Wednesday, March 07, 2012

கருகமணி மாலை.

என்ன பிள்ள சுமங்களா.. கொலிடேக்கே ஊருக்குப் போறியே. பவளம் அன்ரி லண்டன் முருகன் கோவிலில் கண்டு விசாரிக்க..

ஓம் அன்ரி. இவரும் வந்து அசைலம் கேட்டு இப்ப 12 வருசம் ஆகுது. இப்ப ஒரு வருசமாத்தானே எங்கள் எல்லோரும் பாஸ்போட் தந்திருக்கிறாங்கள். நானும் கனடாவில உள்ள அண்ணா அண்ணிட்ட கூடப் போக முடியாமல் இவ்வளவு காலமும் இந்த லண்டனுக்கையே சிக்குப்பட்டு கிடக்கிறன். அதுதான் இந்தக் கொலிடேக்கு என்றாலும் ஒருக்கா ஊருக்கும் கனடாவுக்கும் போகத்தான் இருக்கிறம். ஏன் அன்ரி.. ஏதேனும் விசயமே...

இல்லப் பிள்ள.. ஊருக்குப் போறதுக்கு எனக்கும் விருப்பமா இருக்குது. ஒரு மாதமாவது போய் நின்றிட்டு வருவம் என்றிருக்கிறன். அதுதான் நீங்கள் போறதெண்டால் உங்களோட சேர்ந்து வந்தால் உதவியா இருக்கும் தானே.. என்று தான் கேட்டனான்.

நாங்கள் பிள்ளைகளின்ர ஸ்கூல் கொலிடே வரத்தான் அன்ரி போவம். வேணும் என்றால் சொல்லுங்கோ எங்களுக்கு ரிக்கட் போடேக்க உங்களுக்கும் போட்டு விடுறம். பிறகு நீங்கள் காசை கையில தந்தியள் எண்டால் சரி தானே. இப்ப எல்லாம் மூன்று நாலு மாசத்துக்கு முதலே ரிக்கட் போடனும். அது கூட எக்கச்சக்க விலை போகுது.. அவரட்ட சொல்லி இருக்கிறன் இன்ரநெட்டில பார்த்து மலிவா வரேக்க உடன புக் பண்ணிடுங்கோ என்று.

எந்தப் பிளேனில பிள்ள நீங்க போடப் போறீங்கள்..?!

நாங்கள் சின்னனுகளோட போறது. பிளேன் எல்லாம் மாறிமாறி ஏறிக் கொண்டு திரிய ஏலாது. சிறீலங்கன் எயார் லைன்சில தான் போடப் போறன் என்று சொன்னவர். உங்களுக்கும் ஓகே தானே அன்ரி.

எனக்கும் பிரச்சனை இல்லப் பிள்ள. உவன் என்ர பேரன் உங்கின லண்டனில யுனிவேர்ச்சிட்டியில படிக்கிறான். அவன் சொன்னான் ஆச்சியம்மா ஊருக்குப் போகாதேங்கோ. போறதெண்டால் சிறீலங்கன் எயார் லைன்சில போகாதோங்கோ எண்டான். ஏண்டா எண்டன்.. அவங்கள் தானே எங்கட சனத்தைக் கொல்லுறாங்கள். ஏன் அவங்கட பிளேனில போகனும் என்று கேட்கிறான்.

சும்மா இருங்கோ அன்ரி. உங்கட பேரன்மார் இஞ்ச லண்டனில பிறந்தவை. அவைக்கு ஊர் நடப்புகள் தெரியாது. உங்க சொல்லிக் கொடுக்கிறதை அதுகள் சொல்லிக் கொண்டு திரியுதுகள். போன மாசமும் எங்கட அவரின்ர அண்ணா போயிட்டு வந்தவர். அங்க எல்லாம் நல்லா இருக்காம். ஆமிக்காரங்கள் நல்ல சிநேகிதமா நடக்கிறாங்களாம். எங்கட பொம்பிளப் பிள்ளையள விரும்பிக் கலியாணமே கட்டிறாங்களாம். முந்தி போல.. கோவில் திருவிழாவிற்கு சோனகரின்ர பன்சி கடைகள் எல்லாம் வருகுதாம். கருகமணி மாலை எல்லாம் விக்கினமாம். அங்க இப்ப நிலைமை யுத்தத்திற்கு முந்தின பழைய நிலைமையாம். நல்லா இருக்காம்.

அப்படியே பிள்ள.. நானும் அறிஞ்சனான் தான். உதுகளை எல்லாம் என்ர மகனட்டையும் பேரப்பிள்ளையளட்டையும் சொன்னால் அவை சண்டைக்கு வருவினம். நீங்கள் யாழ்ப்பாண ரவுனுக்கும்.. கொழும்புக்கும்.. திருகோணமலை ரவுனுக்கும்.. மட்டக்களப்பு ரவுனுக்கும் போயிட்டு கூத்தடிச்சிட்டு வாறவையிண்ட கதையைக் கேட்டிட்டு எங்களுக்கு வந்து சொல்லி கடுப்பேத்தாதேங்கோ.. அங்க ஊர்மனை வழிய சனம் இரவில நிம்மதியா நித்திரை கூட கொள்ள முடியாமல் கிடக்குதுகளாம் என்று பேசுவினம்.

ஒரு சில இடத்தில பிரச்சனை தான். ஏன் இப்ப லண்டனில பிரச்சனை இல்லையா அன்ரி. இரவு 9 மணிக்கு மேல றோட்டால போக முடியல்ல. பயம். அதோட ஒப்பிடேக்க ஊரில நிலைமை பறுவாயில்லைத் தானே அன்ரி.

நீ சொல்லுறதும் சரி தான் பிள்ள. அது இருக்க.. ஊருக்குப் போய் எங்க நிக்கப் போறியள்.

ஊரில அன்ரி என்ர சகோதரி ஒருவா கலியாணம் கட்டி இருக்கிறா. யாழ்ப்பாணத்தில. அவையோட நிற்பன். அங்க கிட்ட தான் என்ர சீதன வீடும் இருக்குது. அதை திருத்தி ஒரு மூன்று மாடி கட்டிவிட்டால் வாடகைக்கு விடலாமாம் அன்ரி. சிங்கள ஆக்கள் வீட்டுக்கு அலையுதுகளாம். நல்ல வாடகையும் கொடுக்குதுகளாம். அதுகளால ஒரு பிரச்சனையும் இல்லையாம். எங்கட ஆக்களுக்கு கொடுத்தா வீட்டு உரிமை ஆக்கள் வெளிநாட்டில என்று சொல்லி நடப்புக் கதைப்பினமாம். எழும்ப மாட்டம் எண்டினமாம். சிங்களச் சனம்.. வந்து தங்கிப் போறதுகள் தானே. பிரச்சனை இல்லையாம். அதுதான் உதுகளைப் போய் செய்துட்டு வரும் என்று நினைச்சிருக்கிறன். இங்க இருந்து ஒரு ஐயாயிரம் பத்தாயிரம் பவுனை பாங்கில கடன் எடுத்துக் கொண்டு போனாலே போதும் தானே அன்ரி. அங்க நினைச்சதை செய்திட்டு வரலாம். வருமானமும் ஆகுது தானே.

நீ சொல்லுறது சரி தான் பிள்ள. எனக்கும் நிறைய சீதனக் காணிகள் கிடக்குது தொல்லிப்பழைப் பக்கம். எல்லாம் தரிசாக் கிடக்காம் என்று போய் வந்தவை சொல்லிச்சினம். நானும் உங்களோட வந்தன் எண்டால்.. அதுகளை திருத்தி.. ஒரு சின்ன தங்கும் இடமும் கட்டிட்டு குத்தகைக்கு விட்டிட்டு வந்தன் என்றால் கொஞ்சக் காசாவது வரும் தானே பிள்ள.

ஓம் அன்ரி. நீங்கள் சொல்லுறது சரி. ஆனால் ஊரில சனம் சரியான வறுமையில இருக்காம். சமான் சக்கட்டையள் எல்லாம் விலை கூடிப் போச்சுதாம். களவு அதிகமாம். அதுதான் போகேக்க கனக்க நகைகள் கொண்டு போகாமல்.. என்னட்ட உங்கின வாங்கின நிறைய கருகமணி மாலைகள் கிடக்கு போட்டுக் கொண்டு போகப் போறன். உங்களுக்கும் வேணும் எண்டால் சொல்லுங்கோ அன்ரி தாறன்.

வேண்டாம் பிள்ள. என்னட்டையும் உதுகள் உந்த பேர்த்டே பாட்டியளுக்கு என்று வாங்கினதுகள்.. நிறையக் கிடக்குது. உதுகளைத் தவிர.. நாங்கள் லண்டனிலையே லொக்கரில தான் நகைகள் வைச்சு எடுக்கிறம். எல்லாம் இடமும் நகை என்றால் பயம் பிள்ள. நீங்கள் எப்படி..?!

நாங்களும் தான் அன்ரி. உந்த மனிசனட்ட திட்டு வாங்கி வாங்கி..எவ்வளவு சீட்டைக் கட்டி நகைகளை வேண்டி இருப்பன். அதுகள வீட்டில வைச்சிருக்க ஏலுமே. லொக்கரில தான் வைச்சிருக்கிறம் அன்ரி.

அதுதான் நல்லது பிள்ள. பிள்ள.. எனக்கு நேரம் ஆகுது. நல்ல விலை வரேக்க உங்களோட சேர்த்து எனக்கும் சிறீலங்கன் எயார் லைன்சில டிக்கட்டப் போடுங்கோ. ஒரு மாசம் நின்றிட்டு வருறது போல போட்டால் நல்லது. அங்க இப்ப சரியான வெயிலாம். அதுதான் தாங்க ஏலாது. பார்த்துச் சமாளிப்பம்.

ஓம் அன்ரி. நாங்களும் பிள்ளை குட்டியளோட போறது.. வெயில் தான் அன்ரி ஒரு பெரிய பிரச்சனை. மற்றும்படி அங்க ஒரு பிரச்சனையும் இல்ல. எங்களுக்கு என்ன அன்ரி.. வெளிநாட்டுப் பாஸ்போட் தானே. யாரும் லேசில பிரச்சனைக்கும் வரமாட்டினம்.

நீ சொல்லுறதும் சரிதான் பிள்ள. அப்ப நான் வாறன். ஏதேனும் எண்டால் கோல் பண்ணு பிள்ள. என்ர நம்பர் இருக்கல்லே...?!

ஓம் அன்ரி. உங்கன்ர நம்பர் எல்லாம் இருக்குது. அப்ப போயிட்டு வாங்கோ அன்ரி. நான் ஒரு 5 பவுனுக்கு முருகனுக்கு அர்ச்சனை செய்து கொண்டு போகப் போறன்.

சரி பிள்ள. கவனமாய் இரும்மா. அப்ப நான் போயிட்டு வாறன்.

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:29 AM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க