Thursday, July 31, 2008

தீராத் தேடலில் தீயினில் பிறப்பதுவோ விடுதலை.!



தீண்டாக் கனிமமாய்
திட்டுக்களில் கிடந்த போதும்
தீண்டித் தீட்டி
திடமாய் இலக்கு வைத்த போதும்
தீயில் தவிழ்ந்து
உருப்பெற்ற போதும்..
தீராத வேட்கை
விடுதலைத் தாகம் எனக்குள்.

தீர்வுகள் தேடும்
அக்னிக் குஞ்சாய்
வானில் பறக்கிறேன்
அண்டம் திறந்து
தேடித் தருவேன்
இருளுக்குள் என்ன..??!
விடை.

வானத்து
மின்மினிக்குள்
மிண்ணுவதென்ன வைரமா..??!
வட்ட நிலவுக்குள்
வாழ்வதென்ன வாளைக் குமரியா..??!
செக்கச் சிவந்த செவ்வாய்க்குள்
சிவப்பு என்ன தோஷத்தின் கோபமா..??!
வளையங்கள் தாங்கும் சனிக்குள்
சூத்திரம் என்ன சாத்திரமா..??!
அருந்ததிக்குள்
வாழ்வதென்ன ஆகாய நங்கையா..??!
தேடப் போகிறேன்
எட்டாத் தீர்வுகள்..!

வானில் எப்படி சூரிய "தேவன்"
கையிலையின் வாசலில்
தட்டிக் கேட்கிறேன்,
குறை பிறை சூடிய மசூதிகள்
விட்ட குறை என்ன
இருளுக்குள் வாழும் அல்லாவிடம்
மண்டியிடாமல் கேட்கிறேன்,
தேவன் மகன் - மீண்டும்
இன்னும் வரவில்லை
சிலுவைக்குள் சிக்கியவன்
வானில் எங்கே
தேடிச் சொல்கிறேன்.

சீக்கிரமாய் சிந்தைகள்
விடுதலை வேண்டிட
தீர்வுகள் சுவைத்திட
சீறிப் பாய்கிறேன்
விஞ்ஞானப் பறவையின்
அக்னிக் குஞ்சாய்
நாசாவின் அவதாரமாய்.

தீராத் தேடலில்
தீயினில் பிறப்பதுவோ
விடுதலை...
அறிவியல் கொண்டு
அறியாமைக்கு தரும்
விடை.!


நாசாவின் 50வது பிறந்த நாளை ஒட்டி...!

Labels: ,

பதிந்தது <-குருவிகள்-> at 1:10 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க