Sunday, May 15, 2016

காட்டிக்கொடுப்பு

மீன்பிடிப்படகு நீர்கொழும்பில் இருந்து புறப்படுகிறது. உடப்பைச் சேர்ந்த தமிழ்.. முஸ்லீம் இளைஞர்களும்.. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர்களும்.. தென்பகுதியையைச் சேர்ந்த சிங்கள..இளைஞர்களுமாக.. மொத்தம் 30 பேர் வரை அதில் பயணிக்கிறார்கள்.

எல்லாரும் குடும்பக் கஸ்டம் காரனமாக.. கடனை உடனை வாங்கி கப்பல் ஏறியவர்கள் தாம். எல்லாருக்கும் கனவு இத்தாலியைச் சென்றடைவதும்.. பின் அங்கு செல்வம் சேர்ப்பதும்.. பின் குடும்பம் குழந்தை என்று.. பெருகி அந்த நாட்டில் நிரந்தரக் குடிகளாகி.. வாழ்வதும்.. வெறும் பந்தாவுக்கு ஊருக்கு ஹொலிடே போவதும் தான்.
ஆரம்பத்தில் படகுப் பயணம் உற்சாகமாக இருந்தாலும்.. போகப் போக.. அச்சம் கலக்க.. படகும் எங்கெங்கோ எல்லாம் திக்கு திசை மாறிப் போய் 40 நாட்கள் முடிவில் இத்தாலிக் கரையை அடைகிறது. இடுப்பளவு தண்ணியில்.. எல்லோரும் இறக்கிவிடப்படுகிறார்கள்.

படகில் பயணிக்கும் போது தமிழ்.. முஸ்லீம்.. சிங்களம் என்று எந்த வேறு பாடுமின்றிய இயங்கிய இளைஞர்கள்.. திடீர் என்று.. நீ தமிழ் பேசிறனி.. நான் சிங்களம் பேசுறனான்.. நாங்க ஒரு குழுவா எங்க பாட்டில போறம்.. நீங்க உங்க பாட்டில போங்க என்று இத்தாலிக் கரையைக் கண்ட சந்தோசத்தில் சிங்களவர்கள் ஒரு குழுவாகவும்.. தமிழ் பேசும்.. (தமிழர்களும் முஸ்லீம்களும்) ஒரு குழுவாகவும் புறப்பட்டு விடுகிறார்கள்.

தமிழ் பேசிற குழு.. ஒரு பெற்றோல் ஸ்ரேசனை அடைகிறது. வைத்திருந்த அமெரிக்க டாலர்களை யூரோ ஆக்கிக் கொண்டு.. பொதுத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டியவர்களை தொடர்பு கொள்கிறது. அந்த நேரமாகப் பார்த்து யாரோ கொடுத்த தகவலுக்கு அமைய இத்தாலி பொலிஸ் இவர்களைச் சுற்றிவளைக்கிறது. 

சுற்றிவளைத்து எல்லோரையும் கைது செய்து ஒரு பொது தடுப்பிடத்திற்கு கொண்டு போகிறது. அங்கே போனால்.. அந்தச் சிங்களக் குழுவும் படகோட்டி முதல் அனைவரும் ஏலவே தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களைக் கண்டதும்.. இந்த இளைஞர்களுக்கு விளங்கிவிட்டது.. தங்களை அவர்கள் தான் காட்டிக்கொடுத்திருக்கிறார்கள் என்று. 

இரண்டு நாள் நல்ல கவனிப்புடனான தடுத்து வைப்பின் பின்.. மொழிபெயர்ப்பாளர்களின் உதவியுடன் விசாரணைகளை ஆரம்பிக்கிறார்கள்.. இத்தாலிய அதிகாரிகள்.

தமிழ் பேசுறவர்கள் எல்லாம்.. தமிழர்களா என்று அறிந்து சொல்லுமாறு.. இத்தாலிய அதிகாரிகள்.. பணிக்க..மொழிபெயர்ப்பாளர் பெயர்களைக் கேட்கிறார்கள். முஸ்லீம்களும் தமிழ் பெயர்களையே மாற்றிச் சொல்கிறார்கள். மொழிபெயர்பாளருக்கு பேசும் தமிழில் உள்ள வேறுபாடு புரிந்துவிடுகிறது. அவர் அதனை அதிகாரிகளுக்கு விளக்குகிறார். அதிகாரிகள் தமிழ் யார் முஸ்லீம் யார் என்று எப்படியாவது கண்டுபிடியுங்கள் என்று சொல்ல.. மொழிபெயர்பாளர் ஒரு உக்தியை கையாள்கிறார். தமிழ் தெரிந்தவர்கள்.. ஆளாளுக்கு ஒரு தேவாரம் பாடு என்று கேட்கிறார்.

முஸ்லீம் இளைஞர்கள் மனதில் அப்ப தான் பள்ளிக்கூட நினைப்பு வருகிறது. தமிழ் சகோதர்களோடு சேர்ந்து படித்த போது அவர்கள் பாடிய தேவாரங்கள் காதில் வீழ்ந்த நினைவுகளை புரட்டிப்போட்டுப் பார்க்கிறார்கள். வாழ்வா சாவா போராட்டம். போட்ட கடனை அடைக்கனும். கண்ட கனவை நனவாக்கனும். எப்படியாவது தேடிப்பிடித்து நாலு தேவார வரியைப் பாடிடனும் என்ற படபடப்புக்கு மத்தியில்... ஒருவாறு தேவாரங்களை அரையும்குறையுமாகப் பாடி முடிக்கிறார்கள். மொழிபெயர்ப்பாளருக்கு உண்மை விளங்கினாலும் அவர் காட்டிக்கொடுக்க விரும்பவில்லை. எல்லாம் தமிழ் தான் என்று சொல்லி.. எல்லோரையும் அகதிகளாகப் பதியச் சம்மதிக்கிறார்கள் அதிகாரிகள்.

சில நாள்...தடுத்து வைப்பு 40 நாட்கள் நீண்ட பின்.. எல்லா அகதி விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு.. தமிழ் என்று பதிந்தோர் எல்லோருக்கும்.. 5 ஆண்டு விசாவும்.. 400 யூரோவும் கொடுத்து ஆட்களை வெளியில் விடுகிறார்கள். 

வெளியில் வந்தந்தும்.. இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை என்று நிற்கும் மாடுகள் சிலவற்ரின் அறிமுகம் வேறு கிடைக்கிறது. இத்தாலியில் நின்று என்ன செய்யப் போறீங்கள். மொழி தெரியாமல். அதுபோக இங்க வேலை எடுப்பதும் கஸ்டம்.. பாத்திருப்பயள் தானே ஒரு சிகரட் பக்கெட்டுக்கு படுக்கையை பரிமாறும் அளவுக்கு இந்த நாட்டுப் பெண்களே வறுமையில் கிடக்குதுங்க.. நீங்கள் என்ன செய்யப் போறியள்..

மனதுக்குள் கண்ட கனவுகள் மீண்டும் நினைவில் வந்து அலைமோதுகின்றன. கையில உள்ள காசை வைச்சுக் கொண்டு.. எப்படியாவது.. அடுத்த கட்டப் பயணத்தை பார்ப்பம் என்று ஆசை மனசு தூண்டி விட அத்தனை தமிழ் பேசுறவையும்.. இங்கிலாந்து போவது என்று தீர்மானிக்கிறார்கள்.

அதன் முதற்கட்டமாக பிரான்சை அடைகிறார்கள். அங்கோ.. ஊரில் தட்டிவானுக்கு ஆள் சேர்ப்பது போல.. லண்டன் டோவருக்கு.. ஆள் சேர்க்கிறது கூட்டம். ஆளுக்கு இவ்வளவு தான்.. கொண்டு போய் விடுறம்.. பகிரங்கப் பேரங்கள் வேற.

சரி இங்கிலாந்து போவது என்று தீர்மானிச்சாச்சு.. கிடக்கிறதை வித்துத் தொலைச்சு உள்ளதையும் போட்டுப் போய் சேருவம் என்று ஒரு 8 தமிழ் பேசும் இளைஞர்கள் நாலு கன்ரெய்னர்களில்.. ஒன்றுக்கு இருவராய்.. டோவரை நோக்கி பயணிக்கச் செய்யப்படுகிறார்கள். 

கன்ரெய்னர்கள்.. இங்கிலாந்து எல்லையை அடைகிறது. பரிசோதனைகள் ஆரம்பமாகின்றன. ஒரு கன்ரெய்னரில்.. ஒளிந்திருந்த ஒரு முஸ்லீம் தமிழ் பேசும் இளைஞன் இங்கிலாந்து அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு விடுகிறான். அவனுக்கு விளங்கியது.. இது தான் போக வேண்டிய இடமல்ல. அதற்கு முதலே பிடிபட்டிட்டன் என்று.

உடனே அந்த அதிகாரிகளிடம் உள்ள இன்னொருத்தரும் இருக்கிறார் என்று காட்டிக்கொடுக்கிறான். அந்த நேரத்தில்... அவன் மனசு அவனைக் குடைய ஆரம்பித்துள்ளது.... என்னைப் பிடிச்சு திருப்பி அனுப்பினால்.. நான் ஊரில போய் கஸ்டப்பட.. மற்றவன்.. இங்கிலாந்து போய் அசைலம் அடிச்சு.. பின் ஊருக்கு ஹொலிடேன்னு வந்து நக்கல் அடிச்சான் என்றால்.. என் நிலைமை என்னாவது.. என்ற அக்கறையில் தான் அந்த அதி உன்னத காட்டிக்கொடுப்புச் சிந்தனை.. பிறந்திருக்குது. அதன் பெறுபேறாக காட்டிக் கொடுத்திட்டான்.

அதிகாரிகளும் கன்ரயினரை முழுமையாக சோதனை செய்து அங்கு ஒளிந்திருந்த அந்த இரண்டாம் இளைஞனை கண்டுபிடித்து அழைத்து வர... அவன்.. இவனைப் பார்த்து முறாய்ந்துக் கொண்டு போயிருக்கிறான். படுபாவி.. தான் தான் மாட்டினது என்றில்லாமல் என்னையும் மாட்டிட்டானே என்று... அவன் மனம் உளறுவது இவனுக்கு அவன் கண்ணில் பட்டது.

இறுதியில்.. இருவரும்.. இங்கிலாந்து காவல்துறையால் விசாரிக்கப்பட்டு.. குடிவரவு குடியகழ்வு அதிகாரிகளிடம் கையளிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு மிச்ச இளைஞர்கள் எந்த கன்ரெயினரில் வருவார்கள் என்பது தெரியாததால்.. அவர்களைக் காட்டிக்கொடுக்க முடியவில்லை. அந்தக் கவலையோடு தடுப்பு முகாமில் இருக்க.. இவர்களில் காட்டிக்கொடுத்தவரை அழைத்து அதிகாரிகள் விசாரித்துவிட்டு... அவருக்கு தற்காலிக வதிவிட அட்டை வழங்கி முதலில் வெளியே விடுகிறார்கள்.

வெளியே வந்த அந்த முஸ்லீம் இளைஞருக்கோ மகா சந்தோசம். ஒருவேளை தான் காட்டிக்கொடுத்ததால் தான் தன்னை கெதியா விசா தந்து விட்டிட்டாங்கள் போல என்று மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்காத குறையாக மனதில் சந்தோசம் வளர்த்திருக்க.. கொஞ்ச நேரத்தின் பின் மற்றைய தமிழ் இளைஞனும் அதே அட்டை வழங்கப்பட்டு விடுவிக்கப்படுகிறான்.

+++++

காலம் வழமை போலக் கடந்து ஒட.. 14 ஆண்டுகளின் பின்னும்....
அந்த முஸ்லீம் இளைஞன் man bag ஐ தோளில்.. மாட்டிக்கிட்டு இலண்டன் வீதிகளில்.. அலைகிறான். இன்னும் ஊருக்கு ஹாலிடே போகும் கனவு பலிக்கவே இல்லை என்ற கவலை மட்டுமல்ல... கல்யாணம் கூட ஆகல்லை என்ற கவலையும்.. கையில.. நினைச்ச அளவுக்கு காசும் இல்லை என்ற அளவில்.. அந்த தமிழ் இளைஞன் நடத்தும் உணவகத்தில்.. உணவருந்தியபடி. 

(கதை உண்மைச் சம்பவம் ஒன்றை 99% தழுவியது.)

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 8:32 AM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க