Sunday, July 11, 2010

மங் உயா ஆதரேய.



சாமிலி கைகளைப் பிடித்து தடவிய படியே அவனின் கண்களை நேருக்கு நேர் பார்த்தபடி கேட்டாள். ..நீ என்னை உறுதியா காதலிக்கிறா தானே.. கைவிடமாட்டா தானே..?? அதற்கு அவன் "மங் உயா ஆதரேய" என்று அவளைத் தழுவிக் கொண்டே சொன்னான். அவனின் அணைப்பின் இறுக்கத்தில் அவன் அன்பின் உறுதியை தெளிவாக உணர்ந்து கொண்ட சாமிலி.. " சி யு ரூமாரோ" என்று சொல்லி அவனின் இறுக்கத்தை தளர்த்தி வெளிவந்தவள்.. கன்னங்களில் முத்தமிட்டு விட்டு விடை பெற்றாள். அவனும் அவளை பல்கலைக்கழக வாசல் வரை சென்று வழியனுப்பி விட்டு மீண்டும் பல்கலைகழக மரநிழலின் கீழ் அமைக்கப்பட்டிருந்த அந்தக் கொட்டகைக்குள் புத்தகங்களுக்குள் தன்னை அர்ப்பணித்துக் கொண்டான்.

வசன்.. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவன். யாழ் பிரபல்ய கல்லூரியில் உயர்தரம் கற்று கொழும்பில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி படிக்க என்று வந்து போது அங்கே சந்தித்த பெண் தான் சாமிலி.

அவள் கண்டியைச் சேர்ந்தவள். அழகானவள். அவனுக்கேற்ற ஜோடி என்று நண்பரகளே பாராட்டும் படிக்கு அமைந்திருந்தது அந்த ஜோடிப் பொருத்தம். இதனால் பல்கலைக்கழகத்தில் பலரின் பொருமலுக்கும் இலக்கானார்கள் இருவரும். அவர்களுக்குள் இருந்த நெருக்கத்தை விரும்பாதவர்கள் வசன் ஒரு "கொட்டியா - புலி" என்று சொல்லிக் கூட சாமிலியை அவனிடம் இருந்து பிரிக்க முற்பட்டிருந்தனர். இருந்தாலும் வசன் மீது அளவு கடந்த அன்பை நம்பிக்கையை வைத்திருந்தாள் சாமிலி. அதனால் அவர்களை யாராலும் பிரிக்க முடியவில்லை. இப்படி பிரிக்க முன்னின்றவர்களில் வேற்றினத்தவரைக் காட்டினும்.. அவனின் உற்ற நண்பர்களாக உறவாடிய சொந்த ஊர்க்காரர்களே அதிகமாயிருந்தனர்.

அன்றும் வழமை போல சாமிலி பல்கலைக்கழகத்தில் அந்தக் கொட்டகைக்குள் அவனுக்காக காத்துக் கொண்டிருந்தாள். ஆனால் வழமையாக காலை 10 மணிக்கெல்லாம் கொட்டகைக்குள் அவளோடு தஞ்சம் அடைபவன் அன்று மணி 11 ஆகியும் வந்து சேரவில்லை. இதனால் கொஞ்சம் பதட்டம் ஏற்பட.. அருகில் இருந்த போன் பூத்திலிருந்து அவனின் கைத்தொலைபேசிக்கு போன் செய்து பார்த்தாள் சாமிலி. கைத்தொலைபேசி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. என்னாச்சு இன்று இவனுக்கு.. இன்றைக்கும் வழமை போல வருவதாகத் தானே நேற்று கதைக்கும் போது சொன்னானே என்று தனக்குள்ளேயே கேள்விகளை அடுக்கிக் கொண்ட சாமிலி இன்னும் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணிப் பாப்பம்.. அதுக்குள்ள கன்ரீனுக்குப் போய் ரீ வாங்கிக் கொண்டு வருவம் என்று நகர ஆரம்பிக்க.. மின்னல் வேகத்தில் வந்த பொலிஸ் ஜீப் அவளருகில் பிரேக் போட்டு நின்றது.

ஜீப்பில் இருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர்.. சிங்களத்தில் உங்களை விசாரணைக்காகக் கூட்டிக் கொண்டு போக வேண்டி இருக்கு என்று சொல்லி பல்கலைக்கழக உபவேந்தரிடம் பெற்ற அனுமதிக் கடிதத்தைக் காட்டினார். இந்த திடீர் நிகழ்வால் திகைப்பில் ஆழ்ந்த சாமிலி செய்வதறியாது மறுத்துப் பேச வார்த்தை இன்றி கால்களை ஜீப்பை நோக்கி நகர்த்தி பொலிஸ் ஜீப்பிற்குள் ஏறி அடங்கிக் கொண்டாள்.

இந்தச் சம்பவத்தால் பல்கலைக்கழகமே பரபரப்பில் மூழ்கியது. என்னாச்சு.. சாமிலியை ஏன் பிடிச்சுக் கொண்டு போகினம்... என்ற கேள்வி எல்லோருக்குள்ளும் முளைவிட்டுக் கொண்டிருக்க பல்கலைக்கழகம் பூரா இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டிருக்கும் செய்தி மாணவர்களை எட்டத் தொடங்கியது. இதனால் பரபரப்பும் பதட்டமும் அதிகரித்ததோடு தமிழ் மாணவர்களை தேடித் தேடி பிடிக்கினமாம் என்ற செய்தியை கேட்டதும் தமிழ் மாணவர்கள் விடுதிக்கு... வீட்டுக்கு ஓடுவதும்.. கழிவறைகளில் ஒளிவதுமாக இருந்தனர்.

அப்படி ஒளிந்து கொண்டிருக்கும் போது சிறுநீர் கழிக்க வந்த சிங்கள மாணவர்கள் கதைப்பது என் காதில் தெளிவாக விழுந்தது. அவர்களில் ஒருத்தன் சொல்கிறான்.. "அடோ மச்சான்.. இன்றைக்கு காலைல பெற்றாவில குண்டு வெடிச்சதில.. ஒரு முக்கிய இராணுவ அதிகாரி உயிரிழந்திட்டார். அந்தக் குண்டு வெடிப்பில வசன் தான் தற்கொலை குண்டை வெடிக்க வைச்சு இறந்திருக்கிறான்.. கன்ரீனில ரூபவாகினில அவன்ர முகம் மட்டும் காட்டினது. உடல் சிதறிப் போயிட்டு."

இதைக் கேட்ட எனக்கு உதறல் எடுக்க இப்படியே ஒளிந்து கொண்டிருந்தா எப்படி வீட்டுக்குப் போய் சேர்வது என்ற எண்ணம் எழ... ஒரு கட்டத்தில் துணிவை வரவழைத்துக் கொண்டு கழிவறையை விட்டு வெளியே வந்த நான் சுற்றுமுற்றும் நோட்டம் விட்டுவிட்டு நேராக பல்கலைக்கழக நூலகம் சென்று அங்கிருந்து வீடு போய் சேர்ந்தேன்.

அங்கோ.. அப்பா அம்மா உனக்கு சங்கதி தெரியுமே.. ஊரில செம்மணிப் படுகொலைக்கு பொறுப்பா இருந்த இராணுவ அதிகாரி குண்டுவெடிப்பில செத்திட்டானாம்.. ஐ ரி என்னில காட்டிறாங்கள்.. என்று சொல்லி மகிழ்ந்து கொண்டிருந்தனர். சிற்றலையில் லண்டன் ஐபிசி போடு உண்மையா என்ன நடந்தது என்று.. கேப்பம் என்று சொல்ல.. எனக்கு எரிச்சலாக வந்தது.

வசனா இப்படி.. என்னோடு சிறுவயதில் இருந்து ஒன்றாகப் படிச்சவன். உற்ற நண்பனா எல்லா விடயத்தையும் பகிர்ந்து கொண்டவன். அவனா இப்படி.. என்ற ஆதங்கம் ஏக்கம் தீர்வதற்குள்.. இவைக்கு விடுப்பு என்று எண்ணியபடி அவனுக்கு எனக்குள் புகழ்மாலை சூடிக் கொண்டேன்.

அவ்வளவு பதட்டத்தின் மத்தியிலும்.. என் வாய்.. புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்று முணுமுணுத்துக் கொண்டது.

இச்சம்பவம் நடந்து சிறிது காலத்தின் பின் நிலைமை வழமைக்கு திரும்ப.. ஓர் நாள்.. பல்கலைக்கழகத்தில்.. சாமிலியைக் கண்டேன். அவள் தலையைக் குனிந்தபடி.. என்னைத் தெரியாதவள் போல் அப்பால் நகர்ந்து சென்று கொண்டிருந்தாள்...! இப்போ அவள் பார்வையில் நான் "கொட்டி".

- உண்மை கலந்த கற்பனைக் கதை. கரும்புலிகள் நினைவாக.-

நன்றி யாழ் இணையம்.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 8:38 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க