Wednesday, February 06, 2013

கேம்பிரிச் காற்றே...

என் வாழ் நாள் கனவுகளில் ஒன்றை அடையப் போகும்.. எதிர்பார்ப்போடு அந்தப் பயணம்..

வேக வீதியில்  70/80 மைல்/ மணி வேகத்தில்.. காரின் பயணம். அதை விட அதிக வேகத்தில் மூளையில் கணத்தாக்க ஓட்டம்.. கற்பனையில் கேம்பிரிச்.. அழகழகான தோற்றங்களில் எல்லாம் வந்து போகிறது. அட்டைப் படங்களில்.. பெரும் திரைகளில் கண்ட கேம்பிரிச்சை இன்னும் இன்னும் மூளை பல பரிமானங்களில் காட்டுகிறது..

180px-Cambridge_University_Crest.svg.png

cambridge_university.jpg

கார் வேக வீதி கடந்து.. "ஏ" த்தர வீதிக்கு ஓடுகிறது. ராம் ராமில் அந்தப் பெண்மணியின் குரலை காது கவனமாக செவிமடுக்கிறது. காடும் காடு சார்ந்த நிலமும்.. குறிஞ்சி என்பார்கள் தமிழில். வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என்பார்கள்...! கேம்பிரிச் போகும் பாதைகள் இவற்றினை சேர்த்து செய்த கலவைகளாகவே அதிகம் இருந்தன..!

என்னடா இவ்வளவு தூரம் ஓடியாச்சு.. நான் படங்களில் பார்த்த கேம்பிரிச்சை இன்னும் காணேல்லையே என்ற கவலை.. மனதில் எழத் தொடங்கியது. காரோ இன்னும் வீதிகளின் போக்கில்.. வளைந்து நெளிந்து ஓடிக் கொண்டிருக்கிறதே தவிர போக்கிடம் வந்து சேரவில்லை.

மூளை நிதானத்துக்கு வருகிறது. வந்திட்டம்.. கேம்பிரிச்சின் இயற்கைக் காட்சிகளையும் ஒருக்கா தரிசிப்பமே.. என்றிட்டு.. காரை ஓரம்கட்டி.. இறங்கி கேம்பிரிச் காற்றை சுவாசித்தேன். உள்ளுணர்வில் ஓர் உத்வேகம். இந்தக் காற்றிற்கும் அறிவு இருக்குமோ.. என்ற எண்ணத்தில் எழுந்த.. மூளையின் கணத்தாக்க ஓட்டம் உடம்பெல்லாம் பரவிப் பரவசப்படுத்தியது..!

சுற்றும் முற்றும் பார்க்கிறேன். எங்கும் மயான அமைதி. பொலிஸ் வாகனங்களின் ஸ்சைரனும் இல்லை.. அம்புலன்ஸ்களின் ஓட்டமும் இல்லை. வாகன இரைச்சல்களும் இல்லை. ஆகாய விமானங்களின் பேரொலிகளும் இல்லை. எங்கும் ஒரே அமைதி. மக்களோ ஓரிருவர் மட்டும் நடந்தும்.. துவிச்சக்கர வண்டிகளிலும். அதிலும் அவர் முகங்களில் முகம் அறியாத என்னை நோக்கிய புன்முறுவல்கள்..!

483600_10151255851537944_253145171_n.jpg

சரி.. நேரமாகுது... போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேருவம் என்று ராம் ராமை (Tom tom) மீண்டும் இயக்கினேன். அது போகும் இடம் இதுதாண்டா வெண்ணை என்று காட்டியது. காரை அப்படியே நிறுத்திவிட்டு.. நடையாய் போனேன். அருகில் தான் Fitzwilliam கல்லூரி (college) இருந்தது. ஆனால் என் கண்களுக்குத் தான் அது தெரியவில்லை. ஏனெனில் அங்கு நான் எதிர்பார்த்த 6 அடுக்கு.. ஏழு அடுக்கு மாடிக்கட்டிடங்கள் அங்கு இல்லை. வானுயர கோபுரங்கள் இல்லை. எங்கும் பசுமையும்.. பசுமை மூடிய ஈரடுக்கு.. மூவடுக்கு கட்டிடங்கள் சில மட்டுமே. மாணவர் நடமாட்டமோ.. வெகு சில. எல்லோரும் மிக நாகரிமான உடையில். பேசும் ஆங்கிலத்திலோ.. லண்டன் சிலாங்கை வலை வீசித் தேட வேண்டிய நிலை..! இருந்தும் சமாளிச்சுக் கொண்டு.. வாசலைத் தாண்டி.. செல்ல வேண்டிய இடம் சென்றேன்.

426068_10151255845117944_1626383247_n.jp
 
கட்டிடங்களுக்கு மட்டுமல்ல.. அங்குள்ள.. மரங்கள்.. செடிகள் கொடிகள் பெரும்பாலனவற்றிற்கும்.. பெயரிட்டிருந்தார்கள். சாதாரணமான எல்லாமே ஒரு வகை அறிவு மயமாகி காட்சி அளித்தது. அதற்கு மேலதிகமாக... மிக.. அமைதியான சூழல்.. நிலவியது. புத்தகத்தை கையில் எடுத்துப் படிக்கனும் என்ற எண்ணம் தான் அந்த அமைதியில் வரும். அப்படி ஒரு இனிமையான அமைதி அது.

சற்று உள்ளே.. நடக்கிறேன்.. சிற்றுண்டிச்சாலை வருகிறது. மிகவும் நாகரிகமான முறையில் அது ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. உலகிற்கே நாகரிகம் போதிக்கும் இடமல்லவா.. இது கூட இல்லாட்டி எப்படி.. என்ற நினைவு மனதில்.  அதன் அருகில்... ஒரு பெரிய பித்தளை மணி தொங்கிக் கொண்டிருந்தது.  அருகில் சென்று வாசிக்கிறேன்.. காலணித்துவ நூற்றாண்டுகளில் றோயல் நேவியினால்  நிகழ்த்தப்பட்ட சாதனையின் ஞாபகார்த்தமாக அது. அதாவது.. அந்தக் காலத்தில் தான் எங்கள் தாய் மண்ணை பிரித்தானிய காலணித்தும் தன் பூட்ஸ் பாதங்களால் பதம் பார்த்திருந்தது. ஆண்ட பரம்பரையாக இருந்த எம்மை அடிமைப் பரம்பரையாக்கியது.  அந்தப் பதம் பார்ப்பில்.. கேம்பிரிச்சின் பங்களிப்பு இருந்ததற்கான சான்று அது. இருந்தாலும் வெள்ளையர்களை எண்ணி பெருமைப்பட்டுக் கொண்டேன். காரணம்.. நேற்றைய எம் தோழர்களின் சாதனையாகிய.. கடற்புலிகளின் ஒரு மாதிரிப் படகைக் கூட வடிவமைத்துக் கட்டி.. நான் என்னோட வைச்சிருக்க முயற்சிக்கேல்ல.. பயங்கரவாதின்னு எவனோ சொல்ல அதற்கு வழிமொழிந்து கொண்டு இருக்கும் கூட்டத்தோடு கூட்டமாக நானும்... ஆனால் வெள்ளைக்காரன் தன்ர மூதாதையோரின் சாதனைகளை எப்படியெல்லாம் ஞாபகப்படுத்தி வைச்சிருக்கிறான்.. போற்றுகிறான்.. அதில் அவன் தான் செய்ததன்.. சரி பிழை கூடப் பார்க்கவில்லை. சாதனையை சாதனையாகப் பார்க்கிறான். அதனை.. உலகிற்கு இன்னும் இன்னும் இனங்காட்டுகிறான்.. அந்த வகையில்.. அவனின் இன விசுவாசம் கண்டு வியந்து கொண்டே.. நின்றேன்.

529805_10151255845522944_1484977660_n.jp

ஆனால்.. நேரம் தான் ஆனது. நேரம் ஆக.. ஆக.. வந்த வேலையை முடிக்க வேண்டிய கட்டாயம். Fitzwilliam இல் என் அலுவலை முடித்துக் கொள்ள.. மேலதிகமாக.. இன்னொரு கல்லூரிக்கு போகச் சொன்னார்கள். சரி அது அங்கின பக்கத்தில தான் இருக்கும் என்றிட்டு காரை எடுத்துக் கொண்டு.. ராம் ராமை இயக்கினேன். அதன் சொல்வழி கேட்டுப்.. போகிறேன் போகிறேன்.. பெற்றோல் தீரும் வரை கார் போய்க் கொண்டே இருந்தது. பெற்றோல் ஸ்ரேசன் தேடினால்.. அதுவும் வயல்கள் நடுவே ஓடும்.. அந்த நீண்ட வீதிகளில் இல்லை. நீண்ட ஓட்டத்தின் பின்.. தான் கண்டேன் ஒரு சேவிஸ் ஸ்ரேசன். அதில்.. பெற்றோலும் போட்டுக் கொண்டு.. கொஞ்சம் இளைப்பாறி விட்டு.. பயணத்தைத் தொடர்ந்து ஒரு வழியாக..Girton கல்லூரி வந்து சேர்ந்தேன்.


2956_10151255845612944_1594852119_n.jpg

உண்மையில் கேம்பிரிச் என்பது நான் எதிர்பார்த்தது போல.. ஒற்றைப் பல்கலைக்கழகம் ஆக இல்லை. அது கிட்டத்தட்ட 31 கல்லூரிகளின் சேர்க்கை. ஒவ்வொரு கல்லூரிக்கும் இடையில் வெறும் 100..  500 மீற்றர்கள் தான் இடைவெளி என்று நினைச்சிடாதேங்க. சில... பல மைல்கள் இடைவெளிகள் கூட உண்டு. வரலாற்று மிகப் பழைய கல்லூரி.. 1284 இலும் புதியது 1977 இலும் அமைக்கப்பட்டுள்ளது. எத்தனையோ நூற்றாண்டுப் பழமை அங்கு. அவை.. அப்படியே பேணிப் பாதுகாக்கப்பட்ட படி... நவீனத்துவத்தை உள்வாங்கிக் கொண்டும் இருந்தன. கல்லூரிகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு நிர்வாக முகாமைத்துவம். பலவேறு பட்டப்படிப்புக்களை அவை மேற்கொள்கின்றன. இளமானி.. முதுமானி.. கலாநிதி ஆராய்ச்சிப் பட்டங்கள்.. டிப்பிளோமாக்கள்.. என்று பல நிலைகளில் அவை வழங்கப்படுகின்றன. மாணவர்களுக்கு விடுதி வசதிகளும் இன்னும் விளையாட்டு.. உடற்பயிற்சியகங்களும் என்று எல்லா வசதிகளும் ஒவ்வொரு கல்லூரிகளிலும் உள்ளன. திறமையுள்ள.. மாணவர்களுக்கு அதனை வளர்க்க.. நிறைய புலமைப்பரிசில்களையும் அள்ளி வழங்குகிறார்கள்.

525587_10151255845362944_243350944_n.jpg

Girton இனில் பிரதான வரவேற்பறையில் அனுமதிக்காகக் காத்திருக்கும் போது.. கவனத்தை சுவர்களில் செலுத்தினேன். அங்கு பட்டம் பெற்றவர்களின் படங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. கடந்த 20 ஆண்டுகளில் பட்டம் பெற்றவர்களின் படங்கள் அவை. அதில் கண்ணோட்டம் விட்ட போது கண்டேன்.. எம் தமிழ் சொந்தங்கள் பலர் அங்கு நின்று கொண்டிருப்பதை. அந்த இடத்தில்.. எத்தினை சிங்களம் நிற்குது.. என்ற எண்ணமும் வளராமல் இல்லை. விரல் விட்டு எண்ணி விடக் கூடிய ஒரு சிலரே இருந்தனர். ஆனால் தமிழர்கள் அவர்களை விட அதிகமாக இருந்தனர். இது ஒன்றும் நானாக வளர்த்துக் கொண்டதல்ல. சிங்களம் என்னுள் விதைத்துக் கொண்டது..!

535855_10151255845532944_578881848_n.jpg

Girton னில் என்னை வியக்க வைத்தது.. அதன் பாரம்பரிய கட்டிட அமைப்பும்.. அருகில் நின்ற பழமை பொருந்திய ஒரு மரமும் தான். அந்த ஊசியிலை மரத்தின் கிளைகள் தரையில் இருந்து தரைக்குச் சமாந்தரமாக ஒரு அரையடி உயரத்தில் படர்ந்து இருக்கக் காணப்பட்டன. கேம்பிரிச்சில் படிக்கிறவங்க.. படிப்பிக்கிறவங்க..மட்டுமல்ல.. மரங்களுக்கும் அறிவுபூர்வமா சிந்திக்க வருமோ என்ற எண்ணத்தை.. அந்தக் காட்சி ஏற்படுத்தியது. அது மிகையாக இருந்தாலும்.. என்னில் அந்த எண்ணைத்தையே.. ஓட விட்டது அந்த மரம். அதனை அப்படியே ரசிப்பதோடு இல்லாமல் என் போன் கமராவில் கிளிக் செய்தும் கொண்டேன்.

இறுதியாக அங்கும்.. வந்த அலுவலை ஒருவாறு முடித்துக் கொண்டு.. கேம்பிரிச் மண்ணில் இருந்து விடைபெறும் நாளிகைக்கு என்னைத் தயார் செய்து கொண்டேன். என்னமோ ஏதோ தெரியவில்லை.. கேம்பிரிச்சை விட்டு செல்ல நினைக்கையில் ஒரு விதமான ஏக்கம் எனக்குள் உதித்தது. கேம்பிரிச் மூச்சுக்காற்று பெருமூச்சாகி வெளியேறிக் கொண்டது. அந்தளவிற்கு அந்த முதற் பயணத்திலேயே கேம்பிரிச் மண்ணும்.. கல்லூரிச் சூழல்களும் என்னைக் கவிர்ந்து விட்டிருந்தன..!

இங்கு நான் கேம்பிரிச் என்று சொல்வது கேம்பிரிச் பல்கலைக்கழகத்தை சார்ந்த இடத்தை மட்டுமே. Cambridgeshire county முழுவதையும் அல்ல. ஏனெனில் கேம்பிரிச்சில் வேறு சில இடங்களுக்கும்  உறவினர்களைப் பார்க்கச் சென்றிருக்கிறேன். அங்கெல்லாம் இப்படி உணர முடியவில்லை. மீண்டும் கேம்பிரிச்சுக்கு போவன் அங்கு நிற்கனும்.. நிலைக்கனும்.. என்ற ஒரு உறுதியான எண்ணத்தோடு.. நான்..இதயத்தில்.. மூளையில்.. ஒரு காத்திருப்போடு..!

நன்றி.

(ஆரம்பப் படம்.. மற்றும் லோகோ இணையம். மிகுதி எமது போனின் தயவில் பெற்றது..!)

Labels: , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:23 AM

0 மறுமொழி:

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க