Wednesday, April 11, 2012

பூப் போட்ட தாவணி.

வாங்கோ.. தம்பியவை.. பிள்ள.. ரஞ்சினி.. இந்த நாய்களைப் பிடிச்சு வைச்சிரு.. தம்பியவையை உள்ள வர விடுகுதில்ல...

அயலில் இருந்த அந்த ஆன்ரியின் வீட்டு கேற்றடியில்.. வரவேற்பில் நெகிழ்ந்த படி.. நானும் என் உடன்பிறவாத தம்பியும்.. நாங்கள் என்றுமே போயிராத அந்த வீட்டுக்குள் நுழைகிறோம்.. சுற்றும் முற்றும் இருந்த வகை வகையான பூமரங்களை.. விடுப்புப் பார்த்தப்படி...

வீட்டு வாசலை அடைந்த நாங்கள்.. ஆன்ரி.. இந்த என்வலப்பை அம்மா உங்களட்ட கொடுக்கச் சொல்லி தந்து விட்டவா என்று சொல்லி நான்.. அதை நீட்ட..

நாங்கள் வந்திருக்கின்ற நோக்கத்தை அறிந்து கொண்ட ஆன்ரி.. நீங்களே அதை அக்காட்டை கொடுங்கோ.. என்று சொல்லி.. எங்களை வீட்டுக்குள் அழைத்துச் சென்றா.

என்ன.. அக்காவோ.. எங்கட வயசை ஒத்தவா.. பள்ளியில அவாட பெயரைத்தான் எனக்கு பட்டப் பெயரா வைச்சுக் கூப்பிடுறாங்க.. இவா என்னடான்னா.. அக்கா என்றா.. என்று என் எண்ணத்தை ஓட விட்டபடி.. வீட்டுக்குள் நுழைந்ததும்..

அக்கா அந்த அறைக்குள்ள இருக்கிறா போல.. என்வலப்பை அவாட்டையே கொடுங்கோ.. என்று சொல்லி அவா இருந்த அறையை நோக்கி கையைக் காட்டி விட்டா ஆன்ரி.

நாங்கள் இருவரும் திறக்கப்படாதிருந்த அறைக் கதவை மெல்லத் தட்டினம்..

உள்ள இருந்த அவா கதவை மெல்லத் திறந்து பார்த்தா.. மெல்லிய புன்னகையோடு..

நான் என்றுமே அவ்வளவு நெருக்கத்தில் நேரில் அவாவைப் பார்த்ததில்ல. அதுவும் அழகான பட்டுச் சேலை கட்டி.. நகைகள் ஜொலிக்க.. அதைவிட அவாவின் வெளிர் மஞ்சள் மேனி மிளிர.. அழகு தேவதையாக அவா நின்று கொண்டிருந்தா..! அந்தக் காட்சியை கண்களால் மனதார ரசித்தபடி.. அக்கா என்று கூப்பிடுறதை வலிந்து நிறுத்திக் கொண்டு.. அவாவிடம்... என்வலப்பை நீட்டினேன்.. கைகளில் ஒரு வித நடுக்கத்தோடு.

நன்றி.. என்று என்வலப்பை வாங்கிக் கொண்டவா.. கதவைத் திறந்து கொண்டு கோலுக்கு ஓடினா. கால் சலங்கைகள்.. கீதமாக இசைக்க...

ஓடியவா திரும்பி வருவாவோ என்று.. நாங்கள் சில நிமிடங்கள்.. ஆச்சரியத்தோட.. காத்திருக்க.. ஒரு சில நிமிடங்களிலேயே.. இந்தாங்கோ கூல் ரிங்க்ஸ் குடியுங்கோ என்று எவர் சில்வர் தட்டில் வைத்திருந்த கூல் ரிங்சை நீட்டினா அவா. அந்தத் தட்டைப் பிடித்திருந்த.. அவாவின் கை விரல்களின் நகைப்பூச்சை ரசிப்பதா.... தட்டில் பட்டுத் தெறிந்து என் கண்களை அடைந்த அவாவின் அழகு வதனத்தை ரசிப்பதா.. என்று.. என் கண்கள் தனக்குள் தானே போட்டிபோட்டு களைச்சுப் போக.... இறுதில்.. அவாவின் கண்களை பார்த்தேன். அவாவின் கருவிழிகள் இரண்டும் இமைகளோடு போட்டியிட்டு களைத்து.. ஆடாமல் அசையாமல் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதைப் போல... அவாவும் என் கண்களைப் பார்த்தா...

அந்த நொடியில்.. என் உள்ளத்தில் ஆயிரம் எண்ணங்கள் சிறகடித்தன. என் உதடுகள்.. என் பள்ளி நண்பர்கள் எனக்கு பட்டப் பெயராக அழைக்கும்... அவாவின் பெயரை ரகசியமாக உச்சரித்தும் கொண்டது. அந்த நிலையில் இருந்து ஒருவாறு என்னைச் சுதாகரித்துக் கொண்டு.... கூல் ரிங்ஸை கையில் எடுத்த நான்..

இதில இருங்கோவன்.. என்று அவா கோலில் இருந்த சோபாவைக் காட்ட.. நானும் தம்பியும் போய் உட்கார்ந்து கொண்டோம்.

எங்களை கோலில் இருத்திவிட்டு தனது அறைக்குள் போனவா.. சிறிது நேரத்திலேயே.. கோலுக்கு வந்து எங்களுக்கு எதிராக இருந்த இன்னொரு சோபாவில் அமர்ந்து கொண்டு..

எப்படி படிப்பு எல்லாம் போகுது. அண்டைக்கு எங்கட ஸ்கூல் எக்ஸிபிசனுக்கு வந்திருந்தீங்கள் எல்லோ. அப்ப நீங்கள் கேட்ட கேள்வி தான் இப்பவும் என் மனசில ஓடிக்கிட்டு இருக்குது.. எண்டா..

என்ன இரண்டு மாசத்துக்கு முதலில நடந்தது இன்னும் மனசில ஓடிக்கிட்டு இருக்காமோ.. என்று எனக்குள் நினைத்துக் கொண்டு.. ஒருபுறம் உள்ளூர ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியில் குளித்தப்படி..

ஓ.. அதைச் சொல்லுறீங்களா. நான் அப்படி தான். எங்க எக்ஸிபிசனுக்கு போனாலும்.. கேள்வி கேட்டு ஆக்களை குழப்பிவிடுறது தான்.. அதிகம் செய்யுறது. நீங்களும் குழப்பிட்டீங்களோ... எண்டன்.

அதற்கு அவா தன்னை மறந்து கலகல என்று சிரித்துக் கொண்டு.. இல்ல.. இல்ல.. உங்கட கேள்வியை விட.. நீங்கள் அதில அசிட்டில கை விரலை வைச்சிட்டு.. அவஸ்தைப் பட்டதை கவனிச்சன். இப்ப எப்படி இருக்குது கைவிரல்.. எண்டா..!

என்ன.. கை விரலில அசிட் பட்டதா.. எனக்கே தெரியாதே.. நானே அவதானிக்கல்லையே என்று எனக்குள் எண்ணியபடி.. கைவிரல்களை ரகசியமாக நோட்டமிட்டேன். ஒரு கைவிரலின் ஓரமாக கொஞ்சம் மஞ்சள் கறை போல இருந்தது.... ஒருவாறு அதைச் சமாளிச்சுக் கொண்டு.. ஓஓ.. அதைச் சொல்லுறீங்களா. அதை நான் பெரிசா எடுக்கல்ல.. எண்டன்..!

இப்படி எல்லாம் கவனிக்காமல் இருந்தா எப்படி. அது எங்கட எக்ஸிபிசனில எங்கள் சந்திப்புக்கு நல்ல ஞாபகார்த்தமாக இருக்கும்... எண்டு நினைக்கிறன் எண்டா.. பகிடி போல..!

நானோ.. அசடு வழிய சிரிச்சுக் கொண்டு.. ஓ.. அது நீங்கள் புரதத்திற்கு செய்த பரிசோதனை எல்லோ.. அதுக்கு என் கை தானா கிடைச்சுது.. என்று கதையை மாத்த கடும் பிரயத்தனம் செய்தேன்.

சும்மா கதையை மாத்தாதேங்கோ... எனக்குத் தெரியும்.. நீங்கள் எங்களுக்கு முதலே உதுகளை எல்லாம் செல்வடிவேல் மாஸ்ரரட்ட படிச்சிட்டீங்கள் என்று. அதுதான் அங்க வந்து கேள்விகளாக் கேட்டனீங்கள். உங்கட ரியூசனுக்கு வாற என்ர பிரண்ட் உங்களைப் பற்றி நிறையச் சொன்னவா..

இதைக் கேட்ட நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன். அட நான் இவங்களைப் பற்றி எல்லாம் எதுவுமே அறிந்ததில்லை. நண்பர்கள் இவாட பெயரா பட்டம் பெயரா எனக்குச் சொல்லுறதைக் கேட்டதோட சரி. இவங்க எல்லாம் நம்மளப் பற்றி முழு விபரமும் அறிஞ்சிருக்காங்களே. டேஞ்சர் பாட்டிங்க தான்.. என்று மனதுக்குள் எண்ணியபடி.. அவாக்கு பதில் அளிக்க முற்பட்டன். செல்வவடிவேல் மாஸ்ரட்ட போறனான் தான்.. ஆனால் அவர் எங்களுக்கு அது இன்னும் படிப்பிக்கேல்ல. இருந்தாலும் முந்தி ஸ்கூலில படிக்கேக்க தெரிஞ்சு வைச்சிருந்த ஞாபகத்தில தான் கேள்விகள் கேட்டனான் என்று உண்மையைச் சொன்னதும்..

அப்படியா. அப்படின்னா சரி. நான் நினைச்சன் நீங்கள் முந்திப் படிச்சிட்டீங்களோ என்று. அதுசரி.. நீங்கள் தானே எங்கட வீட்டுக்கெல்லாம் வாறதில்லையே... இப்ப என்ன இங்கால..

இல்ல அம்மா தான். தனக்கு நேரமில்ல.. உங்களைப் போய் பார்த்திட்டு வரச் சொன்னா. ஏன் எதுக்கு என்றெல்லாம் கேட்கல்ல. நாங்கள் புறப்பட்டு வந்திட்டம் எண்டன்.

சரி.. சரி.. இதுக்கு மேல நான் உங்களைக் கேள்வி கேட்கமாட்டன். பயப்பிடுறீங்கள் போல...!

பயம் எல்லாம் இல்ல. கொஞ்சம் தயக்கம்... எண்டன் பதிலுக்கு..!

சரி வெட்கப்படாதேங்கோ. அம்மா.. சாப்பாடு செய்யுறா... சாப்பிட்டுப் போங்கோ என்ன. என்றா அவா.

நாங்களும் மறுப்புச் சொல்லாமல்.. தலையசைக்க...

தலை கவனம் எண்டா.

என்ன வீடு தேடி வந்தவங்ககிட்ட பகிடி ரெம்பவே ஓவரா இருக்கு என்று மனசுக்குள் எண்ணிக் கொண்டு.. கஸ்டப்பட்டு.. கட்டுப்படுத்தி.. அடங்கி ஒடுங்கி இருந்து கொண்டம்.

சிறிது நேர மெளனத்தின் பின்... அதுசரி.. உங்களுக்கு என்னவா வர விருப்பம் எதிர்காலத்தில என்று கேட்டா...

இவாக்கேன்.. உது... என்று நினைச்சுக் கொண்டு.. பெரிசா ஒன்றுமில்ல. நல்லா உயரமா வளரனும் என்று விரும்புறன் எண்டன்.

ம்ம்.. எண்டவா.. நான் பெரிசா ஏதாவது சொல்லுவீங்க என்று எதிர்பார்த்தன் எண்டா.

இல்ல.. பெரிசா என்னத்தைச் சொல்லுறது.. அது சரி.. உங்களை இப்படி சோடிச்சு இருத்தி வைச்சிருக்கே.. கஸ்ரமா இல்லையா என்றேன்.

என்னைப் பார்க்க பாவமா இருக்கா.. என்று பதிலுக்கு கேட்டுக் கொண்டே.. ஒரு நாளைக்குத் தானே. நாங்களும் பெரிய ஆள் ஆகிட்டமில்ல.. என்று தான்... எண்டா.. சிரித்துக் கொண்டே.

எவ்வளவு சிம்பிளா சொல்லுறா... நல்ல துணிச்சல்காரி போல என்று நினைச்சுக் கொண்டு.. நினைப்புத் தான்...என்றேன் பதிலுக்கு.

ஏன் அப்படிச் சொல்லுறீங்க... நாங்க தான் தாவணிக்கு தாவிட்டமில்ல..! வெள்ளிக் கிழமையில.. அப்பப்ப எங்கட வைரவரட்ட வருவீங்களில்ல.. அப்ப வாங்கோ.. பூ போட்டுப் பார்த்துச் சொல்லுறன்.. ஏன் என்று.. எண்டா..!!

எதுக்குப்.. பூ..

தெரியாது... வாற வெள்ளிக் கிழமை.. அங்க வாங்க அப்ப சொல்லுறன்.. எண்டவா சிரித்துக் கொண்டே தலை குனிந்தவா தான். எழும்பி தாயிருந்த கிச்சினை நோக்கிப் போயிட்டா.

அதுக்கு அப்புறமா.. சிறிது நேரத்தில்.. சாப்பாடு வர.. சாப்பிட்டு.. நாங்களும் நன்றி சொல்லி.. விடைபெற்றுக் கொண்டம்.

அதுதான் நாங்கள் சந்தித்த இறுதிச் சந்திப்பு. அதற்கு அடுத்த நாளே.. சிங்கள ஆமிக்காரன்.. முன்னேற்ற நடவடிக்கைக்காக ஆக்கிரமிப்புத் தாக்குதலைத் தொடுக்க.. சிறிது சிறிதாக.. ஷெல் அடி.. பொம்பர் அடி என்று.. அவனும் முன்னேறி இடங்களைப் பிடித்துக் கொண்டு வர.. நாங்கள் எல்லோரும் ஊரைவிட்டு.. திக்குத் திக்காக ஓடியது தான்...

இன்றும்.. அந்தத் தாவணி போட்ட பூப் புதிருக்கு விடையின்றி.. நான்.

அவாவும் எங்கேயோ.. நான் அறியேன்..???!


நன்றி: யாழில் நெடுக்காலபோவான்.

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 12:01 AM

0 மறுமொழி:

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க