Friday, March 09, 2012

அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்குள்... மனித உரிமைகளும் ஈழத்தமிழர் வாழ்வுரிமையும்..!

அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்குள்... மனித உரிமைகளும் ஈழத்தமிழர் வாழ்வுரிமையும்..!

Posted Image

முள்ளிவாய்க்கால் நோக்கிய அமெரிக்க நகர்வுகள்:

1996 ஆம் ஆண்டு கிளிங்டன் நிர்வாகம் சந்திரிக்கா அம்மையாருடன் ஒட்டி உறவாடிய காலத்தில் ஈழக் களத்தில், சிங்கள பேரின தேசியவாதிகளின் பயங்கரவாத சிங்கள இராணுவம் வெற்றிக் களமாடிக் கொண்டிருந்த நேரத்தில் இதோ புலிகளின் கதை முடியப் போகிறது என்ற நேரத்தில் எடுத்த முடிவுகளில் முக்கியமான சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் விடுதலைப் போராட்ட அமைப்பான விடுதலைப்புலிகளை இணைத்துக் கொண்டமை.

இத்தனைக்கும் விடுதலைப்புலிகள் எந்த அமெரிக்க பிரஜையையும் குறிவைத்து தாக்குதல்களும் செய்யவில்லை அமெரிக்காவிற்கு அரசியல்ரீதியிலும் கொள்கை ரீதியிலும் எதிராக செயற்பட்டதில்லை.

பிறகேன் இந்த முடிவு..???!

1990 களில் சோவியத் வீழ்ச்சி ஏற்பட்டு இந்திய வெளிவிவகாரக் கொள்கை பனிப்போர் கால உறங்கு நிலைக்குப் பின் ஓட்டுக்குள் பதுங்கி இருந்த ஆமை தலையை நீட்டுவது போல.. இந்தியா அமெரிக்க சார்பு அரசியல் பொருண்மிய இராணுவ நிலைப்பாட்டை கைக்கொள்ள முடிவு செய்திருந்த காலம்.

அதற்கும் புலிகளுக்கும் என்ன தொடர்பு..??!

இந்திரா அம்மையார் 1970 களில்..அகிம்சை வழியில் போய்க்கொண்டிருந்த ஈழப்போராட்டத்தை 1980 களில் ஆயுதப் போராட்டமாக ஊக்கிவிக்க முக்கியமான காரணமாக அமைந்தது சிறீலங்கா ஐக்கிய தேசியக் கட்சியின் ஜே ஆர் ஜெயவர்த்தன அரசின் அமெரிக்க நெருக்கமே..!

சிறீலங்காவை மையப்படுத்தி ஈழத் தமிழர்கள்கள் தமது பூர்வீக மண்ணில் நடத்தி வந்த அரசியல் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக இனங்காட்டியதில் இருவர் முக்கியமானவர்கள். ஒருவர் ஜே ஆர் ஜெயவர்த்தனா. இன்னொருவர் அப்போதைய அமெரிக்க அதிபர் றொனால்ட் ரேகன்.

அவர் ஒரு கட்டத்தில் ஜே ஆர் ஜெயவர்த்தனவிற்கு அளித்த ஆலோசனை.. தமிழர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள்.. அவர்களை அழிப்பதன் மூலமே.. இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.. என்பது. அவர் வெறும் ஆலோசனையோடு அதனை நிறுத்திக் கொள்ளவில்லை.. தமிழர்களுக்கு எதிராகப் போராட சிங்களப் படைகளுக்கு அமெரிக்க இராணுவப் பயிற்சிகளையும்.. இஸ்ரேலிய மொசாட் ஆதரவையும்.. பாகிஸ்தான் படைகளின் பங்களிப்பையும் பெற்றுக் கொடுத்ததோடு.. சிறீலங்கா வான்படையை பலப்படுத்தியதோடு இராணுவ தளபாடங்களையும் பயங்கரவாத ஒழிப்பு மனிதக் கொடூரங்களையும் பரிசளித்தார். றேகனைத் தொடர்ந்து வந்த எல்லா அமெரிக்க தலைவர்களும் இந்த நிலையில் இருந்து இன்று வரை மாறவில்லை. மாற வேண்டிய தேவையும் இந்து சமுத்திரத்தில் அவர்களுக்கு எழவில்லை.

ஏன் இவை எல்லாம்.. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சிறீலங்காவின் முக்கியத்துவமே இந்த நடவடிக்கைகளுக்கு முக்கிய காரணமாக இருந்தது. தமிழர்கள் அரசியல் அனாதைகளாக அந்த பிரதேசத்தில் வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் அப்போதைய இந்தியாவின் இந்திரா அரசின் ஆதரவோடு ஒரு ஆயுதப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தமை அமெரிக்காவிற்கு சவால் முகுந்த ஒன்றாகவே தெரிந்தது. காரணம் 1982 களின் சோவியத் - அமெரிக்க பனிப்போர் உச்சக்கட்டத்தில் இருந்த காலம் அது. இந்திரா அம்மையார் தீவிர சோவியத் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருந்ததோடு பாகிஸ்தானோடு நீண்ட முறுகல் போக்கை கொண்டிருந்தார். அமெரிக்காவோ பாகிஸ்தானை மையமாக வைத்து இந்தியாவை கட்டுப்படுத்த முனைந்து கொண்டிருந்தது. இந்தச் சோதனைக் கால இடைவெளியில்.. இந்தியா தென் முனையில் தமிழர்களை வைத்து சிறீலங்காவை கட்டுப்படுத்த முனைந்து கொண்டிருந்தது.

அதனால் அமெரிக்காவிற்கு சிறீலங்காச் சிங்கள அரசின் ஆதரவும் சிறீலங்காவில் வலுவான இருப்பும் அவசியமாகப்பட்ட நிலையில்... சிங்களவர்களின் தமிழர் விரோதப் போக்கை தனக்கு சாதமாக்கி தான் அங்கு நிரந்தரமாக நல்ல பிள்ளைக்கு நடிக்க முடிவு கட்டிச் செயற்பட்டது. நேரடியாகவே தமிழர் விரோத நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டது அமெரிக்கா.

இது எதுவரை நீண்டது என்று நினைக்கிறீர்கள்.. இது 2009 மே முள்ளிவாய்க்கால் பேரவலம் வரை நீண்டது என்பதை விட இன்று வரை நீள்கிறது என்பதே உண்மை..!

இதற்கிடையில்.. 1987 இந்தியப் படைகளின் சிறீலங்கா வருகை.. இது அமெரிக்காவால் அந்தளவுக்கு வரவேற்கப்பட்ட விடயம் அல்ல..! வெளிப்படையாக எதிர்க்காத போதும். இந்தியப் படை வரவின் உண்மை தன்மையை அமெரிக்கா நன்கு கணக்கிட்டுக் கொண்டிருந்தது. ராஜீவ் காந்தியின் சில நிலைப்பாடுகள் அமெரிக்காவின் இந்து சமுத்திர ஆதிக்கத்திற்கு சவால் விடும் வகையில் அமைந்திருந்த நிலையில்.. அமெரிக்கா அவரை நோக்கி குறி வைக்க வேண்டிய தேவை இருந்தது. அவரை இரண்டு வடியில் எதிர்கொள்ள அது தலைப்பட்டது. 1. அரசியல் வழியில். 2. ஆயுத வழியில்.

இதே காலப்பகுதியில் சிறீலங்காவில் ஆட்சியில் இருந்த பிரேமதாச சீன ஆதரவுப் போக்குடையவர்.தீவிர சிங்கள பெளத்த தேசியவாதியான அவர் அமெரிக்காவின் வல்லாதிக்க கொள்கைக்கு எதிரானவராக இருந்ததோடு இந்தியாவின் பிராந்திய வல்லாதிக்கத்தையும் எதிர்த்தோடு தமிழர்களுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நெருக்கம் இலங்கைத் தீவில் சிங்கள பெளத்த தேசியத்தின் இருப்புக்கு பாதகம் என்றும் கருதி இருந்தார். இந்த நிலையில் இடதுசாரி ஜே வி பி கிளர்ச்சி ஒன்று பிரேமதாசாவை ஆட்டிப்படைக்க.. அவர் இந்திய விரோதப் போக்கோடு.. சீன ஆதரவை நோக்கி ஓடினார். அதுவரை ஜே ஆர் அரசினால்.. அதிகம் நம்பப்பட்ட அமெரிக்கா அங்கு கைவிடப்பட்ட நிலையில்.. அமெரிக்கா விழித்துக் கொண்டது. இப்படியே போனால் சிறீலங்காவில் சீன ஆதிக்கம் வலுப் பெறும். அங்கே வடக்குக் கிழக்கில் இந்திய ஆதிக்கம் வலுப்பெறும். இறுதியில் அமெரிக்கா இந்து சமுத்திரத்தில் வலுவிழந்த சக்தியாகி விடும் என்று பயந்தது..! இந்தப் பலவீனத்தை அமெரிக்கா விரும்பி இருக்கவில்லை. இதனைப் போக்கிக் கொள்ள சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்காவிற்கு முதலில்.. இந்தியாவின் சிறீலங்கா நோக்கிய நகர்வுகளை தடுத்து நிறுத்துவதே முக்கியமான தேவையாக இருந்தது.

அதற்கு ராஜீவ் காந்தியின் அரசியல் வீழ்ச்சி தேவைப்பட்டது. ஊழல் குற்றச்சாட்டுக்களை கிளறிவிட்டு.. அவரை அரசியல் களத்தில் இருந்து அகற்றிக் கொண்ட அமெரிக்கா அதன் தொடர்ச்சியாக இந்தியப் படைகள் இலங்கைத் தீவை விட்டு விலகிச் செல்லும் காட்சியையும் கண்டு ரசித்தது. அன்றைய பிரேமதாச அரசின் நிலைப்பாட்டையும் விடுதலைப்புலிகளின் தமிழ் மக்களின் நிலைப்பாட்டையும் நன்கு கணிப்பிட்டிருந்த அமெரிக்கா.. இந்த முத்தரப்பினதும் இந்திய விரோத நிலைப்பாடு அமெரிக்காவிற்கு போனஸ் இலாபமாக அமைந்தது. இதன் மூலம் மீண்டும் அமெரிக்கா சிறீலங்காவில் ஆதிக்கம் செய்யக் கூடிய வலுவான நிலை உருவானது. இருந்தாலும் அமெரிக்க நகர்வுகளால் பாதிக்கப்பட்ட ராஜீவும்.. பிரேமதாசவும் சும்மா இருக்க மாட்டார்கள் என்பதால்.. ராஜீவை போட்டுத் தள்ளியது அமெரிக்கா. அதேவேளை ராஜீவை சும்மா போட்டுத் தள்ளிவிடுவது அமெரிக்காவின் நோக்கம் அல்ல. சிறீலங்காவில் இந்திய ஆதிக்கத்தின் முக்கிய அம்சமாக சிறீலங்காவில் தமிழர்களின் விடுதலை உணர்வும் போராட்டமும் அமைந்திருக்கிறது என்பதை அமெரிக்கா இனங்கண்டு கொண்டதால்.. இந்த இரண்டு சக்திகளின் பிணைப்பையும் முற்றாக அகற்ற ராஜீவை போட்டுத்தள்ளிவிட்டு பழியை தமிழர்களின் ஒரே போராட்ட சக்தி மீது போட்டு தமிழர்களின் போராட்டத்தை உலகறிந்த பயங்கரவாதமாக்கிக் கொண்டது அமெரிக்கா. இந்த இடத்தில் அதே காலப்பகுதியில் பின்னர் பிரேமதாசவும் கொல்லப்பட்டார் என்பதையும் கவனிக்க வேண்டும்.

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக இனங்காட்டிக் கொண்டதில் அதிக நன்மை பெற்ற ஒரே நாடு என்றால் அமெரிக்கா தான். 1987 - 91 வரை கிட்டத்தட்ட இந்து சமுத்திரத்தில் அனாதையாக நின்ற அமெரிக்காவிற்கு.. வலுவான காய் நகர்த்தலுக்கான தளத்தை தமிழர்களின் விடுதலைப் போராட்டமும் பயங்கரவாத முலாமும் அமெரிக்காவிற்குப் பெற்றுக் கொடுத்தது. அதனால் தமிழர்களின் போராட்டத்தில் நியாயம் இருப்பது வெளி உலகிற்கு தெரியக் கூடாது என்பதில் அமெரிக்கா கண்ணும் கருத்துமாக இருந்து 1996 இல் விடுதலைப் புலிகளை சர்வதேச பயங்கரவாதப் பட்டியலில் போட்டு அதனை கனகச்சிதமாக நிறைவு செய்து கொண்டிருந்தது.

இருந்தாலும்.. விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை அது முற்றாக தடுத்து நிறுத்த விரும்பவில்லை. காரணம்.. சிறீலங்காவில் பிரேமதாச ஆட்சியைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த சந்திரிக்காவின் இந்திய நெருக்கமும்.. இந்தியாவில் ஆட்சியில் இருந்த இந்துத் தேசியவாதிகளுமே..! இந்தியாவில் ஆட்சியில் இருந்த இந்துத் தேசியவாதிகள் அமெரிக்காவின் நெருங்கிய நண்பர்களாக இருக்கவில்லை. இந்தியா பொருண்மிய பலம் பெற்று.. வல்லரசாக வேண்டும் என்ற குறிக்கோளோடு அவர்கள் செயற்பட்டனர். இதற்கு நல்ல உதாரணமாக அமைந்தது 1998 இல் இந்தியா அமெரிக்காவே மிரளும் வண்ணம் செய்து கொண்ட அணு குண்டு வெடிப்பு பரிசோதனைகள். அமெரிக்காவிற்கு இது திக்கென்று இருந்தாலும்.. பாகிஸ்தான் பதிலுக்கு சீன ஆதரவோடு நடத்திய அணு குண்டு வெடிப்பு பரிசோதனைகளை அமெரிக்காக்காவை தூக்கி வாரிப் போட்டது.

இந்த நிலையில்.. மீண்டும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தன் நிலை தர்ம சங்கடமாகப் போகிறதே என்று உணர்ந்து கொண்ட அமெரிக்கா.. பாகிஸ்தானையும்.. இந்தியாவையும்.. சீனாவையும் கட்டுப்படுத்தி இந்து சமுத்திரத்தில் தனது ஆதிக்கத்தை நிறுவுதல் என்ற புதிய பரிமானத்தை இனங்கண்டு கொள்ள வேண்டி இருந்தது. அதுவரை பாகிஸ்தான் ஆதரவு இந்திய எதிர்ப்பு.. அல்லது இந்திய ஆரதவு சீன எதிர்ப்பு என்று நின்ற அமெரிக்காவிற்கு.. மூன்று சக்திகளையும் எதிர்த்து (நேரடியாக அன்றி மறைமுகமாக) தனது ஆதிக்கத்தை இந்து சமுத்திரத்தில் நிலைநாட்ட வேண்டிய தேவை எழுந்தது. இந்த நிலையில் மீண்டும் சிறீலங்கா முக்கிய மையமாக அமெரிக்காவிற்குப் பட்டது.

அதேநேரம் இந்தியாவிலும் அதன் கொள்கைகள் தொடர்பில் பொருண்மிய வளர்ச்சி தொடர்பில்.. மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. சீன ஆதிக்கம் கட்டுப்பாடின்றி.. இந்து சமுத்திரம் முழுவதும் வியாபிப்பதை கண்டு அஞ்சிய இந்தியா இதனை தான் தனித்து நின்று சமாளிக்க முடியாது என்ற நிலையில்.. அமெரிக்காவின் நிகழ்ச்சித் திட்டத்தோடு ஒரு வரையறைக்கு உட்பட்டு பயணிப்பதே நன்று என்று தீர்மானித்தது. அதேவேளை 2000ம் ஆண்டு வாக்கில் இலங்கைத் தீவில் விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியில் வலுப்பெற்று சுதந்திர தமிழீழ தேசத்தை நிறுவக் கூடிய அளவிற்கு கடல் நில ஆகாய ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்தனர். இது இந்தியாவிற்கு சிறீலங்கா மீதான தன் பிடியை இறுக்க மறை முகமாக உதவியது. அமெரிக்க சூழ்ச்சியில் நிகழ்ந்த ராஜீவின் கொலையடுத்து இந்தியா போட்டிருந்த விடுதலைப்புலிகள் மீதான பயங்கரவாதத் தடை இங்கு இந்தியாவிற்கு பயன் அளித்தது. அமெரிக்க வழியில்.. இந்தியா தமிழர்களின் போராட்டத்தை பயங்கரவாதமாக உச்சரித்து விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியில் பலம் பெறுவதைக் காட்டி.. இந்தியா அதை வைத்து சிறீலங்காவை இறுக்குவதும்.. அதன் மீது தான் செல்வாக்குச் செய்யவும் முனைந்து கொண்டது. இது அமெரிக்காவிற்கு சகிக்கக் கூடிய ஒன்றாக இருக்கவில்லை. அந்த நிலையில்... மீண்டும் விடுதலைப்புலிகளை மையமாக வைத்து இந்தியப் படைகள் சிறீலங்காவிற்குள் இறக்கப்படலாம் (ஆனையிறவு வெற்றியினை தொடர்ந்து நிகழ்ந்த காட்சிகள்.. இதற்கு சமர்ப்பணம்) என்று கருதிய அமெரிக்கா.. ராஜீவ் கொலையை அடுத்து அமெரிக்க சதியை உணராமல் தமிழர்கள் மீதும் விடுதலைப்புலிகள் மீதும் பகைமை உணர்வு பாராட்டி வந்த.. காங்கிரஸை ஆட்சிக்கு கொண்டு வருவதன் மூலம்.. புலிகளை இந்தியாவைக் கொண்டே அழித்து தமிழர்களையும் இந்தியாவையும் நிரந்தரப் பகையாளி ஆக்கி.. சிறீலங்காவில் தனது இருப்பை வலுவாக்க முடியும் என்று கருதியது. தமிழர்கள் மீதான தனது செயற்பாடுகளை.. விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடாக சித்தரித்துக் கொண்டு செயற்பட்டது அமெரிக்கா.

இந்த நிலையில்.. அமெரிக்காவின் நகர்வுகளுக்கு ஏற்ப காங்கிஸும் இந்தியாவில் ஆட்சியில் ஏற.. அமெரிக்காவின் எண்ணங்களை அப்படியே செயற்படுத்த முன் வந்தார் சோனியா காந்தி. அவருக்கு அச்சுறுத்தலாக இருந்த ஒரே விடயம். தமிழகமும் கலைஞர் கருணாநிதியுமே. கருணாநிதியின் குடும்ப அரசியல் தாகத்தை இனங்கண்டு கொண்ட சோனியா அவரின் அந்தப் பசிக்கு தீனியிட்டு.. முள்ளிவாய்க்கால் பேரவலத்தை தனது ஏஜெண்டுகளான மேனன்.. நாராயணனைக் கொண்டு நடத்தி முடித்தார். இதன் மூலம் இந்தியா சிறீலங்காவை நோக்கி நெருங்கவும் செய்தார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதாக எண்ணிக் கொண்டார் சோனியா.

இந்த மனிதப் பேரழிவு நாடகத்தில் தனது பங்கில்லையேல் தனது நிலை தர்ம சங்கடமாகி சிறீலங்கா இந்தியா பக்கம் சாய்ந்திடுமோ என்று அஞ்சியது அமெரிக்கா. சிறீலங்காவில் தன் நீண்ட கால நண்பன் வீட்டில்.. அமெரிக்காவும் இந்தியாவும் நாடகமாடுறாங்களே.. நாங்கள் சும்மா இருந்தால் நம்ம பிழைப்பு என்னாவது என்று சீனாவும் மூக்கை நுழைக்க.. உலகமே அங்கு வந்து நின்று பெண் சிங்கம் ஒன்று அடித்த இரையை ஆண் சிங்கங்கள் பகிர்ந்து உண்பது போல.. அடிக்கக் கூடிய இலகுவான ஆனால் மிகவும் ஆதாயமான இலக்கை இவர்கள் அடித்துத் தகர்த்துக் கொண்டிருந்தார்கள்.

அங்கு மனித உரிமை மீறல்கள்.. படுகொலைகள்.. எல்லாம் சர்வ சாதாரணமாக நிகழ்ந்தன. இந்த நிலையில்.. சிங்களப் பேரினவாதம் அதன் வரலாற்று எதிரியை துவம்சம் செய்து கொண்டிருந்ததோடு அதன் நீண்ட நாள் கனவான சிறீலங்கா சிங்கள பெளத்த தேசம் என்பதை கட்டி நிறுவிக் கொண்டிருந்தது. தமிழர்கள் சிங்களத்தின் கால்களின் கீழும் சர்வதேசத்தின் கொலைக்கரங்களிலும்.. தேடுவாரின்றி செத்துக் கொண்டிருந்தார்கள். மட்டுப்படுத்திய இராணுவ வலிமையோடு இருந்த புலிகள் சர்வதேச படைப்பலத்தின் முன் மண்டி இட்டு மடிந்தார்கள். களம் அப்படியே தமிழர்களுக்கு விரோதமாக மாறிப் போனது. இந்த நிலையில்.. அங்கு ஒரு சிறிய குழப்பமும் வெற்றிடமும் ஏற்பட்டது.

அடிக்கப்பட்ட இரையை ரசித்து ருசித்து உண்டவர்கள்.. இரையின் கடைசி எலும்பு வரை ருசித்துக் கொண்டிருக்கும் தறுவாயில் தான் சீனாவின் காய் நகர்த்தல்கள் உக்கிரமாகின. இதனை கண்டு அமெரிக்கா திக்கித்துப் போனது. சிறீலங்கா சிங்களத் தலைமைகள் இந்த தமிழர்களுக்கு எதிரான பன்னெடுங்காலப் போரை வெல்ல.. கடும் விலை கொடுத்துள்ள நிலையில்.. இன்று அவர்களின் பேரம் பேசும் வலு உக்கிரமடைந்து சிங்கள ஆளும் வர்க்கத்திற்கும் பேரினவாதிகளிற்கும் வலுச் சேர்த்துள்ள நிலையில் அமெரிக்கா தான் எப்படி மீண்டும் இலங்கைத் தீவில் செல்வாக்குச் செய்வது என்று சிந்திக்க ஆரம்பித்தது. இதனிடையே பேரம் பேசும் வலுவிலும் பிராந்திய ஆதரவாளரை தேர்தெடுக்கும் வழியிலும் சுயாதீனத்தன்மையை உணர்ந்து கொண்ட சிங்களம்.. இலங்கைத் தீவில் தனது இருப்பையும் தனது பேரினவாத நிலைப்பாட்டையும் வலுவாக்கிக் கொள்ள எண்ணிக் கொண்டது.

இடையூறு அச்சுறுத்தல் இல்லாத ஒரு கால இடைவெளியில்.. சிறீலங்காவை எப்படி கைக்குள் போடுவது என்ற போட்டி இந்து சமுத்திரத்தின் ஆதிக்க சக்தியை தீர்மானிக்கும் நிலை 2009 மே க்குப் பின் உருவானது.

சீனா.. தனது பொருண்மிய பலத்தைக் காட்டி சிறீலங்காவை வளைத்துப் போட நினைத்தது. அம்பாந்தோட்டையில் அதன் இந்து சமுத்திர கடற்கண்காணிப்பு மையத்தை நிறுவியது. இந்தியா தனது புலி அழிப்பு உதவியைக் காட்டி மட்டுப்படுத்திய பொருண்மிய ஈடுபாட்டோடு சிறீலங்காவை வளைத்துப் போட நினைத்தது. இந்தப் போட்டியில் அமெரிக்கா கொஞ்சம் பிந்தங்கிப் போகவே.. அமெரிக்காவின் மூளையில் தமிழரின் ஒப்பாரியின் ஓசை விழுந்தது..!

இதற்கிடையில் மன்னார் வளைகுடா எண்ணெய் ஆராய்சியும்... அம்பாந்தோட்டை துறைமுகமும்.. பலாலி விமானப்படை தளமும்.. இந்தியா.. சீனா.. ரஷ்சியா.. பிரிட்டன் என்று.. கூட்டாளிடளிடம் இருந்து சும்மா வெகுமதிகள் சிங்கள அரசை தேடி வந்து குவிந்து கொண்டிருந்தன.

இந்த நிலையில் ஐநா என்ற அதன் ஏஜெண்டுக்கூடாக தான் செய்யும் நகர்வுகளே எனி சிறீலங்காவை தனது பிடிக்குள் மீண்டும் எடுக்க உதவும் என்ற நிலையில்.. தமிழர்களின் ஒப்பாரிக்கு செவிமடுக்க ஆரம்பித்தது அமெரிக்கா..! மனித உரிமை மீறல்கள் என்ற வலுவான அஸ்திரத்தை கையில் எடுத்து சுழற்ற ஆரம்பித்தது தான் தாமதம்.. இலங்கைத் தீவில் ஆதிக்கப் போட்டியாளர்கள் எல்லோரும் வியப்பில் மூழ்கிப் போனார்கள். சீனா.. இந்தியா.. இந்த மனித உரிமை அஸ்திரத்தின் மூலம் சிங்களத்தின் மீது தங்கள் பிடி தளரக் கூடாது என்று நிற்க அமெரிக்காவோ... இதை விட்டா வேற கதி என்ற நிலையில்..!

ஆனாலும் அமெரிக்காவின் நிலைப்பாடோ இப்படி இருந்தது. தமிழரின் ஒப்பாரி மட்டும் தான் அதற்கு தேவைப்பட்டது. தமிழரின் நியாயங்கள் ஈடேறுவது அவர்களுக்கு நீதி கிடைப்பது பற்றி எல்லாம் அது கவலைப்படவில்லை. தமிழர்களின் விருப்பங்களை திருப்தி செய்யப் போனால் சிங்களப் பேரினத்தின் நெருக்கம் சீன.. இந்திய.. நட்பு நோக்கி இன்னும் இன்னும் இறுகும் என்று பயப்படுகின்ற அமெரிக்காவிற்கு.. LLRC என்ற துரும்பிச் சீட்டும் இன நல்லிணக்கம் என்ற கவர்ச்சிகரமான பதங்களும் கிடைத்துக் கொண்டன.

இந்தப் பதங்களுக்குப் பின்னால்.. இருந்து கொண்டு.. அமெரிக்கா பலரை திருப்தி செய்ய முனைகிறது. LLRC மூலம் ஐக்கிய இலங்கை.. சகல இன மக்களுக்கும் சிறீலங்கா சொந்தம்..! ஆமாம்.. அப்படின்னா எதற்கு சிறுபான்மை இன ஆட்சியை அகற்றி.. பெரும்பான்மை இன கறுப்பின ஆட்சியை தென்னாபிரிக்காவில் நிறுவினனீங்க. பேசாம இன நிற ஐக்கியம்.. நல்லிணக்கம் என்று வெள்ளையர்களையே ஆட்சி அதிகார பீடத்தில் அமர்த்தி வைச்சிருக்கலாமே. இதுவே அமெரிக்காவின் சுத்தப் பித்தலாட்டத்தை இனங்காட்ட போதுமாக உள்ளது. ஆட்சியில் இருக்கிறவன் சொல்லுறது தான் சட்டம். இன்று சிங்களவன் தன்னைச் சூழ்ந்து எழுகிறன் நெருக்கடியை தவிர்க்க.. இன ஐக்கியம்... ஒன்றுப்பட்ட இலங்கை என்பான்.. நாளை நிலைமை தனக்கு சாதகமானதும்.. இலங்கை சிங்கள பெளத்த தேசம் என்பான். அமெரிக்காவும் அப்போ ஆமாப்போட்டு தன் பிடியை ஆதாயத்தை வலுவாக்கவே நினைக்கும்..!

LLRC [சிங்களம் (தமிழர்களை ஏய்க்க) கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்கு குழு..அறிக்கை] மிதவாத சிங்களத் தலைமைகளையும் மிதவாத தமிழர் தலைமைகளையும் மயக்குகின்ற ஒரு பதம் என்பதை அமெரிக்கா நன்கு அறிந்து வைத்திருக்கிறது. அதற்கு மிதவாதின்னு தன்னை தம்பட்டம் அடிக்க விரும்பும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சம்பந்தனும்.. சுமந்திரனும் மயங்கிக் கிடப்பதையும் அமெரிக்கா நன்கு அறிந்தே வைத்துள்ளது. கடும்போக்கு சிங்களத் தேசிய தலைமைகளை கூட அமெரிக்கா இதன் மூலம் திருப்தி செய்ய முனைகிறது. அதேபோல் இதன் மூலம் இந்தியாவின் சீனாவின் வாயை மூடி.. தமிழகத்தின் சிறீலங்கா சிங்கள எதிர்ப்பையும் சமாளிக்க முடியும் என்று நினைக்கிறது.. அமெரிக்கா.

இன்னொரு பக்கம் இந்தியாவின் அளவிற்கு மிஞ்சிய சிறீலங்கா மீதான தலையீட்டை தடுக்க.. LLRC பரிந்துரை அமெரிக்காவிற்கு அவசியமாகிறது.

இந்த நிலையில்.. ஏன் இந்த நகர்வுகள் அமெரிக்காவிற்கு முக்கியம்...??! என்று பார்ப்போம்.

மனித உரிமை மீறல்கள் என்று சொல்லி லிபியா மீது.. ஈராக் மீது.. எகிப்த் மீது.. சிரியா மீது நடவடிக்கை எடுத்த கணக்கா ஏன் அமெரிக்கா..சிறீலங்கா மீது எடுக்க விரும்பவில்லை..???!

விடுதலைப்புலிகள் அற்ற இலங்கைத் தீவு என்பது கட்டுப்படுத்த முடியாத சிங்களத் தலைமைகளின் கையில் இலங்கைத் தீவை விட்டுச் சென்றுள்ளது. அந்த வகையில் அவர்கள் தங்கள் பேரினவாத எண்ணங்களுக்கும் சிங்கள இனத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் வலுச் சேர்க்கக் கூடிய எந்த நாட்டோடும் நட்புப் பாராட்டும் நிலை தோன்றியுள்ளது. இது சீனா.. இந்தியா.. ரஷ்சியா.. ஈரான் என்று எல்லா அமெரிக்க எதிர்ப்பு நாடுகளும் தங்கு தடையின்றி சிறீலங்கா மீது செல்வாக்குச் செய்யக் கூடிய திறந்த நிலையை தோற்றுவித்திருப்பதால்.. அமெரிக்காவால் இந்து சமுத்திரத்தில் தனது ஆதிக்கத்திற்கான காரணி வலுவிழந்து கொண்டு செல்லும் நிலை உணரப்பட்டுள்ளது..! இதனைச் சரிக்கட்ட... சிங்களவர்களைத் திருப்திப்படுத்தனும்.. இந்தியாவை வெருட்டனும்.. திருப்திப்படுத்தனும்.. சீனாவை எட்ட வைக்கனும்.. தமிழர்களை மனித உரிமைகளை முன்னிறுத்த சும்மா தட்டிக் கொடுக்கனும்.. இப்படி நிறையச் செய்ய வேண்டி உள்ளது.

அந்த வகையில் அமைவதே அமெரிக்காவின் மனித உரிமை கவுன்சிலுக்கான பிரேரணை. உப்புச் சப்பில்லாத தமிழ் மக்களே நம்ப மறுக்கின்ற LLRC அறிக்கையை அமெரிக்கா தூக்கிப் பிடிக்க காரணமும் இதுதான். உலகில் எங்கோ ஒரு ஓரத்தில் உண்மை விரும்பும் விளம்பும் சக்திகளும் இருக்கச் செய்கின்றனர் என்ற வகையில் அமெரிக்காவின் இந்த நகர்வுகளை ஐநா மூவர் குழு வரவேற்க மறுத்திருக்கிறது.

தமிழ்நெட் போன்ற ஊடகங்கள் அமெரிக்க - இந்திய - சீன முக்கூட்டு நகர்வுகளின் நோக்கங்களை தெளிவாக விளக்கிக் கூறி வருகின்றன.

ஆனால்... ஒப்பாரிகளே விடையாகிப் போன தமிழ் மக்களுக்கோ.. குறிப்பாக முள்ளிவாய்க்கால் பேரவல அதிர்ச்சியில் இருந்து மீளாதிருக்கும் புலம்பெயர் தமிழ் மக்களுக்கோ.. அமெரிக்காவின் பிரேரணை என்பது ஒரு முக்கியமாக தெரிகிறது. அப்படி தெரிய வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் தேவையும் கூட. அமெரிக்காவைப் பொறுத்தவரை.. கடும் போட்டிச் சூழலாக எழுந்துள்ள இந்து சமுத்திரப் பிராந்தியத்தில்.. சிறீலங்கா மூலம் தனக்கு இந்து சமுத்திரத்தில் வலுவான நிலை அவசியம் என்பதே நோக்கமாக உள்ளது. தமிழ் மக்கள் உரிமை பெற்று வாழவும் அவர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் விசாரிக்கப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதல்ல அதன் நோக்கம். ஏதாவது ஒன்றை வழங்கி தமிழர்களைச் சரிக்கட்டி.. சிங்களவர்களை மகிழ்விப்பதன் மூலம்.. தான் இந்து சமுத்திரத்தில் வலுவாக காலூண்றி நிற்க கங்கணம் கட்டி நிற்பதை தவிர அமெரிக்காவின் நகர்வுகளுக்குள் உண்மையான மனித உரிமை மீறல்கள்.. பற்றிய அக்கறை இல்லை என்பதை தமிழ் மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்த அமெரிக்க நகர்வுகளை.. சர்வதேச நகர்வுகளை.. பலவீனமான.. உலகில் எந்த ஆதரவும் அற்ற தமிழர்கள் நாம் எப்படி சமாளிக்கப் போகின்றோம் என்பது முக்கியமான கேள்வியாக எழுந்துள்ளது இன்று..??!

எம்மிடம் உண்மை இருக்கிறது. தர்மம் இருக்கிறது. அதேபோல் உலகில் உண்மையை விரும்பும் மதிக்கும் ஒரு சின்ன மக்கள் கூட்டமும் உள்ளது.

அதேபோல்.. எம்மிடம் கடந்த கால வரலாறு என்ற ஒன்றுள்ளது. அதனை நாம் வெளி உலகிற்கு அப்படியே படம் பிடித்துக் காட்டுவதன் மூலம்.. எமது உரிமைகள் இலங்கைத் தீவில் மழுங்கடிக்கப்படுகின்றன என்பதையும் இலங்கைத் தீவில்.. சிங்கள பெளத்த பேரினக் கொள்கைகள் திணிக்கப்பட தமிழினப் படுகொலைகள் திட்டமிட்டு நிகழ்த்தப்படுகின்றன என்பதையும் அமெரிக்காவின் சூழ்ச்சிகளுக்கு மேலால் சென்று சொல்லவும் சமர்ப்பிக்கவும் வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். இதை நாம் தொடர்ச்சியாகச் செய்ய வேண்டும்.

இன்னொன்று.. அமெரிக்காவின் காய் நகர்த்தல்களுக்கு மத்தியில் நாம் நகர்த்தும் காய்கள். அமெரிக்கா எம்மை வைத்து.. சுதந்திரமாக காய் நகர்த்த அனுமதிப்பது அதற்கு அச்சுறுத்தலின்றிய வெற்றிக்கு வழி வகுக்கும். அது எமக்குப் பலவீனமாகும். அமெரிக்க காய் நகர்த்தல்களுக்கு.. இந்திய.. சிறீலங்கா.. சீன.. காய் நகர்த்தல்களுக்கு சமாந்திரமாக.. குறுக்காக நாங்களும் எங்கள் களத்திற்கு ஏற்ப காய் நகர்த்த வேண்டும்.

மேலும்..

LLRC அறிக்கையை தமிழ் மக்கள் பகிரங்கமாக நிராகரிக்க வேண்டும். அல்லது அதன் பரிந்துரைகளில் இவை தவிர மற்றவை வேறு இன்னென்ன காரணங்களால் ஏற்க முடியாதவையாக உள்ளன என்ற தகவலை உலகிற்கு சொல்ல வேண்டும். அதற்கு மாற்றாக தமிழ் மக்கள் வரலாற்று ஆதார ரீதியில் வைக்கும் அறிக்கையை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். இதன் வாயிலாக அமெரிக்காவின் பிரேரணையில் மாற்றத்தை கொண்டு வர முயல வேண்டுமே தவிர அமெரிக்கா அதன் பிரேரணையை கொண்டு வராமல் செய்யக் கூடாது. அது சிங்களத்தையே இன்னும் இன்னும் பலப்படுத்தி நிற்கும்.

குறிப்பாக டப்ளினில் சிறீலங்காவில் சிங்களம் தமிழர்களுக்கு எதிராகப் புரிந்த போர்க்குற்றம் சார்பில் விசாரித்து சொல்லப்பட்ட சர்வதேச வல்லுனர்களின் தீர்ப்பை தமிழர்கள் தகுந்த ஆதாரமாக்கி அதனை முன்னிறுத்த வேண்டும்.

அதேவேளை மேலே சொன்னது போல.. அமெரிக்காவின் காய் நகர்த்தல்களோடு சமாந்திரமாகப் பயணித்து.. அதன் மூலம் அச்சுறுத்தல்களை சந்திக்கும் இந்தியா.. சீனா போன்றவற்றோடு எமக்கு ஆதாயமான காய்களை நகர்த்த முடியுமா என்றும் ஆராய வேண்டும். அதற்காக அமெரிக்காவின் நகர்வுகளை வெளிப்படையாக எதிர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கொஞ்சம் விட்டுக் கொடுப்போடு.. கூடிய ஆதாயமும்.. நீதியும் கிடைக்கும் என்றால் ஒப்பாரி மட்டுமே தீர்வாகி நிற்கும் தமிழர்கள் அதனை கையில் எடுப்பது புத்திசாலித் தனமே அன்றி வேறாக இருக்க முடியாது. அதேபோல் தமிழர்களின் காய் நகர்த்தலை மதித்து தமிழர்களின் குரலை அமெரிக்கா அதிகம் செவி மடுக்கச் செய்யப்பட்டாலும்.. அதுவும் வெற்றியே ஆகும்.

மேலும்.. தமிழர்கள் தங்களின் விடுதலைப் போராட்ட அமைப்பின் மீது பூசப்பட்டுள்ள பயங்கரவாத முலாமை எனியும் அனுமதிப்பது நல்லதல்ல. அந்த முலாமை வைத்து அமெரிக்கா இந்தியா உடப்பட்ட நாடுகள் ஆடிய ஆட்டங்கள் இருக்கே.. எல்லாமே அவற்றிற்கு ஆதாயமாகவே முடிந்துள்ளன. அதனை சிங்களமும் மிகச் சாதுரியமாகக் கையாண்டு தமிழின அழிப்பையே நடத்தி இலங்கைத் தீவை முழு சிங்கள பெளத்த தீவாக மாற்றி அமைத்திருக்கிறது. இந்த நிலையை எனியும் தொடர அனுமதிக்கக் கூடாது..! எமது உரிமைக் குரலுக்கு சர்வதேச அங்கீகாரம் பெறுவதே எமது விடுதலையின் முதல் படியாக அமைவது அவசியம். அதை நாம் செய்யத் தவறியதால் தான் இத்தனை இழப்புக்களோடும்.. ஒப்பாரியே தீர்வா நிற்கிறோம்..!

மீண்டும் மீண்டும்.. ஒரே தவறுகளை செய்யாமல்.. சிந்திப்போம்.... ஒற்றுமைப்படுவோம்.. இனத்தின் விடிவுக்காக.. வாழ்வுக்காக.. மாண்டோரின் நீதிக்காக உழைப்போம்..! அமெரிக்காவோ.. இந்தியாவோ எம் மீது தங்கள் விருப்பங்களை திணிக்க அனுமதிக்காத ஆனால் அவர்களின் நகர்வுகளால் எழும் சூழலை சரியாகப் பயன்படுத்தி நாம் எமது இலட்சியத்தை அடைய அடுத்த படிநிலைக்குப் போக உள்ள மார்க்கங்களை ஆராய்ந்து அவற்றை பயன்படுத்த தவறக் கூடாது.

அலசல் : நெடுக்காலபோவன்

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:31 AM

0 மறுமொழி:

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க