Friday, June 12, 2009

வெட்டிப் பெண்ணிலைவாதம் பேச மறுத்த ஈழத்துப் பெண்கள் அவலம்.ஈழத்தில் அடுப்பங்கரையில் புகைமண்டிப் போயிருந்த தமிழ் பெண்களின் கூந்தலில் மேற்கு நாட்டு கூந்தல் ஸ்பிரே பர வழி செய்தவர் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் என்றால் அது மிகையல்ல.

ஊருக்குப் பயந்து, சமூகப் பழக்க வழக்கங்களுக்குப் பயந்து ஒடுங்கி வாழ்ந்த பெண்களை விழிப்புணர்வூட்டி இன விடுதலை நோக்கிய பாதையில், சமூக விடுதலை நோக்கிய பாதையில் கொண்டு வந்த அவர்.. பல பெண்கள் மேற்கு நாடுகளுக்கு இடம்பெயரவும் காரணமாக இருந்துவிட்டார் என்பதும் உண்மை.

இந்த மேற்கு நாடுகளுக்கு இடம்பெயர்ந்து விட்ட பெண்கள் இன்று மேற்கு நாட்டுக் கலாசாரங்களால் உள்வாங்கப்பட்டு அங்கே என்னென்னவெல்லாம் செய்ய முடிகிறதோ அத்தனையையும் செய்கின்றனர். அதில் நல்லவையும் உள்ளன கெட்டனவும் உள்ளன.

மேற்கு நாடுகளில் பெண்கள் என்ன செய்கிறார்கள் என்று கூர்ந்து கவனிப்பதல்ல எமது வேலை. அவர்கள் செய்வதை செய்யட்டும் அதன் விளைவுகளை அவர்களே சந்திப்பர்.

இன்றைய எமது வினவல் என்பது மேற்கு நாடுகளிலும் சரி இந்தியா போன்ற நாடுகளிலும் சரி ஒரு கூட்டம் பெண்கள் பெண்ணிலைவாதம் என்ற வாத அடிப்படையை கொண்டு கூட்டம் கூடுகின்றனர்.. மார்தட்டிக் கொள்கின்றனர்.. சுயபிரகடனங்கள் போட்டுக் கொள்கின்றனர்.. புகழ் தேடிக் கொள்கின்றனர்... ஏன் இன்னும் சிலர் தாமே மனித இனத்தில் பெண்களின் புரட்சியாளர்கள்.. முன்னோடிகள் என்று தமக்குத் தாமே மகுடம் கூட சூடிக் கொள்கின்றனர்.

அண்மைய ஆண்டொன்றில் மேற்கு நாடு ஒன்றில் (இங்கிலாந்து) தமிழ் பெண்கள் உள்ளாடை அணிவது தொடர்பாகக் கூட பெண்ணிலைவாதிகள் விவாதித்தனர் என்றால் பாருங்களேன்.ஆனால் ஈழத்தில் கடந்த 18 மாதங்களுக்கும் மேலாக சிறீலங்காச் சிங்களப் பயங்கரவாத அரச படைகள் கர்ப்பிணிப் பெண்கள் உட்பட பெண்களை சிறுமிகளை குழந்தைகளை கணவன்மாரை வகை தொகையின்றிக் கொன்ற போது இந்தப் பெண்ணியவாதம் அந்த பெண்களுக்காக பேச மறுத்துவிட்டது. அவர்களுக்காக நீதி கேட்க.. அவலத்தில் துடித்த பெண்களுக்கு குரல் கொடுக்க முன்வரவில்லை. ஏன் வழமையாக அவர்கள் செய்யும் கவிதை புரட்சியைக் கூட செய்ய முன்வரவில்லை.

போர்க்களத்தில் வீழ்ந்த தமிழ் சகோதரிகளின் உடல்களை சிங்கள இன வெறியர்கள் நிர்வாணமாக்கி மேய்ந்த போது மேடைகள் தோறும் கொக்கரிக்கும் பெண்ணியவாதம் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டது.

இன்று 3 இலட்சத்துக்கும் அதிக மக்கள் (பெண்கள் சிறுமிகள் உள்ளடங்க) ஈழத்தில் சிங்களப் படைகளின் காவலின் கீழ் முட்கம்பி வேலிகளுக்குள் சிறைவைக்கப்பட்டுள்ள இவ்வேளையில் அங்கு பெண்கள் படும் துன்பம் என்பது சொல்லில் அடங்காது. ஒரு பெண் குளிக்கக் கூட ஒரு மறைப்பை செய்ய முடியாத நிலை. இயற்கைக் கடனைக் கூட ஒரு மறைவிடம் அமைத்து செய்ய முடியாத நிலை.

அதுமட்டுமன்றி இந்த முகாம்களில் சிங்கள ஓநாய்களுக்கும் தமிழ் ஒட்டுக்குழு ஓநாய்களுக்கும் தினமும் இரையாகும் பெண்களும் அவர்களின் மரண ஓலங்களும் கேட்டுக் கொண்டே இருக்கின்றன.

கடந்த 3 வாரங்களில் மட்டும் 62 பேர் இந்த முகாம்களில் இறந்துள்ளனர். இதில் மூதாளர்களும் சிசுக்களுமே அதிகம். இந்த மூதாளர்களில் பெண்களும் அடங்குவர். இந்த 62 பேர் யுத்த முனையில் யுத்தத்தின் போது இறந்திருந்தால் அது ஒரு செய்தியாக என்றாலும் வெளிவந்திருக்கும். ஆனால் சிங்கள அரசின் நாசிய கொள்கை ரீதியான ரகசிய, திட்டமிட்ட இன அழிப்பு இந்த 62 பேரை சிறுகச் சிறுகச் சாகடித்திருப்பது இந்த உலகுக்குத் தெரியவில்லை. இப்படி சாகடிக்கப்பட்டது இந்த 62 பேர் மட்டுமல்ல இது 5 அல்லது 6 வது தொகுதி என்றே செய்திகள் கூறுகின்றன. இப்படி இன்னும் இன்னும் சாகடிக்கப்பட இருக்கின்றனர் என்பதும் உண்மை.

அதுபோக.. வாழ வேண்டிய பெண்கள், சிறுமிகள் இன்று வதை முகாம்களில் அடிப்படை வசதிகள் இன்றி, கல்வி இன்றி சிங்களப் படைகளின் தமிழ் ஒட்டுக்குழு ஓநாய்களின் வெறிக்கு இரையாகிக் கொண்டிருக்கும் நிலையும் காணாமல் போதல்களும் கடத்தப்பட்டு அல்லது சிறைபிடிக்கப்பட்டு அடைக்கப்படுவதும் தொடர்கிறது. இப்படி அடைக்கப்படுவோரின் அடிப்படை உரிமைகள் குறித்து கேள்வி கேட்க எவரும் இல்லை. அவர்களின் நலன்களை நேரில் சென்று கவனிக்க ஆயிரம் மாதர் சங்கங்களும் பெண்ணிலை அமைப்புக்களும் உள்ள இந்த உலகில் ஒரு பெண்ணிலை அமைப்புக் கூட முன்வரவில்லை.//சிங்களப் படைகளின் தாக்குதலில் உடல் கிழிந்து தான் சுமந்த சிசுவுடன் இறந்து கிடக்கும் தமிழ் தாய்.//

நாம் கிட்லரின் நாசிய வதை முகாம்களில் அது நடந்தது இது நடந்தது என்று படிக்கிறோம்.. முழங்குகிறோம்.. உணர்ச்சியை வெட்டிக்கு மேடை போட்டு பேசிக் கொட்டி தீர்த்துக் கொள்கின்றோம் (வெட்டி வீராப்புக் காட்டி காலத்தை வீணடித்துக் கொள்கின்றோம்). ஆனால் எம் கண் முன்னால் நடக்கும் அதே கொடுமைகளை கண் மூடி அனுமதித்துக் கொண்டும் இருக்கிறோம். பெண்ணின் உள்ளாடைக்கு விடுதலை வேண்ட குரல் கொடுத்த பெண்ணிலைவாதிகளும்.. பெண்கள் தற்கொலைப்படையில் இருப்பது பெண்மைக்கு இழுக்கு என்று வரிந்து கட்டிப் பேசிய பெண் மகான்களும் இன்று இந்த கொடுமைகளுக்காக ஏன் ஒரு வரி தன்னும் பேச முன்வரவில்லை. இவர்களின் கண்ணுக்கு நவீன கிட்லர் ராஜபக்சே செய்யும் இன அழிப்பின் கனதி புரியவில்லையா.. அல்லது அவர் தமிழ் பெண்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ள கொடுமைகள் தான் தெரியவில்லையா ...??!

வன்னி இன அழிப்பு போரின் போது ஒரு ஐநா அங்கீகாரமுள்ள அரசின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச பேசுகிறார்.. "தமிழ் ஆண்களின் குருதி இந்து சமுத்திரத்தை செந்திறமாக்கட்டும் தமிழ் பெண்கள் எமது படைகளுக்கு இரையாகட்டும்" என்று. இன்றை நாள் வரை இந்த கூற்றை வெளியிட்ட அந்த அதிகாரியை.. அந்த நாட்டை எந்தப் பெண்கள் அமைப்பும் பகிரங்கமாகக் கண்டித்ததாகத் தெரியவில்லை.

ஆக பெண்ணிலைவாதம் என்பது ஒரு சில படித்துவிட்டு வேலை வெட்டி இல்லாமல் வீட்டில் குந்தி இருக்கும் பெண்களின்.. அல்லது ஓய்வுபெற்றுவிட்டு வேலை வெட்டி இன்றி வீட்டில் இருக்கும் பெண்களின்.. அல்லது சமூகத்தில் ஏதாவது மாறுதலாகப் பேசி கைதட்டலும் புரட்சியவாதி என்ற அடைமொழிகளும் பெற்றுக் கொள்ள பேராசை கொண்டலையும் பெண்களின்.. நான் படித்த படிப்புக்கு ஆண்களுக்கு சரிநிகரானவள் என்ற மமதையை வெளிப்படுத்த நினைக்கும் பெண்களின்.. வாதநிலையாக உலகில் இருக்கிறதே அன்றி.. பெண்களின் நிலை கண்டு அவர்களுக்குத் தேவையான மனிதாபிமானம், அடிப்படை மனித உரிமைகள் நோக்கி அவற்றிற்காக அர்ப்பணிப்போடு பாடுபட அது முன்வரத் தயாராக இல்லை என்பதை அது உறுதி செய்திருக்கிறது.ஒருவேளை கவிதை கதை கட்டுரைகளால் ராஜபக்சவை கவிழ்க்க முடியாது அவரின் முன் செயற்பாடுகளே தோற்கும் போது நாம் என்ன செய்ய முடியும் என்று தமது பலவீனத்தை தாமே ஒத்துக் கொண்டு பெண்களையும் பெண்ணிலைவாதத்தையும் கைவிட்டு விட்டனரா இந்தப் பெண்கள் என்று கூட கேட்கத் தோன்றுகிறது.

இந்தக் கட்டுரையை பெண்ணிலைவாதிகளை சாட எழுதவில்லை. அவர்களின் உண்மைத் தன்மையை உலகம் காண எழுத வேண்டி நேர்ந்துவிட்டது. இதற்கு மேலும் உலகில் பெண்களின் நிலை பேச இப்படி ஒரு கூட்டம் அவசியமா எம்மத்தியில் என்ற வினவலும் எழாமல் இருக்க வாய்ப்பில்லை.

சொல்லுக்கும் செயலுக்கும் ஏற்ப செயற்படும் துணிச்சல் வேண்டும். இன்றேல் இந்தப் பெண்ணிலைவாதம் என்பது கூட கவிதை கதை மேடைப் பேச்சு பேசும் ஒரு சராசரி பொழுதுபோக்கு அம்சமாகவே இந்த உலகில் இருக்கும். அதனிடம் அதிகம் காத்திரமான செயற்பாடுகளை மக்கள் எதிர்பார்ப்பது முட்டாள் தனமானதாகவே இருக்கும்.

ஆனால் இந்த வேளையில் ஒன்றைச் சொல்லிக் கொள்ள வேண்டும், பெண்ணிலைவாதம் பேசாத ஆனால் சமூகப்பணிபுரிய தம்மை அர்ப்பணித்த சில சகோதரிகள் தொண்டு அடிப்படையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நேரிலும் மறைமுகமாகவும் உதவிகளைச் செய்து வருகின்றனர் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இருந்தாலும் அவை போதுமானவையாகவோ பாதிக்கப்பட்டுள்ள, பாதிக்கப்படவுள்ள பெண்களின் மீட்சிக்கு முழுமையாக உதவும் சக்தி உள்ளனவாகவோ இன்னும் அமையப் பெறவில்லை என்பதும் வேதனைக்குரிய ஒன்றாகவே இருக்கிறது. இதற்கு சிறீலங்கா சிங்கள அரசின் நாசிய வழி இன அழிப்புக் கொள்கையும் அணுகுமுறைகளும் அது விதித்துள்ள தடைகளும் ஒரு முக்கிய காரணமாகும்.

ஆக.. பெண்களே பெண்களை கையறுநிலையில் வதை முகாம்களில் சிங்கள இன வெறியர்களிடம் கையளித்துவிட்டு வாழாதிருக்கும் நிலையே இன்று காணப்படுகிறது. எல்லாவற்றிற்குமாக போராட வேண்டியதாக உலகத் தமிழ் சமூகம் இருக்கிறது. அது தனது கடமையை செய்யுமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் இந்தப் பொறுத்திருப்பு காலத்துள் எத்தனையோ தமிழ் உயிர்களை சிங்களம் அழித்துவிடும் என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்க மறுக்கக்கூடாது. செயல்களும் செயற்பாடுகளும் துரிதமாக தொடர்சியாக வெல்லும் வரை அமைய வேண்டும். செய்வார்களா உலகத் தமிழ் மக்கள்..??!

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கின் தாழ்வு.(நல்லவை என்று எழுதிப்படிப்போம்.. ஆனால் அதன் வழி செயற்பட மறுபோம்.. இந்த நிலையும் மாற்றுவோம்.)

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 6:16 AM

0 மறுமொழி:

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க