Tuesday, September 16, 2014

ஐஸ் கிறீம் கனவுகள்...!!



என்னடி நிஷா நட்டு நடுராத்திரில எழும்பி இருந்து அழுகிறா... என்று.. தனது 6 வயதேயான.. மகளை வெறித்துக் கொண்டிருந்தார்.. அம்மா தனம்.

தனமும் குடும்பமும்.. ஜேர்மனிக்கு அகதி என்று போய்..15 வருசம் கழித்து இப்ப தான் சொந்த ஊரான யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு குக்கிராமத்திற்கு வந்திருக்கிறார்கள். அந்த நிலையில்.. வந்த அன்றே நடுநிசியில்.. நிஷாவின் அழுகைக்கு காரணம் தெரியாமல் அம்மா தனம்.. காட்டுக் கத்து கத்திக் கொண்டிருந்தாள்.

சொல்லண்டி.. என்ன வேணும். உடம்புக்கு ஏதேனும் செய்யுதே. வாயத் திறந்து சொல்லண்டி.. சொன்னா தானே தெரியும். என்ன.. வெக்கையாக் கிடக்கே. அம்மா னேய்.. அங்கை இருந்து அனுப்பின காசுகளை என்னன செய்தனீ. உந்த வீட்டுக்கு கரண்டும் போட்டு.. ஒரு பானும் வாங்கி வைக்க முடியாமலோன இருந்தனீ.. என்று மகள் மீதான ஆத்திரத்தை தனது வயதான ஊரோடு தங்கிவிட்டிருந்த தாய் மீது திசைமாற்றினால் தனம்.

வந்ததும் வராததுமாய் மகள் தனம்.. தன் மீது ஏறிப் பாய்வதை.. பக்கத்தில் மூலைகள் கிழிந்த ஓலைப்பாயில் சுருண்டு படுத்திருந்த அம்மா கேட்டிட்டு.. பெருமூச்சு ஒன்றை எடுத்து விட்டிட்டு.. மனசுக்க... "அனுப்பிற காசு.. காணில கிடக்கிற பத்தையளை வெட்டிற கூலிக்கே காணாது. இதில வீடத் திருத்தி.. கரண்டும் எடுத்து.. பானும் வேண்டி வைக்காத குறைதான்...! அங்க வெளிநாட்டில இருந்திட்டு... இஞ்ச எல்லாம் வெளிநாட்டில இருக்கிறது போல இருக்கு என்ற நினைப்போட வெளிக்கிட்டு வாறது. இஞ்ச வந்த உடன..நிலைமை தலைகீழ் என்றதும்... எங்களைப் போட்டுத் திட்டிறது" என்று நினைத்துக் கொண்டவர்... தொடர்ந்து மனசு பொறுக்காமல்..

பிள்ள தனம்.. என்னைத் திட்டி என்ன பயன். கொப்பரும் தானே இஞ்ச கூட இருந்தவர். அவரைக் கேளன். அவர் வெளில கோலுக்க.. ஈச்சாரில படுத்துக் கிடந்து.. நல்ல குறட்டை விடுறார். உன்ர மகள்.. வெக்கை என்று அழுகிறாள் என்றால் அதில.. ஓலை விசிறி கிடக்கு எடுத்து விசிறி விடு. நான் உனக்கு வரமுதலே சொன்னான் தானே.. இஞ்ச நிலைமை கஸ்டம். வந்தா கொட்டலில நில்லுங்கோ என்று. இல்லை ஊரில சொந்த மண்ணில தான்.. நிற்கப் போறன் என்று அடம்பிடிச்சு வந்து போட்டு..இப்ப எங்களைத் திட்டி என்ன பிரயோசனம்.

உங்களோட கதைச்சால் எனக்கு விசர் தான் வரும் அம்மா. அங்க இருந்து இவ்வளவு காசு அனுப்பியும்.. சரி.. உதுகளை விடுங்கோம்மா. ஏண்டி நிஷா ஏன்ரி இன்னும் அழுகிறாய்.. என்ன வேணும் எண்டு சொல்லித் தொலையேண்டி... என்று தனம் தாய் மீது வந்த ஆத்திரத்தை மகள் மீது காட்டி.. எரிந்துவிழுந்து கொண்டிருக்க... தாயைப் பார்த்து மகள் நிஷா...

ஐஸ் கிறீம் வேணும்.. மம்மி என்றாள்.... சற்றே அழுவதை நிறுத்தி.

இந்த சாமத்துக்க எங்கடி போறது ஐஸ் கிறீமுக்கு. இதென்ன ஜேர்மனியே பிரிச்சை திறந்து நினைச்ச நேரத்துக்கு ஐஸ் கிறீம் குடிக்க. இது யாழ்ப்பாணமடி. அதுவும் இங்க வீட்டுக்கு கரண்ட் கூட இல்லை. இவை இப்படி இருப்பினம் என்று நான் கனவிலும் நினைக்கல்ல. நீ வேற.. ஐஸ் கிறீம் கேட்டு.. கொதியைக் கிளப்பாத. விடிய யாழ்ப்பாணம் ரவுனுக்கு போய் கூல் பாரில ஐஸ் கிறீம் குடிப்பம்.. இப்ப படடி செல்லம்.. என்று மகளுக்கு விளங்கின.. விளங்காத விளக்கங்கள் எல்லாம் சொல்லி.. தனம் அவளை சாந்தப்படுத்த.. அவளும் அழுத களைப்போடு அயர்ந்தே தூக்கி விட்டாள்.

மறுநாள்...

காலையில் எழுந்ததும் எழாததுமாக.. நிஷா ஐஸ் கிறீம்.. கூல் பார் நினைப்போடு தாயை நச்சரிங்க.. தனம் கணவனை பார்த்து.. ஏங்க.. அந்த வான்காரப் பொடியனை கூப்பிட்டுச் சொல்லுங்க. ரவுனுக்கு போகனுமாம்.. கெதியா வரச்சொல்லி.

அவரும் மனைவி சொற்படி நடக்க... வானும்.. வந்து சேர.. தனமும் குடும்பமும்.. யாழ்ப்பாணம் ரவுனை நோக்கி பயணமாகினர்.

பயணம் முழுவதும்... மகள் நிஷாவின் ஐஸ் கிறீம் நச்சரிப்பு தாங்க முடியாமல்.. தனம்.. வானை லிங்கம் கூல் பார் வாசலில் நிறுத்தச் சொல்லி நிற்பாட்டி.. இறங்கிக் கொள்ள.. மகள் நிஷா ஓடிப்போய் கூல் பாருக்குள் அமர்ந்து கொண்டாள். மகளின் மகிழ்ச்சியான அந்த தருணத்தை ரசித்தவளாய் தனம்.. பார்த்தியளே இப்ப தான் ஜேர்மனில இருந்த கப்பி அவளுக்கு என்று கணவனைப் பார்த்து சொல்ல.. அவரும் அதற்கு ஒத்திசைவாக தலையை ஆட்டிக் கொண்டார்.

மூவரும்.. லிங்கம் கூல் பாரில் வகை வகையான குளிர்பானங்கள் அருந்திவிட்டு.. வெளியே வரும் போது.. ஒரு 5 தே வயதான சிறுமி.. அழுக்கான உடைகளோடு.. நிஷாவிடம் வந்து..  அக்கா.. பிச்சை போடுங்க என்று கையை நீட்ட.. நிஷா.. நிதானித்து நின்று.. தாயைப் பார்த்தாள். தாய் கண்ணால்.. தள்ளி நில் என்று சைகை செய்ய.. நிஷா புரிந்தும் புரியாதவளுமாய்.. சுற்றிமுற்றிப் பார்த்தாள். அந்தச் சிறுமியின் தாயும்..அவளைப் போலவே அழுக்கான கிழிந்து தொங்கும் சேலை ஒன்றை உடுத்தவராய்.... பித்துப் பிடித்தவர்.. போல..இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

வந்ததும் வராததுமாய்.. அந்தச் சிறுமியின் தாய்.. தனத்தைப் பார்த்து.. அம்மா.. நாங்கள் வன்னியில இருந்து வந்து கஸ்டப்படுறம். இவள் என்ர மகள் தான். என்ர அவர் அடிபாட்டில போய்ட்டார். அதுக்கு அப்புறம்.. வன்னி அடிபாட்டுக்க சிக்கி.. சரியா கஸ்டப்பட்டு இங்க வந்து இப்படி வாழ்க்கை வாழ வேண்டியதாக் கிடக்கு..பிள்ளைக்கு படிப்பும் இல்லை.. என்று சொல்லி.. தனத்தின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க முனைந்தார்.

நிஷாவோ அந்தத் தாய் சொல்வதை முழுசா விளங்கிக் கொள்ள முடியாமல்.. அம்மா.. அந்தத் தங்கச்சிக்கும் ஒரு ஐஸ் கிறீம்.. வேண்டிக் கொண்டுங்களேன்... என்று கேட்க.. பேசாமல் இரடி.. என்று தாய் தனம் காதுக்குள் வெருட்ட.. நிஷா மெளனமானாள்.

என்னங்க.. ஒரு ஆயிரம் ரூபாய் இருந்தா தாங்களன். வன்னில இருந்து வந்து கஸ்டப்படுகுதுகளாம்.. என்று.. தனம்.. கணவனைப் பார்த்துக் கேட்க.. அவரோ.. நிலைமையை உணர்ந்த கணவராய்... என்னட்ட மாத்தின காசில்லையேடியப்பா என்று சமாளிக்க..

தனம் அந்த ஏழைத் தாயைப் பார்த்து.... பிறகு இஞ்சாளப் பக்கம் வரேக்க மாத்தின காசிருந்தா தாறம்.. என்று சொல்லி அந்தத் தாயிடம் இருந்து காய்வெட்ட.. நிஷா தாயையும் தகப்பனையும்.. அந்தச் சிறுமையையும் தாயையும் மாறி மாறி பார்த்தவளாய்.. பக்கத்து வீதியில் நின்று கொண்டிருந்த அவர்கள் வந்த வானில் ஏற நடக்கும் பெற்றோரை பின் தொடர்ந்தாள்.. பல வினாக்கள் மனதில் எழ..!!!

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 12:34 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க