Sunday, September 07, 2008

பாவனாவைத் தேடி சொன்ன வார்த்தைகள்.நெருக்கம் அதிகரிக்க அதிகரிக்க கஜனின் மனதிலும் ஒரு வித பதட்டம் அதிகரித்தது. வழமைக்கு மாறாக இதயம் விரைந்து அடித்துக் கொண்டது. இதயத் துடிப்பின் சத்தத்தை காதுகள் கூட உணர முடிந்தது. கால்களில் ஒரு வித நடுக்கம் பற்றிக் கொண்டிருந்தன. நெற்றியால் வியர்த்து ஊர்த்திக் கொண்டிருந்தது. இவ்வளவுக்கும் மத்தியில் கண்களைக் கூர்மையாக்கி அவள் மிக நெருங்கி வரும் வரை காத்திருந்தான்.

வெள்ளை வெளீர் என்ற பள்ளி உடையில் உயர்தர மாணவிக்குரிய மிடுக்குடன் பாவனா தோழிகள் சகிதம் நடந்து வந்து கொண்டிருந்தாள். வழமையாக காணும் பாவனாவாக அன்றி அன்று அவளின் முகத்தில் அழகு ஒளிவீசிக் கொண்டிருந்தது. நேற்றிரவு முகத்தை பசைகள் தடவி வெளிர்க்க வைத்திருப்பாளோ என்ற எண்ணத்தை மனதில் பறக்க விட்டபடி..

எக்ஸ்கியூஸ் மி.. ஐ அம் கஜன்.. கான் ஐ காவ் யுவர் நைஸ் ரைம் ரு ரோக் பிளிஸ்.. என்று பாவனாவுக்கு மிக அருகில் சைக்கிளை நிறுத்திக் கொண்டே கேட்டான்.

ஓ.. கஜன்.. நீங்களா. என்ன இன்றைக்குப் புதிசா பெரிய புதிர் போடுறீங்க. வழமையா ரியுசனில தேவையென்றால் ஓடி வந்து கதைப்பீங்க. இன்றைக்கு இங்கிலீசில பீட்டர் விடுறீங்க.. ஓ என் தோழிகள் இருக்கினம் என்றோ.. ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும். அதுசரி என்ன விசயம் சொல்லுங்க.

இல்ல பாவனா.. உங்க கூட தனிய கதைக்கனும். ஒரு ஐந்து நிமிசம் அந்த மரத்தடிக்கு வருவீங்களா?

ஓ.. தாரளமா கதைக்கலாமே. ஐந்தென்ன பத்து நிமிடமே கதைக்கலாமே.

இவள் என்ன.. கேட்க முதலே கதைக்கலாம் என்று சம்மதிக்கிறாள். நான் இவள் இப்படி இருப்பாள் என்றே எதிர்பார்க்கல்லையே. இவளின் அழகுக்கு இவள் வெளில தனியக் கதைக்க பெரிய பில்டப் பண்ணுவாள் என்றெல்லோ நினைச்சன். எதுஎப்படியோ.. எனக்கு, நான் சொல்ல வந்த விசத்தைச் சொல்லிடனும் அவ்வளவும் தான்... என்று மனதுக்குள் எண்ணியபடி..

நன்றி பாவனா என்றான்.

எதுக்கு நன்றி.. பதிலுக்கு கேட்டாள் அவள்.

கதைக்க சம்மதிச்சதுக்கு.

இதுதானே வேணாங்கிறது. உங்களட்ட டவுட் கேட்டு எத்தனை தரம் ரியுசனில கதைச்சிருப்பன். வந்திட்டார்ய்யா.. விசயத்தைச் சொல்லுங்க.

அதுசரி உங்கட ஏலெவல் எக்ஸாம் றிசல்ட் எப்படி. ஸ்கூலில இருந்து ரிசல்டை எடுத்திட்டீங்களோ?

இப்பதான் எடுத்துக் கொண்டு போறன்.அது சரி... உங்களுக்கு நல்ல பெறுபேறு என்று கேள்விப்பட்டன். நேற்றே பேப்பரில உங்கட பெயர் வந்ததைக் கண்டிருந்தன்.

ஓம்.. பாவனா. எனக்கு நல்ல பெறுபேறுதான். உங்களுக்கு எப்படி?

எனக்கும் பறுவாயில்லை. நான் நினைச்சது போலத்தான் வந்திருக்குது என்றாள்.

அப்படியா. நல்ல சந்தோசம். என்ன செய்யிறதா உத்தேசம்.

ம்ம்.. டாக்டருக்குப் படிக்கிறதுதானே எங்களின் விருப்பம்.

என்ன இவள் எங்களின் என்றாள். என்னையும் சேர்த்துச் சொல்லுறாளோ. எதற்கும்.. இதை இன்னும் கொஞ்சம் கேள்விகள் கேட்டு தெளிவாக்கிக்கிறது நல்லம்.

என்ன பாவனா எங்களின் விரும்பம் என்றீங்க.. அது உங்களின் விருப்பம் மட்டும் தானே?

ஏன் உங்களுக்கும் டாக்டருக்குப் படிக்கத்தானே விருப்பம். மாவட்டத்திலிலேயே முதலாவதா வந்திருக்கிறீங்க என்றாள் பாவனா பதிலுக்கு.

ஓஓ.. இவள் என்னையும் மனசிலை வைச்சுக் கொண்டுதான் கதைக்கிறாள் போல. அப்ப நான் சொல்ல வந்த பிரதான விசயத்தை சொல்லிட வேண்டியது தான்.. என்று எண்ணியபடி மனசுக்கு தெம்பூட்டிக் கொண்டு..

பாவனா.. உண்மையில.. உங்களை ஏன் கூப்பிட்டனான் என்றால்.. உங்களட்ட ஒன்றைச் சொல்லத்தான். அது வந்து..

தயங்காமல் சொல்லுங்கள். நான் உங்களை ஒன்றும் பண்ணமாட்டன் என்று வார்த்தைகளால் பதிலுக்கு தெம்பூட்டினாள் பாவனா.

அது வந்து.. மீண்டும் மனதில் தயக்கம் எழ வாத்தைகளை இழுத்தான் கஜன்.

கெதியா (சீக்கிரம்) சொல்லுங்கோ. நான் போகனும். தோழிகளை பாதி வழியில விட்டிட்டெல்லே வந்திருக்கிறன். பிளீஸ் கஜன்.

என்ன.. இவள் இவ்வளவு அவசரப்படுகிறாள். ஒருவேளை இவளுக்கும் என் மீது... ம்ம்.. அப்ப நல்லதாப் போச்சு... பயமில்லாமல் சொல்ல வேண்டியதுதான்..

இல்ல பாவனா.. நீங்க நடிகை பாவனாவா இல்ல சும்மா பாவனாவா..?!

அடப்பாவி.. இதைக் கேட்கவா இவ்வளவு பில்டப். நான் சும்மா பாவனா என்றாள் முகத்தை நெளித்துக் கொண்டே.

சரி சரி.. சும்மா தமாசுக்கு கேட்டேன். உண்மையில உங்களிட்ட சொல்ல வந்தது என்னவென்றால்.. என்றவன் திடீர் என்று.. நேரடியாச் சொல்ல ஒரு மாதிரியா இருக்கு.. இந்த கடிதத்தைப் படிச்சிப் பார்த்திட்டு.. உடன பதில் சொல்லுங்க.. என்று கடிதத்தை நீட்டீனான்.

உடனே அதை வாங்கிப் படித்த பாவனா.. வார்த்தைகள் வெளிவராமல்... விறைத்துப் போய் நின்றாள்.

அவள் விறைப்புக்குக் காரணம்.. அவன் எழுதி இருந்த வார்த்தைகள் அல்ல. அவனின் முடிவுதான்.

"நான் ஒரு போராளி. நான்.. தமிழீழ விடுதலைக்கு வித்தாக கரும்புலிப் போராளியாகப் போகிறேன்" என்ற வார்த்தைகள் தான் அவை.

அவனின் கடிதத்துக்கு சொல்லப் பதில்கள் இன்றி அவன் முகத்தையே பார்த்தபடி கண்கள் கலங்க அவ்விடத்தில் இருந்தும் விலகிச் செல்ல ஆரம்பித்தாள் பாவனா.

பதிலுக்கு முகத்தில் புன்னகையை உதிர்த்தபடி.. "போயிட்டு வாறன்.." சொல்லி.. சைக்கிளில் பறந்தான்.. புலிவீரன்.

யாவும் கற்பனை.

நன்றி யாழ் இணையம்.

Labels: ,

பதிந்தது <-குருவிகள்-> at 6:57 AM

1 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

கதை அசத்தல். :)

Sun Sep 07, 10:43:00 AM GMT+1  

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க