Friday, June 13, 2008

தேவதையின் பாதங்கள் பற்றி...பேரூந்து தரிப்பிடத்தில் நின்றது.

சாளரம் வழி தற்செயலாக அவளைக் காண்கிறேன். அழகிய, விரிந்த நீண்ட கருங் கூந்தல் காற்றில் பறக்க அவள் நின்று கொண்டிருந்தாள். காற்றில் பறந்த ஒற்றை முடி அவள் கன்னங்களில் படர்ந்து கதை பேசி கொண்டிருந்தது. காதில் தொங்கிய தூக்கணங்கள்.. ஆடி ஆடி அவள் கன்னங்களை வருடிக் கொண்டிருந்தன. என்ன ஒரு அழகு. நாள் முழுதும் அவள் அழகை ரசித்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது. அவளைக் கண்டது முதலாய் ஜொள்ளு வடித்துக் கொண்டே இருந்தேன். என்னை ஒரு தடவை நோக்காளா என்று என் கண்கள் அவள் பார்வைக்காய் ஏங்க.. அவளோ பார்வையால் வேறு எங்கோ குறியாய் இருந்தாள்.

சா.. அவள்..இந்தப் பேரூந்தில் ஏறி என் அருகில் வந்து அமரமாட்டாளா என்று மனம் ஏங்கிக் கொண்டிருக்க ஏக்கம் தணிப்பவளாய் பலர் பேர் நின்றிருந்த அந்த வரிசையில் கடைசி ஆளாய் வந்து ஏறி என் அருகிலேயே அமர்ந்து கொண்டாள். இதைச் சற்றும் எதிர்பார்க்காத நான் என் எண்ணங்களை கற்பனை வானில் பறக்கவிட்டு.... அவள் கைபிடித்து உலா வந்து.. திருமண மேடையேறி.. குழந்தை பெற்று.. இன்புற்றுக் கொண்டிருந்தேன்.அவளோ என்னருகில் முட்டியும் முட்டாமலும் அமைதியாக இருந்து கொண்டிருந்தாள்.

சற்று நேரத்திலேயே.. அவள் பூசி வந்த நறுமண திரவியங்களின் வாசனை என்னை விட்டு விலகத் தொடங்க.. அதுவரை கற்பனைக் கனவில் இருந்த நானும் விழித்துக் கொண்டேன். அவள் இருந்த இடத்தில் இருந்து எழுந்து நகர ஆரம்பித்திருந்தாள். நானும் விடுவதாய் இல்லை. அவளைப் பார்வைகளால் பின் தொடர்ந்தேன். ஆகா இது எல்லோ இடை.. ஆகா இது எல்லோ நடை.. ஆகா இது எல்லோ கூந்தல்.. இவளைக் கம்பன் கண்டிருந்தால் எப்படி எல்லாம் வர்ணித்திருப்பான்.. இவள் இக்கால தமயந்தி நானோ இக்கால நளன் என்று மனம் ஆயிரம் கோலங்கள் போட்டுக் கொண்டிருக்க பேரூந்தும் பிறிதொரு தரிப்பிடத்தில் நின்றது.

அவளோ பூம்பாதங்கள் தரையில் பதிய பேரூந்தை விட்டு இறங்க ஆயத்தமானாள். ஏன் நானும் அவளைப் பின் தொடரக் கூடாது என்று என் மனம் கேள்வி கேட்க என் கால்கள் கேள்விக்கு விடையாய் அவளைப் பின் தொடர்ந்தன.

நான் அவளைத் தொடர்வதை அறியாதவளாய் என் அழகு தேவதை பேரூந்தில் இருந்து இறங்கி பிரதான வீதி நோக்கி நடந்தாள். அச்சமயம்...

மின்னல் வேகத்தில் உந்துருளிகள் ஆயுதம் ஏந்திய வீரர்களை காவிக் கொண்டு பறக்கின்றன. இவளோ பிரதான வீதியைக் கடக்க நிற்கிறாள். நானோ அவளை விட்டு ஒரு 50 மீற்றர் தொலைவில் அவளையே ரசித்தபடி அவளை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். திடீர் என்று ஒரு பெரும் வெடியோசை காதைப் பிளக்கிறது.

அதன் பின்னர், என் சித்தம் தெளிந்த போது நான் வைத்தியசாலையில் கட்டிலில் உடற் காயங்களோடு வலியில் முனகலுடன்...

அருகில் மடிக்கப்பட்டுக் கிடந்த தினசரிப் பத்திரிகை ஒன்றின் முகப்பில்.. மங்கல் அடித்திருந்த என் பார்வையில் அவள் முகம். தற்கொலை குண்டுதாரி. தகவல் தரவும். வரிகள் கொட்டை எழுத்தில்...!

மனதுக்குள் " சலூட்" அடித்துக் கொண்டேன். என் மன வானில் சிட்டாய் பறந்தவள்.. ஒரு விடுதலைப் போராளி. பெருமைப்பட்டுக் கொண்டேன். அன்று கற்பனையில், அவள் பாதம் பதிந்த பாதையில் நடந்த நான் இன்று நிஜத்தில் அவள் பாதையில் நடக்க நிற்கிறேன்.

-யாவும் கற்பனை.

நன்றி யாழ் இணையம்.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 12:43 PM

3 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

மனசை நெகிழ வைக்கிறது உங்கள் குட்டிக்கதை.

Fri Jun 13, 08:17:00 PM GMT+1  
Blogger Chandravathanaa செப்பியவை...

குட்டி குட்டியாய் நல்ல கதைககள் எழுதுகிறீர்கள். இப்போதான் இவையெல்லாம் என் பார்வைக்குக் கிடைக்கின்றன.

Tue Sep 01, 02:20:00 PM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

நன்றி அக்கா. :)

Tue Sep 01, 04:27:00 PM GMT+1  

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க