவ்வளவு தனித்தன்மைகளைக் கொண்ட தைப்பொங்கல் பண்டிகையை.. இன்று தமிழர்களின் புத்தாண்டாக பிரகடனம் செய்வதால் விளையப் போகும் நன்மைகள் என்ன என்று பார்த்தால்.. வெறும் குழப்பங்களே என்பதுதான் முடிவாக இருக்க முடியும்.

ஏலவே ஆங்கிலேய முறைப்படி ஜனவரி 1 இல் புத்தாண்டு உதயமாகிறது. உலக மக்கள் அனைவருக்காகவும் அது உதயமாகிறது. அதற்குள் 14 நாள் கழித்து தமிழருக்கு என்று ஒரு புத்தாண்டைப் பிறப்பிப்பதனால் எந்த நிர்வாகப் பயனும் கிடைக்கப் போவதில்லை. உலகம் முழுவதும் அரச, தனியார் நிர்வாகங்கள் என்பது ஆங்கிலேய கால-அட்டவணைப்படியே நிகழ்கிறது. அப்படி இருக்க ஏன் இந்த மாற்றம்..??! இது உண்மையில் அவசியம் தானா..??!

உண்மையில் இது சில அரசியல் நோக்கங்களுக்காக முன்மொழியப்பட்டுள்ளது என்றே தோன்றுகிறது. பொங்கல் திருநாளின் தனித்துவத்தை இந்தப் புத்தாண்டுப் பிரகடனம் இன்னும் ஒரு நூறாண்டு காலத்துள் தலை கீழாக்கி.. சென்னை மெரினா கடற்கரையில் மதுபானம் அருந்தும் புத்தாண்டாகக் கொண்டாடக் கூடிய நிலையை தோற்றுவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதனால் தமிழர்களின் பாரம்பரிய தைப் பொங்கல் தனது தனித்துவத்தை இழந்து அதன் அடையாளம் தொலைந்து அருகும் நிலையே தோன்றும்.



பொங்கல் படையல் பொருளான கரும்பை விட துள்ளியமாக வெளிப்படும் பொங்கல் திரைப்பட போஸ்டர்கள்.

இன்று கூட நகரமயமாக்கலின் விளைவால் பொங்கல் திருநாளின் பெறுமதி புதிய சினிமாப் படங்களை தயாரித்து வெளியிடுதல் என்ற நிலைக்குள் மட்டுப்பட்ட அளவிலேயே நகர மக்களிடம் இருக்கிறது. பல நகர வாழ் மக்கள் பொங்கலின் தனித்துவச் சிறப்பை அறியாதவர்களாகவே பொங்கலைக் கொண்டாடியும் வருகின்றனர்.

கிராமிய மக்கள் குறிப்பாக உழவுத் தொழிலில் ஈடுபடும் மக்களே இன்றும் உணர்வு பூர்வமா பொங்கலின் தனிச் சிறப்பறிந்து அதைக் கொண்டாடி வருகின்றனர். இப்படியான ஒரு நிலையில்.. பொங்கலோடு புத்தாண்டு என்பதையும் புகுத்தி பொங்கலின் தனிச் சிறப்பை சீரழிக்கப் போகின்றனரே தவிர தமிழர்களின் பாரம்பரியத்தை பாதுகாக்கப் போகின்றார்கள் என்பது சுத்த பித்தலாட்டமாகவே தென்படுகிறது.



பாதுகாப்பற்ற சூழ்நிலைகளின் கீழ் அனுமதிக்கப்படும் தமிழக காளை அடக்கும் நிகழ்வுகள்.

ஏலவே தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு (ஏறு தழுவதல்)என்னும் காளை அடக்குதல் போட்டியை சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தற்காலத்துக்கு ஏற்ப அதன் பாரம்பரியத் தன்மை இழக்கப்படாது மாற்றி அமைக்க முற்படாமையால் அது இந்திய உச்ச நீதிமன்றத் தடைக்கு இலக்காகியுள்ளது. இதற்காக உச்ச நீதிமன்றத்தைக் குறைக் கூறிப் பயனில்லை. ஆண்டுகள் தோறும் ஜல்லிக்கட்டால் மனித மரணங்களும் காயங்களும்.. மிருக வதைகளும் தொடர்ந்ததை கவனிக்காதிருந்த தமிழக அரசுகளே இவற்றுக்குப் பொறுப்பாகும்.



பாதுகாப்பான முறையில் நிகழும் ஸ்பானிஸ் தேச காளை அடக்கும் நிகழ்வுகள்.

இதே போன்ற போட்டிகள் ஸ்பெயின், மெக்சிக்கோ போன்ற இடங்களில் நடைபெறும் போது அவர்கள் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கி தமது பாரம்பரிய அடையாளத்தை நிலைநிறுத்துவதை இனம் கண்டும் தமிழக அரசுகள் பேசாமடைந்தைகளாக காலத்தை வீணடித்ததாலேயே இன்று தமிழரின் வீரப் பாரம்பரியம் நீதிமன்றத் தடைக்கு இலக்காகியுள்ளது. ஆனால் இந்த உண்மையைக் கூட புரியாது தமிழகத்தில் ஒரு தரப்பினர் பார்பர்னம்.. அது இதென்று பழைய பல்லவிகளைப் பாடிக் கொண்டிருக்கின்றனரே தவிர தடையை நீக்க செய்ய வேண்டிய ஏற்பாடுகளை உத்தரவாதங்களை செய்ய முற்படவோ அவை குறித்துச் சிந்திக்கவோ இல்லை.

வெறும் அரசியல் நோக்கோடு செய்யும் சில நகர்வுகள் நீண்ட காலப் போக்கில் தமிழரின் பாரம்பரிய இன அடையாளத்தையே இந்திய உபகண்டத்தில் இருந்து அகற்றிவிடுமோ என்ற அச்சம் இன்று எழுந்திருக்கிறது.

இந்த நிலையிலேயே இவ்வாண்டுக்கான தைப்பொங்கலை வரவேற்க வேண்டிய சூழ்நிலை தோன்றியுள்ளது. ஈழத்திலோ போர் மேகம் தைப்பொங்கலை குருதிப் பொங்கலாக்கிக் கொண்டிருக்க தமிழகத்திலோ அது வேடிக்கைப் பொங்கலாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்படிச் சீரழிகிறது.. தமிழரின் பாரம்பரியம். இதுதான் தமிழரின் தலைவிதியோ என்னோ..!

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 9:58 AM

10 மறுமொழி:

Blogger Sri Rangan செப்பியவை...

//உண்மையில் இது சில அரசியல் நோக்கங்களுக்காக முன்மொழியப்பட்டுள்ளது என்றே தோன்றுகிறது. பொங்கல் திருநாளின் தனித்துவத்தை இந்தப் புத்தாண்டுப் பிரகடனம் இன்னும் ஒரு நூறாண்டு காலத்துள் தலை கீழாக்கி.. மெரினா பீச்சில் மதுபானம் அருந்தும் புத்தாண்டாகக் கொண்டாடக் கூடிய நிலையை தோற்றுவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதனால் தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் தனது தனித்துவத்தை இழந்து அதன் அடையாளம் தொலைந்து அருகும் நிலையே தோண்றும்.//


நல்ல பதிவு.தங்கள் கருத்துகள் பலவற்றுள் உடன்பாடுடைய கருத்துக்கள் விரவிக்கிடக்கிடறது!

Sun Jan 13, 11:25:00 AM GMT  
Blogger kuruvikal செப்பியவை...

நன்றி சிறீரங்கன். உங்களின் கருத்துக்களையும் பதியுங்கள். சில அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் ஆதாயத்துக்கு அல்லது தங்களின் தனிப்பட்ட பெயர் வரலாற்றில் நிலைக்க வேண்டும் என்றதற்காக அரச அதிகாரத்தில் உள்ள போது மேற்கொள்ளும் மலினத்தனமான நடவடிக்ககயா இது என்ற கேள்வி கூட எழுகிறது. அரசியல் செல்வாக்கை அரச அதிகார பலத்தைப் பயன்படுத்தி அறிவியல் சமூகத்தையும் விலைக்கு வாங்கி இவ்வகையான காரியங்களில் ஈடுபடுவதை கண்ணை மூடிக்கொண்டு மக்கள் வேடிக்கை பார்ப்பதும் நிகழவே செய்கிறது..!

Sun Jan 13, 11:34:00 AM GMT  
Anonymous Anonymous செப்பியவை...

really an ill-advised move; perhaps the present tamil calender starting from chithirai along with newly coined or translated tamil names would serve the purpose.

Sun Jan 13, 12:20:00 PM GMT  
Blogger Raman MP செப்பியவை...

really an ill-advised move; perhaps the present tamil calender along with newly coined tamil titles or translated versions would be ideal.

its surprising why tamil translations have not been generated for the existing sanscrit terms. should we celebrate or accept sarvajithu for starting chithirai ?

Sun Jan 13, 12:27:00 PM GMT  
Blogger kuruvikal செப்பியவை...

Thanks for ur comments.

Sun Jan 13, 05:29:00 PM GMT  
Anonymous Anonymous செப்பியவை...

தெளிவான விளக்களுடன் உள்ளது உங்கள் கட்டுரை.

Tue Jan 15, 10:43:00 AM GMT  
Anonymous Anonymous செப்பியவை...

தமிழர்களின் புத்தாண்டு தைப் பொங்கல் தினத்திலா? தமிழ் பேசும் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் இனிமேல் தமிழர்கள் இல்லையா? அல்லது இஸ்லாமியர்களது புத்தாண்டும் நீக்கப்பட்டுவிட்டதா?

மகர ராசியில் சூரியன் உச்சம் கொடுப்பது தை முதலாம் திகதி என்றால் இதில் சோதிடம் கலக்கவில்லையா?


முட்டாள்கள் ஆட்சியில் இருப்பதால் எதுவும் நடக்கலாம்.

ஒரு ஈழத் தமிழன்

Wed Jan 23, 11:58:00 AM GMT  
Anonymous Anonymous செப்பியவை...

இப்போ திருவள்ளுவரு ஆண்டுன்னு ஒண்ணு கீது. எவனாது மதிக்கிறானா? இல்லை எவனுக்காது இது எத்தனியாவது ஆண்டுன்னு தெரிமா? அந்த மாதிரி இது ஒரு தமாசு. சும்மா சிரிச்சிக்கினே சித்திரைல புத்தாண்டு கொண்டாடிகிட்டு போய்கினே இருக்கோணும்!

Wed Jan 23, 12:46:00 PM GMT  
Blogger kuruvikal செப்பியவை...

மேலுள்ள கட்டுரை 13-01-2008 இல் எழுதப்பட்டது. அப்போது ஜல்லிக்கட்டுக்கு இந்திய உச்ச நீதிமன்றத் தடை இருந்தது.

அதன் பின்னர் ஊர்மக்கள் செய்த அறவழி அழுத்தம் காரணமாக தமிழக அரசு சில உறுதி மொழிகளை வழங்கியதால் ஜல்லிக் கட்டுக்கு இடைக்கால அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளில் மனிதர்களின் பாதுகாப்பு மற்றும் விலங்குகளின் நலன் என்பதில் அதிகம் கவனம் செலுத்தப்பட்டுள்ளதைக் காணலாம்.

---------

தமிழக அரசின் சமீபத்திய தைப்பொங்கலைப் புத்தாண்டாக்கும் அறிவுப்பு ஒரு அநாவசியமான நகர்வு என்றே தோன்றுகிறது..!

அதுமட்டுமன்றி இந்த மாற்றத்துக்கான காரணங்களை தமிழக அரசு முன்வைக்கவும் இல்லை. தமிழறிஞர்கள் என்ப்படுவோர் செய்த விதப்புரை என்ன என்பதும் மர்மமாகவே உள்ளது.

Wed Jan 23, 04:08:00 PM GMT  
Anonymous Anonymous செப்பியவை...

தமிழர்கள் என்றால் இந்துக்கள் மட்டுமல்ல. கிறுத்தவரும், இசுலாமியரும் மற்றும் பிற மதத்தினரும் சேர்ந்துதான். ஆதிகாலத்தில், தமிழர் என்றால் இந்துக்கள் மட்டுமே. இப்போது அப்படி இல்லை.

பொங்கல் என்பது, தமிழர் திருநாள். தமிழர் அனைவரும் சாதி, மத பாகுப்பாடின்றி, கொண்டாட முடியும். தமிழருக்கென்று அப்படி ஒரு பண்டிகை வேண்டும். ஓனம் மலயாலிகளுக்கு இருப்பதைப் போல.

தமிழருக்கென்று ஒரு புத்தாண்டு தினமும் வேண்டும். அதை சித்திரையில் வைப்பது, பார்ப்பனர் எழுதிய வைதீக மதத்தை ஒட்டி வருவதால், அனைத்து தமிழராலும் ஏற்க முடியாமல் போகிறது. எனவே, தைப்பொங்கல் தினம் தேர்ந்தெடுக்கப் பட்டது.

எவ்வளவு காலத்திற்குத்தான் வடக்கிலிருந்து வந்த பார்ப்பனர் சொல்லைக்கேட்டு தமிழன் தன் வாழ்க்கை அமைத்துக்கொள்வது?

தமிழருக்கென்று ஒரு தனி கலாச்சாரம் உண்டு. இல்லாவிட்டால் அதை செய்வோம் என்ற நோக்கில்தான் புத்தாண்டு தினத்திலுள்ள ஆரிய மாயை நீக்கப்பட்டது.

தமிழர் என்றால், இந்துக்கள் மட்டுமே என்ற காலம் மலையேறிவிட்டது. அனைவரும் தமிழர். வடக்கிலிருந்து வந்தோரும் தமிழரே. இருப்பினும், அவர்மனம் மாறவில்லை என்பது வேதனைக்குறிய விதயம்!

வாழ்க தமிழர்; வளர்க அவர்தம் ஒற்றுமை!

Tue Jun 10, 09:34:00 AM GMT+1  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க