Tuesday, December 30, 2008

வங்கதேசத்தின் இரண்டு பெண்மணிகள் போடுவது சூதாட்டமா குத்தாட்டமா..?!



தெற்காசியாவின் கிழக்கே இருக்கும் இயற்கை வனப்புக் கொண்ட ஒரு அழகான தேசம் வங்காள தேசம் எனும் நாடு.

முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் எடுத்த துணிச்சலான முடிவாலும் இந்தியப் படையினரின் போர் வீரத்தாலும் தியாகங்களாலும் உருவாக்கப்பட்ட தேசம் அது.

இருந்தாலும் பாகிஸ்தானுக்கு தன்னில் ஒரு பகுதியை இழந்த மாறாத வடுவாகவும் அது இருக்கிறது.

இப்போ விடயத்துக்கு வருவோம்..

ஊழல்.. ஆட்சிக் குளறுபடிகள்.. வெள்ளம்.. பஞ்சம்.. பொருளாதார நலிவு என்று இன்று கஸ்டத்தில் துவழும் நாடுகளில் ஒன்றாக முஸ்லீம்களை பெரும்பான்மையாகக் கொண்ட அந்த நாடும் விளங்குகிறது.

அந்த தேசத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக இராணுவமே ஆண்டு வந்தது. இந்தியாவுக்கு வலதும் இடதுமாக இராணுவ ஆட்சி அலங்கரிக்க இந்தியா நடுவில் ஜனநாயகவாதியாக அமர்ந்திருந்து கொண்டு வல்லரசுக் கனவு கண்டு கொண்டிருந்தது.

அந்த நிலையில் தான், அண்மைய சில ஆண்டுகளாக இராணுவ ஆட்சிகள்.. பாகிஸ்தானிலும் சரி வங்காளதேசத்திலும் சரி மக்களுக்கு சலிப்பூட்டுவனவாக அமைந்து விட மக்கள் வேறு வழியின்றி.. ஜனநாயகம் எனும் சூதாடியை நோக்கி மீண்டும் ஓடலாயினர்.

மக்கள் என்ன காரணங்களுக்காக தமது ஜனநாயகத் தலைமைகளை தூக்கி எறிகிறார்ளோ.. அதே தலைமைகளை மீண்டும் அதே மக்கள் வாக்குப் போட்டு தேர்ந்தெடுக்கும் பரிதாப நிலை.. ஜனநாயகத்தில் மட்டும் தான் காணப்படுகிறது.



பாவம் வங்காள தேசமும் அதன் மக்களும் அதற்கு விதிவிலக்கல்லை என்பது போல, Sheikh Hasina மற்றும் Khaleda Zia என்ற இரண்டு பெரும் பெண் ஜனநாயகச் சூதாடிகளின் பின்னால் ஓட வேண்டிய பரிதாப நிலையிலேயே இருக்கிறனர் என்பதை, அண்மையில் வங்காள தேசத்தில் நடந்த முடிந்த தேர்தலில் Sheikh Hasina இன் அவாமி லீக் கட்சி நாலில் மூன்று பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுள்ளமை எடுத்துக் காட்டுகிறது.

இதே தலைமை முன்னர் ஊழல் குற்றச்சாட்டுக்களின் பெயரில் மக்களால் நிராகரிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டமையும் அத்தலைமை மீதான குற்றச்சாட்டுக்களில் இருந்து அது இன்று வரை விடுவிக்கப்படாத நிலையில்.. மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு மக்களால் அழைக்கப்பட்டிருக்கும் அவலமும் அங்கு தான் நிகழ்ந்திருக்கிறது.

இராணுவ ஆட்சிகள் ஏற்படுத்திய சலிப்பு முன்னாள் தலைமைகளின் குற்றங்களை மக்கள் மன்னிக்கத் தூண்டி இருக்கலாம் என்பதாகவே தெரிகிறது.

இதே தான் பாகிஸ்தானிலும் நிகழ்ந்ததது. ஆனால் அங்கு பெரும் ஊழல்வாதியாக இருந்த பெனாசிர் பாகிஸ்தான் தானே வளர்த்த பயங்கரவாதத்துக்குப் பரிதாபமாக உயிர் நீக்க வேண்டி வந்துவிட்டது.

உண்மையில் இது அந்த நாடுகளின் மக்களுக்கான விதித்த பொது விதிப்பு மட்டுமல்ல. உண்மையில் இது ஜனநாயகம் என்ற சூதாடியை நம்பி தமது தலைமைகளை தீர்மானிக்க நினைக்கும் மக்களின் அரசியல் தலைவிதி என்றே சொல்ல வேண்டும்.



இதற்கிடையே மீண்டும் குடுமி பிடி சண்டையாக Sheikh Hasina வின் வெற்றியை வங்காளதேச தேசியக் கட்சித் தலைவி Khaleda Zia குறை கூறியுள்ளார். நடந்து முடிந்த தேர்தலில் தமது ஆதரவு வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என்று அவர் கூறுகின்றார். ஆனால் ஹசீனாவோ அப்படி எதுவும் இல்லை இது நீதிக்கான வெற்றி என்று கூறுகின்றார்.

உலக நாடுகளை ஆண்களா பெண்களா ஆள்வது என்று சண்டை பிடித்து ஒருவாறு இருவரும் ஆளலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.

ஆனால்.. ஆண்களோ பெண்களோ அரசியல் தலைமைகளை ஏற்றதும்.. ஆட்சிப் பீடமேறியதும்.. அவர்களிடையே இருக்கும் பால் வேறுபாடு கூட இல்லாமல் போகும் அளவுக்கு ஜனநாயக சூதாடிகளாக அவர்கள் மாறி விடுகிறார்கள் என்பது தான் இன்றைய ஜனநாயக நிஜம்.

அதற்கு வங்காளதேச முதன்மைப் பெண்மணிகள் இருவரும் நல்ல உதாரணம்.. என்றால் அது மிகையில்லை.

அம்மையார் Sheikh Hasina மீண்டும் பழைய தவறைச் செய்யாமல் மக்கள் அவர் மீதும் ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை வைத்து அவரை தமக்கு தலைமை தாங்க தெரிவு செய்ததற்காக மக்களைக் காப்பாற்றி அழகிய அந்த வங்க தேசத்தை உலகில் மிளிர வைக்க முனைவாரா அல்லது மீண்டும் படுகுழியில் தள்ளிவிட்டுப் போவாரா என்பதை காலம் தான் தீர்மானிக்கப் போகிறது.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் மக்களால் மக்களுக்கு செய்யப்படும் ஜனநாயக ஆட்சியில் (அப்படித்தான் ஜனநாயகம் வரைவிலக்கணப் படுத்தப்பட்டிருக்கிறது.. ஆனால் உண்மை அதுவல்ல.) மக்கள் தமது தலைமையை தெரிவு செய்ய 50,000 இராணுவத்தினரும் 60,000 பொலீசாரும் கருவிகள் சகிதம் பாதுகாப்பு வழங்கியுள்ளனராம்.



வாக்குச் சீட்டுக்கு வேட்டுக்கள் காவல்.. இதுதான் இன்றைய ஜனநாயகத்தின் நிலை..!

மேற்படி ஆக்கதுக்கான செய்திகள், படங்கள் பெறப்பட்டது இங்கிருந்து ஆகும்.

பிற படங்கள் விக்கிபிடியா.

ஆக்கம்: யாழ் வாசகன்.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 8:06 AM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க