Wednesday, July 20, 2011

ஸ்தூபி அரசியல்..!இலங்கைத் தீவு பிரித்தானிய காலனித்துவத்தில் இருந்து 1948 இல் விடுபட்டது முதல்.. ஸ்தூபி அரசியல் என்பதே தமிழர்களின் உரிமையாகி இருந்தது.சந்திகள் தோறும்.. சிங்கள அரசிடம் கெஞ்சிக் கூத்தாடி.. பாரதிக்கு.. வள்ளுவனுக்கு.. ஒளவையாருக்கு.. சிலை அமைப்பதே அன்றைய பொழுதுகளில் தமிழர்களின் தலையாய அரசியல் உரிமையாக காண்பிக்கப்பட்டு வந்தது. அவை பெரிய அரசியல் வெற்றியாகவும் கொண்டாடப்பட்டு வந்தன.

1972 இல் தோன்றிய போராளி அமைப்புக்கள்.. குறிப்பாக விடுதலைப்புலிகள்..1986 முதல்.. ஆயுத வழியில் சிங்கள இனவாத இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கியது முதல் இந்த ஸ்தூபி அரசியல் என்பதை சிங்களமும்.. சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஒத்தூதும் சிறுபான்மை ஆயுத அரசியல் குழுக்களும் கைவிட்டிருந்தன. இப்போ முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர்.. மிகக் கொடிய.. இனப்படுகொலையின் பின்னர் மீண்டும் இந்த ஸ்தூபி அரசியலே தமிழர்களின் அடிப்படை உரிமையாகி நிற்கிறது.

வடக்குக் கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் சுயநிர்ணய உரிமையுடன் சுயாட்சி அதிகாரம் கேட்ட மக்கள்.. இன்று இந்திய சீன மற்றும் சர்வதேசத்தின் திட்டமிட்ட இராணுவத் தீர்வின் திணிப்பால்.. சிங்கள இனவாத ஆக்கிரமிப்புக்குள் கொண்டு வரப்பட்டு.. ஒரு சிலைக்கு உரிமை கேட்டு கெஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

1986 இல் சிங்களப் படைகள் முழுவதுமாக முகாம்களுக்குள் முடக்கப்பட்டது முதல் தமிழ் மக்களின் வாழ்விடங்கள் பூரணமாக சிங்கள ஆளுகைக்குள் இருந்து விடுவிக்கப்பட்டன. அதன் பின்னர் மக்கள் தமதுக்கு வேண்டிய வடிவில் தமது அரசியல் அபிலாசைகளை வெளியிட்டு வந்ததோடு தமக்கு விரும்பிய இடங்களில் போராட்ட நினைவிடங்களை ஸ்தூபிகளை மாவீரர் இல்லங்களை மக்கள் நினைவிடங்களை அமைத்து வந்தனர். அவை அரசியலுக்கு அப்பால் மக்களின் அடிப்படை உணர்வியல், பண்பியல் மற்றும் கலாசாரம் சார்ந்து எழுந்து நின்றன.

ஆனால்.. 1990 களில் கிழக்கின் பெரு நகரங்களும் வவுனியாவும்.. 1995ல் யாழ் குடாவும் 2006 இல் கிழக்கின் இதர பகுதிகளும்.. 2009 இல் வன்னி உட்பட தமிழர்களின் தாயகப் பிரதேசங்கள் சிங்கள இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின்னர் தமிழ் மக்களின் உணர்வியல் சார்ந்து எழுந்து நின்ற நினைவிடங்கள்.. ஸ்தூபிகள்.. மாவீரர் இல்லங்கள்.. மக்கள் நினைவிடங்கள் யாவும் திட்டமிட்டு அழிக்கப்பட்டு விட்டன. மிஞ்சி இருக்கும் தமிழர்களின் வரலாற்றியல் தொன்மை மிக்க சிலைகளையும் அகற்றி வருவதோடு மறு சீரமைப்பு என்ற பெயரில் அவற்றின் தொன்மைகள் அடையாளம் இழக்கச் செய்யப்படுகின்றன. இது தமிழர்களின் வரலாற்றியல் சான்றுகளை அவர்களின் சொந்த நிலத்தில் இருந்து அழிப்பதனை நோக்காகக் கொண்டிருப்பதோடு.. வடக்குக் கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் என்ற கோரிக்கைக்கு ஆதாரம் இல்லாத நிலையை உருவாக்கும் தொலை நோக்கோடு சிங்களமும் அதன் இராணுவமும்.. அதற்கு துணை போய் அவற்றின் தயவில் வாழும் அரசியல் செய்யும் தமிழ் ஆயுதக் கும்பல்களும்.. சில மிதவாத சிங்கள சார்ப்பு தமிழ் அரசியல்வாதிகளும் உதவி வருகின்றனர்.குறிப்பாக வன்னியில் இருந்த வன்னியின் கடைசி மன்னனான பண்டாரவன்னியனின் நினைவிடம் 2009 இற்குப் பின்னர் திட்டமிட்டு அழிக்கப்பட்டது. தற்போது யாழ்ப்பாணத்தின் கடைசி தமிழ் மன்னனாக விளங்கிய சங்கிலியனின் சிலையும் அதன் தொன்மை இழக்கும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. அதனை காப்பது என்பதே இன்றைய யாழ்ப்பாண அரசியல் என்றாகி நிற்கிறது. இந்த இழுபறிக்குள் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை காட்சிகள் வெற்றிகரமாக மறைக்கப்பட்டு வருகின்றன. சனல் 4 செய்திகள் முக்கியமிழக்கச் செய்யப்படுகின்றன.

அதுமட்டுமன்றி.. தமிழர் தாயகப் பகுதிகள் எங்கனும்.. புதிதாக சிங்கள பெளத்த அடையாள சின்னங்கள் கட்டி எழுப்பப்பட்டு வருகின்றன. புத்த விகாரைகள்.. சிங்கள இராணுவ வெற்றி நினைவிடங்கள்.. நிரந்தர சிங்கள இராணுவ படை முகாம்கள்.. இராணுவக் குடியிருப்புக்கள்.. என்று சிங்கள பெளத்த சின்னங்களும் குடியேற்றங்களும் பல்கிப் பெருகி வருவதோடு.. சிங்கள ஆட்சியாளர்களுக்கு துதிபாடிய தமிழ் தலைவர்களான அல்பிரட் துரையப்பா போன்றவர்களை நினைவு கூறவும் சிங்களம் தவறவில்லை.

சிங்களச் சிறீலங்காவின் சுதந்திரத்திற்குப் பின்னான 68 ஆண்டு கால அரசியல் தவறுகளில் இருந்து சிங்களம் ஒரு சிறு வரியைத் தானும் கற்றுக் கொண்டுள்ளதாகத் தெரியவில்லை. மீண்டும் மீண்டும் அதே தவறுகளை இழைத்துக் கொண்டிருக்கிறது. அதேபோல் தமிழர்களில் ஒரு பகுதியினர் மீண்டும் மீண்டும் சிங்களம் தவறிழைக்க அதற்கு உதவி வருவதோடு இணக்க அரசியல் மூலம் தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கும் என்ற போலிப் பரப்புரைகளையும் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

சிங்களத்தோடு தமிழர்கள் 1948 இற்கு முன்பிருந்தே இணக்க அரசியல் செய்து வருகின்றனர். ஆனால் இன்று வரை அதனால் தமிழர்கள் அடைந்த பலாபலன் என்பது இனக் கலவரங்களும் இனப்படுகொலைகளும்.. சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புமே ஆகும்.

வடக்குக் கிழக்கு மட்டுமன்றி மலையகத் தலைமைகளும் இணக்க அரசியல் மூலம் மலையக மக்களுக்கு விடிவை பெற்றுக் கொடுக்கலாம் என்று கனவு கண்டிருந்தனர். ஆனால் சிங்களத்துடனான இணக்க அரசியல் மூலம் மலையக மக்களின் குடியுரிமை.. வாக்குரிமையைக் கூட பெற்றுக் கொள்ள முடியவில்லை. இறுதில் வடக்குக் கிழக்கில் ஆரம்பித்த ஆயுதப் போராட்டக் காரணிகளே அவர்களுக்கு குடியுரிமையும் வாக்குரிமையும் பெற்றுக் கொடுத்தன.

அந்த வகையில் இன்றைய ஸ்தூபி அரசியல் என்பது சிங்களத்தின் தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு வழிமுறை மட்டுமன்றி தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை சிறுமைப்படுத்தும் ஏளனப்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கிறது. மகிந்த ராஜபக்ச அரசோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பல சுற்றுப் பேச்சுக்களை நடத்திய போதும்.. பேச்சு வார்த்தை ஆரம்பித்த அடிப்படையில் இருந்து எந்த முன்னேற்றங்களும் எட்டப்படாத நிலையில் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை சிங்களம் உள்ளூராட்சி மன்றங்களுக்குள்ளும்.. மாகாண சபைகளுக்குள்ளும்.. சங்கிலியன் சிலைகளுக்குள்ளும் அடக்கி விடச் செய்திருக்கிறது.

சங்கிலியன் சிலை இன்று இலங்கைத் தீவின் தீவிர அரசியலாகி நிற்பதற்குக் காரணம் இதுவே ஆகும். சிங்கள பேரினவாத கட்சிகள் இரண்டும்.. இந்த விவகாரத்தை தமது சிங்கள மேலாதிக்க அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப பயன்படுத்த விளைகின்றன என்பதை ரணில் விக்கிரமசிங்க சங்கிலியன் சிலை தொடர்பில் வெளியிட்ட கருத்துக்களும்.. சிங்கள பேரினவாதக் கட்சியான சுதந்திரக் கட்சியோடு ஐக்கியமாகி விட்டுள்ள ஆயுத சன நாய் (நாய்களைச் சுட்டுப்போடும் சன நாய் அகமும் இப்போ ஆரம்பிக்கப்பட்டுள்ளது.) கட்சியான ஈபிடிபி சார்ந்த யாழ்ப்பாண மேயரின் கருத்துகளும் சான்று பகர்ந்து நிற்கின்றன.

சாவுக்கு அஞ்சாது சொந்த மண்ணை மீட்டு வந்த தமிழர்கள்.. இன்று சங்கிலியன் சிலைக்காக இரஞ்ச வேண்டி இருக்கும் நிலையை ஏற்படுத்தியதில் இந்தியா மற்றும் சர்வதேசத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்கு இருக்கிறது.

அண்மையில் தமிழகத்தில் ராஜீவ் காந்தியின் சிலையை யாரோ உடைத்து விட்டார்கள் என்பதற்காக காங்கிரஸ் கட்சியினர் பெரிய கலவரம் ஒன்றையே தூண்டி விட்டனர். அதுமட்டுமன்றி சில தினங்களுக்கு முன்னர் யாரோ சென்னையில் சோனியாவின் கட்டவுட்டை கொழுத்தி விட்டனர் என்று காங்கிரஸ் கட்சியின் தங்கபாலு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால் இதே காங்கிரஸ் கட்சியின் முழு ஆதரவோடு நடத்தப்பட்ட சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பு ஈழத்தமிழர்களின் பாரம்பரிய வரலாற்றியல் அடையாளங்களையே சீரழிக்கின்ற போதும்.. அதையிட்டு எவரும் கவலைப்படுவதாகவோ கருத்துச் சொல்வதாகவோ.. கண்டிப்பதாகவோ இல்லை. இதுவும் சிங்களம் தான்தோன்றித்தனமாக தமிழர்களின் தொன்மைகளை பல வழிகளிலும் அழிக்கவும்.. தனது சிங்கள பெளத்த மேலாதிக்கத்தை இலங்கைத் தீவில் நிறுவவும்.. இனத் துருவமயமாக்கலை துரிதப்படுத்தவும்.. தமிழர்களை சிறுகச் சிறுக அழித்து விரட்டியடிக்கவும்.. முழு இலங்கைத் தீவையும் சிங்கள பெளத்த நாடாக பறைசாற்றவும் வழி சமைத்து வருகிறது.

இலங்கைத் தீவு சிங்கள பெளத்த நாடாவதில் வட இந்திய ஆளும் வர்க்கத்திற்கும் தென்னிந்திய தமிழர்கள் அல்லாத திராவிட வர்க்கத்திற்கும் நன்மை இருக்கிறது. வரலாற்றியல் ரீதியில் தென்னிந்தியா என்பது சேர சோழ பாண்டியர் என்ற தமிழ் முப்பெரும் மன்னர்கள் ஆண்ட பகுதி ஆகும். தென்னிந்தியாவில் தமிழர்கள் மட்டுமே தனித் தமிழ் நாடு என்ற பிரிவினைவாத நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர். அந்த நிலைப்பாடு இன்றும் ஆங்காங்கே கனன்று கொண்டு தான் உள்ளது. அப்படியான ஒரு நிலையில் ஈழத்தில் தமிழர்கள் இராணுவ ரீதியில் பலம் பெற்று தமக்கென ஒரு தேசத்தை நிறுவி விட்டால்.. தணிந்து போன தனித் தமிழ் நாட்டுக் கோரிக்கை இந்தியாவின் தென் கோடியில் முளைக்க ஆரம்பிக்கலாம் என்பது வட இந்திய ஆளும் வர்க்கத்தின் பலமான நம்பிக்கை.

இந்தியாவின் தென்கோடி என்பது இன்றைய பூகோள இராணுவ மற்றும் பொருண்மிய ரீதியில் இந்தியாவிற்கு குறிப்பாக வட இந்திய இந்தி பேசும் ஆளும் வர்க்கத்திற்கு முக்கியமான ஒன்று. தென்னிந்தியாவே இன்று இந்தியாவின் இராணுவ.. வான்படை. கடற்படை கேந்திர ஸ்தானமாக மாறி இருக்கிறது. வட இந்தியப் பகுதிகளை நோக்கி பாகிஸ்தானும் சீனாவும் எண்ணற்ற ஏவுகணைகளை நிறுத்தி வைத்துள்ள நிலையில் இந்திய ஏவுகணை எதிர்ப்புத் திட்டத்திற்கு முகம் கொடுக்கக் கூடிய தொலைவில் தென்னிந்தியா இருப்பதால்.. தென்னிந்தியாவே இன்று ஒட்டு மொத்த இந்திய தேசத்தின் பாதுகாப்புக் கவசமாக மாறியுள்ளது.

அந்த வகையில் தான் ஆட்ட ஆடக் கூடிய அல்லது ஆட்டி வைக்கக் கூடிய ஒரு சிங்கள ஆட்சித் தலைமையின் கீழ் முழு இலங்கைத் தீவும் சிங்கள மயமாவதில் வட இந்திய ஆளும் வர்க்கம் மகிழ்ச்சி அடையவே செய்யும். வட இந்திய ஆளும் வர்க்கத்தின் அந்த மகிழ்ச்சி என்பது வட இந்திய ஆளும் வர்க்கத்தோடு.. இணக்க அரசியல் செய்யும் தென்னிந்திய அரசியல் கட்சிகளுக்கு தமது அரசியல் தேவைகளை தீர்த்துக் கொள்ள ஒரு கருவியாக உள்ளது. அந்த வகையில் தான்.. வட இந்திய ஆளும் வர்க்கத்திற்கு சவாலாக விளங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளை வட இந்திய ஆளும் வர்க்கம் ஒழித்துக்கட்ட தீர்மானித்தது. அதன் தொடர்சியாக ஈழத்தமிழர்கள் வடக்குக் கிழக்கில் அரசியல் உரிமை பெற்று தன்னாட்சி அதிகார பலத்தோடு ஆட்சி அமைப்பதையும் வட இந்திய ஆளும் வர்க்கம் விரும்பவில்லை. விடுதலைப் புலிகளின் சவால் மிகு இருப்பை சமாளிக்க தமிழர்களைக் குழப்பி அடிக்க வடக்குக் கிழக்கு இணைப்பு.. மாகாண சபைகள் குறித்துப் பேசி வந்த வட இந்திய ஆளும் வர்க்கம் தற்போது அதனை கைவிட்டு விட்டு.. காலாவதியாகி தமிழர்களாலும் சிங்களவர்களாலும் கைவிடப்பட்ட 13 வது திருத்தச் சட்டத்திற்கூடாக பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்கிறது.

அதுமட்டுமன்றி.. சிறீலங்கா சிங்களப் படைகளின் துணையோடு.. தமிழக மீனவர்களை தொடர்ந்து அச்சுறுத்தி வைத்திருக்கவும் விரும்புகிறது. தமிழக மீனவர்களை அச்சுறுத்தி வைத்திருக்க வேண்டிய தேவை ஒன்று வட இந்திய ஆளும் வர்க்கத்திற்கு உண்டு. அதேவேளை அது மீண்டும் வட இந்திய ஆளும் வர்க்கத்திற்கு எதிரான கிளர்ச்சியாக எழக் கூடாது என்ற கவனமும் அங்குண்டு. தமிழக மக்கள் மட்டுப்படுத்திய அளவில் சிங்களத்திடம் இருந்து அச்சுறுத்தலை எதிர்கொள்ள வேண்டும்.. தான் அதனை தீர்ப்பவன் என்கின்ற போர்வையில் தமிழகத்தின் மீது வட இந்திய ஆளும் வர்க்கம் செல்வாக்குச் செய்ய வேண்டும்.. இதுவே அவர்களின் பல்லாண்டு கால நிலைப்பாடு. தமிழக மீனவர்கள்.. தமிழகம்.. தமிழீழத் தமிழர்களோடு இணைவதில் வட இந்திய ஆளும் வர்க்கத்திற்கு சிங்களத்தை விட கொஞ்சமும் விருப்பமில்லை.

இன்னொரு புறம் சிங்களமோ.. சீனாவை.. பாகிஸ்தானை அரவணைப்பது போல இனங்காட்டி.. வட இந்திய ஆளும் வர்க்கம் தன்னை விட்டு தமிழர்கள் மீது கூடிய கரிசணை கொள்வதையும் தடுக்க முனைகிறது. இந்திய வட இந்திய ஆளும் வர்க்கமும் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேசத்தின் தேவை கருதியும்.. அவற்றுடனான தனது நெருக்கத்தை அதிகரிக்கவும்.. சிறீலங்காவை சிங்களத்தை அரவணைப்பதன் மூலம்..சிறீலங்காவுக்குள் சீன ஊடுருவலை கட்டுப்படுத்துவதன் வாயிலாக மேற்குலகின் நன்மதிப்பை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று கருதிச் செயற்படுகிறது. இது இந்திய பொருண்மிய வளர்ச்சிக்கும் சீனப் பொருண்மியத்துடனான.. அதன் பிராந்திய ஆதிக்கத்துடனான இந்தியப் போட்டிக்கும் அவற்றின் பால் பிறக்கும்.. சர்வதேசத்தின் நலனுக்கும் அவசியமாகிறது.

அந்த வகையில் நோக்கும் போது.. ஈழத்தில் தமிழர் பகுதிகளில் நிகழும் சிங்களத்தின் இன்றைய தமிழர் பாரம்பரிய அழிப்புகள்.. நில ஆக்கிரமிப்புக்கள் தொடர்பில் வட இந்திய ஆளும் வர்க்கம் மகிழ்ச்சிக் கடலில் மிதக்கவே செய்யும். அதன் மகிழ்ச்சிக்கு ஏற்ப தமிழகத்தில் இருந்து வட இந்தியர்களோடு இணக்க அரசியல் செய்பவர்களும் மகிழ்விக்கப்படுகின்றனர். அந்த வகையில் தான்.. ஈழத்தில் நிகழ்பவை அனைத்தும் இருட்டடிப்பு செய்யப்பட்டு வருவதோடு.. ஸ்தூபி அரசியலும் திட்டமிட்டு சிறுமைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் சில சர்வதேச சக்திகளும் பயன்பெறுகின்றனர்.

இவை குறித்து தமிழக மக்களும்.. தமிழீழ மக்களும்.. புலம்பெயர் தமிழ் மக்களும்.. உலகத் தமிழ் மக்களும் கூடிய அவதானத்தோடு.. விளிப்புணர்வோடும் செயற்பட வேண்டும். இந்த ஸ்தூபி அரசியல் என்பது தெற்காசியாவில் சாதாரணமன்று. தமிழரின் கவனக் கலைப்பானாக.. அவர்களின் தொன்மை கவரும் கபடத்தின் வடிவமாக எழுந்து நிற்கும் இந்த ஸ்தூபி அரசியல் தொடர்பில் மக்களும் அரசியல்வாதிகளும் தமிழகமும் உலகத் தமிழினமும் விளிப்புணர்வு பெற்று.. அதன் பின்னணியில் இருக்கும் பிராந்திய உள்ளூர் சதிகள் குறித்தும் விளங்கிக் கொள்ள வேண்டும். சரியான கலந்தாலோசனைகள்.. திட்டமிடல்கள் மூலம்.. இந்த ஸ்தூபி அரசியலை.. தமிழர்கள் ஒற்றுமையாக கூடி ஆராய்ந்து கையாள முனைவதே இன்றைய பொழுதுகளில் தமிழர்களை கூட்டுச் சதிகளில் இருந்தும் பாதுகாக்க முனையும்.!

ஆக்கம் - நெடுக்ஸ். (யாழ் இணையம்)

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 7:35 AM

0 மறுமொழி:

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க