Thursday, July 30, 2009

மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி: அர்த்தம் அறியாத வயதும்.. அறிந்த வயதும்.



மாங்கனிகள் தொட்டிலில் தூங்குதடி அங்கே.. என்று ஆண் பாட..

மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற என்று பெண் பாடுகிறார்..

வாழையிலை நீர் தெளித்து போடடி என் கண்ணே.. என்று ஆண் தொடர

நாதஸ்வரம் ஊதும் வரை நெஞ்சம் இன்னும் கொஞ்சம் பொறுமை அவசியம்.. என்று பெண் முடிக்கிறார்.


மேற்படி திரை இசைப்பாடலை சிறிய வயதில் கேட்ட போது..

மாங்கனிகள் தொட்டிலில் தூங்குமா என்ற எந்தச் சிந்தனையும் இன்றி அங்கு சொல்லப்பட்ட மாங்கனியை அப்பாவித் தனமாக மாம்பழமாகவே எண்ணிக் கொண்டு.. இந்தப் பாடல் வரிகளுக்குள் ஒளிந்திருக்கும் அர்த்தங்கள் புரியாமல்.. ஒரு விளக்கமும் இன்றி பாடலின் இசையால் கவரப்பட்டு அதை முணுமுணுத்துத் திரிந்த போது, அம்மா திட்டியதும்.. திட்டுக்கு அர்த்தம் புரியாமல்.. திட்டு அடியாக விழுந்திடுமோ என்ற பயத்தில் முணுமுணுப்பை கைவிட்டதும் இப்போ மீண்டும் ஞாபகத்திற்கு வந்து போகிறது.

சமீபத்தில் இந்தப் பாடலை மீண்டும் தற்செயலாகக் கேட்கப் போக.. அதேன் மாங்கனியை தொட்டிலில் தூங்க விட வேண்டும் என்ற ஆராய்ச்சிக் கேள்வி... மூளையில் வந்து தொலைத்தது. அதை ஏன் ஒரு ஆண் பாட வேண்டும் என்ற கேள்வியும் கூடவே எழுந்தது.

அது இப்போ.. விடையாக வில்லங்கத்தனமான ஒரு பதிலைத் தந்திருக்கிறது. அதனை நேரடியாக இங்கு எழுத முடியாத அளவுக்கு அதற்குள் வில்லங்கத்தனம் ஒளிந்திருக்கிறது என்று நினைக்கும் போது.. அதிர்ச்சியாகவும் இருக்கிறது... வியப்பாகவும் இருக்கிறது.

எவ்வளவு பெரிய ஆபாசத்தை.. வானலைகளில் எந்தக் கத்தரிப்புக்களுக்கும் இடமின்றி கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்களே இந்தச் சினிமாக்காரர்கள்.. என்று எண்ணும் போது அவர்களின் திறமையை பாராட்டாமலும் இருக்க முடியவில்லை.

சினிமாக்காரர்களை விடுவோம்.. அது அவர்களின் தொழில்.. அட தமிழ் சினிமா ரசிகர்களைப் பார்த்தால்.. இவ்வளவு மட்டமான பாடல்களையா கேட்டு ரசித்துக் கொண்டு ஆங்கிலப் பாடல்கள் வெளிப்படையாக சொல்லும் ஆபாசத்துக்கு முகம் சுழிக்கின்றனர் என்று நினைக்கும் போது.. அடப்பாவிப் பசங்களா என்று அங்கலாய்க்கவே முடிகிறது.

இந்தப் பாடலில் இந்த ஒரு வர்ணனையே.. இந்த அளவுக்கு பெண்களை அவர்களின் அங்கங்கள் தொடர்பில் ஆபாசத்தனமாக வர்ணிக்கும் நிலை இருக்கும் போது.. எம்மை அறியாமலே.. இதையா சிறுவயதில் வாயில் முணுமுணுத்துத் திரிந்தோம் என்று நினைக்கும் போது ஒரு வித குற்ற உணர்வே மேலிடுகிறது.

இதற்கு மேல் இந்தப் பாடல்கள் வரிகள் தொடர்பில் என்னால் அதிகம் விபரித்து எழுத முடியாதிருக்கிறது. ஏனெனில்.. எமது சமுதாய கட்டமைப்பில் இது கூரிய கத்தியின் மேல் நடப்பது போன்றது. ஆனால் இந்தச் சமுதாயமா இப்படியான பாடல்களை வரவேற்று ரசித்து வருகிறது என்று எண்ணும் போது.. இவர்களின் போலி முகத்திரைகள் கிழிந்து சுக்கு நூறாகி விழுவதையே என் மனக் கண் காண்கிறது.

இதனை விட வெளிப்படையாகவே ஆபாசத்தை ஆபாசமாக இனங்காட்டும் ஆங்கிலப் பாடல்கள் எவ்வளவோ மேல். இலகுவாக இதுதான் ஆபாசம் என்று இனங்கண்டு தவிர்க்க வேண்டியதை தவிர்க்கலாம்.. எடுக்க வேண்டியதை எடுத்துக் கொள்ளலாம் அங்கு.

ஆனால் தமிழில் இந்த வகைப் பாடல்களைக் கேட்டு.. குழந்தைகள் முதல் தாத்தாக்கள் வரை தலையாட்டுவதற்கு ஆட்டம் போடுவதற்கு வெவ்வேறு அர்த்தங்கள் அல்லவா இருக்கின்றன. அதனை விளங்கிக் கொள்ள இத்தனை ஆண்டுகள் செல்ல வேண்டி ஏற்பட்டிருக்கிறது.

ம்ம்ம்.. அந்த வகையில் இது தமிழ் சினிமாத் துறையின் சாதனை என்று கூடச் சொல்லலாம்.தமிழ் சினிமாவே.. தனி வகைதான்..! வாழ்த்துக்கள் தமிழ் சினிமா ஆபாசத்துறை..!

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 5:58 PM

4 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

துணிச்சலான பதிவு சார்.

Sat Aug 01, 10:26:00 PM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

இதில் என்ன துணிச்சல், பாடலில் சொல்லப்பட்டது கேள்வியாக எழப் பிறந்த பதிவு இது.

நன்றி அனானி.

Sat Aug 01, 10:28:00 PM GMT+1  
Blogger Arizona penn செப்பியவை...

மோகம் கொண்ட ஆண் ஒரு பெண் அங்கத்தை வர்ணிப்பதற்கு நீங்கள் இப்படி துடிப்பது எனக்கு புதுமையாக இருக்கிறது.....எலந்தைப்பழ பாட்டை கேட்டுரிக்கிறீர்களா? அதுதான் ஆபாசம்...."மாங்கா மாங்கா" பாட்டை கேட்டிருக்கிறீர்களா? அதுதான் ஆபாசம்....நீங்கள் சொன்ன "மாங்கனி" ஒரு வர்ணிப்பு...அது எப்படி??? பெண்ணின் அங்கத்தை கடை சரக்கு போல் கூவி கூறுபோடுவது தான் ஆபாசம்......காதலன் காதலி ஒருவருக்கு ஒருவர் தங்கள் அங்கங்களை உவமை கொண்டு வர்ணிப்பதோ, பாராட்டுவதோ ஆபாசம் இல்லை, இதே போல், ஆண் அங்கங்களை வர்ணித்தும் பாடல்கள் உள்ளன....ஆனால், இந்த மாங்கனி என்ற வர்ணிப்பு, உவமை, உங்களை மிகவும் கவர்ந்திருக்கிறது என்று எண்ணுகிறேன்....அதனால்தான் அதை பற்றி ஒரு பதிவே போட்டிருக்கிறீர்கள்.....சங்கப்பாடல்களிலும் ஆண் பெண் அங்கங்களை பற்றி இதே போன்ற உவமைகள், வர்ணிப்புகள் கூறப்பட்டுள்ளன.....காதலன் காதலி பாடுவதாக வரும் அப்பாடலில் அங்கங்களை பற்றிய வர்ணிப்பு இருப்பது இயற்கை....காதல் என்று வந்தால் அதில் இனக்கவர்ச்சியும் முக்கிய இடம் பிடிக்கிறது....ஆண் பெண் அங்கங்களுக்கு இனக்கவர்ச்சியில் முக்கிய இடம் உள்ளது....எனவே, இத்தகைய உவமைகளும், வர்ணிப்புகளும் இடம்பெறும் சூழ்நிலை தான் ஆபாசமா, காதலா என்பதை தீர்மானிக்கிறது....

Sun Aug 02, 07:08:00 PM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

உங்களின் நீண்ட பின்னூட்டலுக்கு முதலில் நன்றிகள்selwilki.

selwilki..

நானும் இந்தப் பாடலின் கற்பனை நயத்தை ரசித்தேன். இயற்கையை கலை நயத்தோடு கற்பனையில் ரசிப்பது தவறல்ல. ஆணும் பெண்ணும் இயற்கையின் கூறுகளே. ஆணைப் பெண்ணும் பெண்ணை ஆணும் கற்பனையில் என்றாலும் வர்ணித்து ரசிப்பது தவறும் அல்ல.

எனது ஆதங்கமும் அதுவல்ல. எமது சமுதாய மக்கள் இவ்வாறான விடயங்களை நேரில் பேசமாட்டார்கள்.. அல்லது வேற்று மொழிப் பாடல்களில் படங்களில் இடம்பெறும் போது.. முகம் சுழிப்பார்கள் ஆனால் தாங்கள் இவ்வாறான பாடல்களை எழுதிக் கேட்டு மகிழ்ந்து கொள்வார்கள். அதில் வெளிப்படை தன்மை இருக்காது. அதனால் மறைத்துக் கேட்டு மகிழ்வார்கள்.

ஏனிந்த இரட்டை மனநிலை எம் தமிழர்கள் மற்றும் தென்னிந்தியர்கள் மத்தியில்..??! என்பதுதான் எங்கள் ஆதங்கம்.

கற்பனை.. அளவு கடந்து பெண்களைப் பற்றி அளவுக்கு அதிகமாக பாலியல் ரீதியாக சிந்திக்க வழி செய்வதும் தவறு. அதுவே பின்னர் ஆபாசமும்.. பாலியல் வன்முறைகளும் பெருக வழி செய்யலாம்.பெண் போகப் பொருள் என்பதாக எண்ண வழிகாட்டலாம்.

இது விடயத்தில் கவனம் அவசியம். குறிப்பாக பாடலாசிரியர்கள்.. இது விடயத்தில் கவனம் எடுப்பது நன்று. ஆபாசம் கலக்காத பெண்களைப் பற்றிய அதீத பாலியல் எதிர்பார்ப்புக்களை வளர்க்காத கலை இயற்கையோடு சம்பந்தப்பட்ட கற்பனை அழகு. ரசிக்கக் கூடியது. அதை வெளிப்படையாகவே ரசிக்கவும் முடியும். ஒளிச்சிருந்து ரசிக்க வேண்டிய அவசியம் இல்லை.

பலர் சொல்வார்கள்.. குடும்பமாகப் போய் அந்தப்படத்தைப் பார்க்க முடியவில்லை என்று. என்ன நீங்கள் குடும்பமாக நடந்து கொண்டதை விடவா அவர்கள் அதில் அதிகம் காட்டிவிடப் போகின்றனர்.

நாம் ஒரு எல்லையில் இருக்கிறோம். சாதாரண படத்துக்கும் ஏ அல்லது பி படங்களுக்கும் இடையில் வேறுபாட்டை காட்டும் எல்லையில் நிற்கிறோம். ஆனால் பாடல்களில் இந்தத் தர வரிசையில்லை. ஆனால் ஆபாசம் நிறைந்த பாடல்கள் பல உள்ளன. ஏ அல்லது பி வகைப் படங்களைக் காட்டிலும் மோசமான பாலியல் வக்கிரத்தனத்தை விதைக்கக் கூடிய அளவுக்கு மிஞ்சிய கற்பனைகளுடன் கூடிய பாடல்கள் இருக்கின்றன. ஒருவேளை அவை பாடலாசிரியர்களின் பெண்கள் மீதான வக்கிரத்தனமோ தெரியவில்லை.

ஆண்களை மோகிப்பவனாகவும் பெண்களை மோகிக்கப்படுபவளாகவும் காட்டுதல் தமிழ் சினிமாவில் தமிழ் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படுகிறது போல் தெரிகிறது. ஆனால் இயற்கையில் உண்மை அதுவல்ல. ஆணைப் போல பெண்ணிற்கும் உணர்ச்சிகள்.. மோகங்கள் இருக்கின்றன.

இந்தப் பாடலில் கூட.. அந்த ஆணின் தேவைக்கு அந்தப் பெண் என்பது போலவே பாடலும் கற்பனையும் இனங்காட்டப்படுகிறது. இப்படிப் பல விடயங்கள் இங்கு பார்க்கப்படலாம். மக்கள் மத்தியில் தவறான எண்ணங்களை தவறான அணுகுமுறைகளை இவை விதைக்கின்றன எனலாம். இவை தவிர்க்கப்பட வேண்டும். அதற்காக கற்பனையே செய்ய வேண்டாம் ரசிக்க வேண்டாம் என்பதல்ல எமது இப்பதிவின் நோக்கம். கற்பனையும் அளவோடு நியாயத்தோடு அமைய வேண்டும். பெண்ணைப் பெண்ணாகவும் ஆணை ஆணாகவும் காட்ட வேண்டும். பெண்ணை ஆணின் போகப் பொருளாகக் காட்டக் கூடாது. ஆணை எப்போதும் போகிப்பவனாகவும் காட்டக் கூடாது.

ஆணிடம் பெண்ணை ரசிக்கும்.. நேசிக்கும்.. அவளை அரவணைக்கும் பண்பு அதிகம். ஆணின் பெண் மீதான அன்பு காதல்.. காமம் ஆபாசம் மோகம் இவற்றை தாண்டிய ஒரு புனிதமானதாகவும் அவனின் மனதில் இருக்கிறது என்பது இனங்காட்டப்படுவதே அவசியம். ஆணை.. ஏதோ மோகித்துக் கொண்டலையும் விலங்காகக் காட்டக் கூடாது.

Mon Aug 03, 08:08:00 AM GMT+1  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க