Thursday, August 05, 2010

பப்பாகாயும் MB5 வும்.



மச்சான் சுமதி வீட்டு வாசலில நிக்கிறாடா.. என்ற தகவலோடு MB5 மோட்டார் சைக்கிளில் பறந்து வந்திருந்தான் ரங்கன். பதிலுக்கு.. பொறுடா மச்சான்.. இப்பவே வெளிக்கிட்டு வாறன்டா.. கொஞ்சம் வெயிட் பண்ணு என்று அறைக்குள் நம்பர் 11 ஐ கொழுவிக் கொண்டே சவுண்டு விட்டான் சங்கர்.

1986 களில் கோடை வெப்பத்தை தாங்க முடியாத யாழ் நகரத்து குடிமக்கள் மாலை நேரங்களில் வீட்டு முற்றத்துக்கு தண்ணீர் தெளித்துவிட்டு வீட்டுக்கு முன் கேற்றடியில் காத்து வாங்கிறம் என்று சொல்லி கூடி நிற்பது வழமை.

அதேபோல் அன்றும் சுமதி வீட்டின் முன்னும் பெண்கள் கூடி இருந்தனர். சுமதி வீட்டில் கண்டிப்பான தகப்பன், தாய் மற்றும் 3 இளம் பெண் பிள்ளைகள், அவர்களின் நண்பிகள் என்று எப்போதுமே இளம் பெண்களின் நடமாட்டம் அதிகம். சுமதிக்கு ஒரே ஒரு அண்ணன்.. அவனும் குடும்பக் கஸ்டம் காரணமாக முதலில் ஜேர்மனி என்று போய் அங்கிருந்து கனடாவுக்குள் அப்போதுதான் நுழைந்திருந்தான்.

அண்ணன் கனடா போன விடயத்தை நண்பிகளோடு பகிர்ந்து கொண்டு கலகலப்பாக தண்ணீர் தெளித்திருந்த முற்றத்தில் போட்டிருந்த கதிரைகள் ஒன்றில் அமர்ந்திருந்தாள் சுமதி. அப்போது யாழ் கோட்டைப் பக்கமிருந்து துப்பாக்கிகள் முழங்கத் தொடங்கின. இடை இடையே குண்டுச் சத்தங்களும் கேட்டன.

ஆமி வெளிக்கிட்டு வாறான் போல. சக்கை அடிக்கிறாங்கள்... செல்லடிக்கப் போறாங்களடி.. உள்ளுக்க வாங்கடி பிள்ளையள்.. என்று பதறி அடித்துக் கொண்டே குசுனிக்குள் ஏதோ வேலையில் இருந்த சுமதியின் அம்மா முற்றத்துக்கு ஓடி வந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிள்கள் உறுமும் சத்தம் கேட்டு சுமதி கேற்றுக்கு வெளியே வந்து எட்டிப் பார்த்தவள்.. கிட்டு போறாண்டி.. ஆமி வெளிக்கிட்டிட்டுட்டான் போல... என்று கத்தினாள்.

கிட்டண்ணன் போராளிகளோடு போய் சற்று நேரத்தில்.. சங்கரும் ரங்கனும்.. கட்டம் போட்ட சேட்டுப் போட்டுக் கொண்டு அதனை காற்றில் பறக்க விட்ட படி கிட்டண்ணன் போன திசையிலேயே MB5 வில் விரைந்து போய்க் கொண்டிருந்தார்கள். மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த சங்கர் சுமதி வீட்டை கடைக்கண்ணால் நோட்டமிட்டபடியே போனான்.

மச்சான் சுமதி நிக்கிறாடா. அப்பையா கடைச் சந்தி வரைக்கும் போட்டு MB யை திருப்படா மச்சான். அதுக்கு அங்கால போகாத.. கோட்டையில் இருந்து செல் இறங்கினாலும் இறக்குவாங்கள் என்றான் சங்கர்.. பயம் கலந்திருந்தாலும் காதல் செய்யும் துணிவில்.. புறப்பட்டு வந்திட்டமே என்ற எண்ணத்தில்.

மச்சான்.. நான் அதைப் பார்த்துக் கொள்ளுறன்.. எங்கையடா அந்தப் பப்பாகாய்.. என்றான் ரங்கன் பதிலுக்கு.

பின்னால செருகிட்டன் மச்சான். அப்படியே கிரனைட் செருகின போல சேட்டுக்க பொம்மிக் கொண்டு நிற்குது மச்சான்... என்றான் சங்கர்.

அப்படியே மெயின்ரென் பண்ணுடா. நான் உதில பெருமாள் கோவிலடி போய்.. அப்படியே கன்னாதிட்டி சந்திக்கால திருப்பி.. கஸ்தூரியார் வீதிக்கால போய்.. நாவலர் ரோட்டுக்கால வெட்டி.. பிறவுன் வீதிக்கு மறுபடி ஏறுறண்டா மச்சான் என்று தன் பயணப் பாதையை சங்கருக்கு சொல்லிக் கொண்டிருந்தான் ரங்கன்... சங்கரின் அவசரத்தைப் புரிந்து கொண்டவனாய்.

அப்படியே செய் மச்சான். அதுதான் சோட் கட். சுமதி வீட்டடிக்கு முன்னால போனதும் மெதுவா போடா. நான் அவளைப் பார்கனுண்டா.. பின்னால் இருந்து கெஞ்சிக் கொண்டிருந்தான் சங்கர்.

ரங்கன் சொன்னபடியே பிறவுன் வீதியை வந்தடைந்தான்.. சுமதியின் வீடு நெருங்கியதும்... மோட்டாள் சைக்கிளின் வேகத்தைக் குறைத்து சங்கருக்கு காதல் செய்ய வழிவிட்டான்.

அப்போ சுமதியும் MB5 சத்தம் கேட்டு புளூ அண்ணா வாறாண்டி என்று கத்திக் கொண்டே கேற்றுக்கு வெளியில் வந்து எட்டிப்பார்த்தாள். கூடவே அவளின் நண்பிகளும் ஓடி வந்தனர். சங்கர் பொதுவா புளூ கலர் சேட் போடுவதால் அவனுக்கு சுமதி வீட்டில் உள்ள பெண்கள் வைத்துள்ள பெயர் புளூ அண்ணா. ரங்கன் கறுப்பு என்பதால் அவனுக்கு அவர்கள் வைத்துள்ள பெயர் பிளக் அண்ணா.

புளூ அண்ணா.. சுமதி அம்மன் தரிசனம் கண்டு கொண்டே மிகுந்த சந்தோசத்தில் வைத்த கண் வாங்காமல் அவளைப் பார்த்துக் கொண்டு சுமதியின் வீட்டைத் தாண்டிப் போனார். போனவர் தான் போனார்.... சுமதி வீட்டைத் தாண்டி சற்றுத் தூரம் போனதும்... பின்னால் செருகி இருந்த பப்பாகாய் காம்பொடிந்து கீழே விழுந்து றோட்டில் உருண்டோடியது தெரியாமல் போய்க் கொண்டே இருந்தார்.. கற்பனையில் டூயட் பாடிக் கொண்டே.

ஆனால் புளூ அண்ணன் இடுப்பில் இருந்த பப்பாகாய் ஒடிந்து விழுந்து றோட்டில் உருண்டோடியதை.. சுமதி கண்டுவிட்டாள். உடனே அவள்.. நண்பிகளை நோக்கி.. அடியே இவன்... புளூ அண்ணா இயக்கம் இல்லையடி. சேட்டுக்க பப்பாக்காய் செருகி வைச்சிருக்காண்டி. அது றோட்டில விழுந்து உருண்டு ஓடிப் போய் கிடக்கு. போய் பாருங்கடி... என்றாள் நக்கல் கலந்த தொனியில்.

இதனை அறியாமல்.. புளூ அண்ணா ரஜனி காந்த் நினைப்பில்.. அடுத்த ரவுண்டு வாறதற்கு ரங்கனை கெஞ்சிக் கொண்டிருந்தார்.

மச்சான் இன்னொருக்கா போவம்டா.....

போறன்.. எனக்கு இப்ப கோலா வேண்டித்தா என்றான் ரங்கன் கூலிக்கு.

இதில வெட்டி.. இப்படியே பிறவுன் றோட்டால போய் நாவலர் சந்திக்குப் போ.. அதில உள்ள கடையில வேண்டித் தாரண்டா என்று கெஞ்சாத குறையாக கேட்டுக் கொண்டான் சங்கர்.

சரிடா பொறு.. என்றவன் மோட்டார் சைக்கிளை திருப்பினான். திருப்பி மீண்டும் சுமதி வீட்டடிக்கே வந்தான்.

வந்தவன்... மச்சான்.. அங்க பார் பப்பாகாய் ஒன்று றோட்டில கிடக்குது. எதுக்கும் உன்ர இடுப்பில பப்பாகாய் செருகி இருக்கோ என்று பார்.. என்றான் ரங்கன்.

பொறுடா.. என்று பின்னால் இடுப்பை தடவிய சங்கருக்கு ஏக்கமே மிஞ்சியது. இடுப்பில் செருகி இருந்த பப்பாகாய் காம்பொடிந்து கீழே விழுந்திருந்தது அப்போதே தெரிய வந்தது.

மச்சான் நான் செருகி இருந்த பப்பாகாய் தாண்டா அது. சுமதி கண்டிருப்பாளோடா.. என்றான் ஏக்கம் கவலை தோய...

இருக்காது மச்சான் என்ற படி மோட்டார் சைக்கிளை கொஞ்சம் வேகமாக ஓட்டி சுமதி வீட்டை கடந்து போனான் ரங்கன்.

அப்போது.. MB5 சத்தத்தைக் கேட்டுவிட்டு.. சுமதி வீட்டு முற்றத்தில் இருந்து கொண்டே அவளின் நண்பிகள் கேட்க.. வேண்டும் என்றே கத்தினாள்.. அடியே MB5 இல பப்பாகாய் போகுதடி.. என்று.

அதை சங்கரும் ரங்கனும் தெளிவாகவே கேட்டனர்.

புளூ அண்ணாவாக கீரோவாக வலம் வந்த சங்கர் பப்பாகாயா வீழ்ந்து போனதை எண்ணி கவலையோடு நாவலர் சந்தியில் கோலாவுக்கு மனிப் பேர்சை திறந்த போதுதான் ஞானம் பிறந்தது.

மச்சான் எனி அந்தப் பக்கம் போகாத. அடுத்த கிழமை நான் கனடா புறப்படப் போறண்டா. ஏன் அதுக்குள்ள மானத்தை இழப்பான்.. என்று அழாத குறையாக ரங்கனைப் பார்த்து கேட்டுக் கொண்டான்.

ரேக் இற் ஈசி மச்சான் என்று சமாதானம் சொல்லி அவனை வீட்டில் கொண்டு போய் விட்டுவிட.. கோலா குடிக்க என்று நிற்பாட்டி இருந்த MB5 ஐ மீண்டும் ஸ்ராட் செய்தான் ரங்கன்.



யாவும் கற்பனை கலந்த நிஜம்.- நன்றி யாழ் இணையம்.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 9:22 AM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க