Wednesday, June 18, 2008

நீ என் உயிர் தானா?!செல்லிடபேசி கிணுகிணுக்க பதறி அடிச்சு எழுந்த வசன் நேரத்தைப் பார்த்தான். மணி நள்ளிரவு 12.30. வேலைக் களைப்பால் விழுந்து படுத்தவன் நித்திரைக் கலக்கத்தில், "எவண்டா இந்த நேரத்தில.." செல்லிட பேசியைக் காதில் வைத்தபடி மனதில் எண்ணத்தை ஓட விட்டான்.

"உங்கட அவாவுக்கு குழந்தை பிறந்திருக்கு. உடன வைத்தியசாலைக்கு வரட்டாம்" என்று சொன்னதோடு மறுமுனை இணைப்பைத் துண்டித்துக் கொள்கிறது.

வேலை முடிச்சிட்டு இவ்வளவு நேரம் அங்க தானே நின்றிட்டு வந்தன். இப்ப பிறக்காது 48 மணி நேரம் ஆகும் எண்டாங்கள். அதுக்குள்ள... என்று மனசுக்குள் நினைத்துவிட்டு.. தனது குழந்தையின் முகத்தை காணுற சந்தோசம் மனசில பொங்க.. மனுசி தனிய என்ன பாடுபடுகுதோ என்று எண்ணியபடி பதறியடித்துக் கொண்டு வைத்தியசாலை நோக்கி மகிழுந்தில் விரைந்து ஓடினான் வசன்.

நல்வரவு வசன். இங்க தான் தாயும் குழந்தையும் இருக்கினம். உங்களைத் தான் வசந்தா தேடிக் கொண்டிருக்கிறாள் என்று கூறியபடி வைத்தியசாலைப் பணியாள் வசனை தாயும் சேயும் இருந்த அறைக்கு அழைத்துச் சென்றார்.

எப்படி இருக்கிறாய் வசந்தா. பிரச்சனை ஒன்றும் இல்லையே. எங்க குழந்தையைப் பார்ப்பம் என்று வசன் தன் குழந்தையைப் பார்க்கும் தன் ஆர்வத்தை துணைவியின் அருகில் சென்று நின்றபடி அவளின் கரங்களைப் பற்றிப் பிடித்தபடி வெளிக்காட்டினான்.

இங்க தான் இருந்தவ உங்க மகள். தடுப்பூசி ஒன்று போடக் கொண்டு போயிருக்கினம். பொறுங்கோ இப்ப கொண்டு வந்திடுவினம் என்று வசந்தா சொல்லிக் கொண்டிருக்கும் போதே..

"கலோ" வசன். உங்கள் குழந்தைக்காகக் காத்திருக்கிறீங்கள் போல. இதோ உங்கள் குழந்தை. என்று கூறியபடி தான் தாங்கி இருந்த குழந்தையை வைத்தியர் வசனின் கையில் கொடுத்தார்.

குழந்தையைக் கண்டதும் வசனிடத்தில் மகிழ்சிக்குப் பதில் வியப்பே மிஞ்சியது.

டொக்டர் இது எங்கட குழந்தை தானா..?!

என்ன கேள்வி வசன். உங்கட மனைவி உங்களிடம் விசயத்தைச் சொல்லேல்லையா..?! இது அவாவுக்கும் இன்னொருத்தருக்கும் பிறந்திருந்தாலும் உங்கட குழந்தைதான்.

என்ன இன்னொருத்தருக்குப் பிறந்த குழந்தையா..??! என்று ஆச்சரியம் மேலிட ஆத்திரம் பொங்க கத்தினான் வசன்.

என்ன வசந்தா உங்கட அவரட்ட நீங்கள் விசயத்தை சொல்லாமல் மறைச்சுப் போட்டிங்கள் போல என்று டாக்டர் வசந்தாவைக் கேட்டார்.

ஓம் டொக்டர். நான் இவரட்டச் சொல்லேல்ல. சொன்னா இவரால தாங்க முடியாது. இப்ப நீங்களே சொல்லுங்கோ டொக்டர் அப்பதான் இவருக்கு ஒரு ஆறுதலா இருக்கும்.

என்ன நடக்குது இங்க. ஏன் எல்லாருமா சேர்ந்து என்னை ஏமாத்தினியள். இப்ப அது போதாது என்று இன்னும் ஏமாத்த நிற்கிறியள்.. இது என்ர குழந்தையே இல்லை.. இன்னொருத்தனுக்கு பிறந்த இதை என்ர குழந்தையா ஏற்க முடியாது.. என்று தலையில் கை வைத்தபடி கத்திய வசன், தனக்கு துரோகம் இழைத்து விட்டதாய் எண்ணி வசந்தாவை முறாய்த்துப் பார்த்தபடி விறைத்துப் போய் நின்றான்.

வசன்.. உண்மையில உங்களுக்கு செய்த சோதனையில உங்களிடம் குழந்தையை உருவாக்கக் கூடிய வளமான உயிரணுக்கள் இருக்கேல்ல. அதனால குழந்தைக்கு ஆசைப்பட்ட வசந்தாவுக்கு எங்களால முடிந்த உதவியைச் செய்ய முன் வந்தம்.

வைத்தியசாலையில உயிரணு வங்கியில இருந்து பெற்ற பெயர் குறிப்பிட முடியாதவரின் உயிரணுவை வசந்தாவின்ர முட்டையோட கருக்கட்ட வைச்சு IVF முறையில இந்தக் குழந்தையை உருவாக்கி உங்க மனைவிக்கு பிள்ளைப் பாக்கியத்தை பெற்றுக் கொடுத்திருக்கிறம். வசந்தாவின்ர முழு அனுமதியோட தான் இதைச் செய்தம். உங்களின் அனுமதியைப் பெற முனைந்த போது வசந்தா தான் இதை உங்களிடம் பக்குவமாச் சொல்லுறதா சொன்னா. அதால தான் நாங்கள் இது பற்றி உங்களட்ட எதுவும் சொல்ல முடியல்ல.

டொக்டர் சொல்லுறது உண்மை தாங்க. நீங்க மனசுடைஞ்சு போவீங்க என்றுதான் இதை நான் உங்களுக்குச் சொல்லேல்ல. குழந்தை பிறக்கவிட்டு விசயம் தெரிய வரேக்க சொல்லுவம் என்று விட்டுட்டேங்க. என்னை மன்னிச்சிடுங்க என்று வசனின் கையைப் பிடித்து முத்தமிட்டவளாய் கெஞ்சினாள் வசந்தா.

இன்னொருவரின் உயிரணுவில் பிறந்த அக்குழந்தையையும், உண்மையை மறைத்து தனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்ட வசந்தாவையும் ஏற்பதா விடுவதா என்ற குழப்பத்தில் இருந்த வசன் துணைவியின் கெஞ்சலில் வழிந்த கண்ணீரில் அவளின் ஏக்கத்தைப் புரிந்து கொண்டவனாய் குழந்தையும் தாயையும் ஒரு சேர அணைத்துக் கொண்டான். தன்னவளின் உயிரணுவில் உருவானதை தன் உறவாக்கும் மன உறுதியோடு.

-யாவும் கற்பனை.

யாழ் இணையம்.

Labels: ,

பதிந்தது <-குருவிகள்-> at 3:10 AM

1 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

நல்ல கருத்தோட்டம் உள்ள குட்டிக்கதை.

பதிவுக்கு நன்றி.

Wed Jun 18, 07:20:00 AM GMT+1  

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க