Tuesday, March 13, 2012

லக்கி & ஜிம்மி

Posted Image

என்ன அங்கிள் ஜிம்மியோட வாக்கிங் போறீங்கள் போல....

ஓமடா தம்பி. இந்தப் பார்க்கை யும் ஜிம்மியையும் விட்டா எனக்கு என்ன கதி.. சொல்லு பார்ப்பம்.

ஏன் அங்கிள் அப்படிச் சொல்லுறீங்க. ஊரில நீங்கள் டொக்டரா இருந்தனீங்கள் தானே. அந்த அனுபவத்தை வைச்சு.. இங்க சரிற்றி வேலை செய்தால் சனத்துக்கு நாலு நல்லது செய்ததாகவும் இருக்கும் உங்களுக்கும் ஓய்வு காலத்தில் நாலு பேரோட பழகின நட்பும் மனத் திருப்தியும் கிடைக்குமே..!

நீ சொல்லுறது சரி தான் தம்பி. இப்ப பார் நான் லண்டன் வந்து 6 வருசம் ஆகிட்டுது. ஊரில உள்ள பென்சனைக் கூட எடுக்கப் போக முடியல்ல. மகனட்ட வந்ததோட அவன் கூடவே இருக்கிறன். அவனுக்கும் ஊருக்குப் போற நினைப்பில்ல. அட பென்சன் வருகுது வா ஒருக்கா போய் எடுத்துக் கொண்டு வரும் எண்டால்.. அது என்னத்திற்கு இங்க.. தூசி தட்டவும் செலவுக்கு காணாது என்கிறான். அப்ப எப்படி தம்பி நான் நினைச்சதைச் செய்யுறது...!

ஏன் உங்கட மருமகள் பேரப்பிள்ளைகளுக்கு ஊருக்குப் போக விருப்பமில்லையோ.. அங்கிள்.

என்ர மருமகள் இங்கு பிறந்து வளர்ந்த பிள்ளை. நாங்கள் யாழ்ப்பாணத்தில வசதியான குடும்பத்தில இருந்து வந்ததால என்ர மகனை அப்பவே லண்டனுக்கு அனுப்பி என்னைப் போல டொக்டரா வரட்டும் என்று படிப்பிச்சனான். அவனுக்கும் படிப்பு முடிய லண்டனிலேயே வேலையும் கிடைச்சிட்டு. அதோட இந்தப் பெட்டையும் வந்து அமைய கலியாணம் கட்டி செற்றில் ஆகிட்டான். அந்தப் பிள்ளை இங்கத்த ஸ்ரைலில வளர்ந்தது.. அப்படியே வாழுது. அதுக்கு மாமா.. மாமி என்ற உறவுகளுக்கு அர்த்தமே தெரியாது. நான் ஒரு விசிட்டர் போலத்தான் இருக்கிறன். பேரப்பிள்ளைகள் அப்பப்ப கிரான்டாட்.. கவ் ஆர் யு என்பதோட சரி. எது செய்ய வேணும் எண்டாலும் என் மகன் தான் வர வேணும். இல்ல நான் தான் செய்ய வேணும். எனக்கும் இப்ப 75 வயசாகுது. இப்படியான நிலையில என்ன செய்யலாம் சொல்லு தம்பி..??!

ஏன் அங்கிள் உங்களுக்கு ஊரில யாரும் இல்லையே..??!

வைவ் இருந்த போது மகள் ஒருத்தி கொழும்பில இருந்தவள். அவளோட தான் இருந்தனாங்கள்.. நானும் ஒரு சின்ன டிஸ்பென்சரி வைச்சிருந்தனான் கொழும்பில. அவளும் இப்ப அவுஸ்திரேலியாவுக்கு குடும்பத்தோட போயிட்டாள். அவளின்ர கஸ்பண்டும் கொழும்பில ஆக்கிரெக்ஸரா இருந்தவர். அவருக்கும் அங்க அவுஸ்திரேலியாவில நல்ல வேலை கிடைக்க அவையும் போயிட்டினம். இப்ப எனக்கு இவன் மகனை விட்டா வேற கதி. தகப்பன் மார் ஆம்பிளப் பிள்ளையளோட இருக்கிறது தானே தம்பி உலக வழமை..!

ஓம்.. அங்கிள்.. நீங்கள் சொல்லுறது சரி தான். ஆனால் உங்களுக்கு இங்க வசதி இல்லை என்றால் ஊரில போய் இருந்தால் சொந்த பந்தங்களாவது பார்க்குங்கள் தானே..??!

ஊரில எங்க தம்பி சொந்த பந்தம் இருக்குது. உந்தச் சண்டைகளோட எல்லாம் வெளிநாட்டுக்கு வந்து செற்றிலாகிட்டுதுகள். ஊரில சொந்தம் இருந்தா நான் ஏன் இங்க இருந்து கஸ்டப்படப் போறன். ஊரில எண்டால்.. வாற பென்சனை எடுத்துக் கொண்டு ராசா போல இருப்பன் தம்பி. அதுவும் இல்லாம இப்ப யாழ்ப்பாணத்தில அங்க இங்க என்று ஊரில "அவை" தான் எல்லா இடமும்..! அரசாங்க உத்தியோகத்தில இருந்து எல்லா இடமும் "அவை" தானாம்..??!

"அவை" என்றால் யார் அங்கிள்..

உமக்குத் தெரியாது தம்பி. நீர் சின்னப் பிள்ளை. உண்மையாய் சொல்லுறன் இப்ப அங்க "அவை" தானாம் பெரியாக்கள். எங்கட டோபிட மகன் தானாம்.. யுனிவேர்ச்சிற்றியில டிப்பாட்மெண்ட் கெட்..! அதுகளட்ட போய் கியூவில நின்று ஒரு உதவி வாங்கிறது எவ்வளவு கேவலம் சொல்லும் பாப்பம்.

என்ன அங்கிள் அப்படிச் சொல்லுறீங்கள். இப்ப இங்க லண்டனில வெள்ளையள்.. கறுப்புகள்.. ஆசியர்கள் என்று எல்லோரோடும் நாங்கள் வாழ இல்லையா. அதிலும் உந்த பங்களாதேஷ்.. பாகிஸ்தான்.. கிழக்கு ஐரோப்பா.. வட இந்தியாப் பெட்டையள் என்று ஒன்றையும் கூட விட்டு வைக்காம எங்கட பொடியள் லவ் பண்ணி எல்லாம் மரி பண்ணுறாங்கள் தானே.. அங்கிள்..!

அதெல்லாம் இங்க வந்த "அந்தச்" சனங்கள் தான் தம்பி செய்யுதுகள். ஒரு ஒழுங்கான இடத்துப் பிள்ளை உதுகள் செய்வானே..??!

ஏன் அங்கிள் எனக்குத் தெரிய ஒரு அண்ணா செய்திருக்கிறாரே. அப்ப அதை என்ன என்று சொல்லுறியள்...??!

ஒன்றிரண்டு தப்பித்தவறி.. வழி மாறிப் போறது தான் தம்பி. அது சகஜம் தானே. அதுக்காக எல்லாரும் அப்படியே.

ஏன் அங்கிள் இப்படி "அவை" "இவை" என்று பிரிச்சுப் பார்த்துத் தானே நாங்கள் ஊரில பலவீனப்பட்டுக் கிடந்தம். அதை எனியும் அதுவும் வெளிநாட்டுக்கு வந்தும் செய்யனுமா அங்கிள்..???!

நாங்கள் வெளில உப்படி சொல்லலாம் தம்பி. ஆனால் உள்ளுக்க எல்லாரும் அதை இதை பார்க்கத்தான் செய்வினம். அதை நிற்பாட்ட முடியாது. இப்ப பாரும்.. பிரபாகரனை ஒரு போராளியா ஒரு சமூகப் புரட்சியாளனா பார்க்கிறவையைக் காட்டிலும்.. அவரோட கூட இருந்தவையே இப்ப அவரின்ர சாதியை வைச்சு தான் அவரைப் பற்றி அதிகம் கதைக்கினம். பலர் அதை வெளில சொல்லாமல் இருந்தவை.. இப்ப கொஞ்சம் அதிகமாவே சொல்லினம்.

அவை அப்படி கதைக்க என்ன காரணம் அங்கிள்..??!

இப்பதானே போர் ஓய்ந்து சமாதானம் வந்திட்டுதே..!

என்ன அங்கிள்.. இதை சமாதானம் எண்டா சொல்லுறியள்... இத்தனை தமிழ் சனங்களை சிங்களவங்கள் கொன்றிருக்கிறாங்களே... போரை முடிக்கிறம் என்று.

ஏன் தம்பி இது சமாதானம் இல்ல. முந்திக் காலத்தில என்ர அப்பா ரெயின் வாறண்ட் எடுத்து.. உந்தச் சிங்கள நாடு எல்லாம் கூட்டிக் கொண்டு போய் காட்டிறவர். உங்கட காலத்தில ரெயினே ஓடல்ல. உதுகள் எல்லாம் உங்களுக்கு தெரியாது. அதுவும் இல்லாமல் போர் முடிச்சிட்டதால எனி.. இவ்வளவு காலமும்.. போரில செத்ததுகள் போக.. சனங்கள் சாகாதுகள் தானே. அது சமாதானம் தானே.

அப்படியே அங்கிள்.. சரி அதை விடுங்கோ அங்கிள்.. எங்கட சனத்தை திருத்த ஏலாது...!
அங்கிள் அங்கிள்.. அங்க பாருங்கோ.. உங்கட ஜிம்மி.. உங்கட பக்கத்து வீட்டு சிங்.. அவற்ற ஊரில இருந்து கொண்டு வந்த நாய் லக்கியோட நிற்குது..

அடி... அந்தப் பற நாய..!

அங்கிள்.... (மனசுக்குள் நான்..) உங்களை விட உங்கட மருமகள் எவ்வளவோ மேல்...!

(இன்றும் நம்மவர்களில் பலர் இப்படி தான்.. புலம்பெயர்ந்தும் கூட..!)

யாவும் கற்பனை அல்ல..! 

யாழில் - நெடுக்காலபோவான். 

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 12:30 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க