Friday, May 29, 2009

கம்னியூசியம், இஸ்லாம் மனிதாபிமானம் அற்றவையா..??!

சிங்களச் சிறீலங்கா அரசு தமிழீழ மண்ணில் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களை விசாரிக்க வேண்டும் என்று ஐநா மன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை எதிர்த்தும் சிறீலங்கா சிங்கள அரசூடே தமிழர்களுக்கு உதவிகள் போய் சேர வேண்டும் என்ற தீர்மானத்தை ஆதரித்தும் உலக இன்னாள், முன்னாள் கம்னியூட்டுக்கள் மற்றும் அவர்களின் வால் பிடிகள் வாக்களித்துள்ளனர்.



//மே 2009 நடுப்பகுதியில் தமிழர்கள் மீதான சிறீலங்கா சிங்களப் படைகளின் இறுதித் தாக்குதலில் சிக்கிச் சின்னாபின்னமான தமிழ் மக்களின் தற்காலிக வதிவிடங்கள்.//


சிறீலங்காவின் மனித உரிமை மீறல்களை கூட கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கும் நாடுகளாக அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி விடுதலை பெற்ற கியூபா, தென்னாபிரிக்கா, இந்தியா, சீனா ஏன் ரஷ்சியா போன்ற நாடுகள் வாக்களித்திருக்கின்றமை இவர்களின் அடிப்படைக் கொள்கைகள் தொடர்பில் வலுவான சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. அதிலும்

பஞ்சசீலம்.. அணிசேராக் கொள்கை.. காந்திய வழி.. சாத்வீகம் என்றெல்லாம் தனக்குத் தானே பல மகுடங்களை சூடிக் கொண்டுள்ள இந்தியா அவற்றைக் கழற்றி வைத்துவிட்டு அதன் கண் முன்னாலேயே 60 ஆண்டுகளாக தமிழர்களைக் கொன்றொழித்து வரும் சிங்களச் சிறீலங்காவின் படு பாதகமான மனித இனப்படுகொலைகளை திட்டமிட்டு மறைக்க முயன்றுள்ளது. அதுமட்டுன்றி சிறீலங்காவின் இனப்படுகொலைக்கு ஆதரவாக ஒரு அணியையே உலகில் திரட்டிக் கொடுத்துள்ளது.



// மே 2009 சிங்களப் படைகளின் இறுதித் தாக்குதலின் பின்னான தமிழ் மக்களின் நிலைகள். இதில் 20,000 தமிழ் மக்கள் ஒரு சில தினங்களில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.//

அமெரிக்கா உட்பட்ட மேற்குலக நாடுகளால் அதிக மனித உரிமை மீறல்கள் நிகழ்வதாகச் சுட்டிக்காட்டப்படும் நாடுகளான சீனா கியூபா ரஷ்சியா இந்தியா போன்ற நாடுகளும் அடிப்படை இஸ்லாமிய வாதத்தில் ஊறிக் கிடந்து மனிதர்களின் அடிப்படை உரிமைகளையே மறுதலித்து வரும் சில அரபு நாடுகளும் சிறீலங்காவின் கொடூர இனப்படுகொலைக்கு முண்டு கொடுத்துள்ளமை இங்கு அவதானிக்கக் கூடிய ஒரு முக்கிய உண்மையாக இருக்கிறது.

ஐநா மன்றத் தீர்மானம் வெல்லப்பட ஐரோப்பியா ஒன்றியத்தையும் அமெரிக்க வல்லாதிக்க சார்பு நாடுகளையும் மட்டும் முழுமையாக ஈழத் தமிழர்கள் சார்ந்திருப்பது நன்றன்று என்பதையே இந்த உண்மை எடுத்துக் காட்டுகிறது.

ஈழத்தமிழர்களின் மேற்கு ஐரோப்பிய, அமெரிக்க சார்பு நிலைப்பாட்டை சில தீவிர இடதுசாரி நாடுகள் மற்றும் அரபு நாடுகள் சந்தேகக் கண்ணோடு பார்க்க விளைகின்றன. அதுமட்டுமன்றி தமிழர்கள் மேற்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்க சார்பு நாடுகளில் முன்னெடுக்கும் தமது போராட்டம் பற்றிய நியாயத்தை கவன ஈர்ப்பை கியூபா, ரஷ்சியா, சீனா மற்றும் அரபுலகம் நோக்கி தகுந்த முறையில் கொண்டு செல்ல முற்படாமை தமிழர்கள் பக்கத் தவறென்றே கொள்ளத் தோன்றுகிறது.



மேற்குலகமோ அமெரிக்காவோ நினைத்தால் இந்தத் தீர்மானம் ஏதும் இன்றியே உலகில் மனிதப் பேரவலம் ஒன்றை நிகழ்த்தியுள்ள சிறீலங்கா மீது வலுவான நடவடிக்கைகளை எடுக்க முடியும். அதுமட்டுமன்றி தீவிர அமெரிக்க சார்பு இஸ்லாமிய நாடுகள் சிறீலங்காவின் இந்த இனப்படுகொலையை அங்கீகரித்து வாக்களித்துள்ளன. அதனை மேற்குலகம் தடுக்கும் வகையில் காத்திரமாகச் செயற்பட முன்வரவில்லை. இது மேற்குலகம் குறித்த தீர்மானம் தொடர்பில் உண்மையில் நியாயத்தோடுதான் செயற்பட்டதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அமெரிக்க சார்பு மேற்குலக நாடுகளிடம் சிறீலங்கா மனித உரிமை மீறல்களை தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. இருந்தும் ஏன் அவை தமது சார்பு நாடுகளை இந்தத் தீர்மானம் வெல்ல நிற்பந்திக்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

ஒரு காலத்தில் சிறீலங்காவை மனித படுகொலைக்கள் செய்ய வழிநடத்தியவர்களில் இந்த அமெரிக்க இஸ்ரேலிய மற்றும் மேற்குலக இராணுவக் கணவான்களும் அடங்குவர் என்பதை நாம் மறக்கக் கூடாது.

ஈழத் தமிழ் மக்கள் இந்த உலகில் நடுநிலையானவர்கள். ஆனால் அவர்களின் சமீப கால நடவடிக்கைகள் அமெரிக்க சார்பு மேற்குலகை அதிகம் நம்பும்படியாக இருக்கின்றமை ஒன்றும் அவ்வளவு ஆரோக்கியமான செயற்பாடு அன்று. அமெரிக்க சார்பு மேற்குலகின் ஆதரவு மட்டுமன்றி உலகின் நடுநிலை நாடுகளின் மற்றும் இதர நாடுகளின் ஆதரவும் தமிழ் மக்களுக்கு சிங்கள இனவெறியர்களிடம் இருந்து அவர்களைப் பாதுகாக்க அவசியம்.

மேற்குலகம் எவ்வாறு தமது நோக்கங்களுக்காக இன்று தமிழர்களின் நிலையை பாவிக்க முனைகிறதோ அதேபோன்று அதன் இன்றைய நிலைப்பாடுகளை தமிழர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது தவறல்ல. ஆனால் தமிழர்கள் முற்றும் முழுவதுமாக மேற்குலகம் சார்ந்தவர்கள் என்ற பார்வையை ஏற்படுத்துவது நன்றன்று. அது மேற்குலகை அமெரிக்காவை பரம விரோதிகளாகப் பார்க்கும் நாடுகள் தமிழர்களையும் தவறாகவே கணிப்பிடவே வகை செய்யும். தமிழர்களும் இந்த உண்மையைக் கவனிக்கத் தவறிவிட்டனர். அந்த நாடுகளை தமிழர்களும் மேற்குலக நாடுகள் போன்று பலமற்ற நாடுகளாகவே எண்ணி வாழாதிருந்து விட்டனர். ஆனால் சிறீலங்கா அதை தனக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொண்டுவிட்டது.

உண்மையில் அமெரிக்க சார்பு மேற்குலகம் சந்தர்ப்பத்தை தமக்காக கையாள்கின்றனரே தவிர அவர்கள் தமிழர்கள் மீதான உண்மையான அக்கறையில் செயற்படவில்லை. ஆனால் கியூபா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளும் சில அரபுலக நாடுகளும் உண்மையில் அடிமைப்பட்டுள்ள மக்களுக்கு உதவ முன்வரக் கூடியன. தமிழர்கள் தகுந்த முறையில் இந்த நாடுகளின் தூதுவர்களை அணுகி தமது துயரங்களைச் சொல்லி இருப்பின் இவர்களை ஐநா மன்றில் நடுநிலை நிலைக்குக் கொண்டு வந்திருக்கலாம் அல்லது தமிழர்களுக்கு சார்பாக மாற்றி இருக்கலாம். இதன் மூலம் சிறீலங்காவை சர்வதேச அரங்கில் தோலுரித்தும் அதற்கு வால்பிடிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் உண்மை முகத்தையும் வெளிக்கொணர்ந்திருக்கலாம்.

உண்மையில் சந்தர்ப்பத்தை தவறவிட்டவர்களாக தமிழர்களும் அவர்களின் அணுகுமுறைகளுமே உள்ளனவே தவிர சிங்களம் இதில் வெற்றி பெற்றதாக பெரிதும் கணிப்பிட முடியாது. தமிழர்கள் 100% ம் அமெரிக்கா, மேற்குலக சார்பு நாடுகளை நம்பி இருப்பது அவர்களுக்கே ஆபத்தானது என்பதை தெளிவாக அவர்கள் புரிந்து கொள்ள இந்த ஐநா மன்ற வாக்கெடுப்பும் அதன் தோல்வியும் ஒரு வாய்ப்பை அளித்திருக்கிறது. தமிழர்கள் சிந்திப்பார்களா..???! மாற்றங்களை அணுகுமுறைகளை விரைந்து விரிபுபடுத்துவார்களா..??! துரித கதியில் செயற்படுவார்களா..??! உலகின் போக்கை தமக்குச் சாதமாக மாற்ற முனைவார்களா..??! இதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழர்களைப் பொறுத்தவரை நடுநிலை என்பதே இன்று அவசியம். அதனை தகுந்த வழிமுறைகளில் வெளிக்காட்டுவதும் அவசியம். தமிழர்களுக்கு அமெரிக்காவும் பகையல்ல.. மேற்கு ஐரோப்பாவும் பகையல்ல.. சீனாவும் பகையல்ல.. கியூபாவும் பகையல்ல.. சவுதிஅரேபியாவும் பகையல்ல.. பாகிஸ்தானும் பகையல்ல..!

படங்கள் மற்றும் செய்திகள்... புதினம், தமிழ்நெட் மற்றும் timesonline.co.uk

Labels: , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 6:05 AM

2 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

நல்லதொரு அலசல்.

Fri May 29, 09:32:00 AM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

நன்றிகள் அனானி.

Fri May 29, 04:41:00 PM GMT+1  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க