Friday, May 15, 2009

அமெரிக்காவின் திடீர் பாசம் ஒன்றும் ஈழத்தமிழரின் கண்ணீரிலல்ல.



அமெரிக்க வல்லாதிக்க அரச கடற்படை இன்று (15-05-2009) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் ஈழத்தில் வன்னியில் யுத்த வலயத்தில் சிக்கி இருக்கும் மக்களை மீட்க அல்லது அவர்களுக்கான மனிதாபிமான உதவியை வழங்க தான் தயாராக இருப்பதாகவும் இந்தியக் கடற்படையின் ஒத்துழைப்போடு தான் இதனை முன்னெடுக்க முடியும் என்றும் கூறி இருக்கிறது.

ஐநாவே கடந்த 5 மாதங்களாக போரில் பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள் என்று அறிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்க முன்வராத அமெரிக்கா, சிறீலங்கா சிங்கள அரசு முன்னெடுக்கும் தமிழின அழிப்புப் போர் முடிவடையும் தறுவாயில்.. இப்போ திடீர் என்று தமிழ் மக்கள் மீது பாசம் காட்டுவது ஒன்றும் அவர்கள் மீதான அக்கறையில் அல்ல.

ஐநா பாதுகாப்புச் சபைக்கு சிறீலங்கா விவகாரத்தை பிரிட்டனும் பிரான்சும் அமெரிக்காவும் கொண்டு வந்ததே தமது பார்வையிலிருந்தும் கவனிப்பில் இருந்தும் விலகிச் செல்லும் சிறீலங்காவை தமது வழிக்குக் கொண்டு வரவே அன்றி ஈழத்தமிழர் மீதான அக்கறையில் அல்ல.

பாதுகாப்புச் சபையில் சிறீலங்கா தொடர்பான விவாதம் நிகழ்வதை சீனாவும் ரஷ்சியாவும் வலுவாக எதிர்த்து வந்ததுடன் இவ்விரண்டு நாடுகளும் விடுதலைப்புலிகளுடனான போர் என்ற தொனியில் தமிழ் மக்கள் மீது சிங்கள அரசு செய்யும் போருக்கு பகிரங்க ஆதரவு வழங்கியதுடன் ஆயுத மற்றும் இராணுவ உதவிகளையும் குறைவின்றி தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கின்றன.

சீனா இவ்வுதவிகளோடு மட்டும் நின்று விடாமல் இந்தியாவின் சிறீலங்கா சிங்கள அரசு நோக்கிய நட்புறவு ரீதியான வலிந்த நகர்வுகளை முறியடிக்கும் வகையில் இந்தியா சிறீலங்காவுக்கு வலிந்து வழங்கி வரும் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளுக்கு அதிகப்படியாக தனது உதவிகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறது.

அண்மையில் இந்தியா சிறீலங்காவுக்கு வழங்கிய 100 கோடி இந்திய ரூபாய் கடனுக்கு போட்டியாக மில்லியன் டொலர்கள் கடனை தூக்கி வீசியது சீனா. அதுமட்டுமன்றி சிறீலங்காவின் தென்கோடித் துறைமுகமான அம்பாந்தோட்டை துறைமுகத்தை குறிவைத்து 1 பில்லியன் டொலர் அபிவிருத்தி என்ற போர்வையில் அதனை தனதாக்கிக் கொண்டதுடன் அந்த நிதியும் சிறீலங்காவை வந்தடைய இருக்கிறது.

விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதிகளாக்கி.. தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக்கி அதில் சிறீலங்காவை மயங்க வைத்து அதனூடு தமது நலன் காக்கலாம் என்றிருந்த அமெரிக்கா மற்றும் இந்தியாவின் எதிர்பார்ப்புக்களை மிஞ்சி சீனாவினதும் ரஷ்சியாவினதும் ஈரானினதும் மற்றும் சில அமெரிக்க மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பு அரபுலக நாடுகளினதும் சிறீலங்காவுடனான நெருக்கம் அதுவும் விடுதலைப்புலிகளின் கதை கிட்டத்தட்ட முடிந்ததாகக் கூறப்படும் நிலையில் அதிகரித்துள்ளமை அமெரிக்காவையும் இந்தியாவையும் தூக்கிவாரிப் போட்டுள்ளது.

இந்த நிலையில் சிறீலங்காவின் மீதான தமது பிடி மேலும் இழகி.. மோசமாகி தமது கட்டுக்குள் அடங்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் தான் சிறீலங்காவுக்கான சர்வதேச நாணய நிதிய கடனையும் அமெரிக்கா தள்ளி வைத்தது. தமிழ் மக்களின் மீதான அக்கறையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையாக சிலர் இதனைச் சித்தரிக்க முயல்கின்றனர். அது உண்மையில் மிகத் தவறானது. தமிழர்களுடனான சிங்கள அரசின் போரில் சிங்கள அரசுக்கு ஆயுத உதவி மற்றும் உளவுத்தகவல்களை வழங்கி அமெரிக்கா உதவி வந்ததை அண்மையில் ரணில் விக்கிரமசிங்கே பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருந்தது ஒன்றே போதும் அமெரிக்காவின் இந்த நகர்வுகள் எவையும் தமிழ் மக்களின் நலன் கருதியதல்ல என்பதை நிரூபிக்க.

சுருங்கக் கூறின் விடுதலைப்புலிகளையும் தமிழ் மக்களின் போராட்டத்தையும் மையமாக வைத்து தமது நலன்களை பாதுகாக்க இந்தியாவும் அமெரிக்காவும் பெரிய திட்டம் வகுத்திருந்த நிலையில் சீனாவும் ரஷ்சியாவும் விசயத்தில் முந்திக் கொண்டுள்ளன. குறிப்பாக சீனா தத்துரூபமாகக் காய் நகர்த்த அதனை தனக்கே உரித்தான சிறப்பு முறையில் கையாள்கிறது சிறீலங்கா என்பதே யதார்த்தம்.



//இன அழிப்புப் போரை எதிர்கொண்டு சொந்த மண்ணின் விடுதலைக்காய் போராடும் ஈழத்தமிழர்கள்.//

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை மையமாக வைத்து அதனைப் பயங்கரவாதமாக்கி தமிழர்களை இலங்கைத் தீவிலின்றும் அழிக்க வேண்டும் என்ற இனவெறியை சிறீலங்கா பன்னெடுங்காலமாகக் கொண்டிருப்பினும் இன்று சர்வதேச நாடுகள் மத்தியில் நிலவும் சிறீலங்காவை மையமாக வைத்த இந்து சமுத்திரத்தில் ஆதிக்கத்துக்கான போட்டா போட்டிச் சூழலை தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு அதில் தனது நீண்ட நாள் கனவை நனவாக்க நினைக்கிறது சிங்களச் சிறீலங்கா.

ஆனால் இந்தச் சூழ்நிலைகளை எல்லாம் தெளிவாக விளங்கிக் கொண்டிருந்தும் இந்திய உபகண்டத்தில் தமிழர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்யாமல் விட்டமை என்பதற்கு தமிழர்களுக்கு தார்மீக ரீதியில் உதவ பிராந்தியத்தில் பலம் பொருந்திய அரசோ அல்லது தமிழர்கள் மத்தியில் தமது பலத்தை நிரூபிக்கக் கூடிய ஒற்றுமையோ இருக்கவில்லை என்பதே முக்கியமான காரணிகளாக இருக்கின்றன.

இன்று ஐரோப்பிய பிரதிநிதிகளும் ஐநாவும் ஒபாமாவும் மேனனும் சிதம்பரமும் கருணாநிதியும் மற்றும் ஜெயலலிதாவும் ஈழத்தமிழர்கள் மீது அக்கறை காட்டுகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்கல்ல. தமது நாடுகளின், அரசுகளின் மற்றும் தமது சொந்த அரசியல் நலன்களை காக்கும் நோக்கில் சிறீலங்காவை பயன்படுத்தவும் அதனை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்குமே ஆகும். இதற்காகவே தான் சீனாவும் வியட்நாமும் ரஷ்சியாவும் சிறீலங்காவை அரவணைக்கின்றன.

இந்த அரவணைப்புக்களின் சுகத்தில் தான் சிறீலங்கா சிங்களப் பயங்கரவாத தேசம் தமிழின அழிப்பை, மிக வசதியாக இத்தனை மனித உரிமை மீறல்களையும் பகிரங்கமாகச் செய்து கொண்டு ஐநாவைக் கூட எதிர்த்து மிடுக்காகப் பேசிக் கொண்டு செய்ய முடிகிறது.

இதன் பின்னணியில் ஈழத் தமிழர்கள் இன்று அனுபவிக்கும் துன்பியல் என்பது உண்மையில் தமிழர்களுக்கு என்றான ஒன்றல்ல. ஒட்டுமொத்த உலகுக்குமானது.

இன்றைய புதிய உலகு ஒழுங்கில் இது மனித உரிமைகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் சவால் என்பதற்கும் மேலாக இனங்களின், மக்களின் விடுதலை என்பது அவர்கள் எந்த வல்லாதிக்க சக்தியை அரவணைக்கிறார்களோ அதன் பால்பட்டே அமையும் என்ற உண்மையையும் உலகுச் சொல்லி இருக்கிறது. அதாவது மக்களின் வாழ்வுரிமை என்பது வல்லாதிக்க சக்திகளை, ஆதிக்க சக்திகளை அரவணைப்பதால் பெறப்படுமே அன்றி வேறு வழியில் அது அமைய முடியாது என்பதே ஆகும். எனி என்று மாறுமோ இந்த நிலை என்பது கேள்விக் குறியாகவே இருக்க, அது மாறுவதற்கிடையில் ஈழத்தில் தமிழினம் அழிக்கப்பட்டு அல்லது முழுமையாக அடிமைப்படுத்தப்பட்டு இலங்கைத் தீவு முழுமைக்கும் சிங்கள இராட்சியம் அமைக்கப்பட்டு விடும் என்பது மட்டும் திண்ணம்.

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:01 PM

4 மறுமொழி:

Blogger LKritina செப்பியவை...

Tamil Eelam is sure to emerge!!
It is a temporary setback to our cause!! I still hope for better !!! Racist sinhalese will never win the war on our struggle for free home land in that island!!! China, America, Russia, India all will fail one day in this regard!!!

Sat May 16, 01:19:00 AM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

Excellent article. This is nothing but the whole truth. It's a matter of life and death for sri lanka's tamils.

Sat May 16, 01:55:00 AM GMT+1  
Blogger ISR Selvakumar செப்பியவை...

Very good post! Thoughtful!

Sat May 16, 03:21:00 AM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

சீனாவின் ஆயுதங்கள் மூலம் சிறிலங்கா போரை வென்றுள்ளது: 'த ரைம்ஸ்'
[ஞாயிற்றுக்கிழமை, 17 மே 2009, 10:04 மு.ப ஈழம்] [க.திருக்குமார்]
தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக முறியடிக்கும் தருணத்தை எட்டியுள்ளதாக சிறிலங்கா படையினர் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அரசின் இந்த வெற்றிக்கான காரணம் சீனா வழங்கிய ஆயுதங்களே என பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'த ரைம்ஸ்' நாளிதழ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு:

தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக முறியடிக்கும் தருணத்தை எட்டியுள்ளதாக சிறிலங்கா படையினர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அரசின் இந்த வெற்றிக்கான காரணம் சீனா வழங்கிய ஆயுதங்களே என பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சீனா தனது ஆயுதங்களை நட்பு நாடுகளுக்கும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கும் தொடர்ச்சியாக வழங்கி வருவது மேற்குலகத்தின் கவனத்தை மட்டும் ஈர்க்கவில்லை. மாறாக பல ஆசிய நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

உள்நாட்டுப் போரில் கொழும்பு ஈடுபட்டு வருவதால் 1990-களில் இந்தியாவும் மேற்குலகமும் சிறிலங்காவுக்கான ஆயுத விநியோகங்களை மட்டுப்படுத்தியபோது சீனாவே சிறிலங்காவின் பிரதான ஆயுத விநியோகிஸ்தராக செயற்பட்டு வந்தது.

சிறிலங்காவில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் சிறிலங்காவுக்கான படைத்துறை உதவிகளை அமெரிக்கா இடைநிறுத்தியபோது சீனா சிறிலங்காவுக்கான ஆயுத உதவிகளை 2007-களில் பல மடங்கு அதிகரித்திருந்தது.

உலகின் மொத்த ஆயுத விற்பனையில் சீனா 4 வீதத்தை கொண்டுள்ளது. பிரித்தானியா 8 வீதத்தையும் அமெரிக்கா 40 வீதத்தையும் கொண்டுள்ளன.

சிறிலங்காவில் சிறிய மீன்பிடி கிராமத்தை சீனாவின் நிறுவனங்கள் பாரிய துறைமுகமாக அபிவிருத்தி செய்து வருகின்றன. அம்பாந்தோட்டையில் பில்லியன் டொலர் செலவில் நிர்மாணிக்கப்படும் இந்த துறைமுகம் சீனாவின் கடற்படை கப்பல்களுக்கான எரிபொருள் நிரப்பும் மையங்களாக தொழிற்படலாம்.

சீனாவின் தொழிற்சாலைகளுக்கு தேவையான எரிபொருட்கள் இந்த பாதையினால் தான் கொண்டுவரப்படுவது உண்டு. அதற்கு பாதுகாப்பாக சீனாவின் கடற்படை செயற்பட்டு வருகின்றது. இந்த கப்பல்களுக்கான எரிபொருள் நிரப்பும் துறைமுகமாக அம்பாந்தோட்டை வருங்காலத்தில் செயற்படும்.

இதன் பொருள் என்னவெனில் அம்பாந்தோட்டை ஒருநாள் சீனாவின் கடற்படை தளமாக மாற்றமடையலாம். சிலர் அவ்வாறு இருக்காது என எண்ணலாம். ஆனால், அதுதான் உண்மை, சீனாவின் படைத்துறை திட்டமிடல் அதிகாரிகள் தொலைநோக்கு பார்வை உடையவர்கள்.

தாய்வானுடன் மோதல் ஏற்படும் சமயத்தில் அது சீனாவின் கடற்பாதைகளில் தடையை ஏற்படுத்துமா? அவ்வாறான பாதகமான நிலமைகளை தான் சீனாவின் திட்டமிடல் அதிகாரிகள் தமது மனதில் கொண்டிருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் சீனாவுக்கு தூரமான இடங்களில் நண்பர்கள் தேவை. எனவேதான் அவ்வாறான உறவுகளை சிறிலங்கா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் அது ஏற்படுத்தி வருகின்றது. பாகிஸ்தானில் ஹெடார் துறைமுகத்தையும் சீனா நிர்மாணித்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதினம்.இணையத்தளம்.

Sun May 17, 06:21:00 AM GMT+1  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க