Friday, May 22, 2009

அவசரப்பட்டு ஆப்பிழுத்து சிக்கிய சிறீலங்காவும்.. இந்தியாவின் தில்லுமுல்லும்.அப்பாவித் தமிழ் மக்கள் சிறீலங்கா சிங்கள இராணுவத்தின் கொடூரங்களுக்குப் பயந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் தஞ்சமைந்த போது அதனை தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் சுதந்திர நடமாட்டத்தை தடுக்கின்றனர் என்று ஒப்பாரி வைக்க பாவித்தவர்கள் இன்று சிறீலங்கா அரசாங்கப்படைகள் 280,000 க்கும் மேலான மக்களை வதை முகாம்களில் அடைத்து வைத்து சித்திரவதை செய்வதை எந்த சலசலப்பும் இன்றி அனுமதித்து வருகின்றனர்.

இருப்பினும் சர்வதேச வல்லாதிக்க சக்திகளுக்கு சிறீலங்காவின் மீது செல்வாக்குச் செய்ய தற்போது கிடைத்திருக்கும் ஒரே ஒரு துரும்புச் சீட்டு இந்த முகாம்களில் அல்லறும் மக்களும் சிறீலங்கா சிங்கள அரசாங்கம் "பயங்கரவாதத்துக்கு எதிரான போர்" என்ற போர்வையில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவித்த சம்பவங்களுமே.

இதில் வேடிக்கை என்னவென்றால்.. விடுதலைப் புலிகளை மையமாக வைத்து சிறீலங்காவில் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வையில் ஒரு போரைத் திணிந்ததும் இதே சர்வதேச (மேற்குலக) வல்லாதிக்க சக்திகள் தான். ஆனால் சிறீலங்கா இவர்களின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு இந்தியா, சீனா, ரஷ்சியா, வியட்நாம், ஈரான், இஸ்ரேல், ஜப்பான் மற்றும் பாகிஸ்தான் என்று எல்லோரையும் இதற்குள் இழுத்துவிட்டு அவர்களிடையே போட்டியை தூண்டிவிட்டு ஐநாவினதும் ஒத்தூதலுடன் ஒரு பெரிய இனப்படுகொலையையே சத்தப்படாமல் செய்து முடித்துவிட்டது. இன்னும் சிறுகச் சிறுக செய்து கொண்டும் இருக்கிறது.

இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டிய விடயம் ஐநாவின் இரட்டை வேடமும் கையாலாகாத் தனமும்.

2008 இன் ஆரம்பத்தில் சிறீலங்கா யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து விலகி ஐநாவை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து விலகக் கோரிய போது தமக்கு சரியான பாதுகாப்பில்லை ஐநா தொடர்ந்து தம்மோடு தங்க வேண்டும் என்று வன்னி மக்கள் ஐநாவின் காலடியில் கிடந்து கெஞ்சினர். ஆனால் அதை அப்போது உதாசீனம் செய்த ஐநா பின்னர் அதே மக்களை புலிகள் மனிதக் கேடயமாகப் பிடித்து வைத்துள்ளதாக அறிக்கை விட்டுக் கொண்டிருந்ததும் இல்லாமல் அந்த மக்களைப் பிடித்து சிறீலங்கா வதை முகாம்களில் அடைத்து வைக்க தொடர்ந்து உதவி வந்ததுடன் சிறீலங்கா உளவு அமைப்பிடம் இருந்து பணம் பெறும் இந்தியாவின், இந்திய இராணுவத்தின் நம்பிக்கைக்குரிய ஒருவரான நம்பியாரை சிறீலங்காவுக்கான ஐநா பிரதிநிதியாக்கி அவர் மூலம் சிறீலங்கா தமிழ் மக்களை அடைத்து வைக்கப் பயன்படுத்தும் வதை முகாம்கள் உலகில் மிகச் சிறந்த தரத்துடன் இருப்பதாகவும் அறிக்கைவிட்டு சிறீலங்கா செய்யும் இன அழிப்பை மூடி மறைக்க தன்னாலான அனைத்தையும் செய்து கொண்டது. இப்போதும் கூட நம்பியார் அதையே மீண்டும் மீண்டும் செய்து வருகிறார்.ஆனால் பிரித்தானிய சனல் 4 மற்றும் சமீபத்திய ஸ்கை (skynews) தொலைக்காட்சி ரகசியப் படத்தொகுப்புக்கள் வன்னி மக்களை சிறீலங்கா சிங்கள அரசு போர்க்களத்திலும் சரி அதற்கு வெளியில் திறந்த வெளி வதை முகாம்களிலும் சரி திட்டமிட்டு இன அழிப்புச் செய்து வருதை உலகின் கண்முன் கொண்டு வந்துள்ளன. தமிழ் மக்கள் வேற்றுக்கிரகவாசிகள் போல நடத்தப்படும் நிலை அங்கு நிலவுவதாகக் கூடச் சொல்கின்றனர். அவர்கள் இவ்வாறு செயற்பட தமிழ் மக்கள் மீது அவர்களுக்குள்ள மனிதாபிமானம் அல்ல காரணம். மேற்குலக சக்திகளுக்கு சிறீலங்கா மீது செல்வாக்குச் செய்ய வலுவான சான்று தேவை. அதற்காக அவர்கள் சேகரிப்பவை தமிழ் மக்களுக்கு உதவியாகி விடுகின்றன என்பது மட்டும் தான் உண்மை.

இதற்கிடையில் போர்க்களத்தில் புலிகள் துப்பாக்கிகளை மெளனிக்க வைத்ததை அடுத்து சிறீலங்கா பதறி அடித்து புலிகளுடனான போர் வெற்றிகொள்ளப்பட்டதாகவும் முடிவடைந்து விட்டதாகவும் அறிவித்தது. சிறீலங்காவின் இந்த அறிவிப்புத்தான் அது தனக்குத் தானே வைத்த ஆப்பாக மாறியுள்ளது.

வன்னித் தமிழ் மக்களை 3 தொடக்கம் 5 ஆண்டுகளுக்கு வதை முகாம்களில் அடைத்து வைக்கப் போவதாகவும் அதற்கு ஐநா மன்றம் மற்றும் மேற்குலக நாடுகள் நிதி உதவி அளிக்க வேண்டும் என்று கேட்டது சிறீலங்கா. தமிழ் மக்களின் நிலத்தை ஆக்கிரமித்து வெளிநாடுகளுக்கு அவற்றை குத்தகைக்கு விட்டு மட்டுமன்றி தமிழ் மக்கள் மீதான யுத்தத்தை காட்டி தமிழ் மக்களை அடிமைப்படுத்தி அடைத்து வைத்தும் காசு பார்க்கலாம் என்ற சிந்தனையிலேயே சிங்களத் தலைமைகள் இந்த முடிவுக்கு வந்தன.

ஆனால் சீனாவின் சிறீலங்கா மீதான அதிக பற்று இந்த நோக்கத்துக்கு ஆப்பாக மாறிக் கொண்டிருந்த வேளையில் மேற்குலகத்தின் கதையைக் கேட்டு சிறீலங்கா ஆரம்பித்த "பயங்கரவாதத்துக்கு எதிரான போரை" மேற்குலகம் தனக்கு சாதமாக்கிக் கொள்ள சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தது. அதற்கான வேளை வந்ததும் அது தமிழ் மக்கள் மீது பாசம் காட்டுவதாக பாவனை செய்து கொண்டு வன்னி மக்களை மீட்கப் போகிறோம் என்று அமெரிக்கக் கடற்படையை தயார் செய்தது. இந்த நகர்வு சிறீலங்காவிக்கான முடிசூடான மன்னன் தானே என்றிருக்கும் அயல்நாடான இந்தியாவுக்கு தனது பிடி தளர்ந்திடுமோ என்ற பயத்தை உருவாக்க அதுவும் பதறிஅடித்துக் கொண்டு ஒரு சில காரியங்களைச் செய்து முடித்துள்ளது.

போர் முடியுதோ இல்லையோ உள்ள இடங்களை எல்லாம் பிடித்து முடித்து போர் முடியுது என்று அறிவிக்கக் கேட்டது. சிறீலங்காவும் அப்படியே நடந்து கொண்டது.

வன்னி மக்களை அடைத்து வைத்துள்ள முகாம்களில் மனித உரிமை மீறல்கள் உட்பட்ட விடயங்கள் மற்றும் அவற்றின் தரம் போன்றவை மேற்குல நாடுகளின் தலையீட்டுக்கு வித்திடக் கூடும் என்பதால் நேற்று (20-09- 2009) சிறீலங்காவுக்கு விஜயம் செய்த மேனனும் நாராயணனும் அந்த முகாம்களை விரைந்து மூடிவிட வகை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.இந்தச் செய்திக்கு பெரிய முக்கியத்துவம் அளித்து வெளியிட்டுள்ளதுடன் 180 நாட்களுக்குள், பெரிய திட்டத்தோடு மில்லியன் ரூபாய்கள் செலவில் அமைக்கப்பட்ட அந்த தற்காலிக கொட்டகைகளை தாங்கள் அகற்றிவிடுவோம் என்றும் தமிழ் மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தி விடுவோம் என்றும் சிறீலங்கா அறிவித்துள்ளது. இது ராஜபக்ச குடும்பம் முன்னர் போட்ட திட்டத்தில் இருந்து கொஞ்சம் மாறுபடுவதாக இருப்பினும் நடைமுறையில் இந்த அறிவிப்பு சாத்தியப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இது விடயத்தில் மேற்குலக அழுத்தம் தொடர்ந்து இருக்குமாயின் இதனை சாத்தியப்படுத்த வேண்டிய நிலை இந்தியாவுக்கும் சிறீலங்காவுக்கும் ஏற்படும்.

அதுமட்டுமன்றி வடக்குக் கிழக்கை அபிவிருத்தி செய்ய இந்தியா தன்னாலான அனைத்தையும் செய்யும் என்றும் கூறியுள்ளது. இதற்கு சில மணி நேரங்களின் முன் தான் சீன வெளிவிவகார மந்திரி போர் பாதிபிலின்றும் பொருளாதார நெருக்கடியிலின்றும் சிறீலங்கா மீள சீனா தன்னாலான அனைத்தையும் செய்யும் என்று அறிவித்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறீலங்காவுக்கு "பயங்கரவாதத்துக்கு எதிரான போரை" கற்றுக் கொடுத்த மேற்குலக சக்திகளோ சிறீலங்கா மீதான தமது பிடியை இறுக்க இப்போ நிதியையும் மற்றும் தமிழ் மக்களின் குரலில் இருந்து ஒலிக்கும் சிறீலங்கா சிங்கள அரசு செய்த இனப்படுகொலைக்கான சாட்சியம் தேடலையும் முக்கிய விடயங்களாக எடுத்துக் கொண்டுள்ளன.

இதனை முறியடிக்கவே இந்திய நலன் பேணும் ஐநா அதிகாரியான நம்பியாரை ஆகாய வழி முள்ளிவாய்க்காலுக்கு அழைத்துச் சென்று காட்டச் செய்தனர் மேனனும் நாராயணனும். இதன் மூலம் சிறீலங்கா மீதான போர் குற்றம் பற்றிய முனைப்புக்களை மழுங்கடிக்க முடியும் என்று இந்தியா வலுவாக நம்புகிறது. அதுமட்டுமன்றி இந்திய இந்து பத்திரிகை செய்தியாளர் வன்னிக்குச் சென்று இராணுவ முகாமில் தங்கி இருந்து தினமும் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் சர்வதேச ஊடகங்களுக்கு குறிப்பாக மேற்குலக ஊடகங்களுக்கு அந்த அனுமதி அளிக்கப்படவில்லை. இது இந்தியாவின் கண்காணிப்பின் கீழ்தான் வன்னியில் போர் குற்ற அடையாளங்கள், தமிழ் மக்கள் சந்தித்த மனிதப் பேரவலங்கள் தடயங்கள் இன்றி அழிக்கப்படுகின்றன என்பதை ஆதாரப்படுத்துவதாக உள்ளது.

வல்லாதிக்க சக்திகளினதும் பிராந்திய சக்திகளினதும் ஆதிக்க வெறிக்கு ஒரு இனத்தை பலியிடும் வரலாறு ஈழத்தில் நடந்து கொண்டிருப்பதையே சிறீலங்கா நோக்கிய இந்த 3 அல்லது 4 தரப்பு நகர்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

இன்றைய சிங்களத்தின் இந்தப் போர் வெற்றி, தமிழீழ விடுதலைப்புலிகளும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டமும் பலவீனமானதன் விளைவா என்பதை விட, தமிழ் மக்களின் போராட்டத்தை பாவித்து தம்மை பலப்படுத்த நினைத்த, நினைக்கும் அந்நிய சக்திகள் பலமாகிவிட்டதன் விளைவே ஆகும். ஆனாலும் இந்தப் போர் வெற்றியே சிறீலங்காவுக்கு ஆப்பாகி அதனை இறுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. அதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே வல்லாதிக்க மற்றும் பிராந்திய ஆதிக்க சக்திகளின் சிறீலங்கா நோக்கிய போட்டா போட்டியின் தன்மை இருக்கிறது. சிங்களம் எனியும் இதில் குளிர்காய முடியாது.

இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் செய்ய வேண்டியது எல்லாம் இந்தப் போட்டா போட்டிக்குள் தமது காய்களையும் தந்திரமாக நகர்த்தி தமது இனத்தின் தேச விடுதலையை உறுதியாக தீர்மானித்து விடுவதுதான். இந்தச் சந்தர்ப்பத்தையும் நழுவவிட்டால் தமிழினத்தின அழிவை எவராலும் தடுக்க முடியாத நிலையே தோன்றும்.

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 4:43 AM

0 மறுமொழி:

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க