Wednesday, January 07, 2009

அடியுங்கோடா.. விடாமல் அடியுங்கோடா..!!



ரிங்.. ரிங்.. என்று ரெலிபோன் மணியடிக்க எதிர்பார்ப்போடு ஓடிச் சென்று ரிசீவரை தூக்கி காதில் வைத்தார் பார்வதியம்மா.

மறுமுனையில்.. யார் மாமியே.. இது நான் சிவானி கனடாவில் இருந்து பேசுறன். உங்கட மிஸ் கோல் வந்திருந்திச்சு அதுதான் அடிக்கிறன் மாமி. ஏதும் அவசரமே..??!

அதற்கு பார்வதியம்மா..

இல்லைப் பிள்ளை.. உவன் சங்கரின்ர அலுவலா தம்பியோட கதைப்பம் என்றுதான் எடுத்தனான். தம்பி நிற்கிறானே பிள்ள ?

அவர் இப்பதான் உந்தக் குளிருக்க.. இரவு வேலை முடிச்சிட்டு வந்து குளிக்கிறார். ஊரில பிரச்சனை கூடிப்போச்சுது என்றும்.. சங்கரை இஞ்சால கனடாப் பக்கம் எடுக்கிறது பற்றியும் நேற்றுக் கதைச்சவர் மாமி. இப்ப அவருக்கும் கஸ்டம் மாமி. வேலையெல்லாம் திடீர் திடீர் என்று பறிக்கிறாங்கள். எனி நாங்களும் பிள்ளை குட்டி குடும்பம் என்று ஆகிட்டம் தானே செலவுகளும் அதிகம்.

ஓம் பிள்ளை.. உங்கட கஸ்டங்களும் விளங்குது. இருந்தாலும் அவன் சங்கரை ஊருக்க வைச்சிருக்கிறது சரியான பயம். அதுதான் வெளில அனுப்பிட்டால் எனக்கு நிம்மதி பிள்ளை.

மாமி எங்களுக்கும் விளங்குது உங்கட பயமும் கஸ்டமும். இருந்தாலும் அவரால தனிய இப்ப சங்கரை இங்கால எடுக்கிறது என்றது கஸ்டம் தான் மாமி.

அப்படியே பிள்ளை. சரி அது இருக்கட்டும். நான் பிறகு தம்பியோட கதைக்கிறன் உதைப்பற்றி. நீங்கள் எப்படி சுகமா இருக்கிறியளே?

இருக்கிறம் மாமி. உங்கட தங்கச்சிட கடைசி மகனும் பரந்தன் சண்டையில இறந்திட்டதா கேள்விப்பட்டம். சரியான கவலை தான்.

ஓம் பிள்ளை.. தங்கச்சி தான் பெற்ற தன்ர 3 பிள்ளைகளையும் போராட்டத்துக்கு அனுப்பி சாகக் கொடுத்திட்டு இருக்கிறாள். அதுகளை நினைச்சா கவலைதான். எப்பவோ சொன்னனான் உந்தக் காணி பூமியை உள்ள நகை நட்டுகளை அடகு வைச்சிட்டு அல்லது வித்துப்போட்டு அவங்களை கனடா.. லண்டன்.. ஜேர்மனி.. அவுஸ்திரேலியா பக்கம் அனுப்பென்று. கேட்டாளே. இப்ப கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாள். எனக்கும் உவன் சங்கரால தான் பயம். மற்றதுகளை தானே நான் எப்பவோ வெளிநாட்டுக்கு அனுப்பிப் போட்டன்.

என்ன செய்யுறது மாமி. எல்லாம் அதுகளின்ர தலைவிதி.
சரி மாமி.. அவர் பிறகு உங்களோடு எடுத்துக் கதைப்பார். இப்ப வைக்கிறன் என்ன..!

ஓம் பிள்ள.. உங்களுக்கும் கனக்க ரெலிபோன் காசு வரப்போகுது. எதுக்கும் பிறகு உவன் தம்பியை மறக்காமல் ஒருக்கா கதைக்கச் சொல்லுபுள்ள.

ஓம் சொல்லுறன் மாமி. இப்ப பாய்.

சரி பிள்ளை. என்று சொல்லி ரிசீவரை வைத்த பார்வதியம்மா.. மனசுக்குள்ள.. உவ்வளவை தங்கட புருசமாரை விட்டுக் கொடாளவை. நான் அவனோட கதைப்பம் என்றால்.. அவா எனக்கு கதை சொல்லிட்டுப் போறா என்று எண்ணியபடியே..

மீண்டும் ரிசீவரைக் கையில் எடுத்தார்.. லண்டனில் உள்ள தன்னுடைய அடுத்த மகனுக்கு டயல் செய்ய..

ஹலோ.. ஹலோ.. தங்கச்சி இவன் புவி இருக்கிறானே..

யார் மாமியே கதைக்கிறது.

ஓம் பிள்ளை.. மாமி தான் கதைக்கிறன்.

அவர் இப்பதான் மாமி பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு ஸ்கூலுக்குப் போயிருக்கிறார். ஏதும் அவசரமே என்னிட்டச் சொல்லுங்கோ சொல்லிவிடுறன்.

உவன் சங்கர் விசயமா கதைப்பம் என்று தான் பிள்ளை எடுத்தனான். நீங்கள் எப்படி சுகமா இருக்கிறியளே?

நாங்கள் எல்லாரும் சுகமா இருக்கிறம் மாமி. ஊர்ப் புதினத்தைக் கேட்டால் தான் கவலையா இருக்குது. எல்லாப் பக்கத்தாலும் வரவிட்டிட்டாங்கள் போலக்கிடக்கு.

ஓம் பிள்ளை. ஊரில எல்லார் பாடும் கஸ்டம் தான். ஊரோடு ஒத்ததுதானே.

கவலைப்படாதேங்கோ மாமி. அவங்கள் திருப்பி அடிப்பாங்கள். நாங்க இங்க மாதா மாதம் காசு கொடுக்கிறனாங்கள் தானே. அவை சொல்லிச்சினம் திருப்பி அடிப்பினம் என்று.

எப்படிப் பிள்ளை அடிக்கிறது. எல்லாரும் ஊரோட வெளிநாட்டுக்கு ஓடினா யார் பிள்ளை அடிக்கிறது. இதென்ன கெற்றப்போலால (கவன்) அணில் அடிக்கிற போல விசயமே. கிபீர், மல்ரி பரல் என்று எத்தினைக்க நின்று சமாளிக்க வேணும். எனக்கு உவன் சங்கரால தான் பயம்.

ஓம் மாமி. அவரும் கதைச்சவர் சங்கர் போல இளம் பிள்ளைகளுக்குத்தான் பயம் என்று. சங்கரை இங்கால எங்கையின் எடுத்துவிட்டுட்டா அங்கால அவங்கள் அடிச்சால் என்ன விட்டால் என்ன.. எங்களுக்கென்ன. உங்களையும் லேசா இஞ்சால எடுத்திடலாம்.. இஞ்ச வயசு போன ஆக்களுக்கு வீடும் தந்து பென்சனும் தருவாங்கள்.

அப்படியே பிள்ளை.. கேட்கவே சந்தோசமா இருக்குது. எதுக்கும் புவி வரவிட்டு என்னோட கதைக்கச் சொல்லு பிள்ளை. எனக்கு ஒரு கிழமை பாஸ் தான் ஆமிக்காரன் தந்தவன். வாற புதன்கிழமை நான் ஊருக்கு திரும்பிப் போகப் போறன். இங்க வவுனியாவிலும் ஆக்களை கடத்திறாங்கள்.. வெள்ளை வான் பயம். செலவுகளும் கூடிப்போச்சுது.

சரி மாமி. இப்ப நான் வைக்கிறன். பிறகு அவர் வந்த உடன எடுக்கச் சொல்லுறேனே.

ஓம் பிள்ளை... என்று சொல்லி ரிசீவரை வைத்தவர்..

நீங்கள் தூர இடத்தில பத்திரமா இருந்து கொண்டு அடியுங்கோடா அடியுங்கோடா எண்டுவியள். இங்க போராடுற பிள்ளையளும்.. சனங்களும் படுற கஸ்ரம் விளங்கினாத்தானே... என்று எண்ணிய படியே மீண்டும் தான் மேற்கொண்ட முயற்சி தோற்ற விரக்தியில் யோசனையில் மூழ்கினார் பார்வதியம்மா.

ஆக்கம் - ஊரான்.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 2:11 PM

3 மறுமொழி:

Blogger kuruvikal செப்பியவை...

// கதை யதார்த்தம். அனுபவம்.. தொடரருங்கோ.. மெல்பேர்ன் கமல்//

என்ற பின்னூட்டல் தவறுதலாக இனங்காண முடியாது தவறவிடப்பட்டுவிட்டது.

தவறுக்கு வருந்துகின்றோம். மெல்பேர்ன் கமல். உங்கள் பின்னூட்டல் இங்கு இடப்பட்டதாக கருதி இதை இங்கு பதிகிறேன்.

தவறிருப்பின் சுட்டிக்காட்டவும்.

நன்றி குருவிகள்.

Wed Jan 07, 03:55:00 PM GMT  
Blogger ஆயில்யன் செப்பியவை...

:((

என் நண்பரின் கதையும் இதே தொடர்பில் நான் நேரடியாக கேட்டிருக்கின்றேன்!

வாழும் ஒரு வாழ்வில் கூட இதை போன்றதொரு வாழ்க்கை வரம் பெற்ற மக்களை நினைக்கையில் மனம் கனத்துப்போகின்றது !

Fri Sep 04, 10:27:00 AM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

இப்படி எத்தனையோ அனுபவங்கள் ஆயில்யன். அவற்றை எல்லாம் எழுத்தில் எழுத முடியாத சூழலும் இருக்கின்றன. :((

Fri Sep 04, 03:00:00 PM GMT+1  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க