Thursday, January 26, 2012

ஈழத்தில் அப்துல் கலாமின் சாத்தான் வேதம் முடிந்தது; மாணவக் கொலைகள் ஆரம்பம்.

Posted Image
ஈழத்தில் பருத்தித்துறை சக்கோட்டைப் பகுதியில் நேற்று மாலை 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் இனந் தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நேற்றிரவு (25-01-2012) அந்தப் பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.பருத்தித்துறை சக்கோட்டையைச் சேர்ந்த இருதயநாதர் மேரி டிலக்சனா (வயது 17) என்ற மாணவியே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பருத்தித்துறை சிறீலங்கா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அல்வாய் வடக்கு றோ.க.த.க. வில் கல்வி பயிலும் இந்த மாணவியின் சடலம் நேற்று இரவு அவரது வீட்டுக்கு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சக்கோட்டை பழைய வேதக் கோயிலடிக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் இருந்தே அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.மாணவி தனது வீட்டுக்கு அண்மையில் வைத்து இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு பாலியல் இம்சைக்கு உள்ளாக்கப்பட்ட பின்னரே கொல்லப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு சென்ற பருத்தித்துறை சிறீலங்கா காவல்துறையினரும் படையினரும் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். மாணவியின் சடலம் நேற்று இரவுவரை சம்பவ இடத்திலே இருந்ததாகக் கூறப்பட்டது.

மாணவி கடத்தப்பட்டு பாலியல் இம்சைக்கு உட்படுத்தப்பட்டாரா என்பதனை உறுதிப்படுத்த முடியவில்லை.


இந்தச் சம்பவம் தொடர்பாக கொல்லப்பட்ட மாணவியின் உறவினர் ஒருவர் தகவல் தருகையில் “மாணவி டிலக்சனா அவரது வீட்டுக்கு மிக அருகில் வைத்தே கடத்தப்பட்டுள்ளார். சக்கோட்டைப் பழைய வேதக் கோயிலடிக்கு அருகில் அவரது வீடு உள்ளது. வீட்டில் இருந்த மாணவியின் தாயும் தகப்பனும் அலுவல் நிமித்தம் வெளியே சென்று விட்டனர். இந்த வேளையில் மாணவி அயலில் உள்ள ஆலயம் ஒன்றில் வழிபாட்டில் ஈடுபட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பினார்.

மாலை 6.30 முதல் மாலை 6.45 மணி வரையான இடைப்பட்ட நேரத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்க வேண்டும். வீட்டுக்கு மிக அருகில் வைத்து மாணவியை யாரோ கடத்திச் சென்றுள்ளனர். கடத்தப்பட்ட அவர் அருகில் உள்ள ஆள்களற்ற வீடொன்றில் வைத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். மாணவியின் உடலெங்கும் நகக்கீறல் காயங்கள் காணப்பட்டன. அவரது ஆடைகளும் கலைந்திருந்தன. அவர் பாலியல் இம்சைக்கு உட்படுத்தப்பட்டாரா என்பது தெரியாது.

அலுவல் முடிந்து வீடு திரும்பிய தாயும் தகப்பனும் மாணவியை காணாது தேடியுள்ளனர். இந்த வேளையிலேயே அவரது சடலம் அருகிலுள்ள வீடொன்றில் இருந்தமை தெரியவந்தது. இதனை அடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. சம்பவத்தை கேள்வியுற்று சிறீலங்கா பொலிஸாரும் படையினரும் அங்கு வந்து குவிந்தனர் என்றார்.

மாணவி பாலியல் இம்சைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் பருத்தித்துறை சிறீலங்கா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். எனினும் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் நேற்றிரவு 10.30 மணிவரை கைது செய்யப்படவில்லை எனவும் சிறீலங்காப் பொலிஸார் கூறினர்.

நன்றி: ஈழதேசம் இணையம்.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 3:44 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க