Wednesday, March 10, 2010

சேவலுக்கு விரட்டவும் பேட்டுக்கு பதுங்கவும் கற்றுக் கொடுத்தது யார்..??! அதுவும் ஆணாதிக்கமா..??!



அதென்ன ஆணாதிக்கம் என்பது.??! ஆண் ஆண் தான். பெண் பெண் தான். சமூகத்தில சம உரிமை என்பது ஆணைப் பெண்ணாக மாற்றுவதில் அல்ல. அல்லது பெண்ணை ஆணாக மாற்றுவதில் அல்ல. பெண்ணை ஆணை சக மனிதனாக எச்சந்தர்ப்பத்திலும் ஏற்றுக் கொள்ளுதலும் நடத்துதலும் ஆகும்.

விலங்கு இராட்சியம் எங்கனும் ஆண் பலமானதாகவே அதிகம் விளங்குகிறது. அது ஆதிக்கம் அல்ல. தலைமைத்துவ சமூகம் நோக்கிய ஒரு காரணி. சமூக வாழ்வில் தலைமைத்துவம் மூத்தது வழிகாட்டுதல் என்பன போன்ற விடயங்கள் அடங்கி இருக்கின்றன. சிங்கக் கூட்டத்திற்கு ஆண் சிங்கம் தலைமை. யானைக் கூட்டத்திற்கு ஆண் யானை தலைமை. தலைமைப் பண்பு என்பது ஆதிக்கம் அல்ல. ஏனெனில் சில சந்தர்ப்பங்களில் பெண் தலைமைத்துவம் கூட சமூக விலங்குகள் மத்தியில் அவதானிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் தலைமைத்துவம் என்பது தவறாக ஆதிக்கம் என்று விளக்கப்பட்டு வருகிறது.

ஆண் சிங்கம் தலைமை தாங்கினும்.. பெண் சிங்கத்தின் வாழ்வுரிமையை விருப்பு வெறுப்பை அது தீர்மானிப்பதும் இல்லை... கட்டுப்படுத்துவம் இல்லை. அதேவேளை பெண் சிங்கத்திடம் இதைச் செய் என்று வலியுறுத்துவதும் இல்லை. சமூகமாக வாழ்ந்தாலும் ஆணின் தலைமைப் பண்பை அங்கீகரித்தாலும்.. பெண் தான் தன்னுரிமையோடு தனக்குரிய வடிவில் வாழ ஆண் தன்னுரிமையோடு தனக்குரிய வடிவில் இணைந்து வாழ்கின்றன.

அந்தச் சிங்கத்திற்கும்.. அப்பன் முப்பாட்டன் வந்து என்ன ஆணாதிக்கமா கற்றுக் கொடுத்தான் தலைமை தாங்க. அதுமட்டுமன்றி இனவிடைப் போட்டியில் ஆண் பெண்ணை அதிகாரம் செய்வது.. உடலுறவின் போது ஆண் பெண்ணுக்குள் திணிப்பதும்.. அங்கு நடக்கிறது. அதையும் ஆதிக்கம் என்று சிலர் குறிப்பிடுகின்றனர். அவர்கள் அப்படிச் சொல்வதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆணுக்கு திணிக்க இருக்குது திணிக்குது... பெண் வாங்குது. எனி இவைக்காக தனி ஒரு கூர்ப்பை எல்லோ இயற்கை தேர்வு செய்ய வேண்டும். கூர்ப்பின் பாதையில் லிங்கப் புணர்வு பாதுகாப்பான வினைத்திறனான கருக்கட்டலுக்கு உதவுகிறது என்பதுதான் முக்கியமாகிறதே தவிர ஆண் திணிக்க முடிவதால் அவன் ஆதிக்க வாதி என்பதல்ல அங்கு பொருளாக்கப்பட்டுள்ளது.

பெண்ணிலைவாதிகள் ஒன்றில் யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்றேல் ஆண் பெண் உரிமைகள் தொடர்பில் இயற்கையின் விதிப்புக்களை ஏற்றுக் கொண்டு கத்த வேண்டும்.

உண்மையில் ஆண் பிறப்புரிமையையில் ரீதியில் கூட இயற்கையால் வஞ்சிக்கப்பட்டிருக்கிறான். பெண்கள் வளமான ஒரு சோடி xx நிறமூர்த்தங்களைக் கொண்டிருக்க ஆண் ஒரு வளமான x ஐ மட்டும் கொண்டிருக்கிறான். மற்றது y. அது சிறிய ஒரு நிற மூர்த்தம். இதற்காக ஆண்கள் தாங்கள் பெண்களை விட தாழ்ந்திருப்பதாகவா உணரச் செய்யப்பட்டுள்ளனர். இல்லையே.

பெண்கள் தாங்களாகவே ஆண்களுக்கு கட்டுப்படும் நிலை ஒன்றிருக்கிறது. அது இயற்கையின் விதிப்பாகக் கூட இருக்கலாம். சேவல் கலைச்சால் பேடு தான் பதுங்குவதும் மிதிபடுவதும். சேவலுக்கும் அப்பன் முப்பாட்டன் வந்து கற்றுக்கொடுத்தானா இதை...??! பேட்டிற்கு பதுங்கு மிதிபடு என்று கோழிச்சமூகம் என்ன கட்டுப்பாடா போட்டு வைத்துள்ளது..???!

அதுமட்டுமன்றி அங்கு பேடு பதுங்குவதால் மிதிபடுவதால் அது தனது வாழ்வுரிமையை இழந்துவிடுவதில்லை. சேவலுக்கு அடிமையாக வாழ்வதில்லை. மிதிபடும் கணத்தோடு அது அதில் இருந்து விடுபட்டுக் கொள்கிறது. அடுத்த கணமே அது தன் வாழ்வை தன் வழியில் சென்று தேடிக் கொள்கிறது. அதற்காக சேவலே தனக்கு சேவகன் என்று உரிமை பாராட்டுவதில்லை. ஆனால் மனிதர்கள்.. அப்படியா..??! சமூகம் கலாசாரம் பண்பாடு என்று கட்டுப்பாடுகளை ஆண்கள் மீதும் பெண்கள் மீதும் திணிக்கிறார்கள். அதைப் பற்றி பெண்கள் மட்டுமல்ல.. ஆண்களும் தான் கவலைப்பட வேண்டி இருக்கிறது. அல்லது ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது. அது வளமான மனித சமூகத்தை உருவாக்க என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

பெண்ணிலைவாதம் பெண்ணுரிமை பற்றிப் பேசுவது என்பது இன்று ஆணை மேலாதிக்கம் செய்வது பற்றிப் பேசுவது என்பதாகி விட்டது. இது பெண்ணுரிமையை நிலை நாட்ட உதவாது. பெண்கள் மீதான வன்முறையை தான் நிலைநாட்டும். ஏனெனில் இயற்கையில் ஆண் பெண்ணை விட உடல் ரீதியில் பலமானவன். அதை எந்த அப்பனும் முப்பாட்டனும் வந்து மாற்ற முடியாது. அது இயற்கையின் தேர்வு. இந்த அடிப்படையை ஏற்றுக் கொள்ளாது சம உரிமை பற்றி பேசுவதில் அர்த்தமில்லை.

சட்டத்தை போட்டு அடக்குவதும் அடக்குமுறைதான். சட்டங்கள் அற்ற தேச பரிபாலனம் எப்படி சாத்தியமில்லையோ அதேபோல் தான் ஆணின் பலப்பாவிப்புக்கு இடமின்றிய மனித சமூகமும் சாத்தியமில்லை. பலமுள்ளவன் பலத்தை பாவித்தே தீருவான். ஆண் பெண்ணிற்கு சமன் என்பது ஏற்புடைய ஒன்றல்ல. ஆண் பெண்ணை விட உடல் வலுவானவன் என்பதே யதார்த்தம். ஆனால் உடல் வலு என்பது பெண்ணின் ஆணின் வாழ்வுரிமையை பாதிப்பதாக இருக்கக் கூடாது.

சம உரிமை என்பது ஆண் பெண் என்ற நிலைக்கு அப்பால் மனிதன் என்ற நிலையில் உள்ள உரிமைகள் சார்ந்தே அது அமைய வேண்டும். ஆண் பெண் என்று வருகின்ற போது ஆணின் உடற்பலம் அவனை முன்னிறுத்துவதை தடுக்க முடியாது.

இன்று பல ஆண்கள் வீட்டு வேலையாட்களாக மனைவிக்கு பணிந்து நடக்கவும் செய்கின்றனர். காரணம்.. அதிகாரம் செய்ய முடியாது என்று அல்ல. அன்புக்கு அதிகம் கட்டுப்படுகிறார்கள் அல்லது ஏன் வேண்டாத பிரச்சனையை இவளோட வளர்ப்பான்.. இது ஒரு விளக்கம் குறைஞ்சது.. என்ற முடிவுக்கு வருகிறார்கள். இது பெண்களுக்கு நல்லாவா இருக்கும். அவங்களே அவங்க செயலால் தங்களின் நிலையை தாழ்த்திக் கொள்ளுறாங்க. சம உரிமை என்பது அடுப்படியில் சமைப்பதில்.. படுக்கை அறையில் படுப்பதில் அல்ல. சம உரிமை என்பது சிந்தனையில் செயலில் ஆணைப் பெண்ணை சமனாக சக மனிதனாக மதிக்கும் தன்மையில் இருக்க வேண்டும். அதற்காக ஆண் அல்லது பெண் தங்கள் இயல்பான இயற்கையான இயல்பை இழப்பது அல்ல செய்யப்பட வேண்டியது.

இன்றைய காலத்தில் பாரபட்சமான மனித இயற்றுகைச் சட்ட அமுலாக்கங்களைப் பயன்படுத்தி ஆண்கள் மீது பெண்கள் அதிகாரத்தை செலுத்துவது வளர்ந்து வருகிறது. பெண் தலைமைத்துவம் பெண் மேலாதிக்க வெறித்தனமாக வளர்க்கப்படும் நிலையும் இருக்கிறது.

இப்படியான ஒரு நிலையில் எந்த ஒரு மனிதனும் அதிகம் நாள் வாழ விரும்பமாட்டான். அது பெண்ணாக இருந்தாலும் சரி ஆணா இருந்தாலும் சரி. இந்த உண்மையை தெளிவாக உணர்ந்து கொண்டு ஆணாதிக்கம் அது இது என்று தேவையற்ற பதங்களை உச்சரித்துக் கொண்டு பெண்ணிலைவாதிகள் என்று ஆண்களோடு வீம்பு பேசிக் கொண்டு திரிவதிலும் உருப்படியாக பெண்களிற்குள்ள மனித உரிமைகள் தொடர்பில் அவர்களுக்கு அறிவுறுத்தி அவர்கள் அதனை பெற்று இந்த இயற்கையோடு எப்படி இணைந்து அதனைச் செயற்படுத்தி வாழ்வது என்பதைக் கற்றுக் கொடுப்பதே நன்று. ஆண்களை நோக்கியும் இது செய்யப்பட வேண்டும். இன்றேல்.. சேவல் கலைப்பதற்கும் பேடு பதுங்குவதற்கும் ஆதிக்கம் அடிமைத்தனம் என்று பெயரிட்டு காலம் காலமாக மோதிக்கொண்டிருந்து பொழுது கழிப்பதைத் தவிர வேறெதையும் சாதிக்க முடியாது.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 7:15 AM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க