Thursday, January 19, 2012

யாழ்ப்பாண சிங்கள அரச தமிழ் ஆயுதக் கும்பல்களின் அரசியல் வியாபாரத்திற்கு பலிக்கடாவாக்கப்படும் முஸ்லீம் சமூகம்.

ஐரோப்பாவில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியான தீபத்தில் யாழ்ப்பாண முஸ்லீம்களின் இடம்பெயர்வு தொடர்பான இரண்டாம் வார நிகழ்ச்சில் கலந்து கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணி.. (சங்கரியின் பேச்சாளர்..!) ஈபிடிபி ஆட்கள்.. ரங்கன்.. சிறீலங்கா ஆள்.. கீரன்.. போன்றவர்களைப் பொறுத்த வரை.. முஸ்லீம் வாக்குகள் என்பது அவர்களின் எதிர்கால அரசியலுக்கு மிக முக்கியம். அதுமட்டுமன்றி தமிழ் மக்கள் உட்பட சிறுபான்மை இனங்கள் உரிமை பெற்று விடக் கூடாது என்பது சிங்களவர்களின் விருப்பம். அதற்கு தமிழ் - முஸ்லீம் மக்களின் பகமை தொடர்ந்து பேணப்பட வேண்டும்.

அந்த வகையில் இவர்கள்.. 1990 க்குரிய சூழ்நிலைகளை இதய சுத்தியோடு ஆராய முன்வரப் போறதில்லை.

1990 இல் கிழக்கில் இருந்து, சிறீலங்கா சிங்களப் பேரினவாத தேசத்தின் பிரேமதாச அரசின் கொள்கைக்கு ஆதரவாக தமிழ் - முஸ்லீம் சமூகப் பிளவை ஆளப்படுத்தும் நோக்கில்.. முஸ்லீம் ஊர்காவல் படை மற்றும் குழுக்கள் தமிழ் மக்களை கிழக்கிலங்கை நிலாவெளி.. குச்சவெளி.. மூதூர்.. என்று பல இடங்களில் விரட்டி அடித்தனர். அந்த மக்கள் உடுத்த உடுப்போடு.. ஆபத்தான கடற்பயணங்கள் மேற்கொண்டு.. முல்லைத்தீவு மற்றும் யாழ் வடமராட்சிக்கு ஆயிரக்கணக்கில் வந்தனர். அந்த வேளையில் வடக்கிலும் தமிழ் - முஸ்லீம் நல்லுறவைச் சிதைக்கும் நோக்கில் பள்ளிவாசல்களிலும்.. சில பிரபல்ய முஸ்லீம் வர்த்தக ஸ்தாபன களஞ்சிய சாலைகளிலும்.. ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு.. தமிழ் - முஸ்லீம் உறவை சீர்குலைக்க கும்பல்கள் குடாநாட்டுக்குள் ஊடுவ விடப்பட்டிருந்த நிலையில்.. விடுதலைப்புலிகள் மாற்று வழி இன்றி இரண்டு சமூகங்களின் பாதுகாப்பையும் ஒற்றுமையையும் உறுதி செய்யும் நோக்கில் முஸ்லீம்களை குறித்த கால அவகாசத்துக்குள் குடாநாட்டை விட்டு வெளியேறுங்கள்.. சரியான பாதுகாப்பான தருணம் வரும் போது நாம் மீண்டும் உங்களை அழைப்பதோடு.. உங்கள் உடமைகளையும் கையளிப்போம் என்றே அறிவித்தனர்.

முஸ்லீம்கள் வெளியேறிய பின் முஸ்லீம் மக்களின் உடமைகளை புலிகள் சூறையாடினார்கள் என்பது தவறு. முஸ்லீம் மக்களின் வீடுகளில் இருந்த உடமைகளை புலிகள் பத்திரமான இடங்களுக்கு நகர்த்திக் கொண்டிருந்தனர். அந்தக் காலத்தில் பள்ளி மாணவர்களாக அந்தக் கடமையில் தொண்டு ரீதியாக உதவியவர்கள் என்ற வகையில் எம்மால் இதனை நன்கு உறுதிப்படுத்த முடியும். அந்தப் பகுதிகளுக்குள் பொதுமக்கள் அனுமதிக்கவே படவில்லை. காரணம்.. முஸ்லீம்களின் உடமைகளுக்கு தீங்கு வரக்கூடாது என்பதற்காக.

இந்த நிலையில்.. கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் மீது பிரேமதாச அரசு எந்த கருசணையும் காட்டாத நிலையில் அவர்கள் இருப்பிடம் இன்றி தவித்துக் கொண்டிருந்த நிலையில்.. முஸ்லீம்களின் இடங்களை அந்த மக்களுக்கு தற்காலிக வதிவிடங்களாக இருக்க அனுமதிக்கப்பட்டனர். இதற்கு முக்கிய காரணம்.. சிங்கள அரசு முஸ்லீம் குழுக்களைக் கொண்டு விரட்டி அடித்த தமிழ் மக்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்கி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து அவர்களின் சொந்த இடத்தில் அவர்களை இருத்தாமையே..! ஒரு அரசு விட்ட தவறை ஒரு போராளி அமைப்பு சீர் செய்வது என்பது மிகவும் கடினமான பணி. இருந்தும் உள்ள வளங்களைப் பயன்படுத்தி இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு விடுதலைப்புலிகள் தற்காலிக வசதிகளை செய்து கொடுத்தனர். இது அன்று மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட விடயமும் கூட.

எங்களுக்கு அறியப்பட்ட யாழ் மத்திய கல்லூரி ஆசிரியராக இருந்த அப்துல் காதர் என்ற முஸ்லீம் ஆசிரியர் தங்களை வெளியேற்றக் கேட்டது குறித்து எங்களோடு கருத்துப் பகிர்ந்த போது.. எங்கட சனங்களும் (முஸ்லீம்கள்) காட்டிக் கொடுக்கிறது.. அதுஇதெண்டு செய்யுற நிலையில பொடியள் வீண் பிரச்சனை வரக்கூடாது என்று தான் இதனை செய்யுறாங்கள் போல.. இருந்தாலும் உடன போகச் சொல்வது கொஞ்சம் சங்கடமான விசயம் என்று சொல்லி ஆதங்கப்பட்டாரே தவிர புலிகள் அன்றைய இக்கட்டான சூழ்நிலையில் எடுத்த முடிவை நிராகரிக்கவில்லை. அவரின் மனைவி யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் ஆசிரியையாக இருந்தவர்.

இதுதான் 1990 யாழ்ப்பாணச் சூழலின் இரத்தினச் சுருக்கம்...!

அதன் பின்னர்.. பலமான போர்.. பல சிங்களப் படைகளின்இராணுவ நடவடிக்கைகள்.. யாழ்ப்பாணத்தில். இவற்றால் எத்தனை முஸ்லீம் மக்கள் ஆபத்தில் இருந்து காப்பாற்றப்பட்டார் என்ற கணக்கு உண்டா..??! அதை எவரும் கவனத்தில் எடுப்பதில்லை. 1995ம் ஆண்டு.. முழு யாழ்ப்பாண இடம்பெயர்வை விடுதலைப் புலிகள் செய்திராவிட்டால்.. அன்றொரு பாரிய முள்ளிவாய்க்காலை சூரியக் கதிர் சிங்களப் படை ஆக்கிரமிப்பு செய்து நின்றிருக்கும் என்பதை இந்த தீபம் பேச்சாளர்கள் உணர்வார்களா...???! இன்றும் கூட வாய் கூசாமல்.. முள்ளிவாய்க்காலில் அழிந்தது புலிகள் என்று சொல்லி அரசியல் செய்கிறார்களே.. இந்த ஈவிரக்கமற்றவர்கள்.. முஸ்லீம் மக்களுக்காக குரல் கொடுக்க என்ன அருகதை இருக்கிறது.

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட அத்தனை ஆயிரம் மக்களும் புலிகளா..??! சிறீலங்கா அரசாங்கம் வகுத்த யுத்த சூனியப் பிரதேசத்துக்குள் போய் நின்றது மக்களின் தவறா..???! அதன் மூலம் அவர்கள் எப்படி விடுதலைப்புலிகள் ஆனார்கள்..???! அல்லது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் யுத்த சூனியப் பிரதேசம் அமைத்தது தவறா..??! அங்கு மக்கள் போனது தவறா..??! சர்வதேச மனிதாபிமான அமைப்புக்கள் மீட்புப் பணியில் ஈடுபடுவதை சிங்கள அரசும்.. இந்திய அரசும் தடுத்தது தவறா.. புலிகளோடு மக்கள் அந்தப் பகுதியில் வாழ வேண்டி வந்தது தவறா..???! இப்படி எழும் ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கு பதில் ஏதும் இன்றி முள்ளிவாய்க்கால் பேரவலம் தொடர்பில் அவை புலி அழிப்பாக.. மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அனைவரும் சுட்டிக்காட்டியது.. இவர்களின் ஏகோபித்த ஆதரவோடு தான்.. தமிழினப் படுகொலையை சிங்களம் முள்ளிவாய்க்காலில் செய்துள்ளது என்பதை இனங்காட்டுகிறது. இதற்கு நாவலன் போன்றவர்களும் பொறுப்பு.

மேலும்... 1996 இல் செய்யப்பட்ட செம்மணிப் படுகொலையில்.. முஸ்லீம் குழுக்கள் சிலவற்றின் பங்கு கிருசாந்தி குமாரசாமி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சிங்களப் படைகளிடம் இருந்து வெளிவந்திருந்தது. அந்த சம்பவத்தில் சில முஸ்லீம் சிங்கள அரச படையினர்களும் இருந்துள்ளமை இனங்காணப்பட்டிருந்தது. அதுபோல.. கிழக்கில் முஸ்லீம் ஊர்காவல் படை சிங்கள அதிரடிப்படையுடன் இணைந்து செயற்பட்டு பல தமிழினப் படுகொலைகளை செய்து கொண்டிருந்தது. இந்தச் செயற்பாடுகளால்... தான் தமிழ் - முஸ்லீம் உறவு பாரிய விரிசல் கண்டது. இந்தப் படுகொலையின் பின்னணிகளில் முஸ்லீம் காங்கிரஸ் (அஸ்ரப்).. ஈபிடிபிக்கு தொடர்புகள் இருந்தன.

இவற்றிற்கு மத்தியிலும் விடுதலைப்புலிகள்.. 2002 போர் நிறுத்த உடன்படிக்கைக்குப் பின்னர்.. முஸ்லீம் பிரதிநிதிகளோடு பேசி.. ஒரு உடன்படிக்கையை செய்தார்கள். அதில் 1990 இல் வெளியேறிய முஸ்லீம் மக்கள் தாம் விரும்பும் பட்சத்தில் ஊர் திரும்ப விடுதலைப்புலிகள் சகலதையும் செய்வார்கள் என்று சொல்லப்பட்டது. அதற்கமைய.. 2002 தொடங்கி 2006 போர் நிறுத்தம் முடியும் வரை முஸ்லீம்கள் வன்னியூடு.. யாழ்ப்பாணத்திற்கும்.. இதர தங்களின் இடங்களுக்கும் செல்ல முடிந்தது. வியாபாரம் செய்ய முடிந்தது. ஆனால்.. கிழக்கில் இருந்து முஸ்லீம்களால் வெளியேற்றப்பட்ட தமிழ் மக்கள் குறித்து முஸ்லீம்கள் எந்தக் கருசணையும் காட்டியதில்லை. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டதும் இல்லை. அந்த நிகழ்வுகளுக்காக மன்னிப்புக் கோரியதும் இல்லை. இதனை மீண்டும்.. 2006 இல் விடுதலைப்புலிகள் மூதூரை கைப்பற்றிய போதும் அவர்கள் வெளிப்படுத்தினர்.

மூதூரை பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டுத் தாருங்கள் என்று முஸ்லீம் அரசியல் தலைமைகள் மதத் தலைமைகள் எல்லாமே அறிக்கை விட்டுக் கொண்டிருக்க.. பாரிய போர் நடவடிக்கை மூலம்.. மூதூர் மீள சிங்களப் படைகளால் கைப்பற்றப்பட்ட போது அதற்கு தமிழ் மக்களின் பக்கத்தில் நிகழ்ந்த அழிவைப் பற்றிய எந்தக் கவலையும் இன்றி சிங்களப் படைகளின் கொலைவெறியாட்டத்திற்கு.. ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு முஸ்லீம்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

அதன் பின்னர் வாகரை.. 2009 முள்ளிவாய்க்கால் என்று எத்தனையோ பேர் இடர்களை.. அழிவுகளை தமிழ் மக்கள் சந்தித்து நின்ற போதும்.. முஸ்லீம்கள் ஒரு கண்டனத்தைக் கூட.. சிங்கள அரசிற்கு எதிராக பதிவு செய்யவில்லை. மாறாக.. ஈராக்கில்.. ஆப்கானிஸ்தானில் முஸ்லீம்கள் அமெரிக்கப் படைகளால் கொல்லப்படுவதற்கு ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில்.. 2009 மே யில்... பெரும் தமிழ் பொதுமக்கள் அழிவுகளோடு.. யுத்தம் தற்காலிக முடிவுக்கு வந்தது.

இதற்கிடையில்.. 1990 இல் இடம்பெயர்ந்த முஸ்லீம்களின் வாழ்வியல் பற்றியும் நோக்க வேண்டும்.

1990 இல் இடம்பெயர்ந்த முஸ்லீம்களை சிங்கள அரசு அரவணைத்தது. காரணம்.. அது தமிழ் - முஸ்லீம் உறவை சீர்குலைக்கவும்.. நிரந்தரப் பகைமையை வளர்க்கவும் அதற்கு தேவைப்பட்டது. அந்த வகையில் தகுந்த வசதிகளோடு புத்தளம் மற்றும் இதர பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த முஸ்லீம்களுக்கு வேண்டிய வசதி வாய்ப்புக்கள் செய்து கொடுக்கப்பட்டன. இதற்கிடையில்.. இந்த முஸ்லீம்களை வைத்து அரசியல் செய்ய முஸ்லீம் காங்கிரஸ் தலைவராக இருந்த அஸ்ரப் முடிவு செய்து.. விடுதலைப்புலிகளை பாசிசவாதிகள் என்று வர்ணிப்பது வரை செய்தார். அதுமட்டுமன்றி.. முஸ்லீம் தம்பதிகளுக்கு திருமணத்திற்குப் பணம்.. பிள்ளை பெற்றால் பணம் என்று வாரி வழங்க முன் வந்ததோடு.. அரச சலுகைகளும் பெற்றுக் கொடுத்து வேலை வாய்ப்பு.. கல்வி என்று அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டன.

ஆனால் அதே காலத்தில் முஸ்லீம்களால் கிழக்கில் இருந்து அடித்துவிரட்டப்பட்ட தமிழ் மக்களுக்கு இன்று வரை எந்த நிவாரணமும் இல்லை. மூதூருக்கு போய் வாழ்வது என்பது.. தமிழ் மக்களால் கனவில் கூட முடியாத காரியமாகியுள்ளது. தமிழ் பிள்ளைகளின் கல்வி.. இளைஞர் யுவதிகளின் எதிர்காலம் எல்லாமே கேள்விக்குறியாகிப் போனது.

மேலும்.. 1995 யாழ்ப்பாண சிங்களப் படை ஆக்கிரமிப்புக்குப் பின்னும் 2009 வன்னி ஆக்கிரமிப்புக்குப் பின்னும்.. 2007 கிழக்கு ஆக்கிரமிப்புக்குப் பின்னும்.. தமிழ் மக்களின் நிலங்கள்.. சிங்களப் படைகளின் தேவைகளுக்காக பறிக்கப்பட்டுள்ளதுடன்.. உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் உட்படுத்தப்பட்டுள்ளன. கிழக்கில்.. இடம்பெயர்ந்த பல தமிழ் மக்களின் காணிகள்.. வீடுகள் முஸ்லீம்களாலும் குறிப்பாக அம்பாறை... மட்டக்களப்பில் இன்றும் பறித்து வைக்கப்பட்டுள்ளன. மன்னாரிலும் இந்த நிலை காணப்படுகிறது. மேலும்.. 2000 சிங்களவர்கள் யாழ்ப்பாணத்தை விட்டு சொந்தப் பாதுகாப்புக் கருதி.. 1980 களில் வெளியேறியதற்காக கவலைப்படும் புத்திசீவிகள்.. யு என் எச் சி ஆர் வெளியிட்டுள்ள சமீபத்திய குறிப்பை நோக்க வேண்டும்.

அதில் சொல்லப்பட்டுள்ளது.. வடக்கு முஸ்லீம்கள் மட்டுமல்ல.. இடம்பெயர்ந்தோர். பிற மக்களும் உளர். வன்னியில் வாழ்ந்த ஆயிரக்கணக்கான மலையக தமிழ் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். கிழக்கு தமிழ் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். வவுனியா.. மன்னாரைச் சேர்ந்த மக்கள் உள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மக்கள் உள்ளனர்.

அதுபோக.. தமிழகத்தில் இன்னும் யாழ்ப்பாணத்துக்கு வரவுள்ள முஸ்லீம்களை விட அதிக தொகையில் தமிழ் மக்கள்.. முகாம்களுக்குள் 25.. 30 ஆண்டுகளாக ஏன் ஒரு தலைமுறை முகாம் வாழ்க்கையையோடு வாழ்ந்து வருகின்றனர். அதில் கிழக்கில் இருந்து முஸ்லீம்களால் விரட்டப்பட்ட மக்களும் அடங்குவர். ஏன் அவர்களை எவரும் இரு கரம் கூப்பி அழைக்கும் அறிக்கையை இதுவரை விடவில்லை. யு என் எச் சி ஆர் மட்டுமே அந்தப் பணியை செய்கிறது. அப்படி திரும்பி வந்துள்ள மக்களும்.. தங்களின் நிலம்.. இடம் எல்லாம் சிங்களப் பிடிக்குள் இருக்க திக்கற்று நிற்கிறார்களே.. அதற்கு இந்தப் புத்திசீவிகளும்.. முஸ்லீம் பிரதிநிதிகளும் என்ன செய்யச் சொல்லி சிங்கள அரசை வேண்டிக் கொண்டுள்ளனர். எதுவும் இல்லை.

இந்தப் பின்னணியில் டக்கிளசுக்கும்.. சிங்கள அரசிற்கும்.. வடக்கு முஸ்லீம்களின் வரவில் விசேட அக்கறை பிறக்க என்ன காரணம்.. ஒரே காரணம்.. முஸ்லீம்களின் வாக்கு.

அதிகரித்து வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செல்வாக்கு தமிழ் மக்களின் வாக்கை ஈபிடிபி மற்றும் சிங்கள பெரும்பான்மை கட்சிகள் கிழக்கில் வடக்கில் பெறுவது என்பது அவ்வளவு சுலபமல்ல. அதுவும் புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவின்றி அது சாத்தியமே இல்லை. இந்த நிலையில்.. வடக்கில் இருந்து வெளியேறி குடித்தொகை ரீதியில் இரட்டிப்படையச் செய்யப்பட்டுள்ள.. முஸ்லீம்களை.. வடக்கிற்கு நகர்த்தி வருவதன் மூலம்.. டக்கிளஸிற்கு கணிசமான அளவு வாக்குகளை பெற வாய்ப்பு வருவதோடு.. தேசிய ஒருமைப்பாட்டை தான் நிறுவிச் செயற்படுவதாக சவுண்டு விடவும் தன் பதவிகளை.. தக்க வைக்கவும் வாய்ப்புப் பிறக்கும். அந்த வகையில் தான்.. இத்தனை ஆயிரம் தமிழ் மக்களின் இடம்பெயர் வாழ்வும் யாரின் ஆதரவும் இன்றி அவலத்தில் இருக்க.. ஓரளவுக்கு என்றாலும் அடிப்படை வசதிகளோடு.. கவனிப்போடு.. வாழும் இடம்பெயர்ந்த முஸ்லீம்கள் மீது ஈபிடிபிக்கு அக்கறை பிறக்க காரணமாகியுள்ளது.

வடக்கில் பாதுகாப்பு வலயங்கள் இன்னும் நீக்கப்படவில்லை. சிங்களப் படை முகாம்களுக்கு காணிகள் பறித்தெடுக்கப்படுகின்றன. இவ்வாறு தமிழ் மக்களின் மீள் குடியிருப்புத் தொடர்பில் எந்த அக்கறையும் இன்றி செயற்படும் ஒரு அரசு.. முஸ்லீம்களினதும்.. சிங்களவர்களினதும்.. வடக்குக் கிழக்கு இடம்பெயர்வை துரிதமாக முடித்து வைக்க என்ன தேவை இருக்கிறது. இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் போதிய அடிப்படை வசதி இன்றி தற்கொலை செய்கிறார்கள்.. அந்தக் கவலை இன்றி புத்தளத்தில் நாட்டின் பிற பகுதிகளில் அடிப்படை வசதிகளோடு வாழும் முஸ்லீம்கள் மீது அவசர கவனம் பிறக்க என்ன காரணம்... அரசியல் மற்றும் சமூகங்களை பிரித்தாளல் நோக்கமே அன்றி வேறில்லை..! இதன் மூலம் சிங்களம் தனது பேரினவாதக் கொள்கையை வடக்குக் கிழக்கு எங்கனும்.. சிங்களவர்களையும் குடியமர்த்தி.. வலுவாக்கிக் கொள்ள முடியும்.

கீரன் என்றவர்.. இங்கே யாழிலும் சுபன் போன்றவர்கள் போல.. சாதிய அரசியல் செய்ய விளைகின்ற ஒரு ஆள். அவரிடம் ஒரு கேள்வி.. சிங்களவர்கள் மத்தியிலும்.. இன்றும் கூட.. கண்டிச் சிங்களவன்.. காலிச் சிங்களவன்.. கரையோரச் சிங்களவன் என்ற பாகுபாடு சமூக மட்டத்தில் உண்டு. அரசியல் மட்டத்தில் அல்லது தமிழின அழிப்பு மட்டத்தில் அது உண்டா..?!

கண்டிச் சிங்களவன்.. ஜே ஆர் தொடங்கி கரையோரச் சிங்களவன்.. மகிந்த வரை தமிழர்களை அழிப்பதில்.. வெல்வதில் சிறுபான்மை இனங்களை.. முஸ்லீம்கள் உள்ளடங்க.. அடக்கி ஆள்வதில் கொண்டுள்ள அக்கறையை ஏன் நீங்கள்.. தமிழ் மக்கள் மத்தியில் சாதியத்தைக் கடந்து தமிழ் மக்களின்.. சிறுபான்மை மக்களின்.. உரிமை வெல்லப்படுவதில் காட்டக் கூடாது. நீங்கள் தலையிடிக்கு மருந்து வாங்க வந்திட்டு.. மூட்டு வாதத்திற்கு மருந்து தரச் சொல்லிக் கேட்டால்.. எந்த டாக்டரும் அதற்கு மருந்து செய்ய மாட்டினம்.

மேலும்.. வடக்கிலோ.. கிழக்கிலோ.. தமிழ் மக்கள் தங்களின் சொந்த வாழ்வுரிமையையே இழந்து சிங்கள ஆக்கிரமிப்புக்குள்.. தமிழ், முஸ்லீம் அரச ஆதரவு ஆயுத துணைக் கொலைக் கும்பல்களின் அச்சுறுத்தல் மத்தியில் வாய் மூடி மெளனிகளாக வாழும் நிலையில்.. எப்படி அப்பாவி முஸ்லீம் மக்களையும் எங்களோட வந்திருந்து கஸ்டப்படுங்கோ என்று அழைக்க முடியும். அந்த வகையில் வடக்கு தமிழ் மக்கள்.. முஸ்லீம்களின் மீள் வரவை ஆதரிக்காதிருப்பின் அதற்கு இதுவே பிரதான காரணியாக இருக்கும். அதேவேளை சிங்களவர்களால் மட்டுமன்றி முஸ்லீம்களாலும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் மனங்களில் உள்ள ரணங்களை முஸ்லீம்களும் புரிந்து கொண்டு அதற்கு மருந்திடாது உள்ளமையும் வரவேற்கத்தக்க ஒன்றல்ல..!

இன்றைய பொழுதில்.. 2002 விடுதலைப்புலிகளால் அங்கீகரிக்கப்பட்ட வடக்கு முஸ்லீம்களின் மீள் வரவுபற்றி தமிழ் மக்கள் அக்கறை செய்ய வேண்டிய நிலையும் இல்லை. ஏலவே இதற்கான அழைப்பை புலிகள் பகிரங்கமாக தமிழ் மக்கள் சார்பில் வழங்கிவிட்டும் உள்ளனர். அந்த வகையில் தமிழ் மக்கள் மீது இவ்வாறு.. புத்திசீவி.. அதுஇதென்று..சிங்கள அரசிற்கு சேவகம் செய்யவும்.. சிறுபான்மை மக்களின் அடிப்படைப் பிரச்சனையான இனப்பிரச்சனைக்கு பேரினவாத சிங்கள அரசு தீர்வை முன் வைக்காது இழுத்தடிக்க அறிக்கை விடும்.. தமிழ் ஆயுதக் குழுக்களும்...சங்கரி போன்ற வேடதாரிகளும்.. உருவாக்கும் போலி அமைப்புக்கள்.. அவற்றைக் கைவிட வேண்டும்.

சிறுபான்மை இனங்களுக்குள் ஒற்றுமை இன்மை உள்ளதாக இனங்காட்டி.. இனப்பிரச்சினைக்கான தீர்வை தட்டிக்கழித்து.. சிங்களப் பேரினம் அதன் ஆக்கிரமிப்புக் கொள்கைக்கு சர்வதேச அரங்கில் அங்கீகாரம் பெற சிலர் உதவுவது இதில் இருந்து வெளிப்படையாகத் தெரிகிறது. அதற்கு தீபம் போன்ற ஊடகங்கள் தெரிந்தோ தெரியாமலோ உதவுவது.. உண்மையில் ஈழத்தீவில்.. சிறுபான்மை இனங்களின் எதிர்காலத்தை இருள் மிகுந்த ஆபத்துள்ள சூழலுக்குள்ளேயே தள்ளிவிடும்.

நன்றி யாழ். இணையம்.

(இப்பதிவுக்கு: சனநாயக கருத்தியல் அடிப்படையில்.. ஆரோக்கியமான எதிர்வினைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.)

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 12:08 PM

0 மறுமொழி:

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க