Tuesday, June 23, 2009

புலியின் சரிவில் சாவின் விழிம்பில் ஒட்டுண்ணிகள். அவர் தம் சரித்திரம் முடிப்போம்.ஈழத்தில் கடந்த 35 ஆண்டுகளில் குறைந்தது 25 ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப்புலிகளை குற்றம்சாட்டியே சிங்கள மற்றும் இந்திய அரசுகள் கையளித்த ஆயுதங்களை, பணத்தை, செல்வாக்கை வைத்து ஈழம், தமிழ் மக்கள் என்ற பெயர்களைச் சூட்டிக் கொண்டு தமிழ் மக்கள் முன்னெடுத்த தாயக விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக எதிரியின் காய்நகர்தல்களுக்கு முழுமையாக உதவி வந்த ஒட்டுண்ணி தமிழ் ஆயுதக்குழுக்களின் ஆயுள் சேடம் இழுக்கும் நிலையை எட்டியுள்ளது.

2006ம் ஆண்டு ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக இன அழிப்பு ஆக்கிரமிப்பு யுத்தத்தை சிறீலங்கா சிங்கள பேரினவாத அரசு ஆரம்பித்து இந்தியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் ரஷ்சியா போன்ற நாடுகளின் நேரடி உதவியூடு இவ்வாண்டின் மே மாதத்தில் புலிகளை வென்று குறித்த யுத்தத்தில் ஆயுத பாவனையை நிறைவுக்கு கொண்டு வந்துவிட்டதாக அறிவித்தது.

அப்படி ஒரு அறிவிப்பு விடப்பட்டு முழுமையாக ஒரு மாதம் கூட இன்னும் ஓடிடவில்லை.

யுத்தத்தின் வடுக்களை சுமந்த மக்களில் அவை ஆறக் கூட இல்லை. வேட்டுக்களும் குண்டுகளும் ஏற்படுத்திய காயங்களின் ரணங்கள் ஆறக் கூடவில்லை. உயிரிழப்புகளின் சோகங்கள்.. கணக்கெடுப்புக்கள் கூட முடியவில்லை. வடக்குக் கிழக்கு தமிழ் மக்கள் சொந்த இடம் மீள முடியாது அகதி முகாம்கள் என்ற பெயரில் நடத்தப்படும் திறந்த வெளிச் சிறைக்கூடங்களில் அடைக்கப்பட்டிருக்கும் நிலை தொடர்கிறது.

இத்தனை துயர்களையும் தமிழ் மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அம்மக்கள் பற்றிய எந்த கருசணையும் இன்றி யாழ்ப்பாண மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைக்கு தேர்தலை நடத்தி தான் இலங்கையின் வடக்குக் கிழக்கில் சனநாயகத்தை, இயல்பு நிலையை நிறுவி விட்டுள்ளதாக வெளியுலகுக்கு ஒரு போலித் தோற்றத்தைக் காட்ட சிங்கள அரசு போடும் நாடகத்தில் பங்கெடுக்க மக்கள் விரோத ஒட்டுண்ணிகள் தயாராகிவிட்டனர்.தமிழ் மக்களின் இரத்தத்தில் அரசியல் செய்து வாழ்ந்து பழகிவிட்ட இந்தப் புண்ணியவான்கள் மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறை பதியத் தயாராகிவிட்டனர்.

1987 இல் இந்தியப் படைகள் தமிழீழத் தாயகத்தை ஆக்கிரமித்து நின்று கொண்டு தான் ஈழத்தமிழ் மக்களுக்கு இந்தியா விரும்பும் தீர்வை ஜனநாயக வழியில் புலிகளை வென்று பெற்றுக்கொடுத்துவிட்டதாக உலகை நம்ப வைக்க இப்படி ஒரு நாடகத்தை ஆடியது. அன்றும் சனநாயகம் ஆக்கிரமிப்பாளர்களின் ஆக்கிரமிப்புக் கருவியாக, பகடைக்காயாக ஈழத்தமிழர்களை பலியிட்டது. இன்றும் அதே ஒட்டுண்ணிகளைக் கொண்டு சிங்களத் தலைமை தமிழர்களை சனநாயகத்தின் பெயராலும் பலியிடத் தயாராகிவிட்டது.

இத்தனை மக்களின் துயர்மிகுந்த சூழலிலும்.. இந்த தமிழ் மக்களின் இரத்தம் குடிக்கும் ஒட்டுண்ணிகள் தமது தாகத்தை தீர்த்துக் கொள்ளவதிலேயே முன்னிற்கின்றன. அதற்காக எதிரியோடு சேர்ந்து அவனுடைய கட்சி அடையாளத்தின் கீழும் தமக்குள் கூட்டணி போட்டும் பிரிந்தும் அவனின் வெற்றிப்பிரச்சாரத்துக்காக சனநாயகத்தை சோடை போகச் செய்து அதன் கீழ் தமது வாழ்க்கையை பார்த்துக் கொள்ளக் தயாராகி விட்டனர்.

தமது ஈழம்.. தமிழ் மக்கள் என்ற அடையாளங்களைக் கூட சிங்கள பேரினவாதத்திற்கு தாரை வார்த்துக் கொடுக்கத் தயாராகிவிட்டனர். ஆனால் இவர்கள் புலிகள் வாழும் வரை கொக்கரித்ததோ.. புலிகள் இன்றேல் தாம் தமிழ் மக்களுக்கு சுதந்திரத்தை எப்போதோ பெற்றுக் கொடுத்திருப்போம் என்பதே.

இதுதானா இவர்கள் தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் சுதந்திரம்.

இவர்களின் கட்சி இருப்புக்களே கேள்விக்குறியாகி இருக்கும் இன்றைய நிலையில் இவர்களில் வாய்சவடால்களை மக்கள் முற்றாக நிராகரித்து காலம் காலமாய் தமிழ் மக்களின் குருதியில் வயிறு வளர்க்கும் இந்தத் துரோகிகளை ஆயுத சனநாய் அக நீரோட்டத்தில் இருந்தும் முழுமையாக விரட்டி அடிப்பதோடு தமிழீழ மக்களின் அபிலாசைகளை பற்றுறுதியோடு பற்றி நின்று தமிழீழ மக்களையும் போராட்டத்தையும் வைத்து போலித் தேர்தல்கள் மூலம் தமிழர் தேசத்தை உலகுக்கு விலை பேச முயலும் எதிரிகளின் திட்டங்களையும் முறியடிக்க வேண்டும். அதற்காக திணிக்கப்படும் தேர்தலில் சரியான பாடம் ஒன்றைக் கற்பிக்க அன்பார்ந்த யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா வாழ் எம்முறவுகள் முன்வர வேண்டும்.22,000 க்கும் மேற்பட்ட எம் மாவீரர்களினதும் 150,000 மேற்பட்ட எமது மக்களினதும் இழப்பில் துயரத்தில் கிஞ்சிதமும் அக்கறையற்று 3 இலட்சம் மக்களின் சிறைவாழ்க்கை பற்றிய எந்தக் கவலையும் இன்றி எதிரிக்கு வாலிபிடிக்க தயாராகிவிட்ட அத்துணை ஒட்டுண்ணிகளுக்கும் மக்கள் தகுந்த பாடத்தைக் கற்பிக்க வேண்டும்.

1989 இல் இந்தியாவுக்கு வழங்கிய அதே படிப்பினையை சிங்கள எதிரிகளுக்கும் அவனோடு கூட்டணி அமைத்து எமது மக்களைக் கொன்றழிக்க துணை நின்ற ஒட்டுண்ணிகளுக்கும் மக்கள் புகட்ட வேண்டும். மீண்டும் மீண்டும் தவறிழைக்கும் இந்த ஒட்டுண்ணிகளின் ஆயுளை இத்தோடு சரிக்க வேண்டும்.

அந்த வகையில் துயர்கள் பல சுமந்தும் தமிழ் மக்களோடு இறுதிவரை களத்தில் நின்ற உண்மையான மக்கள் பிரதிநிதிகளை ஆதரிப்போம். தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் குரல்களை பலப்படுத்துவோம். தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்டி தமிழர் தாயகத்தில் எமக்கான நிரந்தர அமைதிக்கு வழி சமைப்போம்.

அதுமட்டுமன்றி சுதந்திர தமிழீழம் அமைய உலகத்தமிழினத்தோடு தாயக மக்கள் கைகோர்கும் நிலை வர வேண்டும். அதற்காக இன்றே துணிந்து ஒரு முடிவு செய்வோம். வினை விதைத்தவனுக்கு அதனை பரிசளிக்கத் தயாராவோம்..!


இவ்வாக்கம் தொடர்புபட்ட செய்தி:


சிங்களச் சிறீலங்காவின் சுதந்திரக் கட்சின் வெற்றிலைச் சின்னத்தில் ஒட்டுண்ணி ஈபிடிபி வடக்குத் தேர்தலில் போட்டி.

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 12:42 PM

0 மறுமொழி:

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க