Sunday, October 05, 2008

நான் தொட்ட கெலியே..!



இரண்டு "மணி" கெலிகள் வானில் உயர இருந்து தாழப் பறக்க இறங்குவதைக் கண்டிட்டு கண்ணன் கத்தினான். கெலி வருகுது... வாங்கோ போய் பார்ப்பம்.

வழமையா கெலி என்றாலே கிலி தான். அமெரிக்க தாயாரிப்பில வந்த "பெல்" கெலிகளில சிங்களப் படை வந்து இரவு பகல் என்றில்லாம வட்டமடிச்சு வட்டமடிச்சு சுடுவது தான் எங்களுக்குப் பரீட்சயம். அது பொறுக்கிப் போடும் வெற்று ஐம்பது கலிபர் கோதுகளை பொறுக்க, அது எங்க கொட்டுண்ணுது என்று பார்க்க வாயைப் பிளந்து கொண்டு அண்ணாந்து திரியிறது தான் அப்ப திரில்.

ஆனால் இப்ப கொஞ்சக் காலமாக யாழ்ப்பாண வான் வெளியில் புகையடிச்சுக் கொண்டு பறக்கும் அன்ரனோக்களும், தாழப் பறந்து திரியும் எம் ஐ 8 கெலிகளும், கிலுக்கிக் கொண்டு வரும் இந்திய ஜவான்களின் "மணி" கெலிகளும்.. எங்களுக்கு கொஞ்சம் வித்தியாசமான சூழலையே காட்டியிருந்தன.

அண்ண நீங்க வரல்லையா. கெலி கம்பஸ் கிரவுண்டுக்க இறங்கிட்டுது. வாறதெண்டா கெதியா வாங்கோ... என்று குட்டிச் சைக்கிளோடு வீட்டு வாசலில் கத்திக் கொண்டே நின்றான் கண்ணன்.

பொறுடா வாறன்.. என்று அவசர அவசரமா வெளிக்கிட்டு என்ர சொப்பர் சைக்கிளையும் எடுத்து கவட்டுக்க வைச்சுக் கொண்டு.. குறுக்கு வழியென்று இரண்டு பேரும் ரெயில் பாதை ஓரமாய் ஓடும் கல்லுப் பாதையில ஓடி.. யாழ்ப்பாண கம்பஸ் வாசலை அடைஞ்சா... அங்க சைக்கிள் விட இடமில்லாத அளவுக்கு சனம் முண்டி அடிச்சுக் கொண்டிருந்தது கெலி பார்க்க.

சைக்கிள வீதி ஓரமாப் போட்டிட்டு.. மரத்தில தொத்தி... விடுப்புப் பார்த்தா...

கெலிகள் இறங்கேக்க பறந்த தூசி மூஞ்சில படிய கெலிகளின் விசிறிகள் ஓய்வுக்கு வந்து தொங்கிக் கொண்டிருந்தன.

கண்ணாடிக் குடுவைக்கு ஒரு பெரிய வால் வைச்சது போல தும்பி போல இருக்கும் மணிக் கெலி. அதன் வாலில மூன்று வர்ண வட்டத்தில பொட்டு வைச்சிருக்கும்.

அண்ண அங்க பாருங்கோ.. கெலில இருந்து சீக்கியன் இறங்கி வாறான். அவனுக்கு பொட்டு வைச்சு பூமாலை எல்லாம் போடினம்.

ஓமடா.. நானும் கண்டிட்டன். சமாதானம் கொண்டு வருகினம் எல்லோ. அதுதான் பூமாலை போடினமாக்கும்.

வந்தவை ஜீப்புகளில ஏறிப் பறக்க.. கெலிகள் மட்டும் மூலைக்கு ஒன்றாய், மூன்று சக்கரங்கள் தாங்க நின்று கொண்டிருந்தன.

ஒருவழியா.. ஆக்களுக்க நுழைஞ்சு.. கெலியைத் தொட்டுப் பார்த்திட வேணும். அப்ப தான் நான் தொட்ட கெலி ஆகாயத்தில பறக்கும் போது ஆக்களுக்குச் சொல்லிப் புளுகி அடிக்கலாம் என்று போட்டு மரத்தால குதிச்சு.. மதிலால பாஞ்சு.. கம்பஸ் கிரவுண்டுக்க போயிட்டன்.

கண்ணனும்.. பின்னால.. அண்ண நில்லுங்கோ. நானும் வாறன் என்று கொண்டே ஓடி வந்தான்.

கெலி பார்க்க வாற பெட்டையள கெலியோடும் இந்திய ஜவான்கள் வாய் பார்க்கிற நேரமாப் பார்த்து கெலிக்குக் கிட்ட போய்.. கெலியைத் தொட்டிடுறது தான் திட்டம்.

கண்ணா.. நீ போய் கெலியின்ர வால் பக்கம் நில்லு. நான்.. இஞ்ச மூஞ்சிப் பக்கம் நிக்கிறன். அவங்கள் அங்கால பராக்குப் பார்க்கேக்க நீ வால் பக்கமாய் ஓடிப் போய் தொடு. அவன் உன்னை தடுக்க வர நான் இங்கால முன்னால போய் தொடுறன்.

திட்டப்படி.. கண்ணன்.. வால் பக்கமாய் ஓட.. அதைக் கண்டிட்டு.. கெலிக்கு காவல் போல நின்ற அந்த ஒரு இந்திய ஜவானும்.. தொல தொல உடுப்பையும் போட்டுக் கொண்டு.. ஓடி வர நான் கெலியின் முன் பக்கமா ஓடிப் போய் அதன் மூக்குப் பகுதியை தொட்டிட்டுட்டன்.

இதைக் கண்டிட்டு.. எனக்குப் பின்னால ஒரு கூட்டமே கெலியைத் தொட ஓடி வந்திட்டு. அப்புறம் என்ன.. சனங்களைக் கட்டுப்படுத்த முடியாம இரண்டு கெலிக்கும் ஆளுக்கு ஒருவரா காவல் நின்ற இந்திய ஜவான்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கத்த.. கட்டம் போட்ட சேட்டு போட்டுக் கொண்டு புலி அண்ணாமார் ஓடி வந்து சனங்களை விலக்கும் வரைக்கும் அல்லோல கல்லோலம் தான்.

நானும் கண்ணனும்.. அந்தக் களோபரத்துக்குள்ள..நைசா.. சனத்துக்குள்ளால நுழைஞ்சு.. சைக்கிள் அடிக்கு வந்து.. அதைப் பொறுக்கி கவட்டுக்க வைச்சுக் கொண்டு குமாரசாமி வீதியால எடுத்தமே ஓட்டம் வீட்ட.

இப்படி ஒரு சில தடவைகள் தொட்டுப் பார்த்த கெலிகள் அன்றும்.. தாழப் பறந்தன.

அதைக் கண்டிட்டு.. கண்ணனையும் கூப்பிட்டுக் கொண்டு சைக்கிள எடுக்க ஓடினேன். ஆனால்.. கெலி தாழப்பறந்து.. கொஞ்ச நேரம் ஆகியிருக்கும்.. அதற்குப் பின் கெலி பறந்த பக்கமாய் ஒரே துப்பாக்கிச் சத்தங்கள் முழங்கத் தொடங்கின. யாழ் கோட்டைப் பக்கமிருந்து செல்களும் கூவிக் கொண்டு வரத் தொடங்கின.

என்ன பிரச்சனையாம்.. வீதியால ஓடி வந்த அண்ணமாரைக் கேட்டால்..

தலைவரை சுற்றி வளைக்க கம்பஸுக்க.. இந்திய பரா துருப்பு.. பரசூட்டால குதிச்சிட்டுதாம். அதுதான் சண்டை நடக்குதாம்.

சில மணி நேரம், கடும் சண்டை. பின்.. ஒரே நிசப்தம்.

கண்ணன் வந்து சொன்னான்.. அண்ண ஆரியகுளம் புத்த கோவில் வளவுக்க 20 சீக்கியங்கட "பொடி" வைச்சிருக்காம். வாறீங்களோ போய் பார்ப்பம்.

போடா.. நான் வரல்ல. கெலி வந்து அடிக்கும். நான் தொட்ட கெலியே என்னை அடிக்கப் போகுது.

அறியா வயதிலும்.. அறிய வைத்தது.. நரிகளின் அரசியல்..!

நன்றி யாழ் இணையம்.

Labels: ,

பதிந்தது <-குருவிகள்-> at 7:09 AM

2 மறுமொழி:

Blogger கார்த்திக் செப்பியவை...

manathi thotta sambavam.

Sun Oct 05, 07:54:00 AM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

அன்றைய நிகழ்வுகளை அப்படியே மீட்க வைத்தது கதை. வாழ்த்துக்கள்.

Mon Oct 06, 11:09:00 AM GMT+1  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க