Wednesday, April 25, 2012

தம்புள்ள புத்தனின் புனித பூமியும்.. கேதீஸ்வரத்தின் பாவப்பட்ட சிவனும்.. பள்ளிவாசல்களின் இழப்பும்..!

Posted Image

1948 இல் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்கள்.. சிங்கள பெளத்த பெரும்பான்மை இனத்திடம்.. ஒட்டுமொத்த இலங்கைத் தீவையும் கையளித்த நாளில் இருந்து அந்த மண்ணை பூர்வீகமாகக் கொண்ட தமிழர்களும் சரி.. மற்றவர்களும் சரி.. இரண்டாம் மூன்றாம் நிலைப் பிரஜைகளாகவே அங்கு வாழ்ந்து வருகின்றனர். இது.. இன்றைய பிரித்தானிய அரசி உட்பட பலருக்கும் தெரியும். ஆனால் அவர்களின் சுரட்டலுக்கு எனி அங்கு அதிக வேலை இல்லை என்பதால்.. சிங்கள பெளத்த பேரினவாதம் தலைகால் புரியாமல் இனவிரோத.. மத விரோத செயற்பாடுகளோடு இலங்கைத் தீவில் சிங்கள பெளத்த மேலாதிக்க ஆட்சி நடத்தி வருவதை ஜனநாயகமாகக் கொண்டு அதனை அங்கீகரித்து நிற்கின்றனர்.

இதன் விளைவு தமிழர்கள் மீதான அடக்குமுறைகள். இவை இனக்கலவரங்கள்.. இனப் போர்.. இனப்படுகொலை. இனச் சுத்திகரிப்பு.. நில ஆக்கிரமிப்பு.. நிலத்துண்டாடல்.. மொழி ஒதுக்கல்.. மொழிப்பழிப்பு..மத அடையாள அழிப்பு.. இன அடையாள அழிப்பு.. பெண்கள் மீதான பாலியல் தொந்தரவுகள்.. இனக்கலப்பு.. சமூகச் சீரழிவு.. தமிழர்கள் அகதிகளாக துரத்தி அடிப்பு.. என்று எனென்ன இன அடக்குமுறை வடிவங்கள் இருக்கோ அத்தனையும் கொண்டு சிங்கள பெளத்த பேரினவாதம் தமிழர்களின் இருப்பை இலங்கைத் தீவில் இல்லாமல் செய்வதை கன கச்சிதமாக செய்ய இடமளிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக 1972 இற்குப் பின்னர் உருவான தமிழர்களின் ஆயுத ரீதியான எதிர்ப்பு என்பது.. சிங்களவர்களின் மேலாதிக்க நலனை பாதிக்கும் என்று இனங்காணப்பட்ட நிலையில்.. அதனைப் பயங்கரவாதமாக்கி ஒடுக்க சிங்களவர்கள் தங்களையே பெரும்பான்மையாகக் கொண்ட அவர்களின் நாடாளுமன்றில்.. சிறுபான்மையினரின் கருத்துக்கு இடமளிக்காது.. அவர்களின் பங்களிப்பின்றியே.... பயங்கரச் சட்டங்களை இயற்றி இனப்படுகொலைக்கு சட்ட அங்கீகாரம் பெற்றுக்கொண்டனர். இதன் கீழ் தமிழர்களைப் படுகொலை செய்வது.. கைது செய்து சிறையில் அடைப்பது... நாட்டை விட்டு ஆயிரக்கணக்கில் ஓட ஓட விரட்டியடிப்பது.. தமிழர்களின் இன இருப்புக்கான அடையாளங்களை அழிப்பது.. என்று எல்லா விதமான அக்கிரமங்களையும் இடைவிடாது தடையின்றி செய்து வருகின்றனர்.

தமிழினம் மீதான இனச் சுத்திகரிப்பின் உச்சமாக.. 1983 இல் தமிழர்கள் தென்னிலங்கையில் இருந்து வன்முறை ரீதியாக விரட்டி அடிக்கப்பட்டதோடு.. தமிழர்களின் தாயக பூமியான வடக்குக் கிழக்கு இலங்கையிலும்.. பிரித்தானிய காலனித்துவத்தால் குடியேற்றப்பட்டு சிங்களவர்கள் மத்தியில் சிறை வைக்கப்பட்டுள்ள மலைய தமிழ் சொந்தங்கள் வாழும் மலையகத்திலும்.. பெரும் இன அழிப்பு நடவடிக்கையை இன்றும் தொடந்து வருகின்றன.

இருந்தாலும்.. 1983 இல் இருந்து உச்சம் பெற்ற தமிழ் மக்களின்.. சிங்கள பேரினவாதிகளின் அடக்குமுறைக்கு எதிரான... தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பயனாக.. 1983 யூலை இல் தமிழர்கள் மீது சிங்களவர்களால் மேற்கொள்ளப்பட்ட இனக்கலவரத்தின் பின் தமிழர்கள் வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் பெரிய அளவில் துன்புறுத்தப்பட்டது இல்லை..! அதற்குக் காரணம்.. அப்படியான இன வன்முறைகள்.. துன்புறுத்தல்கள் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு உலக அரங்கில் அனுதாபமும் அங்கீகாரமும் அளித்துவிடும் என்ற சிங்களப் பேரினவாதத்தின் பயமே ஆகும்.

இந்த நிலை 2009 மே முள்ளிவாய்க்கால் தமிழினப் பேரழிவு வரை நடைமுறையில் இருந்ததால்.. திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கைகளை.. சிங்கள பேரினவாத அரசுங்கள் தாம் விரும்பிய வடிவில் செய்ய முடியவில்லை. இருந்தாலும் பயங்கரவாத ஒழிப்பு என்ற போர்வையில்.. தமிழர்கள் மீதான அவர்களின் இனப்படுகொலைக்கு அவர்கள் சர்வதேச அங்கீகாரம் பெற்றுக் கொண்டு தமிழர்களை தமிழர்களின் பூர்வீகத்தை.. வாழ்விடங்களை.. மத அடையாளங்களை அழித்தொழித்துக் கொண்டு தான் இருந்தனர். சிங்களக் குடியேற்றங்கள் மூலமான தமிழர் நிலப் பற்றிப்பு மற்றும் ஆக்கிரமிப்புக்களையும் அவர்கள் நிறுத்தவில்லை..!

ஆனாலும் 2009 மே க்குப் பின்னர்.. தமிழர்களின் சிங்களப் பேரினவாதத்தின் அடக்குமுறைக்கு எதிரான ஆயுத அச்சுறுத்தல் இல்லை என்ற நிலை ஆன பின்னர்.. சிங்கள பெளத்த பேரினவாதத்தின் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மீண்டும்.. முன்னெப்போதும் இல்லாத வகையில்.. மிகத் தீவிரம் அடைந்துள்ளன.

35 வருட இன அழிப்பு ஆக்கிரமிப்புப் போர் செய்து.. கொழுத்துப் பெருத்து நிற்கும் சிங்கள பெளத்த பேரினவாத இராணுவத்தின் அசுர பலத்தைக் கொண்டு சிறீலங்கா சிங்கள பெளத்தம் இலங்கைத் தீவை தனதாக்க திடசங்கற்பம் பூண்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில்.. அண்மைய மூன்று ஆண்டுகளாக இலங்கைத் தீவில் தொடர்ச்சியாக பல சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதனைக் கண்மூடி.. அங்கீகரிக்கும்.. தமக்குத்தாமே அழிவைத் தேடிக்கொள்ளும் போக்கு சிங்கள பெளத்த பேரினத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட தமிழர்கள் உட்பட சிறுபான்மையினரிடம் இன்னும் காணப்படுவது தான் சிங்கள பெளத்த பேரினவாதம் அதன் கொள்கையில் உறுதியாக நிற்க அதற்கு இன்றும் அதற்கு உதவுகிறது.

சிங்கள பெளத்த பேரினவாதத்தின் அடிவருடி.. ஆயுத ஜனநாயகம் செய்யும் பாசிசக் கொள்கை கொண்ட தமிழ் கொலைக் கும்பல்களும்.. இந்திய தேசிய நலன்காக்கும் தமிழ் கொலைக் கும்பல்களும்.. மிதவாத தமிழ் அரசியல்வாதிகள் என்ற பொய் முகத்தோடு இந்திய தேசிய நலனில் அக்கறைக் கொண்டு அதன் வழி செயற்படும்.. சிங்கள பெளத்த பேரினவாதத்திற்கு இன ஐக்கியம்.. ஐக்கிய இலங்கை.. என்று சொல்லி சாமரம் வீசுபவர்களும்.. முஸ்லீம்களின் உரிமைக்காக அறவழியில் போராடுகிறோம் என்ற போர்வையில் சிங்கள பெளத்த ஆட்சிப்பீடத்தைப் பலப்படுத்தி அதன் படியளப்பிற்கு மக்களை, மக்களின் உரிமைகளைக் காட்டிக் கொடுப்போரும்.. மலையக மக்களுக்கு சிறப்பான வாழ்வு அளிக்கிறோம் என்ற உறுதி மொழிகளோடு அந்த மக்களின் உழைப்பை சுரண்டி சிங்களத்தின் பாதம் கழுவி செல்வச் சிறப்புப் பெறுவோரும்.. சிறுபான்மையினராக இருந்து கொண்டும்.. சிங்களப் பெளத்த பேரினவாத்திற்கு தொடர்ந்தும் அதன் கொள்கை வெல்ல.. வலுப்பெற உதவி வருகின்றனர்.

மேலும்.. ஒற்றுமையாக ஒரே குடையின் கீழ் நின்று தமது வாழ்வுரிமைக்காகக் குரல்கொடுக்க வேண்டிய சிறுபான்மை இன மக்கள்.. மத.. பிரதேச... அடிப்படையில் பிளவு பட்டு நின்று கொண்டு.. சர்வதேச அரங்கில் உள்ள தீவிர மதவாத அடிப்படைகளின் பின்னால் பயணித்துக் கொண்டு.. மேலும் மேலும் தம்மை சிங்கள பெளத்த பேரினவாதத்தின் முன் பலவீனமான சக்திகளாக இனங்காட்டிக் கொண்டு நிற்கின்றனர். இதன் பயனாக வடக்குக் கிழக்கு எங்கனும்.. புனித பூமியோ.. பூர்வீக பூமியோ என்ற எந்த அடிப்படைகளும் இன்றி.. ஆக்கிரமிப்பு சிங்கள பெளத்த இராணுவம்.. அதன் இன இருப்பை நிலைநாட்ட சிங்களக் குடியேற்றங்களையும்.. பெளத்த சின்னங்களையும் புத்த கோவில்களையும் கேட்டுக் கேட்பாரின்றி நிறுவி வருகிறது. சிங்கள மயமாக்கலை இலங்கைத் தீவெங்கும் துரிதப்படுத்தி படுவேகமாக அதை நிறைவேற்றியும் வருகிறது.

இந்துக்களின் பாடல் பெற்ற இரண்டு முக்கிய ஈழத் திருத்தலங்களான கோணேஸ்வரத்திலும்.. கேதீஸ்வரத்திலும்.. இன்று புத்த சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. கதிர்காமத்தில் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது. முருகண்டியில் புத்தர் சிலை இருக்கிறது. நயினாதீவில் புத்தர் நிற்கிறார். நல்லூர் வட்டகையில் ஆரியகுளத்தில்.. புத்தர் கோவில் நிறுவப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக.. சிங்களவர்கள் போகும் வரும் இடமெல்லாம் புத்தர் சிலைகளும் புத்த கோவில்களும் நிறுவப்பட்டு வருகின்றன. இங்கு எவரினதும்.. புனிதம்.. பிறப்புரிமை.. பூர்வீகம்.. சிங்கள பெளத்த பேரினத்தால் கண்ணெடுத்துப் பார்க்கப்படுவதில்லை. காரணம்.. அதன் நோக்கில் இலங்கைத் தீவு.. சிறீலங்கா எனும் சிங்கள பெளத்த தேசம் ஆகும்..!

இந்த நிலையில்.. அண்மையில் சிறீலங்காவிற்கு பயணம் மேற்கொண்ட இந்திய இந்துத்துவ கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியின் பிரமுகர் சுஷ்மா சுவராஜ் கூட இந்த சிங்கள பெளத்த பேரினவாத மத அடக்குமுறையை கண்டிக்கவில்லை. ஆனால் அயோத்தியில் பாபர் மசூதி கட்டியதில் தான் அவர்களுக்கு அரசியல் செய்ய மதத்துவேசத்தை தூண்ட முடிந்துள்ளது.

மேலும்.. 2001 ம் ஆண்டு கட்டுநாயக்கா சிங்கள விமானப்படைத் தளம் தமிழீழ விடுதலைப்புலிகளால் தாக்கப்பட்ட வேளையில்.. சிங்களவர்கள் மத்தியில் ஒரு தமிழ் எதிர்ப்புணர்வு கிளர்ந்தது. அதை அவர்கள் வெறும் வார்த்தை அளவிலான கோபமாக வெளிக்காட்டிக் கொண்டு அடக்கிக் கொண்டனர். இருந்தாலும்.. ஆங்காங்கே சில வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. கொழும்பில் ஒரு இந்து ஆலயத்தின் சில சிலைகள் .. சிங்கள பெளத்த காடையர்களால் உடைக்கப்பட்டிருந்தன. அதற்கு அன்றைய சிங்கள அரசு.. கண்டனம் தெரிவித்திருந்தது..! இதற்கு முக்கிய காரணம் தமிழர் தரப்பிற்கு பலமான இராணுவ அரசியல் சக்தியாக கொள்கையும் வீரமும் நிறைந்த தமிழீழ விடுதலைப்புலிகள் களத்தில் நின்றமையே ஆகும்..!

அதுமட்டுமன்றி.. தமிழ் மக்களுக்கு பாதுகாப்பாக நின்ற.. புலிகளின்.. பலமான இராணுவ செயற்பாட்டை தீவிர பயங்கரவாத முலாம் பூசி..சர்வதேச ஆதரவோடு அடக்கி.. சிங்களப் பேரினவாதம் தான் நினைத்தபடி ஆட.... சிங்கள பெளத்த பேரினவாததிற்கு அன்றைய அந்தக் கோபத்தை அமைதி வழியில்.. அடக்க வேண்டிய தேவையும் இருந்தது.

ஆனால்.. மே 2009 க்குப் பின்.. உள்ள நிலை வேறு. தமிழர் தாயகம் எங்கும்.. கட்டுப்பாடற்று... கேள்வி கேட்பாரரின்றி...புத்த சிலைகளும் புத்த கோவில்களும்.. சிங்களக் குடியேற்றங்களும் அமைக்கப்படுவதோடு மட்டும் மே 2009 க்குப் பின்னான காலம் மாறி நிற்கவில்லை. மாறாக.. வடக்கு கிழக்கிற்கு வெளியிலும் சிறுபான்மை இன மக்களின் அடையாளங்கள்.. இருப்புக்கான அடிப்படைகள் அழிக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியே அனுராதபுரத்தில் ஒரே இரவில் இடிக்கப்பட்ட மசூதியும்.. தம்புள்ளவில்.. இல்லாத புனித பூமியை உருவாக்கி.. இடிக்க கோரப்படும்.. மசூதியும்.. அகற்றப்படக் கோரும் இந்து ஆலயமும்..!

இது எதனை உணர்ந்துகிறது என்றால்.. சிங்கள பெளத்த பேரினவாதத்தின் முன் தமிழர்களும் முஸ்லீம்களும் ஒன்றுதான். அதாவது சிறீலங்காவில் சிங்களவர்களின் சொல்லுக்கு கீழ்படிந்து அவர்களின் வழிகாட்டலுக்குள்.. சிங்களவர்கள் தங்கள் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்த பின் மிச்சம் மீதியாக வழங்க இருக்கும் வசதிகளைக் கொண்டு.. முழு இலங்கைத் தீவும் சிங்களவர்களுக்கே சொந்தம் என்பதை ஏற்றுக் கொண்டு..சிறுபான்மை இனம் என்போர்.. தமது வாழ்வை பார்த்துக் கொள்ள வேண்டும்... இன்றேல் அவர்கள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்.. அல்லது அழிக்கப்படுவார்கள் என்பது தான்.. சிங்கள பெளத்த பேரினவாதத்தினதின் இன்றைய கொள்கை..! இதில் பேரினவாதிகளான சிங்களவர்கள் மிகத் தெளிவாகவே உள்ளனர்..!

ஆனால் அதேவேளை.. எந்தத் தெளிவுமற்ற நிலையில்.. குழப்பமான.. பலவீனமான ஒரு அரசியல்.. சமூகத்தளத்தில் இலங்கைத் தீவு வாழ் சிறுபான்மையினர் உள்ளனர்.

இங்கு ஒன்றை முஸ்லீம்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழர்களின் இந்து ஆலயங்கள் மீதும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும் சிங்கள பெளத்த பேரினவாத அரசு.. திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கைகளைச் செய்த போது குண்டுகளை வீசித் தாக்கிய போது.. அவற்றை இடித்து பெளத்த கோவில்களை நிறுவிய போது.. சாமி சிலைகளை உருவிவிட்டு.. புத்தர் சிலையை திணித்த போது.. (இன்றும் இவை தொடகின்றன) முஸ்லீம்கள் இவற்றிற்கு எதிராக குரலே எழுப்பவில்லை. மாறாக அவை தம்மை பாதிக்காத மாற்றான் எவனையோ பாதிக்கும் விடயமாகவே நோக்கி பேசாதிருந்து வந்தனர்..!

ஆனால் எனியாவது.. தம்புள்ள சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு.. சிறுபான்மை இனங்கள்.. தமக்குள் உள்ள அநாவசிய வேறுபாடுகளை அனைத்தையும் களைந்துவிட்டு.. இலங்கைத் தீவில் தம் தனித்துவம்.. வாழ்வுரிமை... பூர்வீகம் காக்க ஒன்றிணைவதும்.. அந்த ஒன்றிணைவை சர்வதேச ஆதரவோடு பலப்படுத்திக் கொண்டு.. சிங்கள பெளத்த பேரினவாதத்தின் சர்வதேச மட்டத்திலான சதிகார நடவடிக்கைகளையும் உள்ளூரிலான சிங்கள பெளத்த மேலாதிக்க நடவடிக்கைகளையும் முறியடிப்பதே இன்றை அவசிய தேவையாகும்..! இதன் மூலமே இலங்கைத் தீவில் வாழும் எல்லா சிறுபான்மைச் சமூக மக்களும் நன்மை பெற முடியும்.

இதற்கு அடிப்படையாக தமிழ் மற்றும் முஸ்லீம் அரசியல் தலைமைகள் கூடிப் பேசி.. ஒரு கூட்டுத் தலைமை உள்ள பொது அமைப்பை உருவாக்கிச் செயற்பட வேண்டும். ஆளாளுக்கு தனித்து நின்று கத்திக் கொண்டிருப்பதிலும் கூட்டாக நின்று ஒற்றுமையோடு ஒரு விடயத்தைச் சொல்வதில் உள்ளூரிலும் பார்க்க சர்வதேசத்தில் அதன் கனதி அதிகமாக இருக்கும்..! அதேபோல்.. முஸ்லீம்.. இந்து.. கிறீஸ்தவ தமிழ் பேசும் தலைமைகள்.. ஒன்றாக சேர்ந்து மத அடையாளங்களை சிங்கள பெளத்த பேரினவாத ஆக்கிரமிப்பில் இருந்து காக்க கூட்டாக செயற்பட ஒரு பொது அமைப்பை உருவாக்க வேண்டும்..! சிங்கள கிறீஸ்தவர்களும் சிங்கள பெளத்த பேரிவாதத்தின் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளனர். அவர்களையும் அவர்களின் பிரச்சனைகளோடு.. அரவணைத்துச் செல்வதும்.. நன்றே. இவ்வாறான ஒற்றுமை நிறைந்த செயற்பாடுகளால் அன்றி வேறெதனாலும் சிங்கள பெளத்த பேரினவாத நெருங்கடியை இலங்கைத் தீவில் இருந்து சர்வதேச உதவி பெற்று கூட நீக்க முடியாத நிலையே தோன்றியுள்ளது..!

இதனை உணர்வார்களா..உணர்ந்து ஒற்றுமையோடு பொது எதிரியான சிங்கள பெளத்த பேரினவாதத்திற்கு எதிராக செயற்பட முன் வருவார்களா.. சிறுபான்மை இனங்களும்.. சமூகங்களும்.. அவர்களின் அரசியல்.. மத.. சமூக தலைமைகளும்..?!

இந்த இடத்தில் சிறுபான்மையினர்.. ஒன்றை தெளிவாகச் சொல்லிக் கொள்வது அவசியம்.. சிறுபான்மை இன மக்களின் ஒற்றுமையும் செயற்பாடுகளும் என்பது சிங்களவர்களுக்கு எதிரானதோ.. அவர்களின் மத இருப்புக்கு எதிரானதோ அல்ல. அவை.. சிங்கள பெளத்த பேரினவாதக் கொள்கையின் கீழ் சிறுபான்மை இன மக்களின் சமூகங்களின் உரிமை இலங்கைத் தீவில் பறிக்கப்படுவதற்கு எதிரானது என்பதை..! இது சர்வதேச அரங்கில் சிறுபான்மை மக்களின் கூட்டு நடவடிக்கைக்கு ஒரு நல்ல அங்கீகாரத்தைப் பெற்றுத்தருவதோடு.. சர்வதேச அரங்கில் சிங்கள பெளத்த பேரினவாதம் போடக் கூடிய போலி வேசங்களை கலைக்கவும் உதவும்..!

கருத்தாக்கம்: நெடுக்ஸ்
(நன்றி யாழ்.இணையம்.) 

Labels: , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:02 AM

2 மறுமொழி:

Blogger Samy செப்பியவை...

well said. sathi

Wed Apr 25, 09:14:00 PM GMT+1  
Blogger Samy செப்பியவை...

well said. sathi

Wed Apr 25, 09:15:00 PM GMT+1  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க