Sunday, May 17, 2009

தமிழக வாக்காளர்களுக்கு ஈழத்தமிழனின் நன்றிகள்.தமிழக மக்களுக்கு என்று பல பிரச்சனைகள் உள்ளன. அன்றாட வாழ்வே பிரச்சனையான பல தமிழக உறவுகள் அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு ஈழத்தமிழனுக்காகவும் கடந்து போன தேர்தலில் வாக்களிக்காமல் இல்லை. அதற்காக முதற்கண் தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு நன்றிகள் பல.

ஈழத்தமிழர்கள் மீது தமிழக கட்சிகளுக்கு என்று பொதுவான அக்கறை இருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டுள்ள தமிழக மக்கள் அவை அனைத்தும் ஒன்றுதிரண்டு ஈழத்தமிழர்களின் நலன்காக்க உரிமை காக்க செயற்பட வேண்டும் என்ற தீர்ப்பையே இத்தேர்தலில் அளித்துள்ளதாக தமிழக தேர்தல் முடிவுகள் காட்டி நிற்கின்றன.

ஈழத்தமிழர்களின் நலனில் சிறிதும் அக்கறை செய்யாத பலரும் மற்றும் அரசியலுக்காக ஈழத்தமிழரின் நலனை உச்சரித்த சிலரும், ஈழத்தமிழரின் நலனை போராட்டங்களை பரிகாசம் செய்த சிலரும் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.

வைகோ போன்ற ஈழ உணர்வாளர்கள் பண முதலைகளின் முன் தோற்றாலும் குறிப்பிட்ட தொகுதிகளில் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுள்ளனர். அந்த வாக்குகளை அளித்த வாக்காளப் பெருமக்களுக்கு மிக்க நன்றிகள்.

மதிமுக வை இந்திய நாடாளுமன்றத்துக்கு ஈரோடு மக்கள் அனுப்பியுள்ளனர். ஈரோடு சொந்தங்கள் ஈழத்தமிழர் பற்றிய அதிக அக்கறை கொண்டவர்கள். அதற்காக தமிழகத்தின் இதர பகுதி மக்களுக்கு அக்கறை இல்லை என்பதல்ல இதன் அர்த்தம். ஒப்பீட்டளவில் இந்தக் கருத்தை முன்வைக்கிறேன். தவறாக இருப்பின் தமிழக உறவுகள் மன்னிக்க வேண்டும்.

தமிழக மக்களின் இந்த தேர்தல் தீர்ப்பானது சில இடங்களில் பணம் மற்றும் சதிகளால் மாற்றி அமைக்கப்பட்டிருந்தாலும் ஒப்பீட்டளவில் தமிழக மக்கள் தமது சொந்த தேவைகளோடு ஈழத்தமிழர்களின் நலனையும் கருத்தில் கொண்டுள்ளனர் என்பது வெளிப்படையாகி இருக்கிறது.

தமிழக மக்களின் ஈழத்தமிழர் தொடர்பான தீர்ப்பு என்பது தமிழகக் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு ஈழத்தமிழர்களின் உரிமை காக்க உழைக்க முன்வர வேண்டும் என்பதே. எல்லாக் கட்சியினரிடமும் ஈழத்தமிழர் மீதான அக்கறை இருக்கிறது. அவை அனைத்தும் ஏற்றுக் கொள்ளக் கூடியவையே. அவற்றை ஒன்றுபட்ட சக்தியாக்கி ஈழத்தமிழரின் நலன் பேண பாவிக்க வேண்டும் என்பதையே தமிழக மக்கள் உணர்த்த முற்பட்டுள்ளனர். இதனை தமிழக கட்சிகள் உணர்ந்து செயற்பட வேண்டும்.

ஈழத்தமிழர்கள் தொடர்பான தமிழக கட்சிகளின் கருத்தொற்றுமைக்கு தமிழக மக்கள் கண்ட.. உதாரணம்:

* திமுக இறுதியில் தமிழீழம் அமைக்க முயற்சிப்பேன் என்று வாக்குறுதி அளித்துள்ளது.

* அதிமுகவும் இதே வாக்குறுதியை அளித்துள்ளது.

* தமிழக காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்தாலும் ஈழத்தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தானும் தனிப்படக் கூறி இருந்தது.

* விடுதலைச் சிறுத்தைகள் எப்போதும் போல ஈழத்தமிழர்களின் நலனை முன்னிறுத்தியது.

* மதிமுக எப்பவும் போல ஈழத்தமிழர்களின் நலனை முன்னுறுத்தியது.

* பாமக எப்பவும் போல ஈழத்தமிழர்களின் நலனை முன்னுறுத்தியது.

* தேமுதிக வும் ஈழத்தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியது.

* பாஜகவும் ஈழத்தமிழர்களின் நலனில் அக்கறை செய்தது.

* இதை விட திரையுலகம் ஈழத்தமிழரின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்பதற்காக உழைத்தது.

இதர கட்சிகளும் இதனிலின்றும் மாறுபட்டதாகத் தெரியவில்லை. அதுமட்டுமன்றி...

கட்சி சாரா முத்துக்குமாரில் இருந்து காங்கிரஸ் கட்சி சார் உறுப்பினர் வரை ஈழத்தமிழருக்காக தீக்குளித்ததை தமிழக மக்கள் மறக்கவில்லை.தமிழகத்தில் கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த தொண்டர்கள் ஈழத்தமிழருக்காக தீக்குளித்து இறந்துள்ளனர். அவர்களின் கருத்தையே தமிழக மக்களும் பிரதிபலித்துள்ளனர்.

தமிழக மக்களின் இந்த இன உணர்வை தமிழக அரசியல் கட்சிகள் கருத்தில் எடுத்துச் செயற்படுமா.. தமிழக மக்களின் இந்தத் தேர்தல் தீர்ப்பை இனங்கண்டு மதிப்பளிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆனால் ஈழத்தமிழர்களுக்கு பொறுத்திருக்க அவகாசமே இல்லை. ஏனெனில் அவர்களின் இறுதி மூச்சு இன்னும் சில மணித்தியாலங்களுக்குள் அடங்கிப் போய்விடுமோ என்ற அச்சமே மேலோங்கி இருக்கிறது. வன்னியில் மட்டுமல்ல முழு இலங்கையிலும் தமிழ் மக்கள் மிக ஆபத்தான சூழலை எதிர்காலத்தில் சந்திக்க உள்ள நிலையில் தமிழக உறவுகளின் தீர்ப்பை தமிழக கட்சிகள் கருத்தில் எடுத்து ஈழத்தமிழருக்காக ஒன்றிணைந்து இந்திய நடுவன் அரசுக்கு தேவையான அழுத்தங்களை கொடுத்து தமிழின அழிப்பைச் செய்யும் சிறீலங்கா சிங்கள அரசை கட்டுப்படுத்த முயற்சிப்பதே இப்போதைய அவசர மற்றும் உடனடித் தேவையாகும்.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 6:30 AM

1 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

agreed.nice analysis.if all are accepting,why there is no positive action on this issue ? very bad

Tue May 19, 12:32:00 PM GMT+1  

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க