Sunday, July 25, 2010

அவள்.



அன்று கடும் வெக்கையாக இருந்ததால் மாலைக் காற்றின் ஈரலிப்பில் களித்திருக்க வீட்டுத்தோட்டத்துக்கு வந்த நந்தினி அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து கூலா ஒரு கோலா குடிக்க ஆரம்பித்திருந்தாள்.

அப்போது அவள் அருகே இருந்த செவ்வரத்தையில் இரண்டு சிட்டுக்குருவிகள் அருகருகே இருந்து அலகுகளால் ஒன்றை ஒன்று கோதியபடி காதல் மொழி பேசிக் கொண்டிருந்தன. அதைப் பார்த்து வியந்து கொண்டே ஆகாயத்தைப் பார்த்து வெறித்துக் கொண்டாள். அப்போது வீட்டு கேற்றடியில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

ஓ.. சங்கர் வந்திட்டார் போல. அவருக்கும் ஒரு கோலா எடுத்துக் கொண்டு வந்து வைப்பம்.. களைச்சு விழுந்து வந்திருப்பார் என்று எழுந்து நடக்க முயன்றவளுக்கு சங்கரின் அவசரத்துடன் கூடிய அதட்டல் காதில் விழுந்தது.

நந்தினி இங்க பார். எனக்கு இன்றைக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகனும். இதுக்கு மேலையும் என்னால உன்னோட வாழ முடியாது. எனக்கு விவாகரத்து வேணும். கணவன் வேலை முடிஞ்சு வாறான் என்றால் வாசலில வந்து வரவேற்கத் தெரியாத நீ எல்லாம் பொம்பிளையே. உன்னைக் கட்டிக் கொண்டு 10 வருசமா நான் படுற பாடு போதும். என்னை நிம்மதியா வாழ விட்டிட்டு நீ.. தோட்டத்தில இருந்து உலகை ரசிச்சுக் கொண்டிரு என்று எரிந்து விழுந்தவன்..

இந்தா நந்தினி.. இதில உனக்கு ஜீவனாம்சமா என்னென்ன தருவன் என்று விவாகரத்து ஒப்பந்தம் போட்டிருக்கிறன். கையெழுத்துப் போட்டுத் தந்தி என்றால் நான் என்ர புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க வசதியாவும் இருக்கும் என்னால ஒரு தொந்தரவும் உனக்கு இருக்காது என்று சொல்லி பத்திரத்தை அவளிடம் நீட்டினான்.

அதை வெறித்துப் பார்த்த நந்தினி.. அது கிடக்கட்டும்... அவனை கொண்டு போய் ரீயூசனில விட்டிட்டு வந்திருக்கிறன். களைப்பா இருங்குங்க.. ரியூசன் முடியுற நேரமாகுது.. போய் கூட்டிக் கொண்டு வாங்க. இந்தா இதில கோலா இருக்கு குடிச்சிட்டு எரிஞ்சு விலாம போயிட்டு வாங்க என்று சங்கரிடம் கெஞ்சாத குறையாகக் கேட்டுக் கொண்டவள்.. கோலாவை நீட்டியபடி.. அவன் தந்த பத்திரத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டே வாங்கி இரண்டாக கிழித்தும் போட்டாள்.

உமக்கும் உம்மட பிள்ளைக்கும் வேலைகாரனா இருக்க இனியும் என்னால முடியாது. இப்ப ஏன் நான் தந்ததைக் கிழிச்சுப் போட்டனீர். உம்மைத் திருத்த ஏலாது. இப்ப போய் பொடியை கூட்டிக் கொண்டு வாறன். இதுதான் கடைசியும் முதலும். நீர் ரீயுசனுக்கு கூட்டிக் கொண்டு போய் விட்டால் நீர் தான் கூட்டிக் கொண்டு வரனும். நான் இப்பதான் வேலையாள களைச்சு விழுந்து வாறன்.. அதுக்குள்ள எங்க போய் தொலையுறது... என்று அவள் மீது எரிந்து கொண்டே காரில் ஏறி புறப்பட்டுச் சென்றான் சங்கர்.

அவன் புறப்பட்டுச் சென்றதும்.. கிழித்துப் போட்ட பத்திரத்தை ஒன்றாக்கி அதில் எழுதி இருந்தவற்றை வாசித்தாள் நந்தினி. விவாகரத்தின் பின்.. இந்த வீட்டையும் காரையும் வழங்குவதோடு மாதாந்தம் செலவுக்கு 20,000 ரூபாக்களையும் பிள்ளையின் படிப்புக்கான முழுச் செலவையும் ஏற்றுக் கொள்வதாக அதில் எழுதி இருந்தது. அதை வாசித்துவிட்டு பெருமூச்செறிந்த நந்தினி.. இன்றைக்கு இவரோட இது தொடர்பாக கதைச்சு ஒரு முடிவுக்கு வரணும் என்று நினைத்துக் கொண்டே சமையலறைக்குள் சென்று மகன் கோபிக்கு சிற்றுண்டி தயார் செய்ய ஆரம்பித்தாள்.

சிற்றுண்டி தயாரானதும்.. பாத் ரூம் சென்று முகம் கழுவி புதுப்பொலிவோடு கோலில் வந்து அமர்ந்தவள் மீண்டும் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டு பிள்ளையையும் கணவனையும் வரவேற்க வாசலுக்கு ஓடினாள். தாயைக் கண்டதும் ஓடி வந்து கட்டி அணைத்துக் கொண்டான் ஆறே வயதான அவள் மகன் கோபி.

கோபியைப் பொறுத்த வரை அவன் அப்பாவும் அம்மாவும் சண்டை போட்டு பார்த்தது தான் அதிகம். ஆனால் அன்று வழமைக்கு மாறாக நந்தினி அமைதியாக இருந்தாள். அதனால் தாயை கட்டி அணைத்தவன் அவள் முகத்தை பார்த்துக் கொண்டே இருந்தான். அவனை தூக்கி தன்னோடு அணைத்துக் கொண்டு கொஞ்சி விட்டாள் நந்தினி.

வழமையா வெளில போயிட்டு வந்த உடனேயே ஏதேனும் கதைச்சு சண்டைக்கு தூபமிடும் நந்தினி.. அன்று அமைதியாக இருந்ததை இட்டு சங்கருக்குள்ளும் கேள்விகள் முளைத்தன. என்ன இன்றைக்கு அமைதியாகிட்டாள். ஒருவேளை விவாகரத்து வாங்கிட்டு போயிடுவன் என்று பயந்திட்டாளோ என்று நினைத்துக் கொண்டே கோட்டைக் கழற்றி கையில் மடித்துப் போட்டுக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான் சங்கர்.

வீடே ஒரு நிசப்தமாக இருந்தது. மகனுக்கு சிற்றுண்டி பரிமாறிவிட்டு.. உடை மாற்றிவிட்டு தானே தயாரித்த ரீயோடு கோலில் அமர்ந்திருந்த கணவனுக்கு அருகில் வந்து நின்ற நந்தினி.. சாறிங்க.. நீங்கள் எழுதித் தந்த பத்திரத்தை கிழிச்சிருக்கக் கூடாது. அது என்ர தப்புத் தாங்க. இதோ அதை போல இன்னொன்று எழுதி கையெழுத்தும் வைச்சிருக்கிறன்.. நீங்கள் விரும்பினது போல விவாகரத்து வாங்கிக் கொள்ளுங்கோ. ஆனால் எனக்கு உங்கட ஜீவனாம்சம் எதுவும் வேண்டாம். ஆனால் நான் ஒன்றை ஒன்று கேட்பன் அதை மறுக்காமல் செய்யுங்கோ என்றாள்.

10 வருடமாக தன்னோடு தன் வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டவளிடம் இருந்து வந்த வார்த்தைகளைக் கேட்டதில் சங்கருக்குள் கவலை குடிகொண்டது. இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாது.. அப்ப விவாகரத்துக்கு சம்மதிக்கிறீர். நல்ல விசயம். என்னவோ கேட்கப் போறன் எண்டீர் இப்பவே கேளுமன் என்று அவளை அவசரப்படுத்தினான் சங்கர்.

அவள்.. மகன் கோபியை கூப்பிட்டி கட்டியணைத்தபடி கணவன் அருகே வந்து நின்று கொண்டு சொன்னால்.. விவாகரத்துக்கு முன்னம்.. இன்றையில இருந்து 1 மாதத்திற்கு நீங்க எப்படி என்னைக் காதலிக்கும் போதும் கலியாணம் முடித்த ஆரம்பத்திலும் நடத்தினீங்களோ அப்படி அன்பா நடத்தனும். நானும் உங்களோட அப்படியே நடந்துக்குவேன். அதற்குப் பிறகு நிச்சயமா நான் உங்களை எந்த வகையிலும் விவாகரத்துக்கு போக வேண்டாம் என்று கேட்கமாட்டேன் என்றாள்.

சங்கரும் சிறிது நேரம் யோசித்துவிட்டு இற்குள் ஏதேனும் சூட்சுமம் வைத்திருப்பாளோ என்று எண்ணியபடி.. எதுஎப்படி இருந்தாலும் ஒரு மாதம் தானே.. 10 வருசமா என்னோட குடும்பம் நடத்தியதற்கு நன்றிக் கடனாகவும் பிள்ளைக்காகவும் இதற்கு சம்மதிப்பமே என்று அவளின் வேண்டு கோளிற்கு சம்மதித்தான்.

சம்மதம் சொல்லி அடுத்த நாள் சனிக்கிழமை ஆதலால்.. சங்கர் வீட்டில் ஓய்வாக நின்றான். நந்தினி காலையில் இருந்து அவனிடம் எதையும் கேட்காமல் மெளனமாகவே இருந்தாள். பிற்பகல் வாக்கில் கணவனை அணுகி இன்றைக்கு நீங்கள் என்னையும் கோபியையும் பார்க்குக்கு கூட்டிக் கொண்டு போகனும் என்றாள். சரி கூட்டிக் கொண்டு போகிறேன் என்றவன் இப்பவே 3 மணியாச்சுது வெளிக்கிடுங்கோ என்றான் பதிலுக்கு.

அப்பாவும் அம்மாவும் ஒன்று சேர பார்க்குக்கு வந்து அறியாத கோபி வியப்போடும் அதேவேளை மகிழ்ச்சியோடும் தாயையும் தகப்பனையும் மாறி மாறி கொஞ்சிக் கொண்டே ஏப்பா ஏம்மா.. நீங்க எப்பவும் இப்படியே இருக்கக் கூடாது என்று கேட்டான். அதற்கு இருவரும் மெளனத்தை பதிலாக்கிக் கொண்டனர். நந்தினி மட்டும் மகனை இறுக அணைத்து முத்தமிட்டுவிட்டு இவனை தூக்கிக் கொண்டு வாங்கோ என்று கணவனிடம் அன்பாகத் தந்தாள் மகனை.

அவனை இறக்கி விடும்.. அவன் நடந்து வருவான். ஆனால் இன்றைக்கு நான் உம்மைத் தூக்கப் போறன். ஞாபகம் இருக்கா நாங்கள் காதலிக்கும் போது இதே பார்க்கில் நான் உம்மை தினமும் சந்தித்து தூக்கி மகிழ்ந்திருக்கிறன். அதை இண்டைக்கும்... நீர் கேட்டுக் கொண்டது போல செய்வன் என்றான் சங்கர். ஆனால் ஒன்று.. இந்த ஒரு மாதமும் இப்படி அன்பா இருக்கின்றன் என்றதற்காக எக்காரணம் கொண்டும் என்ர விவாகரத்து முடிவில இருந்து நான் மாறமாட்டன் என்றதை ஞாபகம் வைச்சுக் கொள்ளும் என்றான் சங்கர். அவளும் அதற்கு தலையாட்டி சம்மதம் சொல்லிவிட்டு கணவனின் கரங்களுக்குள் சரணடைந்து கொண்டாள்.

தனது கரங்களுக்குள் சரணடைந்தவளை அணைத்து தூக்கி சுழற்றிக் கொண்டே நந்தினி நீர் முந்தி போல இல்லை. இப்ப நல்லா வெயிட் போட்டிட்டீர் என்று சொல்லிக் கொண்டே இறக்கி விட்டான். இப்படியே தினமும் அவர்கள் ஒவ்வொரு இடமாக எந்த சண்டையும் இன்றி அன்பாகக் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தனர். இவர்களிடையேயான இருந்த இந்த நீண்ட நாள் மாற்றம் கோபியிடத்திலும் புதிய நம்பிக்கையை.. மகிழ்ச்சியை வரவழைத்திருந்தது.

அன்று.. சொல்லப்பட்ட மாதத்தின் இறுதி நாள் வந்தது. வழமை போல தம்பதியினர் குழந்தையோடு பார்க் போய் இருந்தனர். பார்க்கில் கோபியோடு விளையாடிக் கொண்டிருந்த சங்கர் மனைவியை அணைத்துக் கொண்டே சொன்னான். கடந்த ஒரு மாதத்தில.. ஆரம்பத்தில இருந்ததை விட இப்ப நீர் ரெம்ப இளைச்சிட்டீர். நான் ஆரம்பத்தில வெயிட் போட்டிருக்கிறீர் என்று சொல்லிட்டன் எண்டதுக்காகவா... சாப்பிடாமல் கிடந்து இப்படி உடம்பை பழுதாக்கிறீர் என்று அன்போடு கேட்டான். நான் ஒரு பேச்சுக்குத் தான் சொன்னனான் வெயிட் போட்டிருக்கிறீர் என்று. உம்மோட வாழ்க்கையை நீர் என்னோட 10 வருடங்கள் பகிர்ந்து கொண்டிருக்கிறீர். அந்த ஒரு நன்றிக்காகத் தான் இப்படி நான் உம்மோட நெருங்கி அன்பா இருக்கிறன். மற்றும்படி எனக்காக உம்மை எனியும் வருத்திக் கொள்ள வேண்டாம்.. என்று விணையமாகக் கேட்டுக் கொண்டவன்.. அவளை அணைத்து நெற்றியில் அன்பாக முத்தமிட்டும் கொண்டான்.

இண்டைக்கு தான் என்ர காலக்கெடுவின் கடைசி நாள். நாளைக்கு நாங்கள் விவாகரத்து கேட்டு பிரிஞ்சிடுவம். ஆனால் நாங்க பிரியுறது எங்கட பிள்ளைக்கு தெரியக் கூடாது. ஏன் என்றால் அவன் சந்தோசமா இருந்து இப்பதான் நான் பார்க்கிறன் என்றாள் கணவனின் கரங்களுக்குள் இருந்தபடி நந்தினி.

நான் அதற்கு உத்தரவாதம் தாறன் நந்தினி. நாங்கள் விவாகரத்துக்குப் பிறகும் முடிந்தால் நல்ல நண்பர்களாக இருக்க முயல்வோம் என்றான் சங்கர் பதிலுக்கு. அதற்கு நந்தினி தானும் முயற்சிப்பதாகச் சொன்னாள்.

30ம் நாள் கடந்து வந்த அடுத்த நாள் காலையில் எழுந்த சங்கர் வேலைக்குப் போனதும் வேலையில் கவனமே ஓடவில்லை. நந்தினியின் எண்ணங்களே வந்து போயின. 10 வருடமாக எனக்காக வாழ்ந்தவள். அதற்கு முதல் ஒரு வருடமாக அவளை காதலிச்சு ஊரெல்லாம் சுற்றி திருஞ்சிருக்கிறன். எப்படி அவளை விட்டிட்டு என்னால வாழ முடியும். நான் வெயிட் போட்டிட்டாய் என்று சொன்னதுமே தன்ர வெயிட்டை குறைக்க தன்னையே வருத்தி இருக்கிறாள். உண்மையில அவளுக்கு என் மேல அன்பு அதிகம். நான் தான் சரியா அதைப் புரிஞ்சுக்கல்ல. இப்படியான ஒரு அன்பான மனைவியை விட்டு ஏன் நான் பிரிய வேணும்.. என்று தனக்குள்ளேயே ஆயிரம் கேள்விகளை எழுப்பி விடைகளைக் கண்டு கொண்டிருந்தவன்.. இறுதியில் தீர்க்கமான முடிவொன்றுக்கு வந்தான்.

வேலைத்தளத்தில் மனேச்சரிடம் சென்று அரை நாள் லீவு கேட்டவன்.. அதைப் பெற்றுக் கொண்டு நந்தினிக்கு கொடுக்க என்று அழகான மணி மாலை ஒன்றையும் பூங்கொத்து ஒன்றையும் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு விரைந்து வந்தான் சங்கர். மகன் கோபி பாடசாலை சென்றிருந்ததால்... அன்போடு அவளிற்கு தனது பரிசுப் பொருட்களை கொடுத்து தான் விவாகரத்துக்கு விரும்பவில்லை என்பதைச் சொல்ல துடிப்போடு நந்தினி நந்தினி என்று கூப்பிட்டுக் கொண்டே வீட்டுக்குள் ஓடினான்.

ஆனால் நந்தினியிடம் இருந்து பதிலேதும் வரவில்லை. வீட்டில் எல்லாம் இடமும் அவளைத் தேடிப் பார்த்தவன்.. இறுதியில் படுக்கை அறைக்குச் சென்று பார்த்தான். அங்கே நந்தினி.. படுக்கையில்.. தூக்கிக் கொண்டிருந்தாள். அவளை தட்டி எழுப்ப முயன்றான் சங்கர் ஆனால் அவளால் எழுந்திருக்க முடியவில்லை. காரணம் அவள் படுக்கையிலேயே தன்னை இந்த உலகில் இருந்து நிரந்தர ஓய்வுக்குள் அர்ப்பணித்திருந்தாள்.

அவளின் அந்த முடிவை எதிர்பார்க்காத சங்கர் அவளக் கட்டியணைத்தபடி கதறி அழுது கொண்டே சொன்னான்.. " என்னோடு நீ வந்த காலம் போய் உன்னோடு நான் வரும் நேரம் ஆகிவிட்டது" என்று.

அவளின் பிரிவின் சோகமும் தன்னவளின் எண்ணங்களும் அவனை துன்புறுத்த.. அவளின் முடிவையே தானும் தனக்கென்று தேட முயன்றவனுக்கு வாசலில் அப்பா என்று கோபி அழைப்பது போன்ற குரல் கேட்க.. அவனுக்காக அவளின் நினைவோடு வாழ்ந்துவிட்டு வீழ்வது என்ற முடிவுக்கு வந்தவன்.. நந்தினீஈஈஈ... என்று கதறிக் கொண்டடே மனைவியை கட்டியணைத்து அழுது கொண்டே இருந்தான்.

நந்தினி தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவள் ஒரு தீராத நோய்க்கு ஆளாகியே மரணமாகி இருந்தாள். அவளின் வாழ் நாள் இன்னும் 30 நாட்கள் தான் என்று வைத்தியரால் சொல்லப்பட்ட போதே அவள் அதனை தன் அன்புக் கணவனோடு வாழும் சுகமான நாட்களாகவே மாற்ற முனைந்தாள். அவனை விட்டு தான் பிரியப் போவதைக் கூட அவன் துன்பமாக உணராமல் இருக்க தன் துன்பங்களை மறைத்து வாழ்ந்து முடித்திருந்தாள்.

இறுதிவரை கொண்டவனோடு காதலனோடு வாழ்ந்து முடித்த திருப்தியில் நந்தினி. தன்...சொந்தமானவளின் தன்னவளின் நினைவில்.. அவள் தந்த உயிர்ப் பரிசோடு சங்கர்... இன்றும் அந்தக் காதல் சோடி வாழ்கிறது விவாகரத்தின்றி.



இந்த கதையில் வரும் நாயகனின் இறுதி நிலையை சொல்லும் பாடல்..!

(ஆங்கில மொழி மூல கதையில் இருந்து மூலக்கதை பெறப்பட்டிருந்தாலும் எமது சமூகத்துக்கு ஏற்ற வகையில் மாற்றி தரப்பட்டுள்ளது.)

Labels: ,

பதிந்தது <-குருவிகள்-> at 9:16 AM

1 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

gud one friend.....heavy hearted.

Sun Jul 25, 10:25:00 AM GMT+1  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க