Tuesday, March 27, 2012

வன்னியில் இருந்து லண்டனுக்கு ஒரு ரிங் ரிங்..!


வாங்கோ அண்ணா.. அழைக்கும் குரலைக் கேட்டு ஓர் அதிர்ச்சி..

என்ன அழகா தமிழ் கதைக்கிறான்.. தமிழ் ஸ்கூல் போறவரோ.. வரவேற்பறையில் உட்கார்ந்திருந்த தந்தையை பார்த்து எனது வினவல் எழுந்தது..

தமிழ் பள்ளிக்கூடம் போறனான்... ஞாயிற்றுக்கிழமைகளில. கேம்பிரிஷ் ஜீ சி ஈ தமிழ் சோதனை எடுத்து "ஏ" சித்தி வைச்சிருக்கிறன்..... தந்தையை பார்த்துக் கேட்ட கேள்விக்கு மகன் பதில் தந்தான்.

அப்ப.. வீட்டில தமிழ் தான் மகனோட கதைக்கிறனீங்களோ..

அப்பவும் அவனே குறுக்கிட்டு.. அப்பா அம்மாவோட தமிழ் தான். தங்கச்சிகளோட தான் ஆங்கிலம் கதைக்கிறனான். நான் லண்டனில பிறந்திருந்தாலும் வாழ்ந்தாலும்.. சின்னனில இருந்தே தமிழ் படிக்கிறன்.

அவனின் பதில்களை செவிகளூடே வாங்கிக் கொண்டு.. தந்தையை நோக்கியே எனது அடுத்த வினவலையும் தொடுத்தேன்.. என்ன மாதிரி.. சனல் 4 வீடியோ பார்க்க விட்டனீங்களோ பிள்ளையள..

மீண்டும் அவனே தந்தைக்காக குரல் கொடுத்தான். ஓம்.. நான் தங்கச்சிகள் எல்லோரும் முழிப்பிருந்து பாத்தனாங்கள். அந்த 12 வயசு தம்பியை கொன்றதை என்னால பார்க்க முடியல்ல. இப்படியும் சிங்கள ஆக்கள் செய்வினமோ.. என்று எனக்கு அன்றைக்குத் தான் தெரிஞ்சுது. முந்தி அப்பாவோட சிறீலங்கா போகேக்க.. சிங்கள ஆக்கள் பிரச்சனை இல்லாதது போலத் தானே இருக்கிறவை. இவ்வளவு கெட்ட ஆக்களா இருப்பினம் என்று நான் அப்ப நினைக்கவே இல்லை.

இதுக்கும் மேல தந்தையை பார்த்து விளித்து தமிழில கேள்வி கேட்கிறதிலும் நேரடியா.. பொடியனட்டையே கேட்டிடுவம் என்றிட்டி.. உங்கட வகுப்பு நண்பர்களுக்கும் சொன்னனீங்களோ.. சனல் 4 பார்க்கச் சொல்லி.. பார்த்ததை.. பகிர்ந்து கொண்டனீங்களோ தம்பி..??! அவனுக்கான கேள்விகளைத் தொடுத்தேன்.

அதற்கு அவன்.. நான் என்ர பேஸ்புக்கில இருக்கிற 400 க்கும் மேல நண்பர்களையும் பார்க்கச் சொல்லி போட்டிருந்தனான். பெரும்பாலானவை பார்த்திருக்கினம். நான் சனல் 4 வீடியோ.. ரிவில போகேக்க ரெக்கோட் பண்ணியும் வைச்சிருக்கிறன். அதை பிறகு பேஸ்புக்கில அப்லோட் பண்ணி விடப் போறன். ஆனால் பைல் தான் பெரிசா இருக்குது.

எதுக்கும் கொப்பி ரைட்ஸ் கேட்டு சனல் 4 க்கு ஒரு ஈமெயில் போட்டு பதிலைப் பார்த்திட்டு செய்யுங்கோ தம்பி. உங்க பல பேர் அவசரக் கோளாறில.. உதுகளைச் செய்யாமல் விடுகினம். அது மறைமுகமா அந்த ஊடகத்தை அவமதிக்கிறது போல விசயம். அதோட அவைட சேவையையும் பாராட்டி விடுங்க. அப்பதான் அவை எங்களுக்காக உதவ இன்னும் முன் வருவினம்.

ஓம் அண்ணா நீங்கள் சொல்லுறது சரி தான். எங்களுக்கு ஸ்கூலிலும் சொல்லித் தந்திருக்கினம். எதை இணையத்தில இருந்து எடுத்தாலும் மூலம் குறிப்பிட வேண்டும் அதேபோல.. படங்கள்.. வீடியோக்கள்.. ஆக்கங்கள்.. பாவிக்கிறது என்றால் கொப்பி ரட்ஸ் எடுத்து சொந்த ஆக்களின்ர அனுமதியோட பாவிக்கிறது தான் நல்லமென்று.

நல்ல விசயம் தெரிஞ்சு வைச்சிருக்கிறீங்கள் தம்பி. இதை மற்ற ஆக்களோடும் பகிர்ந்து கொள்ளுங்கோ..!

***********************

நாங்கள் இருவரும்.. பேசிக்கொண்டிருக்க.. பொடியன்ர தாய்.. போனோட வரவேற்பறைக்கு வந்தா..

விது.. ஊரில இருந்து போன் கோல் வந்திருக்குது..

ஆர் அம்மா.

வன்னில இருந்து கதைப்பினமே.. துசித் தம்பி.. ஆக்கள் அவை..!

ஓ.. துசி தம்பியா.

கொஞ்சம் தாங்கோ.. அவருக்கு ஒரு ஒன்லைன் கேம் பற்றி சொல்லனும். பாவம் அம்மா.. அவரட்ட பி எஸ் 3 எல்லாம் இல்லையாம். இன்ரநெட்டும் இல்லையாம். அவற்ற அங்கிள் வீட்ட தானாம் இருக்குது. ஒரு கேமும் விளையாடினதில்லையாம். அதுதான்.. அங்கிள் வீட்ட போனா.. இந்த ஒன்லைன் கேம் விளையாடச் சொல்லப் போறன். அது நல்ல கேம். மூளையை பாவிச்சு விளையாடிற கேம்.. பாஸ்ற் இன்ரநெட் இணைப்பும் தேவையில்ல அம்மா.

சரி அப்படி எண்டா.. சொல்லிக்குடன்... இந்தா போன்...

தாயிடம் இருந்து போனை வாங்கி.. அழகு தமிழில் அவன் வன்னியில் இருந்தான மறுமுனையோடு பேசிக் கொண்டே தனது அறை இருந்த.. மேல்மாடி நோக்கிச் சென்றுவிட்டான்.

இதை அவதானித்துக் கொண்டிருந்த நான்.. தாயிடம் கேட்டேன்..

என்ன வன்னில இருந்து இவருக்கும் கோல் வாறதோ..

அவன் வன்னில ஒரு 2 குடும்பத்தை எடுத்துப் பராமரிக்கிறான். ஒவ்வொரு கிழமையும்.. அவையும் எடுத்து இவனோட கதைப்பினம். நாங்கள் இவனுக்கு செலவுக்கு என்று.. கொடுக்கிற காசை மிச்சம் பிடிச்சு.. ஸ்கூல் இலவச சாப்பாட்டோட இருந்து.. அதிலும் மிச்சமா வாற காசையும் தகப்பனட்ட கொடுத்து வைச்சு.. எல்லாத்தையும் ஒன்றாச் சேர்த்து குடும்பங்களை பராமரிக்கிற செலவை கவனிக்கிறான். ஒவ்வொரு மாதமும் 50 பவுன் அனுப்பிறவன்.

இதைக் கேட்ட நான்.. கண்களில் ஆச்சரியம் தெறிக்க.. தாயைப் பார்த்தேன். அதில் இருந்து.. தொடர்ந்தும் அவரிடம் இருந்து இன்னும் விடயங்களை எதிர்பார்ப்பதைப் புரிந்து கொண்ட அவர்.. மேலும் சொன்னார்..

போன கிழமையும் ரெஸ்கோவில போன் மலிவா போகுதெண்டு சொல்லி இரண்டு போன் வாங்கி அனுப்பி விட்டவன். முந்தி எல்லாம் பேர்த்டேக்கு அன்பளிப்பா வாற காசை எல்லாம்.. கேம் வாங்க என்று செலவழிக்கிறவன்.... இப்ப சனல் 4 வீடியோக்களைப் பார்த்தாப் பிறகு.. அந்தக் காசை எல்லாம் தகப்பனட்ட கொடுத்து வைச்சு வன்னிக்கு அனுப்புவான். அவரும் உதுகளை தடுக்கிறதில்ல. ஊக்கம் தான் கொடுக்கிறவர்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த.. தந்தை.. இடையில் குறுக்கிட்டு..

நான்.. அவனுக்கு ஒன்றும் சொல்லிக் கொடுக்கல்ல. அவனாத் தான்.. சனல் 4 வீடியோக்களைப் பார்த்திட்டு.. இந்த முடிவுக்கு வந்தவன். ஒரு நாள் வந்து கேட்டான் அப்பா நானும் உங்களைப் போல வன்னில உள்ள ஆக்களுக்கு உதவப் போறன். எப்படியப்பா செய்யுறது என்று. நான் சொன்னன்.. நீ காசை சேர்த்துத் தா.. நான் அனுப்பிவிடுறன். அதோட நீ பராமரிக்கிற குடும்பங்களோட நேரடி அறிமுகம் செய்துவிடுறன். நீயே மிச்சத்தக் கதைச்சுக் கொள் என்று. அப்ப இருந்து இது தொடருது. முதல் சனல் 4 காணொளி பார்த்ததில் இருந்து..இப்ப.. ஒரு 7 மாதமா இது நடந்துகிட்டு இருக்குது.

நல்லது அங்கிள். இப்படியே ஊர் வாசத்தோட.. தொடர்போட பிள்ளைகளை வளர்க்கிறதும்... ஊர் விசயங்களை அவைக்கும் சொல்லிக் கொடுக்கிறதும் அவசியம். அப்ப தான் அங்கத்த நிலைமையை இவைக்கு விளங்க வைச்சு.. அவைக்கு இயல்பாக உதவிற மனப்பான்மையை இவையட்ட உருவாக்க முடியும். அதைவிட்டிட்டு.. ஆக்கள் ஊருக்கு உதவி செய்யினம் இல்ல.. என்று திட்டிக் கொண்டு.. தங்கட பிள்ளைகளுக்கு உந்தக் கஸ்டங்களை காட்டாமல் வளர்க்கிற பெற்றோரோட ஒப்பிடேக்க.. உங்கட அணுகுமுறை நல்லது அங்கிள்.

நான் சொல்லிட்டன்.. நீ.. விரும்பிற வரை உதவி செய். நான் தொடர்பு எடுத்துத் தாறன் எண்டு. அவனுக்கும் அது முழுச் சந்தோசம். இப்ப போனோட மேல போட்டான். எனி எல்லா விசயங்களும் கதைச்சிட்டு தான் கீழ வருவான். இதனால.. அங்க உள்ள பிள்ளைகளுக்கும் அது ஒரு ஆறுதல் தானே.

ஓம் அங்கிள். இது நல்ல விசயம். இப்படி எல்லா பெற்றோரும் வாரம் ஒரு தடவை வன்னில யாழ்ப்பாணத்தில மட்டக்களப்பில திருகோணமலைல.. அம்பாறையில... என்று.... ஆதரவில்லாம இருக்கிற பிள்ளைகளோட.. பெற்றோரோட.. தங்கட பிள்ளைகளைக் கதைச் செய்தால்... பழக்கினால்.. நல்ல சமூக உறவாடல் இருக்கும். அதுமட்டுமன்றி.. ஒரு பொதுக் கருத்துக்கும் இரண்டு பக்கமும் வரும். அதுபோக உலக விசயங்களைப் பரிமாறி.. பொது அறிவையும் வளர்த்துக் கொள்ளுவினம். ஒருவற்ற கஸ்டம் மற்றவைக்கு தெரிய வரும். உதவிகளும் கிரமமாகப் போய் சேரும்.

நீங்கள் சொல்லுறதும் சரிதான் தம்பி... எனக்கும் அப்படிச் செய்யுறது நல்லமென்று தான் தெரியுது. ஆனால் எல்லோரும் அப்படி செய்ய ஒத்து வருவினமோ...??!

முதலில நாங்கள் செய்து காட்டனும்.... பிறகு.. இப்படியான நல்ல விசயங்களை நாலு பேரேட பகிந்து கொண்டால்.. அவையும் செய்ய முயற்சிப்பனம் தானே அங்கிள். சும்மா ஊர் வம்பு அளக்கிற நேரத்துக்கு.. உது பிரயோசனம் தானே. என்ன சொல்லுறீங்க...??!

இதில.. நான் என்னத்தைச் சொல்லுறது... இப்போதைக்கு நாங்கள் செய்யுறதை தான் எங்களால உறுதிப்படுத்த முடியும். மற்றாக்கள் தாங்களா விரும்பிச் செய்தால் ஒழிய கட்டாயப்படுத்தி செய்விக்க முடியாது.. கூடாது. ஆனால் செய்யச் சொல்லி ஊக்கப்படுத்த முடியும். சரி.. உதுகளைப் பற்றி பிறகு ஒரு நாளைக்கு விரிவாக கதைப்பம். இப்ப சாப்பாடு ரெடியாகிட்டாம். வாங்கோவன் சாப்பிடுவம்.

சரி அங்கிள் வாங்கோ. அவன் தம்பி..

அவன் இப்ப தான் சூப் குடிச்சவன்..! போன் கதைச்சிட்டு ஆறுதலா சாப்பிடுவான். நீங்கள் வாங்கோ..

அப்படின்னா சரி அங்கிள்.

(இது கற்பனையோ.. இட்டுக்கட்டுகையோ அல்ல. நிஜத்தின் பிரதிபலிப்பு)

யாழில்.. நெடுக்காலபோவன்.

Labels: , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 2:15 PM

0 மறுமொழி:

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க