Friday, July 04, 2008

அவனும் காதலிச்சான் நானும் காதலிச்சன்..அம்மா நான் போயிட்டு வாறன்.. புன்னகை தந்து விடைபெற்றான் சங்கர்.

இப்ப தான் வந்தாய்.. அதுக்குள்ள எங்கையடா போறாய்.. தாயின் பதில் கேள்வி அவசர அவசரமா வெளி வர, கொஞ்சம் திக்குமுக்காடிப் போன சங்கர் சுதாகரித்தபடி..

ஒரு இடமும் இல்ல அம்மா.. உவன் சிவா வீட்டடிப் பக்கம் சைக்கிளில ஒரு நாலு மிதி மிதிச்சு வட்டமடிச்சிட்டு வரப் போறன்.

உந்த உச்சி வெய்யிலுக்க உலாத்தாமல் கெதியா வந்து சேர்.. பாசமிகு எச்சரிக்கையோடு அம்மா விடை தர சங்கரின் சைக்கிள் லண்டன் வீதிகளில் காதலிகளோடு பறக்கும் பி எம் டபிள்யு வாகப் பறந்தது ஊர்ப் புழுதியில் குளித்தபடி.

புறப்பட்ட சிறிது நேரத்தில் சைக்கிள் நேராக காயத்திரி வீட்டு வாசலில் போய் நின்றது.

காயத்திரி.. அழகான பள்ளித் தோழி. சிரிப்பழகி சினேகாவை ஒத்த உருவம். சங்கரும் காயத்திரியும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள். காயத்திரி சாதாரண தரம் படிக்கும் போது சங்கரிடம் அடிக்கடி நெருங்கி வந்து பழகிய போதெல்லாம்.. அவளுடன் காதல் பூப்பதாய் உணர்ந்தவன்.. அவளுடன் கனவில் டூயட் பாடித் திரிந்தவன் தான் இந்தச் சங்கர்...

சங்கர் உனக்கு சங்கதி தெரியுமா எங்கட வாகையடி வீட்டு பரிமளம் அன்ரி இருக்கிறா எல்லோ

ஓம் சொல்லுங்கோ அவாக்கு என்னம்மா... அவவுக்கு ஒரு மகளும் இருக்கெல்லோம்மா..

ஓமடா அவாட அந்த மகள் காயத்திரி கலியாணம் கட்டிக் கனடாவுக்குப் போயிட்டுதாம். போன கிழமை தான் மாப்பிள்ளை கனடாவில இருந்து வந்து கட்டிக் கொண்டு போனவராம். கலியாணம் கொழும்பில பெரிசா நடந்ததாம்.

மாப்பிள்ளை கனடாவில இஞ்சினியராம். அவளும் பிள்ளை அதிகம் படிக்காட்டிலும் கிளி போல நல்ல அழகு தானே. அதுதான் ஆசைப்பட்டு கட்டிக் கொண்டு போனவையாம். பொடியன் குடும்பம் எல்லாம் கன காலமா கனடாவில தானாம். பெரிய வசதியாம். எங்கட பசுபதி மாமா தானாம் பேசிச் செய்து வைச்சவர்.

என்று அம்மாவும் மகனும் சமீபத்தில் உரையாடிய வார்த்தைகள் காயத்திரி வீட்டு வாசலிலும் மனதோடு மீள.. அன்றொரு நாள் அவளோடு கனவில் முணு முணுத்த காதல் கான வரிகள் சோக வரிகளாக எழுந்தன சங்கரின் மனதில்.

எடே சங்கர் அது அப்ப.. இப்ப நீ யார்.. மனச் சாட்சி அவனைக் கேள்வி கேட்க.. காயத்திரியின் நினைவில் இருந்து மீண்டவன்.. சிவா வீட்டை நோக்கி சைக்கிளை மிதிக்கத் தொடங்கினான்.

அப்போ.. வாகனம் ஒன்று வேகமாய் வந்து அருகில் நின்றது.

சங்கர்.. உன்னை அண்ண உடன கூட்டிக் கொண்டு வரச் சொன்னவர் என்று வாகனத்தில் இருந்தவர் சொல்ல..

அப்படியா.. இதோ வாறன். சைக்கிள வாகனத்தில பின்னால போடுறன்.. அப்படியே வீட்ட போயிட்டு அம்மாட்டையும் சொல்லிட்டுப் போவம் என்ன.

ஓம் சங்கர். அப்படியே செய்வம்.

வாசலில் வாகனம் வந்து நிற்க.. சங்கரின் தாய்..

வாங்கோ பிள்ளையள் எப்படி இருக்கிறீங்கள்.

சுகமா இருக்கிறம் அம்மா. சங்கரைக் கூட்டிக் கொண்டு வரச் சொல்லி அண்ண சொல்லி விட்டவர் அதுதான் வந்தனாங்கள்.

அப்படியா.. சங்கர் கவனமாப் போய் வாப்பு என்று அன்பு மகனை கட்டியணைத்து உச்சிமோந்து, கண்களில் கண்ணீர் முட்ட அனுப்பி வைத்தார் அம்மா.

சங்கர் போய் இரு தினங்களில்..

ஈழநாதம் விசேட பதிப்புக்காய் மக்கள் முண்டி அடிக்கிறார்கள்.

என்ன விசயமாம் தம்பி.. சனங்கள் வரிசை கட்டி நிக்குதுகள். சங்கரின் அம்மா பசுபதி மாமாவை வீதியில் கண்டு கேட்டார்.

நேற்றிரவு கடலில சண்டையாம். கடற் கரும்புலிகள் தாக்கி டோரா மூழ்கடிப்பாம்.

அப்படியே சங்கதி. எங்க பேப்பரில போட்டிருக்காமோ...

ஓமாம் அதுதான் சனங்கள் பேப்பருக்காக காத்திருக்குதுகள் நானும் அதுக்குத்தான் நிற்கிறன் என்று முடித்தார் பசுபதி மாமா.

அந்த நேரத்தில் பசுபதி மாமாவின் மகன் சுகின்.. பதறியடித்துக் கொண்டு பத்திரிகையும் கையுமாய் ஓடி வந்தான்..

அம்மா.. சங்கர் அண்ணா கரும்புலியா வீரமரணம் அடைஞ்சிட்டார். படம் போட்டிருக்கு. என்று பதட்டத்துடன் பேப்பரை நீட்டினான் சங்கரின் அம்மாவிடம்.

ஐயோ என்ர மகனே என்று கதறியபடி.. பேப்பரை பறித்துப் படித்த அம்மா.. மூர்ச்சையானாள்.. மகனின் ஏக்கத்தில்..! பசுபதி மாமா.. அவரைத் தாக்கியவராய்.. சங்கருக்கு மனதோடு வீரவணக்கம் செய்தார்.

சங்கரும் தான் காதலிச்சான்.. காயத்திரியை மட்டுமல்ல.. அதற்கு மேலாய் தாயக மண்ணை.. அப்படித்தான் ஒவ்வொரு கரும்புலியும். இது சங்கரின் வீர வணக்க நிகழ்வில் அவனின் உற்ற தோழர்களில் ஒருவன் சொன்ன வார்த்தைகள்.

காதலிகளின் பின்னால் அலைவதும்.. பின் பிரிவால் வாடுபவனாயும் எண்ணிக் கொண்டு தாயகத்தை மறந்து, வீணே குடியால், புகையால் சீரழியும் தொலை தூரத்தில் தாயக உறவறுத்து இருக்கும் எனக்காய் சொன்னான் போலும் அவ்வார்த்தைகளை..!

(யாவும் கற்பனை.)

மூலப் பதிவு பெறப்பட்ட இடம் இங்கு.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 3:00 PM

5 மறுமொழி:

Blogger Thamizhmaangani செப்பியவை...

//காயத்திரி.. அழகான பள்ளித் தோழி. சிரிப்பழகி சினேகாவை ஒத்த உருவம்//

இன்னும் நிறைய describe செய்து இருக்கலாம். but ok. adjust பண்ணிக்குறேன். :)))

Fri Jul 04, 04:37:00 PM GMT+1  
Blogger செந்தழல் ரவி செப்பியவை...

கதைதானே, அப்புறம் என்ன யாவும் கற்பனை :))))

குட் !!!!

Fri Jul 04, 06:32:00 PM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

உண்மையில் அது கற்பனை கலந்த உண்மைக் கதை என்று சொல்லலாம் செந்தழல் ரவி. ஈழத்தில் போராட்ட களத்தில் இதுதான் பலரின் வாழ்வும் கூட.

நன்றி உங்கள் கருத்துப் பகர்வுக்கு.

Fri Jul 04, 09:26:00 PM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

உங்கள் கருத்துப் பகிர்வுக்கு நன்றிகள் தமிழ்மாங்கனி.

குட்டிக்கதைக்கு அதுக்கு மேல போக மனசு வரல்ல போல..! :)

Sat Jul 05, 08:00:00 AM GMT+1  
Blogger Chandravathanaa செப்பியவை...

செந்தழல் ரவி,
இப்படியான பல உண்மைகள் போராளிகளோடும், கரும்புலிகளோடும்.

அவர்கள் பெற்றவர்கள், உடன்பிறப்புகளை மட்டுமல்ல, தமது இளமைகளை, இளமைக்கால உணர்வுகளை... என்று எத்தனையோ விடயங்களை தாயகத்துக்காக அர்ப்பணித்தவர்கள்.

உண்மைதான் இங்கு புனையப்பட்டுள்ளது.

Wed Sep 02, 06:29:00 AM GMT+1  

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க