Wednesday, September 09, 2009

தமிழ் மக்களின் இன்றைய பணி: விடுதலைப்புலிகள் ஜனநாயகத் தலைமை ஏற்பதை உலகம் அங்கீகரிக்க செய்ய வேண்டும்.



உலகில் ஆயுத வழி தமது இன மக்களின் உரிமைக்காகப் போராடி பேரினவாத, மொழிவாத, தேசிய வாத அல்லது வல்லாதிக்க அரச பயங்கரவாதங்களினால் கொடும் இராணுவ இயந்திரம் கொண்டு அடக்கப்பட்ட போராட்டங்கள் பல.

சிறீலங்காவிலேயே தமது சொந்த சிங்கள ஆட்சியாளர்களின் முதலாளித்துவ வகுப்புவாத சந்தர்ப்பவாத அரசியலை எதிர்த்து சிங்களவர்கள் இரண்டு தடவைகள் ஆயுதக் கிளர்ச்சி செய்திருக்கின்றனர்.

ஜே வி பி (ஜனத்தா விமுக்தி பெரமுன - Janatha Vimukthi Peramuna) இந்த ஆயுதக் கிளர்ச்சிகளை 1971 மற்றும் 1987-89 காலப் பகுதிகளில் செய்தது. அதில் 1971 கிளர்ச்சி இந்திய இராணுவ உதவியுடன் 15,000 சிங்கள இளைஞர்களை பலியிட்டு அடக்கி ஒடுக்கப்பட்டது. அதன் பின் 1989 இல் ஜே வி பி கிளர்ச்சியை அடக்க என்று சுமார் 7000 க்கும் அதிகமான சிங்கள இளைஞர்களை கொன்று குவித்தன சிங்கள அரசும் அதன் ஆயுதப்படைகளும்.

முதலாவது கிளர்ச்சியை அடக்கியவர் இன்றைய மகிந்த ராஜபக்ச கட்சியின் அப்போதைய தலைவர் சிறீமாவோ பண்டாரநாயக்கா. பின்னைய கிளர்ச்சியை அடக்கியவர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்த ரணசிங்க பிரேமதாச.

1989 இல் ஜேவிபியின் தலைமை சிங்கள அரச படைகளால் அழிக்கப்பட்டதோடு அதன் கதை முடிந்தது என்றே கணிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் ஜேவிபி உயிர்ப்புப் பெற்றது. ஆனால் அதன் பயணப் பாதை இனவாத அரசியல் சார்ந்த ஜனநாயகப் பாதை என்று சொல்லிக் கொள்ளும் வகைக்கு இருப்பது என்னவோ தமிழர்களைப் பொறுத்தவரை ஒரு துரதிஸ்டம் தான்.

இருந்தாலும் ஜே வி பியின் வரலாறு.. ஆயுதக் கிளர்ச்சிகளின் பின்னான வீழ்ச்சியும் சமீப பத்தாண்டுகளில் அவர்கள் கண்டுள்ள ஜனநாயக எழுச்சியும் தமிழ் மக்களின் அரசியல் ஏக பிரதிநிதிகளாக அரசியல் - இராணுவ பரிமானத்தோடு வளர்ந்திருந்து இன்று ஒட்டுமொத்த உலகால் இராணுவ பலத்தை இழக்கச் செய்யப்பட்டு நிற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஒரு நல்ல மீள்வுக்கான உதாரணம் என்று கொள்வதில் தப்பில்லை.

அதற்காக தமிழீழ விடுதலைப்புலிகள் இனவாத அரசியல் செய்ய வேண்டும் என்பதல்ல கோரிக்கை. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் போல் திடமாக உறுதியோடு போராடியவர்களும் யாரும் இலர். அவர்களைப் போல பேச்சு மேடைகளில் எந்த விட்டுக் கொடுப்புக்கும் இடமின்றி தமிழ் மக்களின் உரிமைக் குரலை ஓங்கி ஒலித்தோரும் யாரும் இலர். அந்த வகையில் தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் அரசியல் ஜனநாயகத் தலைமையை ஏற்க முன்வருவதோடு அதனை ஜனநாயகத்தை உச்சரிக்கும் இந்த உலகம் ஏற்கவும் செய்ய வேண்டும்.

இந்திய தேசிய வாதத்தினால் ஆயுதக் கிளர்ச்சிகள் திட்டமிட்டு தெற்காசியப் பிராந்தியத்தில் அடக்கி ஒடுக்கப்பட்டு வருகின்றமை ஒன்றும் ரகசியமான விடயம் அல்ல. இந்திய தேசியம் என்பது தமிழீழத்தின் உருவாக்கத்திற்கு உதவக் கூடிய ஒரு காரணி அன்று. அதன் வீழ்ச்சியே சோவியத் வீழ்ச்சியோடு பல சுதந்திர தேசங்கள் பிறந்தது போல தமிழீழமும் பிறப்பெடுக்க உதவும். அதுவரை தமிழர்கள் தெற்காசிய பிராந்தியத்தில் சாணக்கிய அரசியலை செய்ய வேண்டிய நிலை ஒன்று இருக்கிறது.

சிங்கள பேரினவாத அரசிற்கு.. இந்திய தேசியத்திற்கு வால்பிடிக்கும் தமிழ் ஒட்டுக்குழுக்களை வைத்துக் கொண்டு தமிழ் மக்கள் எதனையும் அரசியல் ரீதியாக பெறவும் முடியாது சாதிக்கவும் முடியாது.

இந்தியாவில் பஞ்சாப்பில் சீக்கியர்களின் தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்ட வீழ்ச்சியாக இருக்கட்டும் காஷ்மீரில் தனிநாட்டுக்கான முஸ்லீம்களின் ஆயுதப் போராட்ட வீழ்ச்சியாக இருக்கட்டும் தென்னாபிரிக்காவில் தென்னாபிரிக்க தேசிய காங்கிரஸின் ஆயுதப் போராட்டம் பெரிய வெற்றிகளை சாதிக்காத தன்மையாக இருக்கட்டும்.. பலஸ்தீனத்தின் பலஸ்தீன விடுதலை இயக்கம் சிதறிடிக்கப்பட்டு பலமிழக்கச் செய்யப்பட்டதாக இருக்கட்டும் இவற்றின் பின்னாலான அந்தந்த போராளிகளின் நடவடிக்கைகள் என்பது வெறும் அரசியல் வெற்றிடத்தை உருவாக்கி விடுவதாக இருக்கவில்லை.

வீழ்ச்சிகளில் இருந்து துரித கதியில் மீண்டு அவர்கள் இன்று ஜனநாய வழியில் தமது மக்களை வழிநடத்திக் கொண்டிருப்பதை காணக் கூடியதாக இருக்கிறது.

ஆனால் சிறீலங்காவில் அப்படி ஒரு நிலை உருவாகக் கூடாது என்பதில் சிங்கள ஆட்சியாளர்கள் மிகக் கவனமாக இருப்பதுடன் விடுதலைப்புலிகள் ஜனநாயக வழிக்குத் திரும்புவதைக் கூட சிங்கள அரசுகள், கட்சிகள் மற்றும் தமிழ் ஆயுத ஒட்டுக்குழுக்கள் விரும்பவில்லை.

ஜே வி பியின் வீழ்ச்சியோடு அவர்களுக்கு பொதுமன்னிப்பு அளித்த சிங்கள அரசுகள் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் அவர்களுடன் வாழ்ந்த மக்களுக்கும் பொதுமன்னிப்பு அளிக்க முன் வரவில்லை. மாறாக தமிழ் மக்கள் மீது இனப் படுகொலையை கட்டவிழ்த்து விட்டுள்ளதுடன் அண்மையில் இன, மொழி ரீதியான பெயர்களுடன் கூடிய கட்சிகளின் இருப்பையும் உதயத்தையும் சட்டவிரோதமாக்கி இலங்கைத் தீவில் இருக்கும் சிறுபான்மை மக்களின் பல்லின அடையாளங்களையும் ஜனநாயக உரிமைகளையும் ஒட்டுமொத்தமாக நசுக்கிவிட முயன்று வருகின்றது.

தற்போது அந்தச் சட்டம் சட்டவிரோதமானது என்று சிங்கள சிறீலங்காவின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையிலும்.. சிங்கள அரசின் உண்மையான செயலுரூபத்தை அதன் இந்த ஒரு ஜனநாயக பண்பழிப்புச் செயற்பாடே உறுதிப்படுத்தப் போதுமானதாக உள்ளது.

இந்த நிலையில்.. தமிழ் மக்கள் மத்தியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவ வீழ்ச்சி என்பது ஏற்படுத்தி இருக்கும் ஒரு சூனியத்துள் இருந்து அல்லது அரசியல் வெற்றிடத்தில் இருந்து அவர்களை மீட்டு வர வேண்டும்.. மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகள் ஜனநாயக வழியில் தமிழ் மக்கள் முன் உதயமாவதே அதற்கு சிறப்பான வழி ஆகும். அதுவே சிங்கள ஆட்சியாளர்களுக்கும் சவாலாக அமைவதோடு தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் அபிலாசைகள் ஜனநாயக வழியில் வெல்லப்படக் கூடிய சாத்தியமான வழிமுறைகளை கையாண்டு முயற்சிகளை இதய சுத்தியோட மேற்கொள்ள உதவியாகவும் அமையும்.

சந்தர்ப்பவாத, காட்டிக்கொடுப்பு, ஆயுத அரசியல் செய்யும் சிங்கள அரசோடு ஒட்டிப் பிழைக்கும் தமிழ் ஒட்டுக்குழுக்களிடம் எந்த தெளிவான தமிழ் மக்களிற்கு என்றான அரசியல் அபிலாசையும் கிடையாது.தமிழ் மக்களிற்காக பேரம் பேசக் கூடிய திறனும் அவர்களிடம் இல்லை.

அதுமட்டுமன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது கூட ஒரு உருப்படியான செயற்பாடின்றிய ஒரு வகை உறைநிலையில் இருக்கும் கட்சியாகவே தோற்றமளிக்கிறது. அக்கட்சியின் உறைநிலை சிதறும் போது அதன் அங்கத்தவர்களின் உண்மை முகமும் தெரிய வரும். அது நிச்சயம் தமிழ் மக்களின் அபிலாசைகளை வெல்ல உதவாது. அந்த உறுப்பினர்களின் சொந்த அரசியல்.. எதிர்காலத்தை நிச்சயிக்கும் விதமாகவே அது பெரும்பாலும் அமையும்.

எனவே தமிழ் மக்களுக்கு இன்று வேண்டியது.. திறந்த வெளிச் சிறைகளில் அடைபட்டிருக்கும் 3 இலட்சம் மக்களின் விடுதலை மட்டுமல்ல.. ஒட்டுமொத்த ஈழத்தமிழ் மக்களுற்கும் ஒரு வலுவான ஜனநாயக அரசியற் தலைமை. அதை விடுதலைப்புலிகள் மட்டுமே கொடுக்க முடியும். அந்த வகையில் களத்தில், புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்கள் ஒருங்கிணைந்து ஜனநாயக உலகின் முன் தமிழீழ விடுதலைப்புலிகளை ஜனநாயக வழியில் செயற்பட இலங்கைத் தீவில் ஜனநாயகத்தை நிலைநாட்ட உதவ ஒரு கோரிக்கயை முன் வைத்து அதனை நடைமுறைச் சாத்தியமாக்க உதவக் கோர வேண்டும்.

ஜனநாயகத்தை பாதுகாக்க என்று ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் போர் செய்பவர்கள்.. சிறீலங்காவின் ஜனநாயக அழிப்பே நடந்து கொண்டிருக்கும் போது அதை ஊக்குவிப்பதுமின்றி கண்டும் காணாதது போலவும் இருக்கின்றனர். இவர்களின் இரட்டை வேடங்களையும் தமிழ் மக்கள் தோலுரித்துக் காட்டி அவர்களின், இந்த உலகின் மனச்சாட்சியை தட்டி எழுப்பி தமிழ் மக்களின் உண்மையான அரசியல் ஏக பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளே என்பதை மீண்டும் மீண்டும் இந்த உலகிற்கு நிரூபிக்க வேண்டிய நேரம் இது.

அப்போதுதான் தமிழீழ விடுதலைப்புலிகள் மீது திட்டமிட்டு இந்திய தேசியத்தின் அழுத்ததால் உலகெங்கும் குத்தப்பட்ட பயங்கரவாத முத்திரையை அழிக்க முடியும். அதன் மூலமே தமிழீழ விடுதலைப்புலிகளை ஜனநாயக அரசியலுக்குள் செயலிறக்கி தமிழ் மக்கள் தமது நீதியான நேர்மையான விருப்புக்குரிய ஜனநாயக அரசியல் உரிமையை தன்னாட்சி உரிமையை வெற்றி கொள்ள முயற்சிக்க முடியும்.

அதைவிடுத்து எல்லாம் முடிந்து போய்விட்டது.. எனி என்ன இருக்கிறது.. என்று ஒட்டுக்குழுக்களின், காலம் காலமாக தமிழ் மக்களை கொன்ற பயங்கரவாத தடைச்சட்டம், சிறீலங்காவின் அவசரகாலச் சட்டத்திற்கு வாக்களித்தே வயிறு வளர்த்த நரைத்த தாடிகளைக் கொண்ட காட்டிக் கொடுப்பாளர்களை தமிழ் மக்களின் அரசியல் தலைமைகளாக சித்தரிக்க முயல்வது தமிழ் மக்கள் தம்மை தாமே மீள முடியாத படுகுழியில் தள்ளி அரசியல் தற்கொலை செய்வதற்குச் சமனானது.

களத்திலும் புகலிடத்திலும் உலகெங்கும் உள்ள தமிழ் மக்களே இவை குறித்து சிந்தியுங்கள். விரைந்து ஒற்றுமையோடு, மாவீரர்களும், மாண்டு போன மக்களும் மற்றும் சிறைபிடிக்கப்பட்டுள்ள மக்களின் உள்ளங்களுள் ஒழிந்திருக்கும் உணர்வுகளும் சொன்ன, சொல்லும் பாதையில் நடக்க ஒரே இலட்சியத்தோடு செயற்படுங்கள். இதுவே எமது இனத்தின் அரசியல் விடிவுக்கான இன்றைய முதற் தேவையும் கூட.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 7:39 AM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க