Friday, September 04, 2009

கோலங்கள்..!



விமானம் யாழ்ப்பாணம் பலாலியில் இருந்து கிளம்புகிறது. ஏக்கம் கவ்விய மனதோடு கவின் யன்னலோர இருக்கையில் இருந்து சொந்த தேசத்தின் அவலங்களை பார்த்தபடி பறக்கிறான். என்ன அழகான தேசம், என்ன நேர்த்தியான கட்டுமானங்கள், கட்டம் கட்டமாக வயல்களும் தோட்டங்களும், இன்று அவை இருந்த அடையாளங்கள் சிதைந்து சின்னாபின்னமாகி..காவலரண்களால் நிறைந்திருக்கின்றன. காணும் காட்சி கவலையைத் தந்தாலும் ஐரோப்பிய இயந்திர வாழ்க்கைக்குள் செயற்கைச் சூழலுக்குள் கடந்த பதினைந்து ஆண்டுகளாக சுழன்றவனுக்கு சொந்த தேசத்தின் அலங்கோலம் கூட ரசிக்கக் கூடியதாவே இருந்தது.

அன்று ஒரு நாள், அதிகாலை நேரம், சன்னங்கள் வீட்டு யன்னல்களைப் பதம்பார்க்கின்றன. நாய்கள் விடாமல் தொடர்ந்து குரைக்கின்றன. "பூட்ஸ்" சத்தங்கள் வீட்டைச் சுற்றிவளைக்கின்றன. சிறிது நேரம் கழித்து பூட்டப்பட்டிருந்த வீட்டுக்கதவு தட்டப்படுகிறது. "சலோ சலோ" என்று ஹிந்தியில் சொல்லி சிலர் கத்துகிறார்கள். "அம்மா இந்தியன் ஆமி வந்திருக்கிறான் என்ன செய்யுறது" கவின் சிறுவனாக பயத்தால் குரல் நடுங்கியடி, தாயை அணைத்துக் கொண்டு கேட்கிறான். " பொறு..பயப்பிடாத.. அப்பா போய் என்னென்று பார்ப்பார்.." அம்மா மகனைத் தேற்றியபடி. கணவனைப் பார்த்து "என்னங்க தனியப் போகாதேங்கோ நாங்களும் வாறம்". தகப்பன் முன்னே செல்ல தாயும் கவினும் பின்னே நிற்க, கதவு திறக்கப்பட்டதும் ஹிந்தியில் ஏதோ கத்தியபடி இந்தியன் ஆமி வீட்டுக்குள் நுழைந்து நாலு பக்கமும் சூழ்ந்து கொள்கிறது. அவர்களில் ஒருவன் சென்னைத்தமிழில் " உங்க வீட்டுக்க எல்ரிரிஈ ஆக்கள் பதுங்கி இருக்கிறதா..? சோதனை பண்ணனும்". அவன் சொல்லி முடிப்பதற்குள் வந்த மற்றையவர்கள் வீடு முழுவதும் தட்டிக்கொட்டி சோதனை செய்யும் சத்தம் கேட்கிறது.

தொடங்கிய சோதனை முடிவதற்குள் மீண்டும் அந்த ஆமிக்காரன் தமிழில் " உங்க வீட்டில இருந்துதான் எல்ரிரிஈ சுட்டிருக்கு.. விசாரணைக்கு ஒருவர் வரனும்" அதைக்கேட்ட கவினின் அப்பாவும் அம்மாவும் செய்வதறியாது திகைத்துப் போயினர். " என்ர அவரை தனிய விட ஏலாது நானும் பிள்ளையும் கூட வாறம்" என்று கவினின் அம்மா காட்டமாகச் சொல்ல " எல்லாரும் நட, ஜீப்பில ஏறு" என்று உத்தரவு வருகிறது. நடந்த சம்பவம் தொடர்பாக எதுவும் அறியாத அவர்கள் மூவரும் வாகனம் ஒன்றில் ஏற்றப்பட்டு கண்கள் கட்டப்பட்டு நீண்ட பயணத்தின் பின் முகாம் ஒன்றில் இறப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர். விசாரணையின் பின் தாய் வேறாகவும் தகப்பனும் சிறுவனான கவினும் சேர்த்து வேறாகவும் பிரிக்கப்பட்டு அடைக்கப்படுகின்றனர். பல மணி நேரம் விசாரணை தொடர்வதாக சொன்னாலும் இறுதியில் கவின் மட்டும் வற்புறுத்தி வீட்டுக்கு அழைத்து வரப்படுகிறான். பள்ளிச் சிறுவன் என்று காரணம் காட்டி அவனை வீட்டில் விட்டுவிட்டு சென்றுவிட்டார்கள்.

அந்த நாள் வரை தாயையும் தந்தையும் பிரிந்தறியாத கவின் அன்று அவர்களின் பிரிவால் பெரும் துன்பப்பட்டான். பதட்டம் பயம் ஒரு புறம் பெற்றோறைப் பிரிந்த கவலை மறுபுறம் வாட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவனின் துன்பத்தைப் பாராது அவனிடம் விடுப்பு கேட்பதிலேயே அதிகம் அக்கறை காட்டினர். அதுவும் கூட அவனுக்கு மிக வேதனை அளித்தது. பிறர் உதவிகள் ஏதும் இல்லாது தனிமைக்குள் தனித்துவிட்ட சின்னவனான கவின் வீட்டில் அழுதபடி கண்ணீரோடு காலம் தள்ளத்தொடங்கினான். அதுவே தொடர்கதையுமானது. இப்படியே வந்த நாட்கள் சோகமாக கடந்தனவே தவிர தாயும் தகப்பனும் விடுவிக்கப்படுவதாக இல்லை. பின்பு ஒரு நாள் தாயும் தகப்பனும் காங்கேசன்துறை இந்திய இராணுவ வதை முகாமுக்கு மாற்றப்பட்டு அங்கு நீண்ட நாள் காவலில் அடைக்கப்பட்டிருப்பதாக உறவினர்கள் மூலம் அறிந்து கொண்டான். நீண்ட நாள் பெற்றோரின் பிரிவு, அது தந்த விரக்தி, நீதி என்பதே கிட்டாது எனும் போது எழுத்த ஆதங்கம், மனச்சோர்வு இவை தந்த பாதிப்புக்களால் வாழ்கையில் வெறுமைக்குள் சென்ற கவின் யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமலே வீட்டை விட்டு வெளியேறி இயக்கத்தோடு இணைந்து செயற்படத் தொடங்கினான். சில காலம் இயக்கத்தோடு செயற்பட்ட பின் அவன் ஐரோப்பாவுக்கு நெருங்கிய உறவினர்களால் அழைக்கப்பட்டுக்கொண்டான்.

ஐரோப்பிய மண்ணில் பல வித்தியாசங்களை சந்தித்த போதும் வசதிகள் வாய்ப்புக்கள் இருந்த போதும் அவனால் மனதளவில் அவற்றோடு ஒன்றித்து அவற்றை திருப்தியோடு அனுபவிக்க முடியவில்லை. அவற்றோடு ஒன்றித்து தன்னை வித்தியாசமானவனாக காட்டி போலியாக வாழவும் முடியவில்லை. பெற்றோரின் பிரிவும் அவர்களுக்கு என்ன நேருமோ என்ற ஏக்கமுமே அவனுக்குள் எப்போதும் குடிகொண்டிருக்கும். வீட்டு நினைவுகளால் அவன் அடிக்கடி ஆளப்படுவான். சொந்த மண்ணில் கண்ட அனுபவங்களே அவனை அந்நிய மண்ணிலும் கொள்கைப்பற்றோடு ஒரு தெளிவான வளமான இலட்சியத்தோடு பற்றுறுதியோடு வாழ வழி சொல்லிக்கொண்டிருந்தது. ஐரோப்பாவிலும் அவன் தனிமையையே விரும்பினான். தானும் தன் படிப்பும் வேலையும் அதுவே அவனுக்கு வாழ்வாகிப் போனது. மற்றைய ஊர் ஆட்கள் போல அவனால் சொந்த மண்ணின் அவலங்களை மறந்து சொந்த வாழ்வில் சந்தித்த துயரங்களை மறந்து போலிப் போர்வைக்குள் புகுந்து இயல்பான அடையாளங்கள் தொலைத்து ஐரோப்பியனாக தன்னை அடையாளம் காட்டி போலித்தனத்தனமாக வாழவும் அவனால் முடியவில்லை. அதற்காக அவன் அப்படி வாழும் மற்றவர்களைக் குறை கண்டதும் இல்லை. அவரவர் தங்கள் மனத்துக்குப் பிடித்தது போல வாழ்கிறார்கள்.அது அவரவர் சுதந்திரம் என்றுணர்ந்தும் கொண்டான்.

விமானம் இரத்மனால விமான தளத்தை நெருங்குகிறது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய இராணுவ வதை முகாமுக்குள் விட்டுவிட்டு வந்த பெற்றோரைக் கண்டு, கொஞ்சி மகிழ்ந்த திருப்தியும், சொந்த மண் பெரும் அவலத்தைக் கண்டிருந்தாலும் இன்னும் அழியாது வைத்திருக்கும் சில அழகுகளை ரசித்த திருப்தியும் மனதிற்கு ஒரு சின்ன ஆறுதலை தந்தாலும், வானூர்தியில் இருந்து அவன் அவதானித்த தாய் மண்ணின் கோலத்தையும் சிங்கள மண்ணின் கோலத்தையும் ஒப்பிட்டு பார்த்த போதுதான் தன் தாய் மண்ணின் ஏழ்மையையும் அவள் இன்னும் ஓரவஞ்சனையை சந்தித்துக் கொண்டிருப்பதையும் தெளிவாக உணரமுடிந்தது. மனதில் அதை படமாக்கிப் பதிந்தும் கொண்டான். ஐரோப்பாவிலும் சரி சிங்கள மண்ணிலும் சரி கடனோ சொந்தமோ வசதிகள் என்று வாழ்ந்தாலும் அந்நியத்தனம் என்பது மனதுக்குள் தேடாமல் தேடி வரும் ஒன்று. அதை சொந்த மண்ணில் அவன் உணரவே வாய்ப்பிருக்கவில்லை. வசதிகளால் ஏழ்மை என்றாலும் சொந்த மண் மனதுக்கு தரும் திருப்தியால் என்றும் நிறைவானதுவே." சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல் ஆகுமா"...என்ற கவிவரிகளின் யதார்த்தத்தை அனுபவம் தந்த உணர்வுகளால் உள்வாங்கியபடி கவின் கொழும்பு இரத்மனால விமான தளம் விட்டு வெளியே நடக்கிறான்.

ஆக்கம்: தேசப்பிரியன்.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 9:54 PM

2 மறுமொழி:

Blogger நிலாமதி செப்பியவை...

தாயக நினைவுகளை சுமது வந்த சிறுகதை மிகவும் நன்று. பாராடுக்கள். நட்புடன் நிலாமதி

Sat Sep 05, 12:03:00 AM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

உங்கள் பாராட்டிற்கு நன்றி நிலாமதி அக்கா. :)

Sat Sep 05, 07:36:00 AM GMT+1  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க