Sunday, October 11, 2009

விலை போகும் தமிழர்களால் தான் தமிழர்களுக்கு விடுதலையும் இல்லை நிம்மதியான வாழ்வும் இல்லை..!




இலங்கையில் தமிழக குழு - தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படை!


ராமேஸ்வரம்: இலங்கைக்கு திமுக கூட்டணிக் குழுவினர் பயணம் செய்து வரும் நிலையில், தமிழக மீனவர்களை தாக்கி, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மிரட்டி, மீனவரை கடலில் குதிக்க வைத்து தத்தளிக்க விட்டு வேடிக்கை பார்த்து விரட்டியடித்துள்ளனர் இலங்கை கடற்படை ரவுடிகள்.

இலங்கைக் கடற்படையினரின் அட்டகாசத்திற்கு இதுவரை எந்த விமோச்சனமும் இல்லை. இந்தியர்களான தமிழ்நாட்டவரை கிள்ளுக்கீரைகள் போல நினைத்துக் கொண்டு, இவர்களை எத்தனை அடித்தாலும் கேட்க நாதியில்லை என்று கருதி, தொடர்ந்து தாக்கிக் கொண்டே இருக்கின்றனர்.

தமிழகத்தின் கடற் கோடியிலிருந்து ராமேஸ்வரம் மீனவரும், நாகை மாவட்ட மீனவர்களும் தொடர்ந்து கதறிக் கொண்டே உள்ளனர் - உதவி கோரி. ஆனாலும் இன்னும் அந்தக் குரல் உரிய காதுகளை துளைக்கவில்லை, மனதை தட்டி எழுப்பவில்லை.

இந்த நிலையில் மீண்டும் ஒரு கடற்படைத் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர் ராமேஸ்வரம் மீனவர்கள்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் நேற்று கடலுக்குள் சென்றனர். இதில் 20 படகுகள் கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லையில் வலை விரித்து மீனகளுக்காக காத்து இருந்தனர்.

அப்போது அங்கு 5 அதிநவீன படகுகளில் வந்த இலங்கை கடற் படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். மேலும் மீனவர்களின் படகுகளுக்கு தாவி அவர்களை தாக்கியதோடு ஜி.பி.எஸ். கருவி, ஐஸ் பெட்டிகள், டீசல் கேன்கள் ஆகியவற்றை கடலுக்குள் தூக்கி வீசினர்.

அத்துடன் கடலில் விரித்திருந்த வலைகளையும் அறுத்து எறிந்துள்ளனர். மேலும், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த அப்துல் கரீம், மனோகரன், இளையபெருமாள் ஆகியோர் இருந்த படகில் ஏறிய கடற்படையினர், மூன்று மீனவர்களையும் துப்பாக்கிகளின் பின்பக்கத்தால் தாக்கினர். பின்னர் படகு டிரைவர் மனோகரனை கடலில் குதிக்க உத்தரவிட்டனர்.

அவரும் உயிருக்குப் பயந்து கடலில் குதித்தார். ஆனால் நீச்சல் அடிக்க முடியாமல் தத்தளித்து படகைப் பிடித்து மேலே வந்தார்.

அத்தோடு நிற்காத கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். மீண்டும் வந்தால் கொன்று விடுவோம் என மிரட்டிய அவர்கள் பின்னர் மீனவர்களை அடித்து விரட்டினர்.

உயிர் தப்பினால் போதும் என்று பயந்து போய் மீனவர்கள் வேகமாக கரைக்குத் திரும்பியுள்ளனர்.

மீனவர்கள் மீது தொடர்ந்து நடந்து வரும் இதுபோன்ற அட்டூழியங்கள் குறித்து மத்திய அரசும், தமிழக அரசும் தொடர்ந்து அறிக்கைகள் மூலம் பேசிக் கொண்டிருக்காமல், இலங்கைக் கடற்படையினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் குமுறலுடன் கூறுகின்றனர்.

இதுவரை இலங்கை கடற்படை நடத்திய அத்துமீறிய தாக்குதல்களுக்கு 400க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் பலியாகியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தவித்து வரும் தமிழர்களின் நிலையை அறிவதற்காக திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் எம்.பிக்கள் குழு தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில், இங்குள்ள தமிழர்களை இலங்கை கடற்படை சாவாதனமாக அடித்து விரட்டியிருப்பது இந்தியாவையும், தமிழ்நாட்டையும் கேவலப்படுத்தும் செயல் என்றும் மீனவர்கள் கருதுகின்றனர்.

source:thatstamil.com

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:07 AM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க