Tuesday, April 19, 2011

தீயினில் குளித்த தொப்புள் கொடி கதறும் குரல் கேட்கலையோ..?!



இதயமில்லா மனிதர் கூட
கலங்கி நிற்கும்
கொடூரங்கள்..
ஈழ மண்ணில்..!
முன்வினைச் சொந்தமோ.. பந்தமோ..
ஈழ மண்ணின் மீது
பிறவிக் காதல்
கிருஷ்ணமூர்த்திக்கு..!

ஈழ தமிழர்கள்
ஈனத் தமிழர்களாய்..
தங்கள் குழந்தைகளை
இஞ்சினியராக்கி
கொழுத்த சீதனத்தில்
வெளிநாட்டில்
வாழ வைச்சு
மகிழும் வேளையில்..
இஞ்சினியராகி
வெளியூர் போயும்
ஈழத்து நினைவாகி
இள வயதை மறந்து
துயர் கொண்டனன் இந்தக் கிருஷ்ணன்.
தேரோட்டியாய் அன்றி
தன் தேகம்
தீயினில் வேக..
மீண்டும் ஓர் முத்துக்குமாரனாய்
பிறப்பெடுத்திருக்கிறான் இவன்.

ஐநா அறிக்கை முழுசா பிரசவிக்கவில்லை..
கவலை மட்டும்
முழுதாய் பிறப்பெடுக்க..
தாங்க முடியா வேதனையில்..
தன் சுற்றம் மறந்து
சுகம் மறந்து
இன வாழ்வு மட்டும் எண்ணி
மாய்ந்து போனான்..
கொடூரன் ராஜபக்சவை
தூக்கில் போட முழக்கமிட்டே.

கிருஷ்ணமூர்த்தி..
அவன் எம்
தொப்புள் கொடி சொந்தம்.
வெந்தது எம் சொந்த இரத்தம்..!
தொப்புள் கொடி ஒன்று
தீயில் கருகிய போது
எழுந்த அந்தக் கதறல்..
எம்மை அடையவில்லை.
எங்கள் இரத்தம் உறையவில்லை.
அவனை நினைக்கக் கூட..
நாமில்லை...
அவனுக்காய்
கண்ணீர் சிந்தக் கூட
எமக்கு நேரமில்லை..
நாமும் தான்...
என்ன பிறவிகளோ..??!!!
எமக்காயும் உயிர் விடும்
அந்த அப்பாவிகளை
மாவீரர்கள் என்பதா..
தியாகிகள் என்பதா
கோழைகள் என்பதா..??!

கிருஷ்ண மூர்த்தியே..
பிறவிப் பலனே
இனத்துக்காய்
உயிர்விடுவது
என்று எழுதிவிட்டுச் சென்றுள்ளாய்..
ஈழ மண்ணில்
சுதந்திர தாயகம்
அதுவே உன் தாகமும் கூட..!
அது தீரவாவது
உழைக்க சத்தியம் செய்கிறோம்
உன் ஆன்ம சாந்திக்காய்
உரையாய் எழுத்தில் அல்ல..
உண்மையாய்
மனதில் உன்னை இருத்தி..!

அன்பின் தொப்புள் கொடி தமிழக சொந்தங்களே.. ஈழத்தமிழருக்காய் வருந்துங்கள்.. நீதி கேட்டு போராடுங்கள்.. இந்திய அரசை உலுப்பி நில்லுங்கள்.. மாநில அரசை தட்டிக் கேளுங்கள்.. உலகை உலுப்பி நில்லுங்கள். ஆனால் எனியும் உங்கள் உயிர்களை மாய்க்காதீர்கள். விலைமதிக்க முடியாத உங்கள் இன உணர்வு ஒன்றும் போதும்.. வீணாக அருமருந்தான உங்கள் உயிர்களை அழித்து உங்கள் இன உணர்வையும் உங்கள் வாழ்வையும் உங்களைச் சார்ந்த குடும்பங்களையும் வேதனைக்குள் ஆழ்த்தி அவர்களை சீரழிக்காதீர்கள். உங்கள் தியாகம் அளப்பரியது. இன உணர்வு மிகப் பெரியது. அதை பயனுள்ள வழியில் நீடித்து நிலைக்கக் கூடிய வழியில் தமிழ் இனத்துக்கு என்று உழைக்க பயன்படுத்துங்கள். உங்கள் உணர்வுகளை ஈழத்தமிழர்களாகிய நாம் தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறோம். உங்களை அழித்து எங்களை மேலும் மேலும் வேதனைக்குள்ளும் தனிமைக்குள்ளும் தள்ளாதீர்கள். உங்கள் உயிர் இருப்பே எங்களுக்கு பெரும் பலம். உணர்ந்து கொள்ளுங்கள் சொந்தங்களே.

இப்படிக்கு கண்ணீருடன் வேதனை பொங்க.. உன் தொப்புள் கொடி சகோதர ஈழ உறவு.

(நன்றி யாழ் இணையம்.)

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 7:20 PM

2 மறுமொழி:

Blogger kuruvikal செப்பியவை...

போராளிகள்.. ஒரு உயரிய இலட்சியத்தோடு தேசத்தை மீட்க போராடுவதற்கும்.. அப்பாவி இளைஞர்கள் இன உணர்வால் உந்தப்பட்டு செய்ய எவ்வளவோ கடமைகள் இருந்தும்.. அதை மறுதலித்து மடிவதற்கும் வேறுபாடு தெரியாத சிலர் அநாவசியமாக செய்து வரும் புலிக் காய்ச்சல் பிரச்சாரங்களுக்கு இங்கு இடமில்லை. அவை ஜனநாயக கருத்தியல் உலகிற்கே உதவாதவை. அந்த வகையில் அப்படியான கருத்துக்கள் எந்தவித பாகுபாடுமின்றி மட்டுறுத்தப்படும்.

நன்றி.

Tue Apr 19, 11:18:00 PM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

இன்னும் எத்தனை உயிர்ப்பலிகள். தமிழா நிறுத்து. மாற்று வழிகள் ஆயிரமுண்டு. மரணம் அதில் சேர்த்தியில்லை. உன் மரணம் அரசியல் வியாதிகளுக்கு அரசியலாக்கவே பயன்படும். அதை விடுத்து தமிழக உறவுகளே சிந்தியுங்கள். உங்கள் ஒவ்வோருவரின் எழுச்சியும் ஈழத்தின் வாசல் படிகளுக்கு ஒரு கல்லாகட்டும். அதை விடுத்து உயிர் தியாகம்....! எனினும் எமக்காய் உயிர் நீத்த உறவே உனக்கு எனது அஞ்சலிகள்.

Wed Apr 20, 03:20:00 AM GMT+1  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க