Sunday, August 15, 2010

மிட்டாய் தாத்தா தந்த ரோதனை.!சரியா எட்டு மணிக்கு ஸ்கூல் கேற்றில் நின்றேன். கேற் பூட்டி இருந்தது. கொஞ்ச நேரம் கேற்றுக்கு வெளியே வெயிட் பண்ணினேன். வோர்ச்மன் வந்தான்..

ஏன் லேட்.... இன்றைக்கு அசம்பிளி எல்லோ. வெள்ளன வர வேணும் என்று தெரியாதா என்றான்.

கடவுளே இன்றைக்கு அசம்பிளியா. வழமையா அது வெள்ளிக்கிழமையில தானே வரும்... இன்றைக்கு என்ன திங்கட்கிழமை வைக்கிறாங்க. கந்தசாமி வாத்தி பிரம்போட அலையப் போகுதே. தொலைஞ்சேண்டா என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு.. எனக்கு இன்றைக்கு அசம்பிளி என்று தெரியாது.. போன வெள்ளி நான் ஸ்கூலுக்கு வரல்ல என்று ஒரு பொய்யைப் போட..

சரி கெதியா போ.. அசம்பிளி தொடங்கிட்டு என்றான்.

கேற்றை வெற்றிகரமாக தாண்டி அசம்பிளி கோலுக்குள் நுழைய முற்பட்ட எனக்கு.. மாணவ முதல்வர்கள் இருவர் நந்தி மாதிரி வாசலில் நிற்பது தெரிந்தது. இவன் வோர்ச்மன ஏமாத்தியாச்சு.. அண்ணாமாரை எப்படி தாண்டிறது என்று யோசிட்டுக் கொண்டே போன எனக்கு..

கலோ.. இப்ப என்ன நேரம். இப்ப தானா அசம்பிளிக்கு வாறது என்று கத்தினார் ஒரு நந்தி அண்ணா.

இல்ல அண்ண.. வாற வழில சூ பிஞ்சிட்டுது. வீட்ட போய் சூ மாத்திக் கொண்டு வாறத்துக்கிடையில நேரம் போட்டுதண்ண என்றேன் அப்பாவியாக.

அவரும் அதை நம்பி.. சரி போடா... என்று ஒரு முறாய்ப்போடு வழியனுப்பி வைக்க.. பதட்டம் குறைய

அசம்பிளி கோலுக்குள் நுழைந்த நான் கந்தசாமியரைத் தேடினேன்.. கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவரைக் காணவில்லை. நிம்மதியா ஓடிப் போய் சக நண்பர்களோடு கலந்துவிட்டேன்.

அசம்பிளியில் பிறின்சி (தலைமை ஆசிரியர்) ஏதேதோ அலட்டிக் கொண்டிருந்தார். நாங்கள் அதில் எப்போதுமே கவனம் செலுத்துவதில்லை. எங்களிடம் உள்ள ரிவி கேம் பற்றியே மெல்லப் பேசிக் கொண்டு இருப்போம். இறுதியில் பிறின்சி இன்றைக்கு அசம்பிளி முடிய ஒரு படம் போடப் போறம். அதனால இன்றைக்கு பாடங்கள் ஒவ்வொன்றும் அரை மணி நேரம் தான் நடக்கும். ஆனால் எட்டு பாடமும் நடக்கும் என்று அறிவித்தார்.

இதைக் கேட்ட நான்.. அருகில் இருந்த நண்பனை தட்டி.. டேய் படமாண்டா. என்ன விசயம்டா இண்டைக்கு என்றேன்.

எனக்கும் ஒன்றுமா புரியல்லை மச்சான்.. பொறுத்திருந்து நடக்கிறதைப் பார்ப்பம். விஜய் படம் போட்டாங்கண்ணா நல்லா இருக்கும் என்றான் அவன் பதிலுக்கு.

ஆமா உனக்கு பிறின்சி விஜய் படம் போடுவார்.. பார்த்துக் கொண்டிரு என்று திட்டிவிட்டு.. படம் போடும் வரை காத்துக் கொண்டிருந்தோம்.

அசம்பிளி கோல் மின் விளக்குகள் அணைய ஸ்கிரீன் விரிய.. புரஜெக்டர்.. விம்பங்களை அகண்ட திரையில் விழுத்த ஆரம்பித்தது. அசம்பிளி கோலே நிசப்தமாக இருந்தது. எல்லோர் கண்களிலும் ஒரு எதிர்பார்ப்பு...!

சிறிது நேரத்தில் திரையில் முழு விம்பங்களும் விழ ஆரம்பித்தன. மகாத்மா காந்தி.. என்று ஆங்கிலத்தில் தலைப்பிடப்பட்ட ஒரு படம் ஓட ஆரம்பித்திருந்தது. ஒரே கறுப்பு வெள்ளையில் ஓடிக்கொண்டிருந்தது படம்.

படம் ஓடிக் கொண்டிருக்கும் போதே.. சத்தத்தை நிறுத்தி.. பிறின்சி அறிவித்தார்.. இன்று இந்தியாவின் சுதந்திர தினம். இலங்கைக்கு சுதந்திரம் கிடைக்க முதல் இந்தியாவுக்கு ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் கிடைத்தது. அதனால் தான் இலங்கைக்கும் சுதந்திரம் கிடைத்தது. இந்திய சுதந்திரத்திற்காக ஆங்கிலேயரை எதிர்த்து போராடியவர் மகாத்மா காந்தி. அவரின் வரலாறு பற்றிய படமே இப்போது போட்டுக் காட்டப்படுகிறது. எல்லா மாணவர்களும் அமைதியாக இருந்து படத்தை பார்த்துவிட்டு.. வகுப்பிற்கு சென்றதும் இது தொடர்பாக ஆசிரியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று கூறி விடைபெற்றார்.

போச்சுடா மச்சான். இந்தப் படத்தை பார்த்திட்டு ரெஸ்டும் எழுதனுமாமில்ல... என்ற படி நான் குறிப்பேட்டை எடுத்து படம் பார்த்தபடி குறிப்பும் எடுக்கத் தொடங்கினேன்.

டேய் எனக்கும் காட்டடா.. என்றான் அருகில் இருந்த நண்பன். இவன் யாராட ஒரு கிழவன்.. நம்மளப் படுத்திறாண்டா.. என்று எகிறியும் கொண்டான்.

டேய் அது காந்தியாண்டா.. இந்தியாவின் பெரிய தலைவராமில்ல என்றேன் நான் ஒரு பிரமாண்ட பிரமையை அவனிடத்தில் வளர்த்து விட. சில சினிமா படங்களில இவரின் பிறந்த தினத்துக்கு மிட்டாய் கொடுப்பாங்க கண்டிருக்கிறியா என்றேன்... பெரிய எதிர்பார்ப்போடு.

இவர் தலைவரோ.. எங்கட தலைவர் பிரபாகரன் தானே. இவங்க எப்பைடா எங்களுக்காக போராடினாங்க. 1987 இல எங்கட அப்பாவைக் கொன்றதே இந்தியப் படைகள் தானேடா. இங்க நிலைமை அப்படி இருக்க.. இந்தியா எப்படி எங்களுக்கு சுதந்திரம் வாங்கித் தந்திருக்கும். எதுக்கு இவங்களப் பற்றி நாங்க தெரிஞ்சுக்கனும்..! இந்தப் பிறின்சிக்கு வேற வேலை இல்லைடா என்றான்... முற்றிலும் நான் எதிர்பார்க்காத வகைக்கு.

ம்ம்.. அவன் சொல்வதிலும் நியாயம் இருப்பதை என் மனசு ஒத்துக் கொண்டாலும்.. பிறின்சிய மீறி என்ன செய்ய முடியும்.. என்று எனக்குள் எண்ணிவிட்டு.. சரிடா விட்டுத் தொலைடா.. வகுப்புக்கு ரீச்சர் வரட்டும் கேட்பம் இந்தக் கேள்வியை என்று கொண்டே குறிப்பேட்டை மூடி புத்தகப் பைக்குள் அடக்கி விட்டேன்.

காந்தியும் இந்திய சுதந்திரமும்.. மண்ணாங்கட்டியும் என்றது என் மனது உள்ளூர வந்த கோபத்தை அடக்கியபடி.

நன்றி - யாழ் இணையம்/ விக்கிபீடியா.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:17 AM

0 மறுமொழி:

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க