Wednesday, April 18, 2012

கனவில் வந்தது நிஜத்தில் தோன்றியது.. நிஜக் கதை..!!

ஊரில்.. வீட்டு முற்றத்தில்.. ஆகாயத்தை அண்ணார்ந்து பார்த்தபடி.. நான்...

திடீர் என்று.. பெரிய விமானம் ஒன்று அதன் முதுகில்.. நாசாவின் விண்ணோடம் ஒன்றை தாங்கிய படி.. பறந்து வருகிறது. இதனை அவதானித்த நான்... அதனை வியப்போடு வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நிற்கிறேன். என்னைக் கடந்து சென்ற விமானம்.. நான் எதிர்பார்க்காத வகையில்.. மீண்டும்.. திரும்பி வந்து.. வட்டமிட்டு வட்டமிட்டு நான் நின்ற பகுதியில் பறக்கிறது.. இந்தக் காட்சிகள் எல்லாம் அப்படியே மனதில் பதிவாகின்றன..!

எந்தப் பெரிய விமானம்..அதன் முதுகில் பெரிய விண்ணோடம்... இந்தப் பறப்புப் பற்றி முன்னர் கேள்விப்பட்டிருந்தாலும்.. பார்த்ததில்லை. ஆனாலும்.. நேற்றிரவு தூக்கத்தில்... அதுவும் கனவில்..பார்த்தது வியப்பாகவே இருந்தது.. இருந்தாலும் காலையில் அது மறந்து போய்விட்டிருந்தது.

இரவு 1 மணிக்கு தூங்கப் போயிருந்தாலும்.. காலை 7 மணிக்கெல்லாம் எழுந்துவிட்ட நான்.. வழமையான எனது பணிகளை செய்ய ஆரம்பித்தேன். இன்று எனது வீட்டைத் துப்பரவும் செய்யும் நாளும் கூட. இருந்தாலும் அதற்கிடையில் மடிகணணியை இயக்கி.. யாழ் களத்துக்கு செய்தி படிக்க.. வந்த நான்.. வழமை போல.. மெலோடியில் சிலவற்றை கேட்டுக் கொண்டே யாழைப் படித்துக் கொண்டிருந்தேன்.

"என்னமோ.. ஏதோ.. எண்ணம் திரளுது கனவில்.." பாடல் எழுந்தமானமாக.. என் எண்ணத்தை ஆட்கொள்ள... செவிகளை அதனால் நிரப்ப.. யு ரியுப்பில்.. தட்டிக் கேட்டுக் கொண்டு அதனை யாழிலும் பகிர்ந்துவிட்டு.. வீட்டை துப்பரவு செய்ய வெளிகிட்ட நான்.. அதனை முடித்து.. உடுப்பை எல்லாம் சலவை இயந்திரத்தில் போட்டு சுத்தப்படுத்தி.. உலர்த்திவிட்டு.. அதன் பின் குளித்து என்னையும் சுத்தப்படுத்திக் கொண்டு வெளியே வந்தேன். வீட்டை விட்டு.. வெளியில் போய் ஆகாயத்தைப் பார்க்கிறேன்.. கருமுகில் படர்ந்திருக்க.. மழை தூறிக் கொண்டிருந்தது.



ஒருவித ஏமாற்றத்தோடு..சமையலறைக்குச் செல்கிறேன். மணி காலை 11.30 ஆகி இருந்தது. சரி.. ஒரு இஞ்சி தேனீர் குடிப்பம் என்று... யோசிச்சிட்டு.. அங்க போய் குளிர்சாதனப் பெட்டியை திறந்து.. பார்த்தால் வாங்கி வைச்சிருந்த இஞ்சியை யாரோ ஆட்டைப் போட்டிருந்தாங்க. ஏமாற்றத்தோடு.. மின்சாரக் கேற்றிலை இயக்கி.. தண்ணியைச் சூடாக்கி.. வெறும் தேனீர் போட்டுக் கொண்டு.. பிஸ்கட் சிலவற்றை அதில் நனைத்து சாப்பிட்டுவிட்டு.. தேனீரையும் பருகிவிட்டு.. மீண்டும் யுனி வேலை செய்வம் என்று கணணிக்கு வந்தேன். அப்படியே யாழையும் எட்டிப்பார்த்தேன்.

அங்கே லண்டன் குட்டி கரியின்.. நகைச்சுவை பதிவைக் காண்கிறேன். அண்மையில் நான் ரசித்த குட்டி கரியின் காணொளியும் தலைப்புக்கு ஏற்ப விடயங்களைக் கொண்டிருந்ததால்.. அதனையும் யாழில் இணைத்துவிடுகிறேன். அப்படியே யாழின் இதர பக்கங்களை பார்க்க மடிகணணியின் மடியில் தடவி.. உருட்டுகிறேன்..

அக்னி V பரிசோதனை என்ற ஈசனின் தலைப்பு கண்ணில் பட.. என் இணைய உலாவியில் ஓடிக்கொண்டிருக்கும்.. பிபிசி தலைப்புச் செய்தியில் அந்தத் தலைப்பைப் பார்த்த ஞாபகம் வர.. பிபிசியின் இணைய முகவரியில்.. அந்தப் பக்கத்தை திறந்து.. அக்னி V பற்றிய செய்தியை படிக்கிறேன். அக்கினி V பறப்பு வீச்சுப் பற்றிய பிபிசி வெளியிட்ட படம் என்னைக் கவர.. அதனை யாழில் பகிர்ந்து கொள்கின்றேன். அப்படியே..

பிபிசி காணொளிகளில் என் பார்வையைப் பரப்பியது தான் தாமதம்.. அப்படியே கனவில் கண்ட காட்சி.. காணொளியின் thumbnail ஆகத் தோன்ற.. அதனை அழுத்திப் பார்க்கிறேன். அப்படியே எந்த மாற்றமும் இல்லாமல்.. கனவில் வந்த காட்சிகள் சில.. காணொளியில்.. பதிவாகி இருந்தன..! ஆச்சரியத்தோடு அந்தக் காணொளியை மீண்டும் மீண்டும் இரண்டு தடவை பார்க்கிறேன். கனவில் வந்த காட்சிகள் அங்கு அப்படியே... உறுதி செய்து கொள்கிறேன். இந்தக் காணொளியை நான் முன்னர் பார்க்கவே இல்லை..! ஆச்சரியம் பொங்க.. இந்த நிகழ்வை அப்படியே ஒரு குட்டிக் கதையாக்கி விட வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது.

Posted Image

http://www.bbc.co.uk/news/science-environment-17755597

http://www.bbc.co.uk...canada-17749899

இப்படி முன்னரும் பல முறை நடந்துள்ளது. ஒரு முறை கனவில் கடற்புலியாகி நான் கடலில் சண்டை இட்டு.. சிங்கள எதிரிப் படகுகளை அடித்து விரட்டுகிறேன். அதில் ஒன்று மூழ்கிப் போகிறது. என்ன ஆச்சரியம்.. கடற்புலியாகி.. கடலில் சண்டை போட்டேனா.. என்ற ஆர்வத்தில்.. வியப்பில்.. எண்ணம் ஓட.. கனவு கலைகிறது.

காலை எழுந்து இணையத்தில் செய்தியை படிக்கிறேன்.. மன்னார் கடலில் கடற்புலிகளால் டோரா மூழ்கடிப்பு என்ற செய்தி பளிச்சிடுகிறது.

இவை எல்லாம் எப்படி சாத்தியமாகின்றன.. இன்றைய அறிவியல் நிறைந்த உலகில் நாம் வாழ்ந்தாலும்.. எமது அறிவையும் ஆற்றலையும் மிஞ்சிய சில.. அதிசயங்கள்.. நடக்கக் காணத்தான் நேரிடுகிறது. இவற்றின் மூலம் தான் என்ன.. விடைக்கான தேடலோடு.. நான்.. உங்கள் முன் இப்பதிவோடு..!

(இது ஒரு நிஜக் கதை) (யாழில் -நெடுக்காலபோவன்)

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 1:34 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க