Monday, February 20, 2012

காகம் கறுப்பு என்றாலும் உள்ளம் வெள்ளை..!

யாழ் போதனா வைத்தியசாலை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிற அந்தக் காலை வேளை.. சாரண இயக்கத்தின் பணியின் நிமித்தம்.. நானும் அங்கு.

அங்கே இருந்த ஒரு வாங்கில்.. அந்த அம்மா. கவலை தோய்ந்த முகம். முடி கலைந்து முகத்தில் படர்ந்திருக்கிறது. அழகான அந்த நெற்றில் இருந்த குங்குமப் பொட்டுக் கலைந்து வியர்வையில் கலந்து வழிந்து நெற்றியில் குங்குமக் கோடுகள். பார்க்க கவலையாக இருந்தது. என்ன தான் பிரச்சனை என்று கேட்பமே.. ஏதேனும் உதவி தேவைப்படுமோ என்று நினைத்து அணுகினேன் அந்த அம்மாவை.

ஏம்மா.. இப்படி தனிய யோசிச்சிட்டு இருக்கிறீங்க. என்ன முகம் எல்லாம் வாடிப் போய் சோகமா இருக்கு. என்ன பிரச்சனை.. ஏதேனும் உதவி தேவையாம்மா.. என்று பேச்சுக் கொடுத்தது தான் தாமதம். கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிய அழ ஆரம்பித்து விட்டார்கள் அந்த அம்மா.

அவரின் அழுகை என் கண்களிலும் கண்ணீரை வர வழைத்துக் கொண்டது. ஓடிச் சென்று அருகில் இருந்த கன்ரீனில் ஒரு சோடி பனிசும்.. தேனீரும் வாங்கிக் கொண்டு வந்து அந்த அம்மாவிடம் நீட்டினேன். அவர் அதை வாங்க மறுத்துவிட.. ஏம்மா விடாமல் அழுகிறீங்க.. என்ன பிரச்சனை என்றாவது மனம் விட்டுச் சொல்லுங்கோவன். அப்பதானே நாங்கள் உங்களுக்கு உதவி செய்யலாம்.. என்றதும்.. அந்த அம்மா தயங்கியவாறு வாய் திறந்தாங்க.

என் பிள்ளைக்கு ஒப்பரேசன் நடந்தது. 21 வயசு ஆம்பிளப் பிள்ளை. சின்னனில அவன் சைக்கிளால விழுந்து காலில ஒரு சின்ன அடிபாடு. அது கொஞ்ச நாளில தானாகவே மாறிட்டுது. ஆனால் இப்ப அதே இடத்தில ஒரு நோவோட.. வீக்கம். அதுதான் பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போகச் சொல்லி குடும்ப வைத்தியர் சொல்ல.. கொண்டு வந்தம். இப்ப என்னடான்னா.. ஏதோ கட்டியாம்.. ரெஸ்ட் பண்ண வேணும் என்று சொல்லி இரு தரம் சின்ன ஒப்பரேசன் செய்திட்டினம். இது இரண்டாவது ஒப்பரேசன். முதல் ஒப்பரேசனில ஒன்றுமில்ல.. அது சாதாரண வீக்கம் என்டிச்சினம். பிறகு ஒரு கிழமை கழிச்சு சொல்லிச்சினம்.. அந்த ரெஸ்ட் பிழையாம்.. கொழும்புக்கு மகரகமவுக்கு மாதிரி அனுப்ப வேணும்.. அப்ப தான் தெளிவான முடிவைச் சொல்லலாம்.. எண்டு சொல்லி.. இப்ப திருப்பிச் செய்திருக்கினம். என்ர பிள்ளையை இப்படி அடிக்கடி வெட்டிக் கொத்துறதை பார்க்க என்னால முடியல்ல..! இப்ப அவனைப் பார்க்கத்தான் வந்திருக்கிறன். நான் என்ர பிள்ளையை விட்டிட்டு வீட்டுக்குப் போக.. மனசில்லாததால.. இரவு முழுக்க.. உந்த கன்ரீனடி வாங்கில தான் கிடந்தனான் மகன்... என்று அந்த அம்மா சொல்லி முடிக்க.. என்னை அவவின் துக்கம் வாட்ட ஆரம்பித்தது. இனம் புரியாத நேசம் ஒன்று எண்ணத்தில் இழையோடியது. மனதால் அந்த அம்மாவை நெருங்கிக் கொண்ட நான்... என்னைப் பற்றிய அறிமுகத்தைச் செய்து வைத்தேன்.

அம்மா.. நாங்கள்... யாழ் இந்துக் கல்லூரி சாரண சேவையில இருந்து வந்திருக்கிறம். இங்க இரண்டு வார மக்கள் சமூகப் பணிக்கு வந்திருக்கிறம். உங்களுக்கு என்ன உதவி தேவையோ கேளுங்கோ செய்யுறம் என்று அவருக்கு ஆறுதல் அளிக்கும் வார்த்தைகளை பரிசளித்தேன்.

அதற்கு அந்த அம்மா.. மகன் நீங்க ஒன்றுமே செய்ய வேண்டாமப்பு. இப்படி உதவி செய்யுறம் என்று சொன்னதே பெரிய விசயம். நீங்கள் அந்த அண்ணாக்கு சுகம் வர வேணும் என்று கடவுளைக் கும்பிடுங்கோ.. அது போதும் என்று சொல்லி முடிச்சாங்க.

நல்லது அம்மா. அப்படியே செய்யுறன். இப்ப நீங்க இந்த பனிஸையும்.. தேனீரையும் சாப்பிடுங்கோ என்று கையில் இருந்த அவற்றை.. மீண்டும் அந்த அம்மாவிடம் நீட்டினேன். ஆனால் அவரோ உறுதியாக அவற்றை மீண்டும் நிராகரித்து விட்டு சற்று யோசனையில் ஆழ்ந்தார்.

இதனை அவதானித்த நான்.. அம்மா ஒன்றுக்கும் யோசியாதேங்கோ.. எல்லாம் நல்லபடியா நடக்கும் என்று சொன்னதும்.. நான் நம்புற நல்லூர் முருகனும் என்னைக் கைவிட மாட்டான் மகன்.. என்று சொல்லத் தொடங்கியவர் தன் மகனின் வைத்திய செலவுக்காக.. தங்கள் உறவினர்களிடம் காணியை விற்கச் சென்ற கதையையும் சொல்ல ஆரம்பித்தார்.

எங்களட்ட நிறையக் காணிகள் இருக்குது. நாங்கள் எங்கட அவரின்ர வருமானத்தில தான் வாழுறது. அவர் அரசாங்க உத்தியோகத்தில இருந்தாலும்.. நடுத்தர வருமானம் தான். எனக்கும் என்ர பிள்ளைகளுக்கும் அது போதும். யாரட்டையும் போய் நாங்க காசென்று கை நீட்டி நின்றதில்ல. இப்படியான நெருக்கடி காலத்தில தான் எங்களுக்கு பணப் பிரச்சனை. அதனால பிள்ளையின் வைத்தியச் செலவுக்கு என்று.. எங்கட காணிகளில ஒன்றை விற்க முடிவு கட்டினம். யாழ்ப்பாணத்தில உள்ள தேச வழமைக்கு மதிப்பளிச்சு.. எங்கட காணிக்கு பக்கத்தில உள்ளவையட்ட அதை விற்கப் போறம் எண்டு சொன்னதும்.. அவையும் எங்கட சொந்தக்காரர்கள் தான்... எங்கட நிலையை அறிஞ்சிட்டு..பலரும் அதை அறா விலையில் தான் வாங்க நிற்கினம். எங்க சொந்தச் சனங்களே இப்படி இருக்கும் போது.. தம்பியவை நீங்கள் தானா வந்து உதவி செய்யுறம் என்றது.. மனதுக்கு ரெம்ப நெகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் இருக்குது... என்று சொல்லி முடிச்சாங்க... தன் கவலைகளை வார்த்தைகளில் வெளிப்படுத்தாமலே..!

இதைக் கேட்ட எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஏம்மா.. உங்க உறவுக்காரங்க இப்படி இருக்காங்க.. இப்படியான இக்கட்டான நேரத்தில அவங்களா முன் வந்து எல்லோ உதவி செய்யனும்.. என்று என் ஆதங்கத்தை அந்த அம்மாவிடம் கொட்டினேன். அதற்கு அந்த அம்மா சொன்னாங்க..

அதையேன் மகன் பேசுவான். கோவிலுக்கு.. தர்மம் செய்யுறம் என்று ஊருக்கு காட்ட ஆயிரக்கணக்கில செலவு செய்து திருவிழா செய்யுற பணக்காரர்களில இருந்து வெளிநாடுகளில பல வருசமா வாழுறவை வரை.. எங்கட உறவினரா இருக்கினம். எல்லாருமே அந்தக் காணியை அறா விலையில தான் வாங்க நிக்கினம். அப்படியான உலகமப்பு இது. சரி விடு மகனே.. உதுகளைக் கதைச்சா எனக்கு உள்ள நிம்மதியும் தொலைஞ்சு போயிடும்... என்று சொன்ன அந்த அம்மா.. திடீர் என்று சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு.. என்ர பிள்ளையைப் பார்க்க.. ஏழு மணிக்கு உள்ள விடுவினம் என்றிச்சினம்.. இன்னும் கதவே திறக்கல்ல.. ஏழு பத்தாகிட்டுது.. என்று கடிகாரத்தை காட்டிச் சொன்னதும்..

பொறுங்கோ அம்மா. என்ன நடக்குது என்று.. நான் போய் பார்த்திட்டு வந்து சொல்லுறன் என்று சொல்லி அந்த அம்மாவிற்கு என்னாலான உதவி செய்ய புறப்பட்டுச் சென்றேன். செல்லும் போது என் மனதில்.. இப்படியுமா எம் மக்கள். அடுத்தவன் தவிப்பில்.. ஓடி வந்து உதவியை செய்வதை விட்டிட்டு.. அவன் சொத்தை தட்டிப் பறிக்கும்.. குணமும் எம் மானிட இனத்திலா.. என்ற எண்ணங்களோடு.. பயணித்துக் கொண்டிருந்தது. அப்போ.. அங்கே இருந்த தேமா மரத்தில் காகங்கள் கூடிக் கரைந்து.. ஒரு பாண் துண்டை நாலாய் அன்றி பல நூறு துண்டுகளாய் பகிர்ந்து உண்ணும் காட்சி.. மனதில் பிராணிகளிடம் கூட உள்ள காருணியம்.. கூடவா.. நம்மவரிடம் இல்லை... என்ற வினவலை எழுப்ப... அது எம்மவர்களின் மீது அதிக வெறுப்பையே வளர்த்துக் கொள்ளச் செய்தது.

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 7:10 AM

0 மறுமொழி:

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க