Tuesday, February 04, 2014

தம்பி நீர் என்ன படிச்சிருக்கிறீர்..?! - (குட்டிக்கதை)

வழமை போல.. பார்க்கில் ஓடிக்கொண்டிருந்தேன். எதிரே ஒரு நடுத்தர வயதுக்காரர் வந்து கொண்டிருந்தார். அவர் என்னைக் கண்டதும் இல்லாமல்..ஏதோ தெரிந்தவர் போல.... தம்பி கொஞ்சம் நில்லும்... என்றார் தமிழில்.

நானோ காதில் விழாதது போல என் கருமத்தில் கண்ணாய் இருந்தேன். எனக்கு முன்னால் ஒரு அழகான பிகரு வேற ஓடிக் கொண்டிருந்தது. அதை எப்படியாவது கடந்து போயி.. ஒருக்கா.. அந்தப் பிகரின்.. மூஞ்சியை பார்த்திடனும் என்ற கொள்கை வெறியோட வேற.. நான்.. ஓடிக் கொண்டிருந்தேன்.

நான் என் கொள்கையில் நீண்ட நேரம் செலவழிக்கல்லை. சிறிது நேரத்துக்குள்ளாகவே.. இலகுவாகவே அந்த பிகரை விரட்டி பிடிச்சு.. கடந்து போய்.. திரும்பிப் பார்த்தும் விட்டேன். சும்மா சுமாரான பிகர் தான். பார்க்க தமிழ் பிகர் போல இருந்திச்சு. நாட்டில குளிர் என்பதால்.. பிகர் மூடிக்கட்டிக் கொண்டு வேற ஓடிக் கொண்டிருந்தால.. முகத்தை மட்டும் தான் பார்க்க முடிஞ்சுது.

இந்தக் கலகலப்புக்கு மத்தியிலும்... நான் ஒரு வட்டம் முடிச்சு.. இரண்டாம் வட்டம் ஓட ஆரம்பித்திருந்தேன். இப்போ.. அந்த நடுத்தர வயசுக்காரர்.. பார்க் பெஞ்சில் அமர்ந்திருந்து கொண்டு.... அந்த பிகரை கூப்பிட்டு என்னவோ கதைச்சுக் கொண்டிருந்தார். பிகரும் அவருக்கு அருகில் பெஞ்சில் அமர்ந்து கொண்டு என்னவோ கதைச்சுக் கொண்டிருந்திச்சு.

நான் நடப்பவற்றை எல்லாம் கடைக்கண்ணால் கவனிச்சுக் கொண்டு ஓடிக் கொண்டே இருந்தேன். சிறிது நேரத்தில்.. அந்த நடுத்தர வயதுக்காரர் இருந்த பெஞ்சுக்கு நேர் எதிரே பார்க்கின் எதிர் புறத்தில்.. இருந்த பெஞ்சில் போய் அமர்ந்து கொண்டேன். ஓடிக் களைச்சது போல.. வேற பாசாங்கும் செய்து கொண்டேன். அங்கிருந்து கொண்டு...எதிர் பெஞ்சில் என்ன நடக்குது என்று ஆராயத் தொடங்கினேன். அந்த நடுத்தர வயதுக்காரர்.. தான் கொண்டு வந்திருந்த துவாயை எடுத்து அந்த பிகரின் முகத்தில் வழிந்திருந்த.. வியர்வையை துடைக்கக் கொடுத்தார். அப்ப தான் தெரிஞ்சுச்சு அவர் அந்த பிகரின் அப்பான்னு.

ஆகா.. அந்த பிகருடைய அப்பாவா இவரு.. என்றிட்டு.. நிலைமை கைமீறிப் போவதற்குள்.. இளைப்பாறி எழுவது போல எழுந்து மீண்டும் ஓட ஆரம்பித்தேன். இப்போ நான் மீண்டும் பார்க்கை சுற்றி அவர்கள் இருந்த இடத்திற்கு அருகில் வர.. மீண்டும் அவர் கூப்பிட்டார்.

இம்முறை.. தம்பி என்றல்ல. ஹலோ என்றார். உடன பக்கத்தில இருந்த பிகரு.. ஏன் டாட் கூப்பிடுறீங்க என்றிச்சுது. தமிழ் பொடியன் போல இருக்குது... அப்போதையும் கூப்பிட்டனான் தமிழ் விளங்காத மாதிரி போயிட்டான். பொறு.. கூப்பிட்டு கதைப்பமே என்றார்...என் காதுபட.

நானும்.. பிகருட அப்பா என்றது உறுதியாக.. ஓடுவதை நிறுத்தி நடந்து வந்து.. காய் அங்கிள் என்றேன். அவர் கான் யு ஸ்பீக் ரமிள் என்றார்..! ஐ கான் ராட்க் எ பிட் என்றேன்... என் இமேச்சை பிகருக்கு முன்னால்..உயர்த்திக் காட்ட. உடனே அவரோ.. அப்ப இஞ்ச வாரும் இதில இரும் என்றார் தனக்கு அருகில். எனக்கோ எதிர்பார்த்தது போல எல்லாம் நடப்பதால்.. மனசெல்லாம் பட்டாம்பூச்சி பறக்கிற மாதிரி இருந்திச்சு. அவர் நடுவில் இருக்க.. நான் ஒரு கரையிலும்.. பிகர் மறுகரையிலுமாக பெஞ்சில் அமர்ந்திருந்தோம்.

தம்பி... நாங்கள் இப்ப தான்.. ஜேர்மனில இருந்து மூவ் பண்ணி லண்டனுக்கு வந்திருக்கிறம். இவா பிள்ளை.. இங்க ஏ எல் செய்யுறா. உமக்கு தெரியுமே நல்ல ரியூசன் இங்க.. என்றார்.

நான் சொன்னேன்.. அங்கிள்.. எனக்கு தெரியும் ஒன்றிரண்டு ரியூசன். பட் அவையள் எப்படி படிப்பிப்பினம் என்று எனக்குத் தெரியாது. சோ.. என்னால.. உங்களுக்கு கறண்டி பண்ணிச் சொல்லேலாது என்றேன்.

ஓகே.. நீர் சொல்லுறதும் நியாயம் தான்.. என்றிட்டு.. என் பதிலைக் கேட்டிட்டு.. யோசிச்சுக் கொண்டிருந்தவர்.. திடீர் என்று தம்பி நீர் என்ன படிச்சிருக்கிறீர் என்றார். நான் பிகரு முன்னால.. உள்ளதைச் சொல்லி.. இமேச்சைக் கூட்டுவமா.. இல்ல கொள்கையை.. அதாவது என்ன படிச்சன் என்பதை யாரோடும் அநாவசியமாக பகிர்ந்து கொள்வதில்லை என்ற அந்தக் கொள்கையை காக்கிறதா..என்ற தவிப்பில்... அது வந்து அங்கிள்... இஞ்ச வந்து கொஞ்சம் படிச்சிருக்கிறன் என்றேன்.

அதுக்கு அவர் அப்ப இதுக்கு முதலில் எங்க படிச்சனீர் என்றார். நான் அதுக்கு சிறீலங்கா.. என்றேன். அவ்வளவும் தான் அவரின்.. மூஞ்சியில் ஈயாடவில்லை. முகம் மலர்ச்சி இழந்து கறுத்துப் போனது. அதுவரை என்னை அடிக்கடி.. கடைக்கண்ணால் பார்த்திட்டு இருந்த பிகரும்.. வெறிச்சு.. இலைகள் உதிர்த்திருந்த.. பார்க் மரங்களை பார்க்க ஆரம்பிச்சுது.

எனக்கோ.. அட ஏண்டா சிறீலங்கா என்று சொன்னன்.. என்று ஆகிச்சு. அப்புறம் அவரே.. அட நீர் சிறீலங்காவில படிச்சிட்டு இங்க வந்தனீரே... என்றார் ஒரு இழக்காரத் தொனியில். அதோட நிற்காமல்.. அப்ப ஏன்.. உமக்கு தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தான் தெரியும் என்றீர் என்றார். நான் நிலைமையை சுதாகரிச்சுக் கொண்டு.. சொன்னன்.. நான் கொழும்பில இருந்திட்டு தான்.. இஞ்ச வந்தனான் என்று. உடன அவரின் முகத்தில் இப்போ மீண்டும் கொஞ்சம் பழைய புத்துணர்ச்சி.. திரும்ப ஆரம்பிச்சுது.

அப்படியே.. கொழும்பில எங்க என்றார். நான்.. கொல்பிட்டி என்றேன். அவ்வளவும் தான்.. கொஞ்சம் எனக்குக் கிட்டவா நகர்ந்து இருந்து கொண்டு.. அப்ப அங்க எந்த யுனில படிச்சனீர் என்றார். நான்.. கொழும்பு என்ற. கொழும்பே. அங்க என்ரர் பண்ணுறது கஸ்டம் என்ன... என்றார். நான்.. விடுவனா இந்தச் சந்தர்ப்பத்தை.. ஆம் என்றேன்.. பிகருக்கும் கேட்க.

இதற்கிடையில்.. பிகரு.. ஒருக்கா என்னை திரும்பிப் பார்த்து புன்னகைச்சும் விட்டிச்சுது. நானும் பதிலுக்கு புன்னகைச்சு விட்டன். எனக்கோ.. மனசெல்லாம்.. ஒரு வித புத்துணர்ச்சி.. பெருகி.. வழிஞ்சு ஓடிக்கொண்டிருந்திச்சு.

அவரோ விடுவதாக இல்லை. மீண்டும்.. கேட்கத் தொடங்கினார். அங்க படிச்சிட்டு.. அப்ப இங்க என்ன படிக்க வந்தனீர் என்றார். நான்.. பிடிபடாமல்.. மேற்படிப்பு என்றேன். அவருக்கு அது விளங்கிச்சோ இல்லையோ.. ஓகே என்றார். அப்புறமா...இங்க.. என்ன பாடம் படிச்சனீர் என்றார். நான் விஞ்ஞானம் (சயன்ஸ்) என்றேன். விஞ்ஞானமோ... அப்ப நல்லது... இவாவுக்கு.. கெமிஸ்ரி தான் பிரச்சனை. நீர் கெமிஸ்ரி சொல்லிக் கொடுப்பீரே என்றார். எனக்கோ மீண்டும்.. கூட்டுப்புழுவுக்குள் இருந்து கிளர்ந்தெழுந்து.. பட்டாம்பூச்சிகள் பறந்து திரிவது போல.. மனசெல்லாம் மகிழ்ச்சி. தோல் எல்லாம் அந்தக் குளிரிலும்.. ஒரே புல்லரிப்பு.

நான் மெளனமாக என் புல்லரிப்பில் பூரித்துப் போய் இருக்க.... சிறிது மெளனத்தின் பின் மீண்டும் அவரே தொடர்ந்தார். தம்பி.. குறை நினைக்காதையும் கண்ட இடத்திலும் வைச்சுக் கேட்கிறன் என்று.. இவாக்கு கெமிஸ்ரி தான் முக்கிய பிரச்சனை. மற்சும்.. ஜியோக்கிரபியும் ஓரளவுக்குச் செய்வா. மாட்டன் என்று சொல்லாமல் படிப்பிப்பீரே தம்பி என்றார்.

எனக்கோ.. என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஒரு பக்கம்.. பக்கத்தில.. பிகரு. இன்னொரு பக்கம்.. படிச்ச கெமிஸ்ரில கொஞ்சம் தான்.. மனசில நிற்குது. மிச்சம் மறந்து போயிட்டுது என்ற பிரச்சனை. மனசோ.. சமாளிச்சிடடா மச்சி.. எப்படியாவது சமாளிச்சு வெளிய வந்திடு.. பிகரு மட்டும் பத்திரம்.. என்றிச்சுது. அங்கிள்.. அது வந்து.. நான்.. தொடர்ந்து படிக்கிறதால.. ரியூசன் எடுக்க நேரம் வருமோ தெரியல்ல... என்றேன்.

ஐயோ தம்பி எங்களைக் கைவிட்டிடாதையும்.. என்று கையைப் பிடிச்சு.. காலில விழாத குறையாக கெஞ்ச ஆரம்பித்தார். பார்க்கப் பாவமாக இருந்தது. இப்போ.. மனதில் பறந்து கொண்டிருந்த பட்டாம் பூச்சிகள் எல்லாம் இறக்கை களைத்து.. முருக்கை மரத்தில் இளைப்பாறப் போனது போல.. என் மனதில்.. முன்னர் இருந்த.. பூரிப்பின் அளவும் குறைந்து அவர்கள் மீது.. பரிவாக அது மாறி இருந்தது.

அங்கிள்.. டோண்ட் வொறி...என்னால முடியாட்டிலும்.. உங்களுக்கு உதவி செய்யுறன். எனக்கு தெரிஞ்ச ஆக்களிட்ட கேட்டு.. ஒரு நல்ல ரீச்சர் பிடிச்சுத்தாறன் என்றேன். சரி தம்பி பறுவாயில்லை. அப்ப உம்மட போன் நம்பரைத் தாரும்.. பிறகு அடிச்சுக் கதைக்கிறனே என்றார். நானும்.. என் போன் நம்பரை அவரிடம் கொடுத்துவிட்டு.. பாவம்.. உதவத் தான் வேண்டும்.. பிகருக்காக எண்டு இல்லாட்டிலும்.. கல்வி மேல.. இவ்வளவு அக்கறையா இருக்கிற ஒரு தமிழனுக்கு உதனும் என்ற முடிவோடு விடைபெற ஆயத்தமானேன்.

அதுவரை மெளனமாக இருந்து நடக்கிறதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பிகரு.. நான் புறப்படக் கிளம்பியதும்.. சிறிது புன்னகைத்தபடி.... பாய் அண்ணா என்றிச்சுது.

எனக்கோ.. அண்ணா என்றதைக் கேட்டதும்.. மனசில பறந்த பட்டாம்பூச்சிகள் எல்லாம் ஒரே நொடியில் செத்து விழுந்தது போல இருந்திச்சு. நாடி நரம்பெல்லாம் ஓய்ஞ்சு இரத்தம் அந்தக் குளிரோடு சேர்ந்து விறைச்சது போல ஆச்சுது.  இருந்தாலும்.. உதவி செய்யனும் என்ற அந்த எண்ணம் மட்டும் குறையாமல் விடைபெற்றுச் சென்றேன்.

சிறிது நாட்களின் பின்னர் அவராகவே போன் பண்ணி கேட்ட இடத்தில்.. ஒரு ஆசிரியரை ஒழுங்கும் பண்ணிக் கொடுத்தேன். அதுக்கு நன்றிக்கடனாக.. இப்போ.. பார்க்கில் என்னைக் கண்டால் தானும் கூட ஓடி வருவார். ஆனால்.. பிகரு.. மட்டும் தங்கச்சியானது.. மனதின் ஒரு மூலையில்... வலியாக... இருந்து கொண்டே இருந்தது. :lol: :icon_idea:

(நிஜம் + கற்பனை)

Labels: , , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:23 AM

1 மறுமொழி:

Blogger Unknown செப்பியவை...

இந்த சோகம் என்னையும் தாக்கியது உண்டு !

Tue Feb 04, 05:31:00 PM GMT  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க