Monday, April 30, 2012

அவள் ஒரு தேவதை.. கனவாகிப் போனவள்..!

Posted Image

பழுத்த கறுத்தக் கொழும்பான் மாம்பழத்தின் மஞ்சள் நிறத்தில் அவள் மேனி..! அழகிய வதனம்.. ஒல்லியான உடல்.. எல்லாமே என் விருப்புக்குரிய அம்சங்களுடன் அவள்.

வீதியால்.. துவிச்சக்கர வண்டியை உருட்டிக் கொண்டு வந்தவள் மீது என் பார்வை...யன்னலால் அவளைக் காண்கிறேன். முதல் பார்வையிலேயே என் கண்களுக்கு அவளைப் பிடித்து விடுகிறது. அத்தனை அழகு அவள். என் கண்களோ அவளை விடுவதாக இல்லை..மேலும்.. ஆளை நோட்டமிடுகின்றன..! கழுத்தில்... ஒரு கயிறு. அது தாலிக் கயிறா இருக்குமோ.... என்ற சந்தேசகம் எழ.. கண்கள் அவளிடம் இருந்து விலக்கிக் கொள்கின்றன.. மனம் ரசிப்பதை நிறுத்தி.. இயல்புக்குத் திரும்புகிறது..! கால்கள் யன்னலை விட்டு அப்பால் நடையைக் கட்டுகின்றன.

சற்று நேரத்தின் பின்.. மனதை அடக்க முடியாமல்.. கால்கள் மீண்டும்.. யன்னலை நாட கண்கள் வெளியே வீதியில் நோட்டமிடுகின்றன...! என்ன ஆச்சரியம்....

எங்கள் வீடு. பெரிய பங்களா. அதன் வாசலில் மக்கள் இளைப்பாற என்று சில மரத்தால் ஆன நீண்ட இருக்கைகள்.. வீட்டு மதிலோடு..ஒட்டி அமைக்கப்பட்டிருந்தன. அதில் ஒன்றில்.. அவள்.. வந்து உட்கார்ந்திருக்கிறாள். அருகில் அவள் கொண்டு வைத்திருந்த துவிச்சக்கர வண்டி நிற்கிறது..! நீண்ட நேரமாகவே அவள் அதில் உட்காந்திருப்பதை ஜன்னலில் நீண்ட நேரமாக நின்று அவதானித்த நான்... வீட்டை விட்டு வெளியே வந்து அவளை நெருங்கி.... பேசுவதென்ன என்று அறியாமல்.. நிற்கிறேன்...!

அவளோ.. நிலைமையைப் புரிந்து கொண்டவளாய்.. "நான் ஒருவருக்காக காத்திருக்கிறன். இந்தா வருவன் என்றவர் இன்னும் வரவில்லை. நான் பள்ளியில் ஒரு நிகழ்ச்சிக்குப் போகனும் நேரமாகுது என்று சொன்னாள்."

"அப்படியா.. அப்ப சரி...!" என்று விட்டு நான் அந்த இடத்திலின்றும் விலகி வந்துவிட்டேன்.

நானும் வழமை போல.. பள்ளிக்குச் செல்ல தயாராகி.. கிளம்பி.. பள்ளிக்குச் செல்கிறேன். அங்கே வகுப்பறையில் வழமைக்கு மாறாக சிலரே இருந்தனர். அதில் என் நண்பர்களும் இருந்தனர்.என் நண்பர்களில் ஒருவனின் அருகில்.. நான் வீட்டுக்கு முன்னாள் கண்ட அவள்.! மீண்டும் ஆச்சரியத்தோடு.. அவளின் வருகை பற்றி.. நண்பனிடம் கேட்கிறேன். அன்றைய பள்ளி நிகழ்விற்கான வெளியார்.. மாணவ மதிப்பீட்டு குழுவின் உறுப்பினராக அவள் வந்திருப்பதாக என் நண்பன்.. சொன்னான்.

நான் இந்தக் கால இடைவெளியில் என்னை நெருங்கி இருந்த அவளின் கழுத்தைப் பார்க்கிறேன். அது தாலிக் கயிறல்ல. வேறு ஏதோ நூலினால் ஆன.. மாலை..! உறுதி செய்து கொள்கிறது மனம்..!

அந்த நிலையில்...

அன்றைய பள்ளி வகுப்பறை விசேட நிகழ்ச்சிக்கு சொற்பொழிவாற்ற மற்றும் மதிப்பீட்டுக்கு என்று.. ஆசிரியர் வருகிறார். வழமையான பள்ளி ஆசிரியர் அல்ல. வெளியாள்... ஆனால் முன்னரே அறிமுகமானவர்.

நானும் நண்பனும்.. வகுப்பறையின் பின் ஆசனங்களில் அமர்ந்திருக்க.. நண்பனின் அருகில் அமர்ந்திருந்தவள்.. ஆசிரியர் வருவதைக் கண்டதும்.. எழுந்து முன்னாள் சென்று அமர்ந்து கொண்டாள். அந்த வகுப்பில் அவள் ஒருத்தி தான் பெண்..! ஆசிரியர் தன் வசதிக்காக.. எங்களையும் முன்னால் வந்து அமரச் சொல்ல.. நான் எழுந்து முன்னுக்கு வந்தேன். அங்கே அவள் அருகில் ஒரு ஆசனம். என் பார்வைகள் அதில் பதிகிறது. அவள் அருகில் போய் இருக்கலாமே என்று ஒரு மனம் விரும்ப.. மறு மனம் மறுதலிக்கிறது. என்ன நினைப்பாள்.. வழியுறானே.. என்று எல்லோ நினைப்பாள். இருந்தாலும்.. அவளின் பாதங்கள் வரை நீண்டு.. நிலத்தில் படர்ந்து முட்டி அழகு கோலம் போட்டுக் கொண்டிருந்த.. அந்த அழகான நொதுமையான ஸ்கேட்டின் அழகிய தோற்றத்தில் மயங்கிய என் முதல் மனம் அவள் இருக்கைக்கு அருகில் என்னை அமரச் செய்கிறது..!

அமர்ந்த பின் தான் பார்க்கிறேன்.. என் ஆசனத்தில் இருந்து வகுப்பறையின் வெள்ளைப்பலகையை காண முடியாது என்று. இதென்னடா வம்பாப் போச்சு.. சாறி.. போட் தெரியுதில்ல.. என்று விட்டு.. பேசாமல் எழுந்து அப்பால் நடந்து சென்று.. வெள்ளைப்பலகைக்கு முன்னால் இரண்டாம் வருசையில் என் நண்பனுக்கு அருகில் அமர்ந்து கொள்கிறேன்.

சிறிது நேரத்திலேயே... ஆசிரியர் சிறிய அறிமுகப் பேச்சை ஆரம்பிக்கிறார். அவரின் பேச்சில் அதிகம் ஆங்கிலச் சொல் கலந்திருக்க.. காதில் கெட்போனை மாட்டிக் கொண்ட அவள்.. மைக்கில்.. ஆசிரியரை நோக்கி ஆங்கிலத்தில் பேசுகிறாள். ஆசிரியரை நோக்கி ஒன்றில்..முற்றாக தமிழில் அல்லது ஆங்கிலத்தில் பேசச் சொல்கிறாள். அவரோ.. அதனை ஆட்சேபிக்கிறார். இந்த நிலையில்.. என் நண்பனும் அவளுக்கு ஆதரவளிக்கிறான். ஆனால் எமக்கு முன்னாள் அமர்ந்திருந்தன் கறுத்த குண்டான இன்னொருத்தன்.. அதனை வரவேற்கவில்லை. அவன்.. என் நண்பனைப் பார்த்து.. உன் சிற்றுரையை வாசி. ஆசிரியரைக் குறை சொல்வதை விட்டிட்டு.. என்று விளிக்கிறான். ஆசிரியரும் அவனுக்கு ஆதரவளித்து என் நண்பனைப் பார்த்து.. மதிப்பீட்டுக்கான சிற்றுரையை வாசிக்கச் சொல்கிறார். நண்பன் ஆங்கிலத்தில் அதை வாசிக்கிறான். இதனை அந்த கறுத்தக் குண்டானவன்.. நிராகரித்து தமிழில் தான் அதனைப் படிக்க வேண்டும்.. என்று சொல்லி.. கலகம் செய்கிறான். இந்த நிலையில்.. அவள் என் நண்பனுக்கு ஆதரவு தருகிறாள். நானோ.. மெளனமாக நடப்பவற்றை கவனித்துக் கொண்டிருந்தேன்.

இந்த நிலையில்.. ஆசிரியர் என் நண்பனின் பேச்சை நிறுத்தச் சொல்கிறார். அப்படியே என்னை பேசச் சொல்கிறார். நான் என் பேச்சை ஆரம்பிக்க முன்னர் ஆசிரியரிடன் அனுமதிபெற்று.. அவர் கையில் வைத்திருந்த அவரின் அறிமுகப் பேச்சுக்கான.. அந்த பிரிண்டவுட்டை என் பார்வைக்குத் தரக் கேட்கிறேன். அவரும் அந்தக் கறுத்த குண்டனின் ஊடாக அதனை என்னிடம் அனுப்பி வைக்கிறார்.

அதனைப் பார்த்த எனக்கு ஆச்சரியம். தமிழில் பிரிண்ட் செய்யப்பட்டிருந்தாலும்.. பல இடங்களில்.. @@@@@ இப்படியாக எழுத்துக்கள்.. அமைந்திருந்தன. அவற்றையே ஆசிரியர் ஆங்கிலச் சொற்களால் நிரப்பி வாசித்திருந்தார். இதனை ஆட்சேபித்த நான்.. ஒரு பிரிண்டவுட்டை கூட.. சரியாகச் செய்ய முடியாத இந்த ஆசிரியரின்.. மதிப்பீட்டை ஏற்க மாட்டேன் என்று.. வகுப்பில் எல்லோர் மத்தியிலும்.. எழுந்து நின்று சொல்லிவிட்டு.. ஆதாரத்துக்காக அந்த பிரிண்டவுட்டையும் எடுத்துக் கொண்டு.. வகுப்பை விட்டு வெளியேறி வந்துவிடுகிறேன்.

வந்துவிட்ட பின் தான் நினைக்கிறேன். அட இந்தாளின் வெளியார் மதிப்பீட்டின் கீழ்.. முக்கியமான பரீட்சை செய்து சித்தியடைய வேண்டி இருக்கே என்று. அப்படியே யோசிச்சுக் கொண்டு.. பள்ளியில் இருந்து நடந்து.. வீட்டுக்கு அருகில் வந்து விட்ட என்னை....வீதியால் என்னைக் கடந்து போன என் நண்பனும் காண்கிறான். அவன்.. "நீங்கள் எழும்பி வந்த பிறகு.. தங்கச்சியும் எழும்பி வந்திட்டுது. நானும் வந்திட்டன்".. என்றான். என்ன அவள் இவனின் தங்கச்சியா.. என்று நான் வியந்து போய் நிற்க.. அவளும் அங்கே வந்து சேர்ந்தாள். என் வீட்டருகில் இருந்த காவலாளி மேசையில் வைத்துவிட்டுப் போயிருந்த அவளின் சில பொருட்களை எடுக்க வந்திருப்பதாகச் சொன்னாள்.

சரி.. எடுத்துக் கொண்டு போங்கோ என்றேன். அதற்கு அவள்.. சிறிது நேரம் யோசித்துவிட்டு.. "இல்ல அவை அங்கேயே இருக்கட்டும்".. என்றாள். நானும் ஏதோ தன் ஞாபகார்த்தமாக.. அவள் எனக்காகத் தான் அவற்றை விட்டுச் செல்கிறாள் என்ற நினைப்பில்.. சம்மதிக்கிறேன். அவளும்.. வகுப்பறையில் என் துணிச்சலான செயலைப் பாராட்டிக் கொண்டு.. கைகளை அசைத்து அனுமதி பெற்றுக் கொண்டு.. அழகாக துவிச்சக்கர வண்டியில் ஏறி அமர்ந்து பறந்து செல்கிறாள்.

நான்.. அவள் விட்டுச் சென்ற பொருட்கள் மீது.. கண்ணும் கருத்துமாக இருக்க.. அவள் போய் சில நொடிகளில்.. இன்னொருவன் அங்கே வருகிறான். முன் பின் பார்த்தறியாத அவன்... அவளைப் போலவே மா நிறமாக இருக்கிறான். அவன் அவள் விட்டுச் சென்ற பொருட்களை எல்லாம் சேர்த்து எடுக்கிறான். இவற்றை எல்லாம் என் வீட்டாரும் கவனிக்கின்றனர். நானோ... எதிர்பாராத அவனின் வரவும் செயலும் கண்டு ஏக்கத்தில்.. மலைத்துப் போய் நிற்க.. அவன் ஏதோ ஒரு பாசையில்.. ஏசுகிறான். அவை.. தன் காதலியின் பொருட்கள் என்பதாகச் சொல்கிறானோ.. என்று நானே அவற்றை ஊகித்துக் கொண்டு..

ஐயோ.. எல்லாம் போச்சு..! எனி.. எப்படி.. என் பரீட்சையில் சித்தி பெற்று பட்டம் வாங்கப் போகிறேன். அந்த வெளியார் மதிப்பீட்டுப் பரீட்சையில் கட்டாயம் சித்தியடைந்தால் தானே பட்டம் கிடைக்கும். அந்த வாத்தியோட வீணா பிரச்சனைப்பட்டிட்டமே என்ற ஏக்கம்.. மனதை நிரப்ப.. தாளாத துயரம் மனதில் பாரமாக..கண்களை திறக்கிறேன். கனவு கலைகிறது..!

காலை எழுகிறேன்.. இந்தப் பாடல் மனதோடு தானாக இசைக்கிறது...இந்தக் கனவின் பலன்.. என்னவோ.. யான் அறியேன். தற்போதைக்கு எந்தப் பரீட்சையும் எனக்கு இல்லை. பரீட்சைகள் எல்லாவற்றிலும் சித்தியும் அடைந்துவிட்டேன்..! எழுத்து வேலை மட்டும் தான் உண்டு. கனவில் வந்த..இப்படியான ஒரு சூழலை.. நான் முன்னர் எதிர்நோக்கியதும் இல்லை.... எல்லாம் வியப்பாக அமைய... சோர்வோடு.. நேரத்தைப் பார்க்கிறேன்..! அது தன்பாட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது. நாட் காரியங்களை ஆற்ற.. நேரத்தை கணக்குப் போட்டுப் பார்த்துவிட்டு இந்தக் கதையை இத்தோடு முடிக்கிறேன்.

- யாழில் நெடுக்காலபோவன்..!

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 12:19 PM

0 மறுமொழி:

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க