Sunday, April 08, 2012

செ(ஷ)ல் வந்த பூமி.

Posted Image

சிப்பமாய் கட்டின புகையிலை எல்லாம் லொறில ஏத்தியாச்சோ.. விடிய 6 மணிக்கெல்லாம் சரக்கு கிளிநொச்சிக்கு போக ரெடியாக இருக்க வேணும்... எல்லாரும் எழும்புங்கோடாப்பா.. முதலாளி வந்து சத்தம் போடப் போறார்.. கந்தர் அண்ணை புறுபுறுத்துக் கொண்டே படுக்கையை சுருட்டி ஒரு ஓரமா போட்டிட்டு.. கை கால் முகம் கழுவ குழாயடிக்குப் போனவர்..

கால்ல ஏதோ தடக்குப்பட.. குனிஞ்சு பார்த்திட்டு..என்ன இழவடாப்பா இது..இவன் குறுக்கால இதுக்க கிடக்கிறான்.. கும்பகர்ணன் போல..! எழும்படா எருமை.. எழும்பி முகத்தைக் கழுவு.. நேரம் ஆகுது.. என்று திட்டிக்கொண்டே.. அந்த தெருவோர தண்ணீர் குழாயடியில் வழிந்து கொண்டிருந்த தண்ணியை கையில தேக்கி வாங்கி.. கை கால்.. முகம் கழுவ ஆயத்தமானார்.

யாழ் ஆரியகுளம் பக்கமா.. சிங்கள ஆமிக்காரன் 1981 இல யாழ் நூலகம் எரிக்கேக்க எரிச்ச அந்த கட்டிடமும்.. அதன் பொலிவிழந்து எலும்புக் கூடாக நின்று கொண்டிருந்தது. ஆனால் ஆங்காங்கே கரும்புகைகளின் படிவைத் தவிர அதன் வெண்மை மட்டும் மாறவே இல்லை. அதற்கு அருகில தான் யாழ்ப்பாணத்தில இருந்து தூர இடங்களுக்கு போற லொறிகளை நிற்பாட்டி வைச்சு.. இரவைக் கழிச்சிட்டு.. விடியப்புறமா எழும்பி கை கால் முகம் கழுவிட்டு.. அதில உள்ள சாப்பாட்டுக்கடையில சாப்பிட்டிட்டு.. லொறியை எடுத்துக் கொண்டு.. ஆக்கள் போறது...

வாயைக் கொப்புளிச்சு.. துப்பிக் கொண்டு.. நிமிர்ந்து சுற்றும் முற்றும் பார்த்த கந்தர் அண்ண.. இந்தா பார்.. விடியுறதுக்குள்ளவே.. ரெலோ காரங்கள் வந்திட்டாங்கள். அவங்கள் எதை விட்டிட்டு போனாலும்.. உந்த புத்தகோயில விட்டுப் போகமாட்டாங்கள் போலக் கிடக்கு. இண்டைக்கும் அலவாங்கு.. கடப்பாறை எண்டு கொண்டு வாறாங்கள்.. புதையல் கிண்டப் போறாங்களோ..! போன கிழமை தானே.. உதுக்க புளொட்காரங்களோட முறுகுப் பட்டாங்கள். அப்புறம் ஈபி காரங்களோட.. அதுக்குள்ள என்ன தான் அப்படி விசேசம் இருக்கோ...???!

ஆரியகுளத்துக்கு மறுவழத்தில் இருந்த அந்தப் புத்தக் கோயிலை.. கிண்டி.. அதற்குள்ள புதையல் எடுக்கிறது தான் அப்ப தமிழீழம் கேட்டுப் போராடின இயக்கங்களின்ர ரெண்டா இருந்தது. அதற்கும் போட்டி.. புளொட் தான் எடுக்கிறதா.., ஈபி தான் எடுக்கிறதா.. ரெலோ தான் எடுக்கிறதா என்று. புலி மட்டும்.. அதைக்.. கணக்கே எடுக்கல்ல. அவங்க எப்பவுமே.. டீசண்ட்.

கந்தரண்ண.. பெலத்தா கதையாதேங்கோ.. நேற்று நடந்தது தெரியுமே. உந்த விக்னா ரியூசன் சென்ரர்.. சொந்தக்காரர் வந்து தம்பியவை ஆயுதங்களோட உதுக்க நில்லாதேங்கோ.. அப்புறம் இங்க படிக்க வாற பிள்ளைகளுக்கு ஆபத்து.. ஆமிக்காரன் நீங்கள் உதுகளுக்க நிற்கிறதைக் கேள்விப்பட்டான் என்றால்.. கோட்டையில இருந்து ஷெல் இறக்கவான் என்று சொன்னவராம். அதுக்கு ரெலோகாரங்கள்.. ஏ கே யை எடுத்துக் காட்டி சொன்னாங்களாம்.. அவன் ஷெல் இறக்கிறானோ இல்லையோ.. நீர் கணக்க கதைச்சீர் எண்டால்.. உம்மட காதுக்கால.. இது கூவும் என்று..!

அப்படியே சங்கதி.. சொல்லி இருக்க வேண்டியது தானே.. அதுதான் புளொட்காரங்கள்.. சங்கூதுறாங்கள்.. ஷெல் வருகுதோ வராதோ என்று.... இதுக்கும் ஊதுவாங்கள் என்று...!

அதையேன் அண்ண.. பேசுவான்.. போன கிழமை.. ஆமிக்காரன் பூங்காவடிப் பக்கமா.. வெளிக்கிட்டு.. லைபிரரி வர வந்திட்டானாம்.. பெரிசு நின்று கிரனேட் அடிச்சு அலேட் பண்ணிட்டு நிண்டதாம்.. அப்ப தான் ஈபி போய் தானும் தானும் என்று.. சக்கை அடிச்சிச்சாம்..! புளொட் சைரனையும் விட்டிட்டு.. ஒரே ஓட்டமாம். அப்புறம் கிட்டு வந்து தானாம் அடிச்சு உள்ளுக்க அனுப்பிட்டுப் போனது. உள்ளுக்க போனவன் ஷெல் இறக்கி இருக்கிறான்..! ரவுனுக்குள்ள.. சனம்.. ஷெல் குத்துற சத்தம் கேட்டு.. கடையளை பூட்டிட்டு ஓடிட்டுதுகளாம். புளொட்டையும் காணேல்லையாம்.. அதின்ர சைரனையும் காணேல்லையாம்.... ஒன்றையும் காணேல்லையாம்..!! பிறகு.. ஷெல் அடிச்சு முடியத்தான் புளொட் வந்து சைரன் போட்டிச்சாம்..!

பின்ன... ஆமிக்காரனைக் கவனிக்கிறதை விட்டிட்டு.. உப்புடி.. புதையல்..கிதையல் என்று மிணக்கட்டுக் கொண்டு.. ஏ கே யை தூக்கி மடில வைச்சுக் கொண்டு றோட்டால போற வாற பொம்பிளப் பிள்ளையளைக் கணக்குப் பண்ணிக் கொண்டு.. ஆளையாளுக்கு அடிப்பட்டிக் கொண்டு கிடந்தா என்னாகிறது..?! ஏதோடாப்பா.. புகையிலை.. மிளகாய்.. வெங்காயம் என்று செய்து.. செல்வந்த பூமியா இருந்த எங்கட யாழ்ப்பாணம்.... இப்படி ஷெல் வந்த பூமியாப் போச்சுது. இது எங்க போய் முடியப் போகுதோ..???! ஒன்று.. மட்டும் தெரியுது.. இது இப்போதைக்கு முடியுற மாதிரியில்ல..! சரி சரி...உந்தா அவங்கள் ரெலோ காரங்கள்.. கிட்ட வந்திட்டாங்கள்.. உதில நின்று உதுகளைக் கதைச்சு வம்ப விலைக்கு வாங்காம... அவங்களையும் எழுப்பிவிடு. இன்னும் தூங்கிறாங்கள். நேரமாகுது... மணி ஆறாகப் போகுது. இன்னும் லொறி எடுக்கல்ல. அந்தாள் வந்து குத்திமுறியப் போகுது..! நான் உதில போய் ரீக்கும்.. பனிசுக்கும் ஓடர் குடுத்திட்டு வாறன்..!

யாழில் நெடுக்காலபோவான்.

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 8:02 AM

0 மறுமொழி:

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க