Friday, January 15, 2010

சம்பந்த சாணக்கியம்...?!சிறீலங்காவில் 1983 இல் நிகழ்ந்த இனக்கலவரத்தின் போது தென்னிலங்கை வாழ் சிங்கள விசுவாசத் தமிழர்கள் உட்பட பலரும் ஜே ஆர், காமினி, லலித் அத்துலத்முதலி உட்பட்ட சிங்களத் தலைமைகள் ஏவிவிட்ட காடையர்களின் பிடியில் சிக்கி சித்திரவதைப்பட்டு இறந்ததும்.. துன்பப்பட்டதும் கண்டு அண்டை நாடான இந்தியாவின் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கொஞ்சம் பதறித்தான் போனார்.

அவரின் பதட்டத்திற்கு காரணமாக இருந்தது தமிழர்கள் சிங்களவர்களால் துன்பப்படுத்தப்பட்டது என்பதிலும்.. அன்றைய ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனவின் அமெரிக்க - இஸ்ரேல் - பாகிஸ்தான் நெருக்கமே. அப்போது இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை என்பது பனிப்போர் காலத்திற்கான ஒன்றாக இருந்ததுடன் அமெரிக்க எதிரியான சோவியத் யூனியனை மையப்படுத்தி அமெரிக்க ஆதரவு பாகிஸ்தானையும்.. எல்லையில் எப்போதும் போல தொந்தரவாக இருந்து கொண்டிருந்த சீனாவை எதிரிகளாகவும் நோக்கும் நிலையைக் கொண்டிருந்தது.

அப்போதும் கூட ஈழத்தமிழர்களின் "படித்த மேதாவி சாணக்கிய சட்டாம்பி அரசியல்வாதிகளான" அமிர்தலிங்கம் போன்றோர் இந்தியாவை மையப்படுத்தி ஏன் இந்தியாவின் தத்துப்பிள்ளைகளாகி இந்திய நலனைக் கொண்டு ஈழத்தில் தமிழ் மக்களின் அரசியலை இருப்பை பாதுகாக்க முடியும் என்று நம்பித்தான் செயற்பட்டனர். அவர்களைப் பொறுத்தவரை இந்தியா தான் எல்லாம்.அதன்சொற்படியே செயற்பட்டும் கொண்டனர்.

அவர்கள் இந்தியாவைத் தாண்டி வேறு எவரையும் அன்று தமிழர்களின் துன்பியல் தொடர்பில் ஆறுதல் ஆதரவு வேண்டி நாடிச் செல்ல முயலவும் இல்லை. தமிழர்களுக்கு சிங்களவர்களால் நேர்ந்த கதியை இந்தியாவைத் தவிர பிற உலகிற்கு தெளிவாகச் சொல்லக் கூட இவர்கள் முனையவில்லை. இந்திரா காந்தியின் முந்தாணைக்குள் தான் தமிழர்களின் நலன் அடங்கிக் கிடப்பதாக தவம் இருந்தனர். இந்திரா காந்தியும் அதையே பெரிதும் விரும்பினார். அன்றைய நிலையில் இந்திராவுக்கு ஈழத்தில் தமிழர்களுக்கு இருந்த பிரச்சனை பிராந்தியத்தில் தனது செல்வாக்கை சிங்கள அரசு மீது செலுத்தவும் சிங்கள அரசை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் ஒரு வாய்ப்பை அளிப்பதாக இருந்தது.

அமிர்தலிங்கம் கோஷ்டியினர் டெல்லிக்கும் சென்னைக்கும் பறப்பதையே 1983 இல் இருந்து 1989 இறக்கும் வரை கொள்கையாகக் கொண்டிருந்தனர். இதனால் அவர்கள் தமிழ் மக்களுக்கு ஈட்டிக்கொடுத்த இராஜதந்திர வெற்றி என்று எதுவும் கிடையாது. விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் இந்தியாவின் செல்வாக்கை தாண்டி வளரும் நிலைக்கு வந்த ஒரு கட்டத்தில் தான் இந்திய - இலங்கை ஒப்பந்தம் போடப்பட்டது. அதில் இந்திய ஒருமைப்பாடு இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே முதன்மையாக இருந்தது. ஈழத்தில் தமிழர்களின் அரசியல் அபிலாசை தீர வேண்டும் என்பதல்ல அன்று முக்கியமாக அந்த ஒப்பந்தத்தில் இடப்பெற்றிருந்தது.

இந்திய - இலங்கை ஒப்பந்தம் கூட அமிர்தலிங்கம் கோஷ்டியினரின் இராஜதந்திர வெற்றியால் ஏற்பட்ட ஒன்றல்ல. விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தை கட்டுப்படுத்த போடப்பட்ட ஒப்பந்தம் அது. அதன் மூலம் கிடைத்ததை வைத்தே இன்று வரை அமிர்தலிங்கம் கோஷ்டியினரும் பிற தமிழர் விரோத தமிழ் ஆயுதக் கும்பல்களும் அரசியல் நடத்தி வருகின்றனர் என்பதையும் இந்த இடத்தில் நினைவு கூற வேண்டும்.

1989 வாக்கில் ஏற்பட்ட சிங்கள அரசுத்தலைமை மாற்றங்கள் இந்தியப் படை விலகலுக்கும் இந்திய - சிறீலங்கா உறவு மோசமடையும் நிலைக்கும் இட்டுச் சென்றது. அன்று இந்தியாவின் வடகோடியில் முனைப்புப் பெற்றிருந்த காஷ்மீர் பிரச்சனையில் சிறீலங்காவின் அப்போதைய பிரேமதாச அரசு பகிரங்கமாகவே பாகிஸ்தானின் நிலைப்பாட்டை ஆதரித்து கருத்து வெளியிட்டு வந்ததும் அன்றி இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரங்களிலும் ஈடுபட்டிருந்தது. அப்போதும் கூட ஈழத்தமிழர்களின் மத்தியில் இருந்து இந்தியாவால் பொறுக்கி எடுத்து வளர்க்கப்பட்ட வரதராஜப் பெருமாள் உட்பட்ட ஈபிஆர்எல்எவ் கட்சியினர் (இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரேமசந்திரன் உட்பட) இந்தியாவே தஞ்சம்.. இந்தியாவே எல்லாம் என்று ஈழத்தமிழர்களின் அரசியல் நலனை இந்தியாவை நம்பியே தீர்மானித்தனர். விடுதலைப்புலிகளைத் தவிர வேறு எவரும் இந்தியாவின் நலனுக்கு அப்பால் ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைகளை முன்னுறுத்திப் பார்க்க முன்வரவில்லை. அப்படிச் செய்வதை சாணக்கியமற்ற.. படிப்பறிவற்ற.. சட்டம் தெரியாத சின்னப்பொடியள்களின் மண்விளையாட்டாகவே காட்டி வந்தனர்.

ஆனால் விடுதலைப்புலிகளின் நகர்வுகளோ வேறுமாதிரி இந்ததன. அவர்கள் இந்தியா ஈழத்தமிழர்களின் பிரச்சனையை வைத்து தனது நலனை பாதுகாக்கிறது அல்லது பாதுகாக்க முற்படுகிறது என்று சரியாக அறிந்து அதன் வழி இந்தியாவை தமிழர்களின் வழிக்குக் கொண்டு வர அதற்கான வழிவகைகளைக் காண முயற்சித்தனர். இது மிதவாதிகள் என்றும் ஜனநாயக வாதிகள் என்றும் வன்முறையை வெறுப்போர் என்றும் (1977 இல் வட்டுக்கோட்டை பிரகடனத்தைக் கொண்டு வந்து இரத்தத் திலகம் இட்டு வன்முறைக்கு வழிகாட்டியவர்கள் இவர்கள் என்பதையும் இந்த இடத்தில் பதிந்து வைத்துக் கொள்வது நன்று.) தம்மை அடையாளப்படுத்தி அரசியல் செய்து வந்த அமிர்தலிங்கம் கோஷ்டியினருக்கும் மற்றும் இதர தமிழ் ஆயுதக் குழுக்களுக்கும் எந்த மாற்றுச் சிந்தனையும் இன்றி இந்திய வழியில் போய் அதுபோடும் பிச்சையில் தான் தமிழர்களின் அரசியல் உரிமையை பெற முடியும் என்ற நம்பிக்கைக்கு நெருக்கடியாக அமைந்ததும் அன்றி இந்தியாவின் பார்வையில் அதன் நலனுக்கு எதிரானதாகவும் பட்டது.

இந்த நிலையில் தான் 1995 இல் பதவிக்கு வந்த இந்திய விசுவாசியான சந்திரிக்கா அம்மையாரும் சமாதானம் பேசி வந்து போரின் மூலம் சமாதானம் என்ற நிலைப்பாட்டுக்கு இந்தியாவால் கொண்டு வரப்பட்டார். அப்போதும் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவராக இருக்கும் சம்பந்தன் உட்பட பலரும் மெளனமாக இருந்து சந்திரிக்காவின் போரின் மூலம் சமாதானம் திட்டத்தை செயற்படுத்த உதவினர். இந்தியாவின் மறைமுக ஆதரவோடு அன்று நடந்த போரில் ஈழ விடுதலைப் போராட்டத்தின் முக்கிய மையமாக விளங்கிய யாழ்ப்பாணம் சிங்கள இராணுவத்தின் கைகளுக்குப் போனது. அப்போதைய இந்திய ஆளும் வர்க்கம் யாழ்ப்பாணம் மீட்சியை வரவேற்று கருத்து வெளியிட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

அதுமட்டுமன்றி யாழ்ப்பாண வெற்றியோடு விடுதலைப்புலிகளைப் பூண்டோடு அழித்து சிங்கள மேலாதிக்கத்தை இலங்கைத் தீவு எங்கனும் நிறுவி விட துடித்தார் சந்திரிக்கா. ஆனால் அதற்கு முதல் சர்வதேசத்தின் முன்னும் இந்தியாவின் முன்னும் தன்னை ஒரு சமாதான விரும்பியாகக் காட்டிக்கொள்ளவே சந்திரிக்கா விரும்பினார். தமிழ் மக்கள் முன்னும் தன்னை ஒரு பேரினவாதியாகக் காட்டிக்கொள்வதை சந்திரிக்கா அன்றைய நிலையில் வெளிப்படையாக விரும்பாத போதும் அவருக்குள் பேரினவாதச் சிந்தனைகளே பெரிதும் குடிகொண்டிருந்தன என்பதை மாங்குளம் வெற்றியோடு அவர்கள் நடந்து கொண்ட முறைகள் விளக்கி இருந்தன.

இந்த இடத்தில் ஒரு முக்கியமான விடயத்தை நோக்க வேண்டும். பொத்தல் விழுந்திருந்த சந்திரிக்காவின் சமாதான தேவதைக்கான முகத்திரையினூடு வெளித்தெரிந்த பேரினவாதத் தோற்றத்தை தையல் போட்டு மறைக்க வேண்டிய தேவை இருந்தது. அதைச் செய்ய தீவிரமாகப் பங்களிப்புச் செய்ய சிலர் தாமாகவே முன்வந்தனர். அப்படி முன்வந்தவர்களில் கதிர்காமர் அஷ்ரப் நீலன்-திருச்செல்வம் சம்பந்தன் ஆனந்தசங்கரி பிரேமச்சந்திரன் டக்கிளஸ் தேவானந்தா சித்தார்த்தன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். அப்போதும் கூட பிரித்தானிய சமாதான ஏற்பாடுகளை இயன் பொக்சின் முயற்சிகளை.. ஈழப்பிரச்சனையில் பிரித்தானிய தலையீட்டை விரும்பாத இந்திய விசுவாசிகள் இயன் பொக்சின் முயற்சிகளுக்கு முடிவுகட்டி சந்திரிக்காவை சமாதான தேவதையாகக் காட்ட 1998 வாக்கில் ஒரு தீர்வுப்பொதியை உருவாக்கி தந்துவிட்டிருந்தனர். அந்தத் தீர்வுப்பொதியை வரைந்தவர்களில் நீலன் திருச்செல்வம் முக்கிமானவர். வரவேற்றவர்களில் சம்பந்தன் முக்கியமானவர்.

இறுதியில் அந்தத் தீர்வுப் பொதி வந்த மாத்திரத்திலேயே சிங்கள எதிர் தரப்புக்களால் தீயிட்டு கொழுத்தப்பட்டது. அதில் ஐக்கிய தேசியக் கட்சி ஜே வி பி புத்த பிக்குகளின் பங்களிப்பு முதன்மையானது. விடுதலைப்புலிகள் அந்தத் தீர்வுப்பொதியில் எதுவும் உருப்படியாக அமையப் போவதில்லை.. அது சந்திரிக்காவின் போர் முகத்தை மறைக்க போடப்படும் முகமூடி என்று தீர்வுப்பொதிக்கான ஆயத்தங்கள் செய்யப்பட்ட போதே சொல்லிவிட்டனர். இறுதியாக நடந்தி முடிக்கப்பட்டதும் அதுதான். ஒரு வெற்றுப்பொதிக்கு பெரிய ஆர்ப்பாட்டம் அளித்தவர்களில் சம்பந்தன் உட்பட்ட சிலரும் அடக்கம்.

அதன் பின்னர் போர்க்கள நிலவரம் தலை கீழாக மாறி சிங்களப் படைகள் புலிகளிடம் அடிவாங்கி ஓடும் நிலை வந்தது. தானே ஏவிவிட்ட சிங்களப் படைகளை மீட்க தனது படைகளை தயார் செய்யும் துர்ப்பாக்கிய நிலையும் இந்தியாவுக்கு உருவானது. இந்த நிலையில் தான் இந்தியா விழித்துக் கொண்டது. பிராந்தியத்தின் தென்கோடியிலும் தனக்கு சவால் ஒன்று உருவாவதை அது உணர ஆரம்பித்தது. அந்தச் சவாலை விடுதலைப்புலிகள் சர்வதேசத்தின் ஆதரவோடு விடுக்கின்றனர் என்பதையும் இந்தியா உணரத்தலைப்பட்டது. ஒன்றில் விடுதலைப்புலிகளுக்கு முடிவுரை எழுத வேண்டும் இன்றேல் தமிழர்களின் பிரச்சனைக்கு நிரந்தரத்தீர்வு வேண்டும் என்ற நிலைக்கு வந்த இந்தியா அன்றைய பொழுதில் விடுதலைப்புலிகளுக்கு முடிவுரை எழுதுவதை தள்ளிவைத்துவிட்டு சமாதான வேடம் பூண்டு கொண்டது. சில உறுதிமொழிகளை அளித்து விடுதலைப்புலிகளை போர் நிறுத்தத்துக்குள் தள்ளியது. இருந்தாலும் விடுதலைப்புலிகளோடு ஏற்பட்ட கடந்த கால கசப்புக்களையும் விடுதலைப்புலிகள் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஒத்துவராத வகைக்கு கொண்டிருக்கும் அரசியல் கொள்கைகளையும் இந்தியா இலகுவாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை.

அந்த வகையில் விடுதலைப்புலிகளை முழுமையாக நம்புவதில்லை என்ற நிலைப்பாட்டில் விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் சர்வதேசத்திடமே அவர்களைச் சிக்கவைத்து அதன் வழி அவர்களின் செயற்பாடுகளை முடக்கி தேவையான சரியான சந்தர்ப்பத்தில் அவர்களை அழிப்பதை இந்தியா திட்டமாக வரைந்து கொண்டது. இது விடுதலைப்புலிகளுக்கு தெரிய வந்த போது அவர்கள் ஏற்கனவே பின்னப்பட்டிருந்த வலையில் மாட்டிக் கொண்டிருந்தனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை அதன் தெற்குப் பிராந்திய பாதுகாப்பும் ஒருமைப்பாடுமே அதன் இருப்புக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியமானது.ஈழத்தில் அல்லது தமிழகத்தில் உள்ள தமிழர்களின் அரசியல் நலன் அல்ல. அந்த வகையிலேயே இந்தியாவின் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன. அதற்கேற்றவாறு முதலில் விடுதலைப்புலிகளுக்கு ஒரு முடிவு கட்டிவிட்டால் பின்னர் ஈழத்தில் தனக்கு வேண்டிய சக்திகளை வளர்த்துவிட்டு ஈழத்தமிழர்கள் மத்தியில் தனது செல்வாக்கையும் நலனையும் பாதுகாக்கும் கொள்கைகளைப் பரப்பிவிடலாம் என்பதில் இந்தியா தெளிவாக இருந்து கொண்டது. இந்த விடயத்தில் 1987ல் அது கண்ட பாடம் அதற்கு இவ்வாறான ஒரு தெளிவைக் கொடுத்திருந்ததோடு ஈழத்தமிழர்களின் பலம் புலிகளே தவிர வேறு ஒன்றும் அல்ல என்பதையும் உணர்ந்து கொண்டிருந்தது. புலிகளை முடக்கி தனக்கு சார்ப்பான ஒரு அரசியல் நிலைப்பாட்டை ஈழத்தில் நிறுவுவதே இந்தியாவின் நோக்கம்.

அதன்படி இந்தியாவின் தேவைகள் எதிர்பார்ப்புக்கள் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் ஓரளவு நிறைவேறி இருக்கும் இன்றைய காலக்கட்டத்தில் இந்தியாவே எல்லாம் என்ற நிலைக்கு மீண்டும் தமிழர்களை கொண்டு செல்லும் நிலையை சம்பந்தன் போன்றவர்கள் உருவாக்கி வருகின்றனர். இது மீண்டும் மீண்டும் தமிழ் மக்களை இந்தியா தனது நலனுக்காக பாவிக்கும் நிலையில் வைத்திருப்பதை செய்யுமே தவிர தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க ஒருபோதும் உதவாது.

தமிழ் மக்களுக்கு இன்று அவசியமானது விடுதலைப்புலிகள் கொண்டிருந்த திடமான அரசியல் மற்றும் இராஜதந்திரக் கொள்கைகளே. விடுதலைப்புலிகளிடம் திடமான இராஜதந்திரக் கொள்கைகள் இருந்த போதும் அவை பூரணத்துவம் அற்றனவாக இருந்தன. அதற்குக் காரணம் தமிழர் தரப்புக்களிடம் ஒருவித கண்மூடித்தனமான இந்திய விசுவாசம்.. காதல்.. ஒட்டிக் கொண்டிருந்தது தான்.

ஈழத்தமிழர்கள் இந்த நிலையைக் கடந்து சர்வதேச அளவில் பல நாடுகளோடும் நெருங்கிய உறவுகளை உருவாக்கிக் கொண்டு இந்தியாவிற்கு தம்மீதுள்ள ஆதிக்கத்தை விடுவித்துக் கொண்டு அல்லது கட்டுப்படுத்திக் கொண்டு இந்தியா மீதும் அதன் கொள்கை வகுப்பாளர்கள் மீதும் செல்வாக்குச் செய்யும் அளவுக்கு தமது அரசியல் இராஜதந்திர வெளிவிவகார கொள்கைகளை தொடர்புகளை பலப்படுத்துவதாக அமைத்துக் கொள்ள வேண்டும். அது மட்டுமன்றி இந்தியா ஈழத்தமிழர்கள் மீது செலுத்தும் சுதந்திரமான தலையீட்டுக் கொள்கைக்கு முடிவுகட்ட வேண்டும். அதற்கு முடிவு வராமல் ஈழத்தில் தமிழர்களுக்கு அவர்கள் விரும்பும் வடிவில் அரசியல் விடுதலையை இந்தியாவும் சிறீலங்காவும் வழங்க இடமளிக்கப் போவதும் இல்லை.

35 வருட போர் அவலங்களைக் காட்டி (இவ்வளவு அவலங்களையும் தந்தவர்களில் இந்தியாவின் பங்களிப்பே அதிகம்) அதில் இருந்து விடுதலை பெற்றுத்தருகிறோம் என்ற பாணியில் இந்தியா ஈழத்தமிழர்களை சரிக்கட்டி விடலாம் என்று நினைக்கிறது. 35 ஆண்டுகளுக்கு முன்னர் போர் அரசியலை ஈழத்தமிழர்கள் தெரிவு செய்ய இருந்த அத்தனை காரணிகளும் அப்படியே இந்தியாவால் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. அவற்றிற்கு முடிவு கட்ட சிங்கள ஆளும் வர்க்கம் மட்டுமல்ல.. இந்திய ஆளும் வர்க்கத்திற்கும் விரும்பமில்லை. அப்படி முடிவு கட்டிவிட்டால் இந்தியாவின் தென்கோடியில் தனக்கு எழும் சவால்களை தமிழர்களை வைத்து சரிக்கட்ட வாய்ப்புக்கிடைக்காது என்ற ஒரு பயம் இந்தியாவிடம் இன்னும் இருந்து கொண்டே இருக்கிறது. இப்போது கூட தமிழர்களின் துன்பியலை தனது ஒருமைப்பாடு இறையாண்மையை பிராந்திய ஆதிக்கம் ஆகியவற்றைப் பாதுகாக்க இந்தியா பயன்படுத்துகின்றதே அன்றி அதற்கு தமிழர்கள் அவர்கள் விரும்பும் வடிவில் அரசியல் உரிமைபெற்று இந்தியாவின் நிரந்தர நண்பர்களாக வாழ வேண்டும் என்ற அக்கறை கிடையாது.

இந்த நிலையில்.. டெல்லிக்கும் சென்னைக்கும் கொழும்பிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் பாலம் போடும் பறந்து திரியும்.. அமிர்தலிங்கம் கோஷ்டியினரின் கடந்த கால அரசியலையா மீண்டும் சம்பந்தன் போன்ற நவீன சாணக்கியர்கள் செய்து ஈழத்தில் இந்திய நலன் காக்கும் அரசியல் செய்யப் போகின்றனர்..???!

இந்தியா எமது நண்பனா எதிரியா என்பது அது எம்மோடு வைத்துக் கொள்ளும் நட்பின் உண்மைத் தன்மையில் இருக்கிறது. அதற்காக இந்தியா மட்டுமே எமது நண்பன் என்றிருப்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.

தமிழீழ தேசிய தலைவர் சொன்னது போல் ஆசியாவின் கைகளுக்கு மாறி வரும் உலகின் பொருண்மிய பலம் இந்தியாவை நம்பி நடக்க முனைவதிலும் இந்தியா எம்மை நாடி வர நடப்பதுதான் அவசியம். இந்தியா எமது நண்பன் என்பது இந்தியாவையே நம்பு என்பதாகாது..!

எனவே மேற்குறிப்பிட்ட விடயங்கள் மற்றும் கடந்த காலங்களில் புலிகள் சம்பந்தப்படாத மற்றவர்கள் தமிழ் மக்களுக்கு இழைத்த தவறுகள் தொடர்பில் சம்பந்த சாணக்கியர்கள்.. சிந்திக்க வேண்டிய நேரம் இது. நாடு கடந்த தமிழீழ அரசும் பரிசீலிக்க வேண்டிய விடயம் இது.

செய்வார்களா.. அல்லது மீண்டும் பழைய குருடி கதவைத் திறவடி கதைதானா...???!

புலிகளின் மீள்வரவு வரை.. அரசியல் நிச்சயம் என்பது நிரந்தரமில்லை ஈழத்தில் தமிழர்களுக்கு..!

Labels: ,

பதிந்தது <-குருவிகள்-> at 5:51 AM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க