Tuesday, July 22, 2008

மந்திரத்தீவினில் பூசாரியும் பூதமும்.

மந்திரத் தீவுக்கான படகுப் பயணம் மாதங்கள், வருடங்கள் என்று... நீண்டு கொண்டே போனது. பூசாரிக்கோ தன் எண்ணம் ஈடேற வேண்டும் என்பதில் அவரசம் மேலோங்க.. சீடர்களை அழைத்து..

எப்படியாவது மந்திரத் தீவை இந்த யூலைக்குள் அடைந்தே ஆக வேண்டும். ஏற்கனவே புயலில் சிக்கிய சிதைந்து போயுள்ள எங்கள் படகு இன்னும் நீண்ட காலம் கடலில் பயணிக்க முடியாது போலுள்ளது. ஆகவே படகை குறுக்கு வழியில் என்றாலும் செலுத்தி.. மந்திரத் தீவுக்கு என்னை விரைவாகக் கொண்டு சென்றுவிடுங்கள். அடுத்த முழு நிலவு தினத்தில் நான் மந்திரத் தீவில் இந்தக் குடுவையைத் திறந்தாக வேண்டும். இன்றேல் என்னால் இந்த அதிசயக் குடுவை தர இருக்கும் சக்தியைப் பெற முடியாமல் போய்விடும். அப்படி ஒரு நிலை எனக்கு வருமானால்.. உங்களை எல்லாம் வெட்டி இந்தக் கடலில் சுறாக்களுக்கு இரையிட்டு விடுவேன் என்று மிரட்டினான்.. பூசாரி.

அதைக் கேட்ட சீடர்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. இருந்தாலும் நிலமையைச் சமாளிக்க படகில் விரிக்கப்படாதிருந்த மேலதிக பாய்மரத்திலும் பாயை விரித்து படகை.. மந்திரத் தீவை நோக்கிய திசையில் விரைந்து செல்ல அனுமதித்தனர்.

படகும் காற்று வழி இழுபட்டு ஒரு வழியாக யூலை திங்களின் நடுப்பகுதியில் மந்திரத் தீவை அடைந்தது.

அதிசயக் குடுவையோடு மந்திரத் தீவை அடைந்த பூசாரிக்கோ பெரு மகிழ்ச்சி. தான் பெரும் சக்தி படைத்த தலைவனாகி அந்தத் தீவையே ஆளப்போகும் காலம் நெருங்கிவிட்டதாக எண்ணி அக மகிழ்ந்து கொண்டான். அதைக் கொண்டாட என்று சீடர்களை அழைத்து விருந்து வைத்தான். விருந்தின் போது அருந்திய மதுவின் மயக்கத்தில் பூசாரியும் சீடர்களும் மயங்கிக் கிடக்கும் போது.. மந்திரத் தீவே அதிரும் வண்ணம் ஓர் பெரிய வெடியோசை கேட்டது.

அதைக் கேட்ட பூசாரிக்கு.. திகைப்போடு கோபமும் முட்டிக் கொண்டது. எடேய் சீடர்களா.. என்ன மந்திரத்தீவில் வெடியோசை கேட்கிறது. இங்கே என்ன நடக்கிறது என்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு வாருங்கள் என்று சீடர்களை நாலா திக்கும் அனுப்பி வைத்தான்.

சீடர்களும் நாலா புறமும் சுற்றிப் பார்த்துவிட்டு.. பூசாரியிடம்..

தலைவா.. நாம் ஓர் அதிசயம் கண்டோம். இந்த மந்திரத் தீவினில் ஏற்கனவே எம் சந்ததியினர் வாழ்கின்றனர் தலைவா. அவர்கள் சென்ற டிரக் வண்டிக்கு யாரோ கண்ணிவெடி வைத்து விட்டனர். அதில் எங்கள் சந்ததியினர் 13 பேர் இறந்து போயினராம்.

எவரடா எங்கள் சந்ததியினருக்கு கண்ணி வெடி வைத்தது.

யாரோ புலிகளாம்.. அவர்கள் தமிழர்களாம். எங்கள் ஜென்ம விரோதிகளாம். இந்த மந்திரத் தீவினில் அவர்களுக்கும் ஆட்சியுரிமை இருக்கிறது என்று சண்டை பிடிக்கிறார்களாம்.

அப்படியா சங்கதி. அவர்களுக்கு எங்கள் பலம் தெரியவில்லை. இதோ பார்.. இப்பவே என் அதிசயக் குடுவையை திறந்து சிங்களப் பேரினவாதப் பூதத்தை அவர்கள் மீது ஏவி விடுகிறேன்.

(குடுவையைத் திறந்ததும்.. விஸ்வரூபம் எடுத்துப் புறப்பட்டது சிங்களப் பேரினவாத பூதம். போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்று முழங்கியபடி பரந்து விரிந்து சென்றது.)

சீடர்களே பார்த்தீர்களா.. என் பூதத்தின் சக்தியை. அங்கே பாருங்கள்... மந்திரத் தீவின் தலைநகராம் கொழும்பில்... தமிழர்களின் உயிரை குடித்துக் கொண்டிருக்கிறது. தமிழ் பெண்களின் மானத்தை களைந்து கொண்டிருக்கிறது. அதோ பாருங்கள்.. ஒரு தமிழன் எரியும் டயருக்குள் துடிதுடித்துச் சாகிறான். இதோ பாருங்கள் தமிழர்களை சிறைக்குள் அடைத்து வைத்து கண்களைத் தோண்டிக் கொல்கிறது. ஆகா என் பூதத்துக்குதான் எத்தனை அற்புத சக்தி கண்டீர்களா. நரகலோகத்தில் செய்யும் சித்திரவதைகள் அனைத்தையும் அது பூலோகத்தில் தமிழர்களிடத்தில் அரங்கேற்றுகிறது. அதற்கு அப்படி ஒரு வெறியை ஊட்டி வைத்திருக்கிறேன் நான்.

உண்மைதான் தலைவா... இத்தோடு தமிழர்கள் அழிந்தார்கள். மந்திரத் தீவினில் அவர்களின் கொட்டம் இத்தோடு அடங்கிவிடும். எனி நீங்களும் நாமும் எங்கள் சந்ததியுமே இத்தீவினில் வாழப் போகிறோம்..!

ஆம் சீடர்களே..மந்திரத்தீவினில் சிங்கள இனத்தின் இரட்சகன் இந்தப் பூசாரி ஜே ஆர் என்று ஒரு காலம் வரலாறு சொல்லும் பாருங்கள். நான் இன்று கட்டவிழ்த்துவிட்ட இந்தப் பூதம் சாகா வரம் பெற்றது. அது தமிழர்களை அழிக்கும் வரை ஓயாது.

இதைக் கேட்ட சீடர்கள்.. உணர்ச்சி வசப்பட்டு.... வாழ்க பூசாரி ஜே ஆர். வாழ்க சிங்களப் பேரினவாத பூதம்.. என்று கோசமிட்டபடி.. பூசாரியோடு மந்திரத்தீவினில் கூத்தடித்தபடியே காலத்தைக் கழிக்கலாயினர்.

மந்திரத் தீவாகிய இலங்கையில் அதுவே என்றும் தொடர்கதையாகிப் போனது.

நன்றி யாழ் இணையம்.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 12:09 PM

1 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

நல்ல சேதி சொன்னீர்கள். சிங்களப் பேரினவாதத்தின் நவீன தந்தை, ஜே ஆர் ஜெயவர்த்தனா என்றால் மிகையில்லை.

Tue Jul 22, 02:02:00 PM GMT+1  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க