Monday, December 08, 2014

காதலுக்கு மரியாதையில்லை.


 ஊரில் இருந்து இப்ப தான் ஸ்ருடன் என்று லண்டனுக்கு வந்தவள்.. லண்டனில்.. எங்கட ஆக்கள்.. அகதி என்று வந்து வாழுற ஆடம்பர வாழ்க்கையை பார்த்திட்டு.. ஸ்ருடன்ரா இருந்து.. சீரழிவு தான்.. நானும் அகதி ஆவம் என்று.. லோயர் சொல்லிக் கொடுத்த பொய்களோடு அகதி அந்தஸ்துக்கோரி உள்நாட்டு அலுவல்கள் அமைச்சில் (ஹோம் ஆபிசில்) ஒப்புவித்த பொய்கள் வெற்றி பெறும் என்ற ஒரே நம்பிக்கையில்... பேரூந்தில் பயணித்துக் கொண்டிருந்தாள் ஜீவிதா.

அப்போது... ஐபோன் சிணுங்குவதை கேட்டு.. அவசரஅவசரமாக கைப்பைக்குள் கையை விட்டு கிண்டி.. ஒருவாறு போனை வெளியே எடுத்தவள்.. வந்திருந்த மெசேச்சை பார்த்ததுமே.. அட இந்த நாயா.. இவன் தொல்லை தாங்க முடியல்லையே.. இவனை எப்படி கட் பண்ணுறது.. ஊரில இருக்கேக்க தான் இவன் தொல்லைன்னா.. இங்க வந்துமா. ஒரே ஹாட் சிமைலியா கலர் கலரா அனுப்புறானே.. இவனுக்கு என்றே தினமும் அப்டேட் செய்து விடுறாங்களோ... வரிசையா அடிக்கிட்டே போறானே... கறுமம் பிடிச்சவன்.. என்று மனசுக்குள் திட்டிக் கொண்டே.. தனக்கு உடனவே விசா கிடைப்பது போலவும்... தன் வருங்கால லண்டன் வாலிபன் தன்னை காதலிக்க வருவது போலவும்.... அவர் எப்படி எல்லாம் இருக்கனும் என்றும்.. கனவில் மூழ்கத்தொடங்கினாள்.. ஜீவிதா.

ஜீவிதா.. அழகு என்றாலும்.. சினிமாப் பைத்தியமும் கூட. சினிமா நடிகைகள் போல அலங்கரிப்பதில் அவளுக்கு அலாதிப் பிரியம். அலங்கரிப்பது மட்டுமன்றி.. சினிமா நடிகர்களோடு தன் போட்டோவை இணைத்து வைத்து.. சோடிப் பொருத்தம் பார்ப்பதில் இருந்து அவளுக்கு எல்லாமே சினிமா தான்.

சூரியா.. விஜய் மாதிரி இல்லை என்றாலும்.. சிவகார்த்திகேயன் ரேஞ்சில ஒருத்தன். ஆறடி உயரம்.. சிக்ஸ் பக் வைச்ச சிக்கான உடம்பு.. அப்பப்ப 5 நட்சத்திர விடுதியில்.. தண்ணி அடிக்கிற.. பார்ட்டி. நல்ல கார்.. அழகான வீடு.. என்று கற்பனைக் குதிரையை தாறுமாறாக ஓட்டிக் கொண்டே போனவள்..

மீண்டும் ஐபோன் சிணுங்குவதை கேட்டு.. அந்த நாயாத்தான் இருக்குமோ... சனியன் தொலைஞ்சு போகுதில்லையே என்று திட்டிக்கொண்டே மெசேச்சை பார்த்தவள்..ஹோம் ஆபிஸ் அவளை அகதி விண்ணப்பம் தொடர்பில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கும் தேதியை குறிப்பிட்டு அனுப்பி இருந்த மெசேச் என்று கண்டதும்... என்ன இவ்வளவு கெதியா செய்யுறாங்கள்.. விசா உடன தரப்போறாங்களோ.. என்ற எண்ணிக் கொண்டே.. தனது லோயருக்கு விசயத்தை போன் போட்டுச் சொல்லி முடித்தவள்...

மீண்டும்.. போனை எடுத்து அவனுக்கு ஒரு ரெக்ஸ் போட்டாள். இத்தோடு என்னை தொந்தரவு செய்வதை விட்டிடு. உனக்கும் எனக்கும் ஒத்து வராது. நீ.. ஊரில இருந்து எவளை என்றாலும் மேய். எனக்கு கவலை இல்லை. என்னை விட்டிடு. எனக்கு உன்னில காதலும் இல்லை.. கத்தரிக்காயும் இல்லை என்று சொல்லி அவளைப் பொறுத்த வரையில் அவனுக்கான இறுதி மெசேச்சை அனுப்பிய திருப்தியில் போனை கைப்பையில் போட்டாள்.

சிறிது நேரத்தில் போன் வைபர்.. சிணுங்கத் தொடங்கியது. யார்.. அவனாத்தான் இருக்கும். எடுத்துக் குடுக்கிற குடுவையில.. எனி இஞ்சால பக்கமே தலைவைச்சுப் படுக்கமாட்டான்.. என்று போனை.. பையில் இருந்து ஆத்திரத்தோடு வெளியே இழுத்து எடுத்தவள்.. வைபரின் பொத்தானை அழுத்தி.. ஹலோ என்றதும்..

என்னடி.. லண்டனுக்கு போனதும்.. உனக்கு பெரிய மகாராணி என்ற நினைப்போ. இங்க ஊருக்க இருக்கேக்க.. நீதானேடி வந்து ஐ லவ் யு சொல்லி.. என் வாழ்க்கையே நாசம் பண்ணினனீ. இப்ப என்னடி பெரிய பத்தினி வேசம் வேண்டிக் கிடக்கு உனக்கு. கடைசியும் முதலுமா ஒன்று சொல்லுறன் கேள்.. உனக்கு காதல்.. கலியாணம்.. இதெல்லாம் பொழுதுபோக்காக இருக்கலாம். எனக்கு அப்படி இல்ல. நான் உன்னை உண்மையாவே தான் காதலிச்சன். இப்பவும் காதலிக்கிறன். எப்பவும் காதலிப்பன். ஏன் இந்த உலகத்தில..மரம் செடி கொடியை காதலிக்கிறவன் இல்லையா. அப்படி உன்னை ஒரு மரமா நினைச்சு காதலிச்சிட்டு போவன். ஆனால்.. அதுக்காக.. ஏதோ உனக்குப் பின்னாடி வழிஞ்சு கொண்டு வருவன் என்று மட்டும் நினைக்காதே. நீயும் உன்ர லண்டனும்..அழகும்.. திமிரும் உன்னோட. அதைப்பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்ல. நான் ஊரேட இருந்தாலும்.. நானா வந்து உன்னைக் காதலிக்கல்ல. நீயா வந்தா... நீயா போறா. அதுக்குள்ள என்னடி.. ரெக்ஸ்.. வேண்டிக் கிடக்கு ரெக்ஸு. லண்டனுக்கு போனதும்.. ஊரில இருந்தது மறந்து போச்சோ. உனக்கொரு காலம் வந்தா.. எனக்கும் ஒரு காலம் வரும்டி. அப்ப தெரியும்.. என்று அவளை பேசவிடாமலே முழங்கித் தள்ளியவன்.. தானே வைபரை கட் பண்ணியும் கொண்டான்.

அட.. இதைத்தானே நானும் எதிர்பார்த்தான். போடா நாயே. யாருக்கு வேணும் எனி உன்ர காதலும்.. கத்தரிக்காயும்... என்று அவன் மீதான வெறுப்பை இன்னும் வளர்த்துக் கொண்டு அவனை விட்டு மனதளவில்... தூர விலகி இருக்க முனைந்தாள் ஜீவிதா.

இச்சம்பவம் நடந்து ஆறு மாதங்கள் கழிந்திருந்த நிலையில்...

ஜீவிதா.. ஜி பி இடம்.. மருத்துவ அறிக்கைக்காக வந்திருந்தாள். ஜி பி மருத்துவ அறிக்கையை கையளிக்க அவளை உள்ள கூப்பிட்டிட்டு.. நீங்கள் இப்ப 3 மாத கர்ப்பிணியா இருக்கிறீங்க... ஆனால் உங்களுக்கு இன்னும் திருமணமானதா எங்கட பதிவில இல்லை. இதைப் பற்றி உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால்.. கொஞ்சம் அறிந்து கொள்ளலாமா என்றார்...?! ஜி பியும் தமிழ் என்பதால் அவள் மீது கூடுதல் அக்கறை காட்டி விசயத்தை அக்கறையோடு அணுகினார்.

அது வந்து டொக்டர்.. என்று இழுத்தவள்.. பின் விசயத்தை சொல்ல ஆரம்பித்தாள். நான்.. இங்க ஒருவரை விரும்பினனான். அவரும் என்னை விரும்பினவர் தான். அவர் இங்கத்தையான் பிரஜை. இங்கு பிறந்து வளர்ந்தவர். தமிழ் ஆக்கள் தான். நான் அகதியா பதிஞ்சிருந்த போது.. எனக்கு விசா கிடைக்கும் என்ற நம்பிக்கையில.. எப்படியோ அவரைக் கட்டி வாழத்தானே போறன் என்ற அவசரத்தில சில விசயத்தில... கவனக் குறைவாவே இருந்திட்டன். இப்ப விசாவும் பிரச்சனையாப் போச்சுது.. இதுவும் பிரச்சனையாக் கிடக்குது. அவரும் இப்ப என்னோட நல்ல மாதிரி இல்லை. அவருக்கு இப்ப வேற கேர்ள் பிரண்ட் இருக்குது. அது லோக்கல் பிள்ளை. அவருக்கு அவளோட கூட ஒட்டும் உறவும். என்னை விட நெருக்கமா தன்னோட அவள் இருக்கிறாள் என்று அவர் நினைக்கிறார். மற்றும்படி.. அவர் தப்பான ஆள் கிடையாது. ஹாங்க் அதுஇதென்று ஒன்றுமில்லை. நல்லவர் தான். ஆனாலும்.... இதுதான் பிரச்சனை என்று முடித்தாள் ஜீவிதா.. கண்களில் கண்ணீர் நிரம்ப.

இதைக் கேட்டு ஜி பி அவளைத் தேற்றியபடி.. இப்ப இந்தப் பிள்ளையின் எதிர்காலம் பற்றி தான் நீங்கள் யோசிக்கனும். எனி கருவை கலைக்க எல்லாம் முடியாது. அது றிஸ்க். நீங்கள் கர்ப்பிணியாக இருக்கிறதால உங்களை ஊருக்கு பிடிச்சும் அனுப்ப ஏலாது... அந்த விசயத்தில நீங்கள் லக்கி.

இல்லை டொக்டர். விசா நிராகரிக்கப்பட்டிருந்தாலும்.... என்ர லோயர் அப்பீல் பண்ணி இருக்கிறார். கேஸ் கோட்டுக்கு வரப் போகுது. அதுக்கு சப்போட்டா இந்த மருத்துவ அறிக்கை உதவும் என்று தான் எடுக்க வந்தனான். லோயரைட்டும் விசயத்தைச் சொல்லி இருக்கிறன். அவர் விசா அலுவலை முதல்ல பார்ப்பம். பிறகு மற்றதைக் கவனிப்பம் என்று சொல்லி இருக்கிறார். என்ர அவசரத்தால சொந்தக்காரரும் என்னோட அவ்வளவு நல்லமில்லை. இருந்தாலும்.. அப்பா அம்மாவுக்காக சமாளிக்கினம்... என்று தன் மனப்பாரத்தை டொக்டரிடம் கொட்டித் தீர்த்தவள்.. கண்களால் வழிந்த கண்ணீரைத் துடைத்தப்படி.. ஜிபியிடம் இருந்து விடைபெற்றாள்.

அப்போது.. நீண்ட காலத்தின் பின்.. வைபர் ஒலித்தது. ஆச்சரியத்துடன் அதன் பொத்தானை அழுத்தி காதில் வைத்த போது.. அவன்.. தான் ஊரில் இருந்து லண்டனுக்கு வந்திருப்பதை ஜீவிதாவிடம் சொன்னான். வசதி என்றால் வந்து நேரே சந்திச்சு கதைப்பதாகவும் சொன்னான். ஜீவிதா மறுமுனையில் மெளனமாக.. பேச்சின்றி.. ம் ம்.. ங்களால் மட்டுமே பேசிக் கொண்டிருந்தவள்.. ஒரு கட்டத்தில்.. கதறி அழுதாள்.

அவளின் அழுகுரல் கேட்டவன்.. என்னாச்சு ஜீவிதா. என்ன பிரச்சனை. ஏன் அழுகிறீங்க. நீங்க போட்ட ரெக்ஸில கோபத்தில தான் அப்ப திட்டிட்டு போயிட்டன். பிறகு யோசிச்சு பார்த்தனான். நான் பண்ணினது தப்புன்னு தெரிஞ்சு கொண்டன். சும்மா ரெக்ஸில வைபரில் சொறி சொல்லி சரிவராது. உங்களுக்கு அதிர்ச்சி தர லண்டனுக்கே வந்து.. நேரில சந்திச்சு.. விசயத்தை கதைக்கனும்.. என்று முயற்சி செய்து தான் இப்ப அதில வெற்றி பெற்றிருக்கிறன். இப்ப போய் ஏன் அழுகிறீங்க என்றான்.. கவலை தோய்ந்த குரலில்.

அதுக்கு ஜீவிதா.. எல்லாம் முடிஞ்சி போச்சு வசந்த். நான் இப்ப முன்னைய ஜீவிதாவா இல்ல. நீங்க காதலிச்ச ஜீவிதாவாவும் இல்லை. என்னை மறந்திடுங்க.. என்று விம்பி விம்பி அழுதுகொண்டே சொல்லி முடித்து.... போனை கட் பண்ணினாள் ஜீவிதா.

(எம்மவர் சமூகத்தில் நடந்த உண்மை சம்பவம் ஒன்றைத் தழுவிய கற்பனைப் பாத்திரங்கள் நிறைந்த கதை.)

Labels: , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 12:35 PM

2 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

Nice story

Mon Dec 08, 04:32:00 PM GMT  
Blogger தனிமரம் செப்பியவை...

http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post_26.html/பார்க்கவும்

Wed Aug 26, 10:58:00 AM GMT+1  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க