Tuesday, March 20, 2012

"சாத்திரி" எனும் எல்லாம் வல்லவரும் நம்மவரும்..!


என்ன கமலரஜனி..... லண்டனில.. ஏ/எல் சோதின மறுமொழி வந்திட்டுதாம்.. மகனுக்கு எப்படி... உங்க உள்ள பிரபல்யமான ஜூவலரி கடை முதலாளிட மகளுக்கு கேம்பிரிஜ் மெடிசின் கிடைச்சிருக்காம்.. கேள்விப்பட்டினியே..??!

ஓம் சுமதியக்கா. கேள்விப்பட்டனான். அதுக்குள்ள அந்தச் செய்தி யாழ்ப்பாணம் வரை வந்துட்டுதே. என்ர பொடியனும்.. நல்லா செய்ததெண்டு சொன்னான்.. ஆனால் ஒன்றிரண்டு பாடத்திற்கு எதிர்பார்த்ததை விட குறைவாத்தான் வந்திருக்குது. மற்றப் பாடங்களுக்கு நல்லா எடுத்திருக்கிறான். றீசிட் பண்ணப்போறன் எண்டான்..! இங்க தானே எத்தினை தரமும் றீசிட் பண்ணலாம். ஊர் போல இல்ல..! அதுபோக அக்கா ஒன்று சொல்லனும்.. இங்க லண்டனுக்கு வந்தப்பிறகு என்ர பெயர் கமலரஜனி இல்லையக்கா. சுருக்கி கமல்.. என்று வைச்சிருக்கிறன். எனி அப்படியே கூப்பிடுங்கோ. கூப்பிடச் சுகமெல்லே.

அட லண்டனுக்குப் போனதும்.. பெயரையும் மாத்திப் போட்டியே. பறுவாயில்ல..! லண்டன் நாகரிகம் உனக்கும் நல்லாப் பிடிச்சிருக்குப் போல.

இல்ல.... அக்கா. இங்க ஆக்கள் கூப்பிட சுகம் என்று தான். நீண்டுப் பெயர் என்றால் கூப்பிடுறது கஸ்டமெல்லோ..! அதுவும் இல்லாமல்.. அதென்ன.. சினிமாக்காரங்கட பெயரில தூக்கி கலந்தடிச்சு எனக்கு வைச்சு விட்டிருக்கினம்.. என்ற வெறுப்பும் தானக்கா.

சரி சரி.. அதை விடு.. இப்ப பொடிக்கு யுனீவேர்சிட்டி கிடைக்குமோ.. இல்ல...

இன்னும் சரியா தெரியல்லயக்கா. இன்னும் ஒரு கட்டம் சோதனைகள் இருக்குது. அது முடியத்தான் தெரியும் அக்கா. நேற்றும் ஒரே சண்டை. செய்தன் செய்தன் என்டா.. என்ன எல்லாம் குறைஞ்சு வந்திருக்குது... என்று பேசிப் போட்டன்.வெள்ள, கறுப்பெண்டு.. ரியூசனுகளுக்கும் காசைக் கொட்டிப் போறான். ரியூசனுகளுக்கும் காசைக் கொட்டிப் போறான். நான் அவனைப் பேச அவன் பதிலுக்கு படிச்சு என்னத்தைக் காணப் போறன்... அம்மா நீங்கள் படிச்சுப் போட்டோ லண்டனுக்கு வந்தனீங்கள் என்று கேட்கிறான்..! இந்தக் காலத்தில பிள்ளையளப் பெத்து வளர்க்கிறது சரியான கஸ்டம் அக்கா. அதுவும் வெளிநாட்டில இன்னும் சரியான கஸ்டம். பொம்பிளப் பிள்ளையள் என்றால் சொல்லி வேலை இல்ல. நாய் மொச்ச கணக்கா அதுகளின்ர வீட்டை மொய்ப்பாங்கள் பொடியங்கள்..! ஏதோ எங்களால இயன்ற மட்டும் சமாளிக்கிறது தான். இல்லது வீட்டை விட்டு ஓடிடுங்களே..!

உன்ர பொடியின்ர பலன் என்னவாம். சாத்திரம் கேட்டுப் பாத்தனியே..! இங்க சாத்திரம் கேட்டுச் சொல்லவே. நல்ல ஒரு சாத்திரி இந்தியாவில இருந்து வந்திருக்குது. போர் முடிஞ்சது தான் தாமதம்.. உந்த மலையாள.. மாந்திரிகள் எல்லாம் இப்ப யாழ்ப்பாணத்துக்க தான் நிற்குதுகள்.

அதையேன் அக்கா பேசுவான். இங்க லண்டனிலும் அதுகளிற்கு குறைவில்ல. வீதி வீதியா நின்று ஒரு துண்டையும் எழுதி வைச்சுக் கொண்டு போற வாற ஆக்களட்ட நீட்டிக் கொண்டு நிற்குதுகள். பொம்பிளையளையும் கூட்டிக் கொண்டு வந்து எப்படித்தான் உழைக்குதுகளோ.. தெரியல்ல..??! முழத்துக்கு முழம் நிற்குதுகள். இப்ப அங்கையும் வந்திட்டுதுகளே..??!

ஓமடியப்பா. இங்க சனம்.. படையெடுக்குது. வெளிநாட்டுக்கு போற பலன்.. படிப்பு.. பதவி.. காதல்.. குழந்தைப் பாக்கியம்.. வீடு.. வாகனம்.. வசியம்.. பில்லி.. சூனியம்.. என்று அவங்களும் சொல்லாத குறிகள் இல்ல..!

எங்கட சனங்கள் உதுகளை இன்னும் நம்புதுகளே அக்கா..?!

நீ வேற.. எங்கட பவளம் அன்ரி.. வீட்டுக்கு யாரோ சூனியம் வைச்சிட்டாங்கள் என்று சொல்லி.. அவான்ர மகன் கனடாவில இருந்து காசனுப்பி.. இரண்டு இலட்சம் செலவழிச்சு.. கழிப்பு கழிச்சவா எண்டால் பாரன். அதுவும் இல்லாமல் பர்வதம் பெத்தாச்சி.. பேத்திக்கு யாரோ லண்டனில வசியம் வைச்சிட்டாங்களாம் என்று அதை தேசிக்காய் வைச்சு வெட்ட வந்து நிண்டா..!

ஆஆ.. நீங்கள் உதுகளைச் சொல்லத்தான் எனக்கும் நினைவு வருகுது. இவன் என்ர பொடிக்கும்.. படிப்பை இடையில குழப்புவான் என்று முந்தி இந்தியா போன மூட்டம் கேட்க ஒரு சாத்திரி சொன்னவன். இவன்ர கதையை பார்த்தால் குழப்புவான் போலக் கிடக்கு. எதுக்கும் அவன்ர குறிப்பை ஈமெயிலில அனுப்பி விடுறன் பார்த்துச் சொல்லுறீங்களே அக்கா.

அதுக்கென்னடி. பார்த்துச் சொல்லுறன். அதுசரி.. உன்ர மகனுக்கு கேர்ள் பிரண்ட் அதுஇதெண்டு இருக்கே. அதனால சிலவேளை படிப்பில கவனம் குறைச்சிருக்கலாம் இல்லையே..!

அப்படி ஒரு சிலமனும் இல்ல. முந்தி ஒன்றோட கதைச்சுக் கொண்டு திரிஞ்வன் தான். அது வேற்று மதம்.. அம்மம்மா பேசுவா என்று சொல்லி முறிச்சு விட்டிட்டன். அவன் அம்மம்மா சொன்னால் கேட்ப்பான். அவாக்கு கலை வாறது தானே. ஒருக்கா இஞ்ச லண்டனுக்கு வந்து நிற்கேக்க கலை வந்திட்டுது. அப்ப அவா இவனுக்கு கலைல விபூதி அடிச்சுப் போட்டு சொன்னவா.. அம்மா அப்பா சொல் கேட்டு நட என்று. அதுக்குப் பிறகு அம்மம்மா என்றால் சரியான பயம். சாமி பக்தியும்..!

அதுதான் நல்லது. அப்படி வெருட்டி வைச்சால் தான் உந்தப் பிள்ளையள் கொஞ்சம் என்றாலும் அடக்க ஒடுக்கமா இருக்குங்கள். என்ன பாடுபட்டு என்றாலும் அவன யுனிவேர்சிட்டிக்கு அனுப்பிப் போடு. இல்ல இஞ்ச நான் தலைகாட்ட முடியாது. உன்ர ஒண்டவிட்ட தங்கச்சிட மகனுக்கு லண்டனில யுனிவேர்சிட்டி கிடைக்கல்லையாம். ரவுடியா சுத்துதாம் என்று நக்கலும் நளினமும் கூடிடும்..!

எனக்கு தெரியும் தானேக்கா. உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூட முடியாதெண்டு. என்னால இயன்ற மட்டும் முயற்சிப்பன். போறதும் விடுறதும் பிள்ளைகளின்ர பலனிலும் இருக்கல்லே அக்கா.

ஓம்.. நீ சொல்லுறதும் சரி தான். எதுக்கும் அவன்ர குறிப்பை மறக்காமல் அனுப்பி விடு. நான் சாத்திரியிட்ட கொடுத்து.. பார்த்துச் சொல்லுறன். சரியே.

சரியக்கா. உங்கட உதவிக்கு நன்றி. இப்பவே அனுப்பி விடுறன். அந்த பழைய ஈமெயில் தானே.. இப்பவும் பாவிக்கிறியள்.

ஓம்.. அதுதான்ரியப்பா இப்பவும் பாவிக்கிறன்.

சரி.. சரி.. மகன் ஸ்கூலால வந்திட்டான். சாப்பாடு போட்டு தீத்தி விடனும்.

என்ன.. அவனுக்கு இப்ப தானே பெரிய கோல் எடுத்து 18 வது பிறந்த நாள் கொண்டாடினா. இன்னும்.. சாப்பாடு தீத்தி விடுறியோ..??!

அதையேன் அக்கா கேட்கிறீங்கள்.. அவனுக்கு படிக்கிறதும்.. லப் டொப்பில படம் பாக்கிறதும்.. ஐபொட்டில பாட்டுக் கேட்கிறதும்.. கேம் விளையாடிறதும்.. கால்பந்து விளையாடுறதும் தான் தெரியும். ஒரு வீட்டு வேலை செய்யமாட்டான். உடுப்பை வாசிங் மிசினில போடக் கூடத் தெரியாது. கசங்கின உடுப்பை அயன் பண்ணத் தெரியாது. சாப்பாடும் போட்டுக் கொடுத்தால் தான் சாப்பிடுவான். சில நேரம் தீத்தி விடனும். இல்ல தூக்கி வீசிட்டு.. மக்டொனால்ட் போறன் என்று போயிடுவான். சமைச்ச சோறு கறி கிடந்து இழுவிண்டும்..!

நல்ல பழக்கம் பழக்கி வைச்சிருக்கிறா. உவன் எப்படி வெளில போய் பிழைக்கப் போறானோ..??!

அவனுக்கு நிறைய பிரண்ட்ஸ் இருக்குது. யுனிவேர்சிட்டிக்கு போனால் எல்லாம் பழகிடுவான். எதுக்கும் யுனிவேர்சிட்டிக்கு போற பலன் இருக்கோ என்று நீங்கள் ஒருக்கா சாத்திரிட்ட கொடுத்து மறக்காமல் பார்த்துச் சொல்லுங்கோ. அவன்ர வாழ்க்கையே யுனிவேர்சிட்டில தான் இருக்குது. அது சாத்திரியின்ர வாக்கில தான் தங்கி இருக்குதக்கா.

சரி சரி..ஒன்றுக்கும் யோசிக்காத. எல்லாத்தையும் கடவுள் மேல பாரமாப் போட்டிட்டு... சாத்திரியை நம்பு.. அப்புறம் பார்.. அவன் எல்லாம் பாஸாகி.. யுனிவேர்சிட்டி போய்.. பட்டமும் எடுத்திடுவான்.

சரி அக்கா. நீங்கள் சொல்லுற படியே செய்யுறன். எப்படியாவது அவனை யுனிவேர்சிட்டிக்கு அனுப்பிட்டன் என்றால் அது போதும் அக்கா.

வேற என்ன.. அப்ப நான் வைக்கிறன். இங்கையும் பொழுது இரவு 8 ஆச்சுது. அவர் வெளில போனவர் வரப் போறார். புட்டுக் கொத்திப் போட வேணும்.

சரி அக்கா.. நானும் அவனுக்கு சாப்பாடு போட்டுக் கொடுக்கப் போறன். வைக்கிறன் அக்கா.

சரிடி. பிறகு கதைக்கிறன். பாய்.

பாய் அக்கா.

ஆக்கம்:

நெடுக்காலபோவன் யாழில்..!

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:51 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க