Thursday, February 09, 2012

மச்சான் வாழ்க்கை வெறுத்திட்டுதடா..!

முதன்முதலாக அனொட்டமி.. செய்முறை வகுப்புக்காக பல்கலைக்கழகத்துக்குள் நுழைகிறான்.. கஜன்..! வரும் வழியில் என்னைக் கண்டிட்டு.. எப்படி மச்சான் போகுது வகுப்பு..... முதல் நாள் பதட்டத்தோடு கேள்வியாய் தொடுத்தான்.

ஒன்றும் பிரச்சனை இல்ல. எங்கட குறூப்போட இணைஞ்சுக்கோ.. என்று விட்டு போய்விட்டேன்.

கஜன் ஏதோ காரணங்களால் ஆரம்ப கால வகுப்புகளுக்கு வர முடியாது போக அன்றே தான் முதன்முதலாக செய்முறை வகுப்புக்கு வந்திருந்தான்... அது தான் அவ்வளவு பதட்டம்.

சிறிது நேரத்தில் எங்கட ஆய்வு கூட நுழைவாயிலில்... எக்ஸ்கியூஸ் மி என்ற குரலோடு.. கஜன் வந்து வாசலில் நின்று கொண்டு.. உள்ளே வர தயக்கத்தோடு எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தான்..

பிளீஸ் கம் இன்.. என்று எமது ஆசிரியர் அழைக்கவும் உள்நுழைந்து கொண்டான். உள்ளே நுழைந்தவன்... அந்த உடலத்தையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.

வெட்டிப் பிளந்து.. உறுப்புறுப்பாக பகுத்து.. ஆளாளுக்கு படிக்க என்று ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது அந்த உடல். அதைச் சுற்றி நாங்கள் நின்று கொண்டிருந்தோம். அவனும் எனது அருகில் வந்து நின்று கொண்டான். அது ஒரு மனிதப் பெண்ணின் உடல். நாங்கள் மனித உயிரியலில் முதன்முதலில் அனொட்டமி செய்முறை பயின்றது அந்த உடலத்தில் தான்.


யார் உடலமோ.. தெரியாது. மூளை.. பளுப்பு மஞ்சளில்.. அங்கர் பட்டர் போல.. கட்டியாக இருந்தது. தொட்டுப் பார்த்தால்.. கல்லுப் போல இருந்தது.  இதயம் இன்னொரு பக்கம்.. பிறவுன் கலந்த சிவப்பு நிறத்தில் இதயத் தசைகள் கொண்டு.. பளுப்பு மஞ்சள் நிறத்தில்.. கொழுப்புப் படித்து திண்மமாகி இருந்தது. குடல் பளுப்பு மஞ்சளாக..கருங்கோடுங்களாக.. நாடிகளும் நாளங்களும் மாறிப் போய் இருக்க சுருண்டு கிடந்தது. இரைப்பையும் அவற்றோடு இணைந்து கிடந்தது. வயிற்றுச் சுவர்கள் எங்கும் கரும்படிவுகளாக.. குருதியும்.. பளுப்பு நிறத்தில் இழையங்களும் இறந்து ஒட்டிப் போய் இருந்தன..! சுவாசப்பை.. குருதி உறைந்து கறுத்துப் போயிருந்தது. வெட்டித் திறக்காத உடலின் அகப்பகுதிகள் இருள் சூழ்ந்திருந்தன. இவ்வளவு இருட்டா உடலுக்குள் என்று நான் அந்த உடலத்தை பார்த்த முதல் தடவையே எண்ணியதுண்டு.

எலி.. தவளை என்று சிறிய உயிரிகளில்.. உயிருள்ளவற்றை  போமலினில் போட்டு கொன்று உடனையே வெட்டிப் பார்த்துப் பழகிய எமக்கு பாதுகாக்கப்பட்ட மனித உடலம் பற்றிய படித்தல் கொஞ்சம் சிரமமாகவே இருந்து. குறிப்பாக ஆரம்ப நாட்களில்..! அதே நிலையில் தான் கஜனும் அன்றிருந்தான்.

இருந்தாலும்.. அவனால்.. எங்களைப் போல.. அதை இலகுவாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. மச்சான் எனக்கென்னவோ.. இதைப் பார்க்க முடியல்ல.

ஏன் எதுக்கு.. என்றேன்..?!

நான் வாழ்க்கையில் இன்றைக்குத் தான் ஓர் இறந்த உடலத்தை பார்க்கிறன். அதுவும் வெட்டிக் கிழிச்சுக் கிடக்குது. கருப்பை கூட ஒரு சின்னப் பளுப்பு நிறப் பையாக சுருங்கிக் கிடக்குது. என்ன மனித வாழ்க்கையோ... எலும்பும் தசையுமாய்.. எங்கட உடல்..! என்று தத்துவம் பேச ஆரம்பித்தான்.

மச்சான் இது தத்துவம் பேசுற நேரமில்ல.. இன்றைய வகுப்பு முடிய சின்ன பரீட்சை இருக்குது. அதில சித்தியடையாட்டி நாளைக்கும் இதைத்தான் திருப்பிச் செய்வாய். அதனால என்னென்னத்தை படிக்கனுமோ எதை எதை தெரிஞ்சுக்கனுமோ.. அதை தெரிஞ்சு கொள்.. ஞாபகத்தில வைச்சுக் கொள். அப்ப தான் பரீட்சையை இலகுவாகச் செய்ய முடியும் என்று சொல்லிவிட்டு நான் அப்பால் நகர்ந்துவிட்டேன்.

ஆனால்.. அவனோ.. யன்னல்களூடு.. வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்..!

இதனை அவதானித்த நான் மீண்டும் அவனை அணுகி.. கமோன் man.. கம் அண்ட் டு என்றேன்.

அவன் கண்களில் கண்ணீர் அரும்பி இருந்தது..!

என்னாய்ச்சு.. என்றேன்..!

அதற்கு அவன்.. இல்ல.. நாளைக்கு எங்கட சாவிலும் இப்படித் தானே எங்கட உடம்பு மாறிப் போகும். அதுக்குள்ள எத்தனை ஆட்டம்.. போட்டி.. பொறாமை.. மனிச வாழ்க்கை கொஞ்சண்டா. அதுக்குள்ள.. நாங்க சந்தோசமா இருக்காம.. எதுக்கு போட்டி போறாமை சண்டை சச்சரவன்னு.. காலத்தை ஓட்டிட்டு சாகிறமோ..??! அதில என்ன இருக்கு என்றான்.

மச்சான்.. நீ சொல்லுறது எல்லாம் சரி.  மனிச வாழ்க்கை மட்டுமல்ல.. இந்த பிரபஞ்சத்தில் எதுவுமே நிரந்தரமில்ல. அதுக்காக கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தாட்டி.. நாங்க வாழ முடியாது. புரிஞ்சுக்கோ. எங்கட ஊரில போரில எத்தனை உயிர் இழப்புக்கள். மக்கள் பிணங்களோட தினம் தினம் வாழ வைக்கப்பட்டிருக்காங்க. அதுகளையும் நாங்க சிந்திச்சுப் பார்க்கனும். இப்ப அதைவிட்டிட்டு பிராக்டிக்கலில.. கவனத்தைச் செலுத்து என்றேன்.

ஆனால்.. அவனோ.. மச்சான் எனக்கு வாழ்க்கையே வெறுத்திட்டுதடா. என்னால இதில கவனம் செலுத்த முடியல்ல.. என்று விட்டு.. ஓடிச் சென்று.. எங்கள் ஆசிரியரிடம் ஒரு கடதாசியை நீட்டினான்.

அதில் எழுதி இருந்தது.. என் இறப்புக்குப் பின்னர் என் உடலை இங்கேயே வையுங்கள்..! நான் உயிரோடு வாழந்த காலத்தை விட இதன் மூலம் அதிகம் மற்றவர்களுக்குப் பயன்படுவேன் என்று..!

தன் உடலை தானம் செய்துவிட்ட பின் தான் அவனால் அந்த வகுப்பில் கவனம் செலுத்த முடிந்தது..!

அவனைப் போல்.. நீங்களும் உங்கள் உடல் உறுப்புக்களை தானம் செய்ய முன் வாருங்கள். அவை நீங்கள் வாழ்ந்து முடித்த பின்னர் நீங்கள் மற்றவர்களுக்கு உதவவும்.. மற்றவர்கள் வாழவும்.. அவர்களின் வாழ்வின் மூலம்.. நீங்கள் தொடர்ந்து இப்பூமிப் பந்தில் வாழவும்.. பங்காற்றி நிற்க முடியும்..!

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 2:08 PM

0 மறுமொழி:

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க