Monday, March 08, 2010

மகளிர் தினம்.. மகளிருக்கு மட்டுமா..??!இன்றைய நாள் சர்வதேச மகளிர் தினமாக ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டு உலகெங்கும் பரந்து வாழும் பெண்கள் இந்த உலகில் அனைத்து சமூக உரிமைகளும் பெற்று சம அந்தஸ்தோடு வாழ வேண்டும் என்று சொல்லி அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

வருடா வருடம் அதுவும் காதலர் தினம்.. அன்னையர் தினம்.. தந்தையர் தினம்.. அந்தத் தினம்.. இந்தத் தினம் என்பது போல வந்து வியாபாரிகளுக்கு நல்ல வருவாயை ஏற்படுத்தி விட்டுப் போகிறது.

ஆனால் உலகில் துன்பப்படும் பெண்கள் இந்தத் தினம் அனுஷ்டிக்கப்படுவதால் மீட்சி பெறுவதாகத் தெரியவில்லை. அதுமட்டுமன்றி பெண்களின் சம உரிமை என்பது ஆண்களை அடிமைப்படுத்தி மேலாதிக்கம் செய்யத் தூண்டுவதாகக் கூட தீவிரவாதமாக்கிச் சொல்லப்பட்டு வருகின்றது. அதனை ஆணாதிக்கத்திற்கு எதிரான போராட்டம் என்று ஒரு புதிய ஆதிக்கப் பதத்தோடு கூறியும் விதைத்தும் வருகின்றனர்.

மகளிர் தினத்தின் நோக்கங்கள் இப்படி சீர்குலைந்து கிடக்கின்ற நிலையில்.. இன்றைய நாளில் பெண்களால் பாதிக்கப்படும் ஆண்களும் சமூகத்தில் பெருகிய படியே இருக்கின்றனர்.

அண்மைய பத்திரிகைகளை நோக்கினால்.. காதலி கள்ளத் காதலனுடன் தொடர்பு காதலன் கொலை. மனைவி கள்ளக் காதல் கணவன் கொலை. மேலதிகாரியான பெண் மீது வாலிபன் பாலியல் புகார். மாணவனை காதலித்து அவனோடு ஓடிய ஆசிரியை. இப்படி இன்னோரென்ன செய்திகள் வருகின்றன. அதுமட்டுமன்றி செய்திகளாக வெளியிடப்படாத ஆண்கள் மீதான பெண்கள் செய்யும் வீட்டு வன்முறைகள்.. சொற்களால் கடிந்து விழுதல்.. திட்டுதல்.. வீட்டை விட்டு விரட்டுதல்.. ஆண்கள் பக்க உறவுகளை நச்சரித்தல்.. துன்பப்படுத்தல்.. ஆண்களின் செயல்களை குறைத்து மதிப்பிடுதல்.. உடல் நலம் மருத்துவ பரிசோதனைகளில் ஆண்களுக்கு சம வாய்ப்பு அளிக்காமை.. கல்வியில் குறிப்பாக பரீட்சைகளில் மாணவர்களில் சித்தி பெறும் வீதம் தொடர்ந்து குறைந்து செல்கின்ற போதிலும் அதனை நிவர்த்திக்க வழி செய்யாமல்.. மாணவிகளை வெற்றி வீரர்களாக காட்டுவதுடன் அவர்களை மட்டும் தொடர்ந்து வெற்றி பெற ஊக்குவிக்கின்றமை.. பெண்கள் ஆண்கள் மீது செய்யும் ஈவ் ரீசிங் போன்ற சமூக விரோதச் செயல்கள் குறித்து கடும் நடவடிக்கை எடுக்காமை.. போர்க்களங்களில் ஆண்கள் மட்டும் அதிக அளவில் போர் வீரர்களாக்கப்பட்டு சாகடிக்கப்படுதல்.. என்று பல செயற்பாடுகள் ஆண்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்காக மகளிர் தினத்திற்கு ஈடாக ஆண்களின் உரிமைகளை நிலை நிறுத்தவும் ஒரு தினம் கொண்டாடப்படுவதோடு அது வர்த்தக வியாபார நோக்கில் அமையாது ஆண்களுக்குள்ள சமூகப் பிரச்சனைகளை உரிமைப் பிறழ்வுகளை உலகிற்கு உணர்த்தி இந்த மனித சமூகத்தில் ஆண்கள் சம உரிமையோடு பாதுகாப்பாக வாழும் நிலையை உறுதி செய்வதாக அது இருக்க வேண்டும்.

சர்வதேச மகளிர் தினம் போல சர்வதேச ஆண்கள் தினம் என்று நவம்பர் 19 குறிப்பிடப்பட்டாலும் மார்ச் 8 இல் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்திற்கு அளிக்கப்படும் முன்னுரிமை அல்லது அந்தஸ்து ஆண்கள் தினத்திற்கு மகளிர் தினத்திற்கு சமனாக அளிக்கப்படுவதில்லை.

இந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்து ஆண்களின் சம உரிமைகள் மற்றும் அவர்களுக்குள்ள தனித்துவமான விசேடித்த உரிமைகள் தொடர்பில் பெண்களுக்கு அறிவூட்ட வேண்டிய கடப்பாட்டை இன்றைய நாளில் இந்தக் கருத்துப் பதிவூடு முன்னுறுத்திக் கொண்டு பெண்களின் சம உரிமைகளை ஆண்களும் மதித்து பாதுகாத்துச் செயற்பட முன் வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம்.

அனைத்து மகளிருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

மேலதிக இணைப்புக்கள்.

சர்வதேச மகளிர் தினம்.

சர்வதேச ஆடவர் தினம்.

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 1:20 PM

0 மறுமொழி:

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க