Monday, July 20, 2009

தமிழரின் சுயநலத்தால் வீழ்ந்த போராட்டம்.



(படம்: en.wikipedia.org)

தமிழீழ விடுதலைப் போராட்டத்தினூடு தமிழீழத்தை நிறுவிட தமிழர்கள் ஒத்துழைத்தார்களோ இல்லையோ.. ஈழத்தில் இருந்து தமிழகம் வரை தமிழர்கள் ஒரு விடயத்தில் மாற்றுக் கருத்து.. மண்ணாங்கட்டிக் கருத்துகளின்றி ஒத்துழைத்துள்ளார்கள்.. அந்த விடயத்தில் இன்றும் தமிழர்கள் தமக்கிடையே போட்டி இருந்தாலும்.. ஒத்துழைக்கிறார்கள்.

அது வேறெதுவும் இல்லை.. ஈழ விடுதலைப் போராட்டத்தில் அடுத்தவரின் துயர நிலையை தமதாகக் காட்டி மேற்கு நாடுகளில் (கனடா, மேற்கு ஐரோப்பிய நாடுகள், அவுஸ்திரேலியா,நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா) அகதி அந்தஸ்து வாங்கி தங்களது பொருளாதார அகதி நிலையை.. அரசியல் அகதிகள் நிலையாகக் காட்டி ஆகக் குறைந்தது மேற்கு நாட்டு அரசாங்கங்களின் பணத்தில் சீவிக்க வழிதேடிக் கொண்டதே அல்லது கொள்வதே அது.

இவ்வாறு அகதி அந்தஸ்துப் பெற்ற/பெறுகின்ற தமிழர்கள் அல்லது தமிழ் பேசும் தரப்பினரை கீழ்கண்டவாறு பிரிக்கலாம்.

அந்த வகையில்...

ஈழப் போராட்டத்தில் நேரடியாகப் பங்கேற்காத தமிழகத்தில் இருந்து கூட தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள் என்று பொய் கூறி மேற்கு நாடுகளுக்கு வந்து அகதி அந்தஸ்துகளைப் பெற்றுள்ளனர். இவர்களில் அநேகர் இலங்கையில் நடந்த போராட்டத்தில் எந்த வகையிலும் தொடர்புகளைக் கொண்டிருக்கவில்லை. ஏன் பலர் இலங்கையில் நடக்கும் தாயக விடுதலைப் போராட்டத்தின் அரசியல் பின்னணியைக் கூட அறிந்திராதவர்களாக இருக்கின்றனர். ஆனால் அகதி அந்தஸ்துப் பெற்றுள்ளனர்.

ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை இதில் பல பிரிவினர் உள்ளனர். பிரதானமாக இதில் 5 வகுப்பினரை இனங்காணலாம்.

1. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுக்காத.. அல்லது பாரதூரமான பாதிப்புக்களைச் சந்திக்காத (வடக்குக் கிழக்குத் தமிழர்கள்.. உள்ளடங்க) பல தமிழ் மற்றும் தமிழ் பேசும் முஸ்லீம் குடும்பங்கள் வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்று குடியுரிமையும் பெற்றுள்ளன.. (பெரும்பாலானோர் இந்த வகையினரே..!)

2.தமிழீழ விடுதலைப் போராட்டத்தால் எந்தப் பாதிப்புக்களையும் சந்திக்காத தமிழர்களும் தமிழ் பேசும் முஸ்லீம்களும் (கொழும்பு வாழ் மேட்டுக்குடி தமிழர்கள் அல்லது அரசியல் வர்த்தகப் பின்னணி கொண்ட தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம்கள்.) இந்த அரசியல் தஞ்சம் என்பதைப் பெற்றுள்ளனர்.

3. போராட்டத்தில் இணைந்து பணியாற்றி.. வெளிநாட்டுக்கு அகதியாகப் போய் வாழலாம் என்ற ஆசை வர அல்லது ஊட்டப்பட போராட்டத்தை இடைநடுவில் விட்டுவிட்டு அல்லது காட்டிக் கொடுத்துவிட்டு ஓடி வந்து அரசியல் தஞ்சம் பெற்றுள்ள தமிழர்கள்...!( இந்த வகையினரிலும் பலர் உள்ளனர்.)

4. போராட்டத்தில் உண்மையில் பங்கெடுத்து.. அல்லது போராட்டத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்டு அங்கு நிலவிய போட்டி அரசியலால் அரசாங்கத்தின் பகுதியில் கூட பாதுகாப்புடன் வாழ முடியாது என்ற புற நிலையில் அரசியல் தஞ்சம் பெற உண்மையான தகுதியுடன் அரசியல் தஞ்சம் அடைந்தோர். (இந்த வகுப்பில் வெகு சிலரே உள்ளனர்.)

5. சிறீலங்கா அரசாங்கச் சார்பு, புலி எதிர்ப்பு ஒட்டுக்குழுக்களில் இருந்து சிறீலங்கா அரச பாதுகாப்பில் வாழ்ந்து கெட்டு பின்னர் அதனாலேயே பணம் கொடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு அதன் சிபார்சுக் கடிதங்கள் அல்லது ஒட்டுக்குழுக்களின் சிபார்சுக் கடிதங்களைக் காட்டி அல்லது அரச பணியாளர்களாக இருந்து புலிகள் தம்மைக் கொல்லப் போகிறார்கள் அரசாங்க புலனாய்வுத்துறை தன்னை இலக்கு வைத்துவிட்டது என்று பொய் சொல்லி அரசியல் தஞ்சம் பெற்றோர். (அரசாங்கப் பணி நிமித்தம்.. அரசியல் பிரதிநிதிகளாக வெளிநாடுகளுக்கு வந்து மேற்குலக வாழ்க்கை முறையில் மயங்கி.. அகதி அந்தஸ்தானவர்களில் பலர் இந்த வகையினர்.)

என அகதி அந்தஸ்து வாங்கியோரை வைப்படுத்தலாம்.

இந்த வகையில் நோக்கின்.. உண்மையைப் பேசின்.. மேற்குநாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்ற தமிழர்களில் அநேகர் உண்மையான அரசியல் தஞ்சத்துக்கு உரியவர்கள் அல்லர். அநேகர் சட்டத்தரணிகளால் எழுதிக் கொடுத்த பொய்களைப் பேசியே அகதி அந்தஸ்துப் பெற்றுள்ளனர்.

இதில் எல்லாத் தமிழர்களும் வெளிப்படுத்திய ஒற்றுமை என்ன என்றால்.. தமது சுயநலத்துக்காகப் பேசிய பொய்களில்.. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகவும்.. அதன் பிரதான போராட்ட சக்தியாக விளங்கிய விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் தமிழர்கள் அளித்த அல்லது அளிக்கும் வாக்கு மூலங்களே..!

கிட்டத்தட்ட ஒவ்வொரு அரசியல் தஞ்சம் பெற்ற தமிழனும் ஒரு கட்டத்தில் தான் புலிகளாலும் சிறீலங்கா அரசாங்கத்தாலும் அதன் ஒட்டுக்குழுக்களாலும் ஆபத்தைச் சந்தித்து இலங்கையில் எங்கும் வாழ முடியாத சூழ்நிலையிலேயே மேற்குநாடுகளுக்கு தப்பி வந்ததாகக் கூறி இருக்கிறான் அல்லது கூறி வருகிறான் என்பதுதான் நடைமுறை உண்மை. அதனடிப்படையிலேயே இவர்களுக்கு அரசியல் அகதி என்று கருதி தஞ்சம் அளிக்கப்பட்டுள்ளது அல்லது படுகிறது.

இவர்கள் வழங்கிய வாக்கு மூலங்கள் சட்ட வலுவுள்ளதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னே தான் அகதி அந்தஸ்து அளிக்கப்படுகிறது. அந்த வகையில் இவர்கள் தமது சுயநலத்துக்காக தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீதும் விடுதலைப் புலிகள் மீதும் சுமத்திய பொய்கள் கூட உண்மைகளாக சட்ட வலுவுள்ள கூற்றுக்களாகவே மேற்குநாடுகளின் குடிவரவு குடிபெயர்வு குறிப்பேடுகளில் இடம்பிடித்துள்ளன. அங்கிருந்து அவை அரசாங்கங்களின் கொள்கை வகுப்பாளர்களுக்கு பரிமாறவும் படுகின்றன.

மேலும்.. கடந்த (2009 முதல் 6 மாதங்களில் மட்டும்) 6 மாதங்களில் கூட சுவிஸ்லாந்தில் மட்டும் 7000 தமிழர்கள் அரசியல் அந்தஸ்துக்கோரி விண்ணப்பித்துள்ளனர். இது இந்த ஆண்டில் அந்த நாட்டில் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்தவர்களில் இரண்டாவது பெரிய தொகையாகும்.

கடந்த 35 ஆண்டுகால போராட்டத்தில் ஈடுபட்டு மாவீரனாவர்களின் தொகை கிட்டத்தட்ட 25,000 ஆகும். மரணமான மக்களின் தொகை கிட்டத்தட்ட 130,000 (தமிழ் தரப்புகளின் செய்திப்படி) ஆகும்.

ஆனால் மேற்குநாடுகளில் அகதி அந்தஸ்துப் பெற்றவர்களின் தொகை 1.1 மில்லியனுக்கும் அதிகமாகும்.1981 இல் இலங்கையில் தமிழர்களின் சனத்தொகை கிட்டத்தட்ட 3.2 மில்லியன்களாகும். இதைவிட தமிழகம்.. மற்றும் இந்தியாவின் பிற பகுதிகள் மலேசியா சிங்கப்பூர் தென்னாபிரிக்கா என்றும் தமிழர்கள் இடம்பெயர்ந்து போயுள்ளனர்.

அதுமட்டுமன்றி கடந்த 35 ஆண்டுகளில் அரசியல் ரீதியாக இலங்கையின் வடக்குக் கிழக்கு.. தமிழர் தாயகம் என்ற உச்சரிப்பு பலமாகிக் கொண்டிருக்க.. அங்கிருந்த காணிகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் விற்றுவிட்டு வெளிநாடுகளுக்கு (மேற்குநாடுகளுக்கு) அகதிகளாக ஓடிவந்து நிரந்தர வதிவிட அனுமதிகளை பெற்றுவிடவே தமிழர்கள் முனைப்புக் காட்டினர்.

இன்று அவ்வாறு அகதி அந்தஸ்துப் பெற்று மேற்குநாடுகளில் நிரந்தர வதிவிட உரிமையும் பெற்றுவிட்டுள்ள தமிழர்களில் பலர் சிறீலங்காவின் தலைநகர் கொழும்பிலும் வடக்குக் கிழக்குக்கு வெளியிலும், இந்தியாவில்.. தமிழகத்தில் கர்நாடகாவில் (பெங்களூரில்) கேரளாவிலும் வீடுகள் காணிகளை வாங்கிவிட்டுள்ளதுடன் பெருமளவில் உல்லாசப் பயணங்களை மேற்கொள்ளும் இடங்களாக இவற்றை பாவித்தும் வருகின்றனர்.

அதுமட்டுமன்றி தமிழகத் தமிழர்கள் (மற்றும் தென்னிந்தியர்கள்) தமது வெளிநாட்டு முதலீட்டுக்கான மூலதனமாக அகதி அந்தஸ்து பெற்று மேற்குநாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களைப் பாவிக்கின்றனர். தமிழகத்தில் இருக்கும் அனைத்து ஜவுளிக்கடைகளும் நகைக்கடைகளும் இன்று அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் அவுஸ்திரேலிய பிராந்திய நாடுகளில் இருக்கின்றன. சாப்பாட்டுக்கடைகள் இருக்கின்றன. தொலைக்காட்சிகள்.. சினிமா என்பனவும் நன்கு செழிப்பாக வளர்கின்றன.

இந்த அடிப்படையில் தான் மேற்கு நாடுகளில் தமிழர்களின் அரசியல் செயற்பாடுகளும் இருக்கின்றன. 2009ம் ஆண்டின் தொடக்கம் வரை அவர்கள் வேறு எந்தக் கவலையும் இன்றி.. எப்படி தமது அரசியல் அகதி அந்தஸ்து நிலையை தற்காத்துக் கொள்வது.. எப்படி நிரந்தர வதிவுரிமை பெறுவது.. அப்படிப் பெற்றுவிட்டால் எப்படி கலியாணம் முடிப்பது.. அப்படி முடித்துவிட்டால் எப்படி பொருளாதாரத்தை ஈட்டுவது.. அப்படி ஈட்டிவிட்டால் எப்படி அதைப் பெருக்குவது.. இப்படியான நடவடிக்கைகளிலேயே தமிழர்கள் அதிகம் நேரத்தைச் செலவு செய்தனர்.

தாயகத்தில் நடக்கும் போராட்டத்திற்கு எதிராகச் சொன்ன பொய்களுக்குப் பிராய்ச்சித்தம் தேடவோ என்னவோ ஒரு தரப்பினர் (இன்னொரு தரப்பினர் மாற்றுக் கொள்கை மாணிக்கங்களாக சிறீலங்கா சிங்கள அரச விசுவாசத்தைக் காட்டிக் கொண்டிருந்தனர்.) அப்பப்போ சில பத்து டொலர்களை தூக்கி வீசிவிட்டு "நாங்களும் புகலிடத்தில் இருந்து குளிருக்குள் இருந்து உழைச்சு உதவி செய்தனாங்கள் தானே" என்று கதையளக்க வாய்ப்பாக சில உதவிகளைச் செய்து கொண்டிருதனர்.

ஆனால் எந்த ஒரு உருப்படியான வேலைத்திட்டத்தின் கீழும் தமிழீழ விடுதலைக்கான சாதகமான புறநிலை அரசியல் அல்லது இராஜதந்திரச் சூழலை மேற்குநாடுகளில் உருவாக்க தமிழர்கள் முயலவில்லை என்பதுதான் இங்கு முக்கியமான விடயம்.

இலங்கையில் இருந்து தமிழர்கள் 1983 முதல் மேற்குநாடுகளில் அகதி அந்தஸ்துக்களைப் பெருமளவில் பெற்று வருகின்ற போதும் மேற்குநாடுகளில் அந்தந்த நாட்டு மக்களிடம் அரசாங்கங்களிடம் தமிழர்களின் தாயக விடுதலைப் போராட்டம் தொடர்பாக அரசியல் விழிப்புணர்வூட்டும் உருப்படியான செயற்பாடுகள் எதனையும் முன்னெடுக்க முயலவில்லை. தாயகத்தில் அரசியல் ரீதியாக தாம் எதிர்கொண்ட பிரச்சனைகளைக் கூட வெளிக்கொண்ர முயலவில்லை அல்லது அதைச் செய்ய பக்குவப்படவில்லை என்பதுதான் வேதனைக்குரிய உண்மை.

அதன் பலாபலன்.. 1998 முதலான தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான பயங்கரவாதத் தடை.. தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை தமிழர்கள் அடிப்படை அரசியல் உரிமைக்கான சுயநிர்ணய உரிமைக்கான போராட்டமாக உலகம் அங்கீகரிக்காத நிலை.

இந்தப் புறநிலைககள் திடீர் என்று சிறீலங்காவின் நகர்வுகளால்.. இந்தியாவின் நகர்வுகளால் உருவானவை அல்ல. தமிழர்கள் தங்கள் சுயநலத்தையே பெருதுபடுத்தி வாழ விளைந்ததாலும் கூட உருவானவை.

தற்போது புலம்பெயர் தமிழர்களாக தம்மை அடையாளம் காட்டும் இந்த அகதி அந்தஸ்து தமிழர்கள் புலம்பெயர்ந்தது முதல் ஒன்றை மட்டும் வளர்க்க மறக்கவில்லை. அதுதான் மாற்றுக் கருத்து அரசியல்.

இதனூடு புலி எதிர்ப்பு, தமிழீழ விடுதலைப் போராட்ட எதிர்ப்புச் சிந்தனைகள் தொடர்ச்சியாக விதைக்கப்பட்டே வந்துள்ளன. அவற்றுற்கு எதிராகவும் காத்திரமான பங்களிப்புக்களை தமிழர்கள் செய்ய முனையவில்லை.

இந்த மாற்றுக்கருத்தாளர்கள் தமிழர்களின் அரசியல் தேவை.. சுயநிர்ணய உரிமை அனைத்தையும் புலிஜிசமாகவே வர்ணித்துக் கொண்டிருந்தனர்.. இருக்கின்றனர். புலிகளை எதிர்ப்பதாகச் சொல்லிக் கொண்டு.. தமிழர்களின் அடிப்படை அபிலாசைகளை உரிமைகளையும் எதிர்த்தே கருத்துக்களை விதைத்தனர். அது மேற்குநாடுகளுக்கு தமிழர்கள் மத்தில் உரிமை வேண்டாம் எனும் ஒரு தரப்பும் இருப்பதாக இனங்காட்டியது. இதனை முன்னாள் சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதரும் சுட்டிக்காட்டி கருத்து வெளியிட்டிருந்தார்.

இறுதியில் தமிழர்களின் மதியூகம் அற்ற சுயநல செயற்பாடுகளால்.. 35 ஆண்டுகளாக, விலைமதிக்க முடியாத மனித உயிர்களைப் பலியிட்டு வளர்த்த.. காத்த விடுதலைப் போராட்டம்.. அவர்களின் கண் முன்னே சிதைவடைந்து போனது. அப்போது கூட ஆகக் கூடியது 70 நாட்கள் தான் அதுவும் பெரும் பாடுபட்டு வீதியில் இறங்கிப் போராடினார்கள். அதிலும் பலர் கொத்துரொட்டியும்.. இடியப்ப பிரியாணியும்.. புட்டுப் பிரியாணியும் இலவசமாகக் கொடுக்கிறார்கள்.. அதைச் சாப்பிடுவம் என்று.. தான் இறங்கினார்கள். இளையவர்களில் பலர் பொழுதுபோக்கிற்காகக் கூடினர் என்பதும் உண்மை..!

இவர்கள் அகதி அந்தஸ்து வாங்க தாயகத்தில் விமானக் குண்டு வீச்சுக்களையும் துப்பாக்கி வெடிகளையும் ஆட்லறி எறிகணைகளையும்.. பல்குழல் வெடிகணைகளையும் தாங்கி நின்ற 3 இலட்சம் தமிழ் மக்கள் அகதிகளாக அடிப்படை வாழ்வுரிமை இழந்து (இந்தப் போராட்டம் ஆரம்பமாக முதல் மேற்கு நாடுகளில் அரசியல் அந்தஸ்து வாங்கிய பலர் இருந்த பொருளாதார நிலையை விட இன்று அகதிகளாக அடைப்பட்டுக் கிடக்கும் மக்கள் பொருளாதாரத்தில் மேலோங்கி இருந்தனர். குறிப்பாக விவசாய விளை பொருட்கள் கடலுணவுகள் போதிய அளவுக்கு அவர்களிடம் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.)அடிப்படை வாழ்வுக்கான பொருளாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையிலும் அவர்களின் நிலையை உலகுக்கு எடுத்துச் சொல்லி தொடர் போராட்டங்களால் அவர்களுக்கு சிறீலங்கா சிங்கள அரசின் திறந்த வெளிச் சிறைகளில் இருந்து விடுதலை வாங்கிக் கொடுக்க இந்த அகதி அந்தஸ்து தமிழர்களுக்கு மனம் வரவில்லை..!

இது எதனைக் காட்டுகிறது. தமிழர்களின் சுட்டுப்போட்ட சுயநலத்தையே காட்டுகிறது. இப்படியான ஒற்றுமையற்ற.. ஒரு மனித இனக்குழுமத்துக்கு.. இந்த உலகில்.. சுதந்திர நாடு அமைக்கப் போராடியது சரியா என்று கூடக் கேட்கத் தோன்றுகிறது. திருந்துவார்களா இந்தத் தமிழர்கள்..???!

ஆயிரம் சித்தாந்தம் பேசி.. காலத்தை ஓட்டும் தமிழன்.. ஒரு சித்தாந்தத்தையாவது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி இருப்பானா..??! எதிர்காலத்திலாவது.. ஓரிருவரின் தியாகத்தில் குளிர்காய நினைக்காமல்.. முழு இனத்தில் எல்லோரும் (அல்லது பெருன்பான்மையானோர்) ஒற்றுமையோடு போராட முன் வருவதோடு.. தமிழர்கள் வாழும் இடமெங்கும் சாத்தியமான வழிகளில் எல்லாம் தொடர்ந்து போராடினால் தான்.. தமிழர்களுக்கு என்று ஒரு தேசம்.. விடிவு.. இந்த உலகில் வரும்..!

ஓய்வெடுத்து... சுயநலம் பார்த்து.. போராடிக் கொண்டிருந்தால்.. விடுதலை கிட்டாது. அகதி அந்தஸ்துக் கிட்டலாம்..! இதைத் தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இன்றேல்.. தமிழர்களின் நிலை இவ்வுலகில் தாழ்வது உறுதி..!

Labels: , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 5:08 AM

9 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

You are very realistic in analysing this issue, Tamilan needs nobody else to put fire on his head, he himself lit the pyre on his own head. That is what has happened in this issue

Mon Jul 20, 01:05:00 PM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

நன்றி அனானி உங்கள் கருத்திற்கு. உங்கள் கருத்து செயலுருவம் பெற வேண்டும் என்பதே எமது அவாவும்.

Mon Jul 20, 03:21:00 PM GMT+1  
Blogger பதி செப்பியவை...

நல்ல அலசல்...

//இப்படியான ஒற்றுமையற்ற.. ஒரு மனித இனக்குழுமத்துக்கு.. இந்த உலகில்.. சுதந்திர நாடு அமைக்கப் போராடியது சரியா என்று கூடக் கேட்கத் தோன்றுகிறது. திருந்துவார்களா இந்தத் தமிழர்கள்..???!//

இந்தக் கேள்வி எனக்குள் பலமுறை தோன்றியுள்ளது. ஆனால், என்ன, பெருமூச்சு தான் பதிலாக வருகின்றது.

Mon Jul 20, 04:40:00 PM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

எம்மைப் போன்று உங்களுக்கும் வினவல்..! வினவல் விடையாக எல்லோரிடமும் அமைந்தால்.. அடுத்த தடவை இப்படி ஒரு வினவலுக்கு வாய்ப்பிருக்காது. ஆனால் விடை அமையுமா என்பதுதான் இன்னொரு வினவலாக எல்லோ முளைக்கிறது.

நன்றி பதி.. தங்கள் கருத்திற்கு..!

Mon Jul 20, 04:58:00 PM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

ellam mudinthu pooi vittahu engal otrumai inmayaal. ahtai sari saivathai vitttuvittu engal kupaikalai eaan kiralukerrerkal. ungalukum arasangathukum enna vithtiyaasam. iyyaa, tamilnan ili nilayai elutha 1000 iruku. naangal vaala otrumai mukkiram. athivittu summa engalai naangale kevalapaduthum velai saiyavendam.

Mon Jul 20, 06:15:00 PM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

அனானி.. ஒற்றுமை ஒற்றுமை வேண்டும் என்கிறோம். அதை அடையத் தடுக்கும் காரணிகளில்.. இவையும் அடங்குகின்றன. இதை விளக்கிக் கொள்ள தமிழர்கள் தயார் இல்லை என்றால் ஒற்றுமை என்பது கனவாகத்தான் முடியும்.!

நன்றி அனானி உங்கள் கருத்தும் வரவேற்கப்படுகிறது.

Mon Jul 20, 09:38:00 PM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

புலம் பெயர்ந்த தமிழர்களே, உங்கள் மேல் வைக்க பட்டுள்ள குற்ற சாட்டுக்கள்- நம்மை நாம் ஆராந்து பார்த்து பேசுவது - காய படுத்த அல்ல . தமிழீழ தாயக போராட்டத்தை வலுப்படுத்த. நம் தவறுகளை உணர்ந்து - முனைப்புடன் செயல் பட. தொடர்ந்து போராடுவூம்.

Tue Jul 21, 01:20:00 AM GMT+1  
Blogger ஒரு அகதியின் நாட்குறிப்பு !!! செப்பியவை...

உண்மையில் உங்கள் ஆய்வு மகிழ்வளிக்கிறது.நன்றி.
நீங்கள் மேற்கோள் காட்டியவைகள் நிதர்சனமானவை. இந்நிதர்சனங்களுக்குப் பின்னால் சில அடிப்படைச் சிக்கல்கள் இருந்திருக்கின்றன. வெளியேறியோர்களின்
புள்ளி விபரங்களைப்பட்டியல் போடுகின்றீர்கள் நீங்கள்.
1980,1983
ஆரம்பத்திலேயே வெளியேறியோரைப் புலிகள் தடுத்திருந்தால் ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் ஒரு விடிவு வரச் சாத்தியமிருந்திருக்கும். அவ்வாறான ஒரு தொலை நோக்குப்பார்வையில் அண்றைய புலியின் பார்வை இருக்கவில்லை.மாறாக சிங்கள மேலாண்மை தமிழன் வெளியேறுவதை தந்திரத்தோடு வரவேற்று இவ்வாறான சிக்கல் நிலை தமிழருக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் கண்டும் காணாதவாறு காலம் கடத்தியது.
அகதியாகிவந்தவர்கள் புலியை பற்றி குறைகூறித்தான் அகதியந்தஸ்த்துபெற்றார்கள் என்பது உண்மையான வாதமாகும் (நீங்கள் உட்பட). கதையெழுதிய சட்டத்தரணிகள் புலிகளின் சட்டத்தரணிகள் எனப் புலத்தில் பெயர் எடுத்த சட்டத்தரணிகள்.புலம் பெயர்ந்தமக்கள் தங்களின் பெயரைக் குறை சொல்லியே அகதியந்தஸ்த்து எடுத்தார்கள் என்கின்ற விவகாரம் புலித்தலைமைக்கு முற்றிலும் தெரிந்தேயிருந்தது.ஆனாலும்தடுத்து நிறுத்த வேண்டியவர்கள் கண்டுகொள்ளவில்லை. அது அவர்களுக்குத் தேவையாயிருந்தது புலி கூடாதெனச்சொல்லி அகதியந்தஸ்த்துப் பெற்றவர்களே பின்னர் புலத்தில் தெருக்களை மறித்துக் கொடிபிடித்தார்கள். இவ்வாறான முரண்களால்த்தான் வெளிநாடுகள் எதுவும் எம்மைக் கண்டு கொள்ளவில்லை.உண்மையில் யாரின் சுயநலத்தால் இப்போராட்டம் வீழ்ந்தது என்கின்ற வினாவிற்கு விடை சுலபமாக
கிடைத்துவிடாது.
தமிழ்சித்தன்

Tue Jul 21, 04:28:00 AM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

நன்றி thamizharinam தங்கள் கருத்திற்கு.

ஒரு அகதியின் நாட்குறிப்பு..

//1980,1983
ஆரம்பத்திலேயே வெளியேறியோரைப் புலிகள் தடுத்திருந்தால் ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் ஒரு விடிவு வரச் சாத்தியமிருந்திருக்கும்.//

1980 களின் பிற்பகுதியில் 1990களின் முற்பகுதியில் தான் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் தமிழர்கள் வாழ்ந்த வடக்குப் பிரதேசங்கள் பல கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. கிழக்கு அதிக காலம் இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் தான் இருந்தது. காட்டுப்புற சனத்தொகை குறைந்த கிராமங்களைத் தவிர.

அதிக அகதிகள் இடம்பெயர்வு 1987 - 1990 இந்தியப் படைகளின் காலத்திலேயே நிகழ்ந்துள்ளன. அன்றை சூழலில் இடம்பெயர்வுகளைக் கட்டுப்படுத்தக் கூடிய சூழலும் இல்லை. கட்டுப்படக் கூடிய நிலையிலும் மக்கள் இருக்கவில்லை.


அதன் பின்னர் கூட பாஸ் நடைமுறைகளைக் கொண்டு வந்து குடியகழ்வு வீதத்தைக் கட்டுப்படுத்த நினைத்த போதும்.. அது புலிகளுக்கு எதிரான கருத்துக்களை மக்கள் மத்தியில் விதைக்கவும்.. மக்கள் அவர்கள் மீது விசனம் காட்டவுமே ஊக்குவிக்கப்பட்டது.

1990 முற்பகுதிகளில் யாழ்ப்பாணத்தில் இருந்த பாஸ் நடைமுறைகள் மற்றும் வன்னியில் அதற்குப் பின்னர் இறுதி வரை இருந்த பாஸ் நடைமுறைகளும் மக்களின் சுதந்திர நடமாட்டத்தைப் புலிகள் தடுப்பதாகப் பிரச்சாரம் செய்யப்பயன்படுத்தப்பட்டன.

ஆனால் இன்று சிறீலங்காப் படையினர் அமுல்படுத்தியுள்ள அனைத்து பிரயாணக்கட்டுப்பாடுகளும் எந்த எதிர்விமர்சனங்களும் இன்றி தமிழர்களாலேயே கட்டாயமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றன.

நான் நினைக்கிறேன்.. புலிகள் மக்களின் ஆதரவில் இயங்கியதால் கொஞ்சம் அதிகமாகவே மக்களோடு முரண்படுவதை தவிர்க்க ஆரம்பித்துவிட்டனர். அந்த நெகிழ்வுத்தன்மையை மக்கள் போராட்டத்திற்கு எதிரான திசையில் சுயநலத்துக்குப் பாவிக்க தொடங்கிவிட்டனர்.

இன்று இராணுவம் போட்டுள்ள கட்டுப்பாடுகளுக்குள் எந்த வித எதிர்க்குரல்.. மாற்றுக்கருத்துக்கள் இன்றி தமிழர்களே தமிழர்களை வாழ்விட்டுள்ள நிலை.. புலிகள் கட்டுப்பாடுகளை அதுவும் தேவையான கட்டுப்பாடுகளை மட்டும் போட்ட போது.. எத்தனை விமர்சனங்கள் அரசாங்கத்தரப்பில் இருந்தும்.. சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களிடம் இருந்தும்.. மாற்றுக்கருத்து மாணிக்கங்களிடம் இருந்தும் வந்தன. ஆனால் இன்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களைத் தவிர வேறு எவரும் சிறீலங்கா இராணுவம் யாழ்ப்பாண மற்றும் வன்னி மக்கள் மீது போட்டுள்ள கட்டுப்பாடுகள் பற்றி வாய் திறக்கத் தயார் இல்லை. அவ்வளவு அரச விசுவாசம்.. இந்தத் தமிழர்களிடம்.

அப்படி இருக்கும் போது.. எப்படி எல்லாம் புலிகளால் தான் என்ற குற்றச்சாட்டை முன் வைக்க முடியும்..??!

Tue Jul 21, 05:51:00 AM GMT+1  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க