Saturday, April 11, 2009

புலிகளும் தமிழீழ விடுதலைப் போராட்டமும் அழிந்துவிட்டதா..?!இன்றைய திகதியில் சிறீலங்கா சிங்களப் பேரினவாதிகளும் அவர்களின் பேரினவாத பயங்கரவாத அரசும் அதன் படைகளும் இலங்கையில் தமிழர்களின் பாரம்பரிய நிலத்தை கிட்டத்தட்ட முழுவதுமாக வன்பறிப்புச் செய்துள்ள நிலையில், கடந்த 33 வருட கால தமிழீழ தேச விடுதலை நோக்கிய ஆயுத வழிப் போராட்டத்தின் காரணமாக பல்லாயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டும், காயப்படுத்தப்பட்டும் நாட்டை விட்டும் ஊர்களை விட்டும் விரட்டி அடிக்கப்பட்டும் இருக்கும் நிலையில் மேற்படி கேள்வி எழுவது தவிர்க்க முடியாததே.

விடுதலைப்புலிகள் என்ற கட்டுக்கோப்பு மிக்க ஈழத் தமிழ் மக்களால் உருவாக்கப்பட்ட தேச விடுதலைக்காகப் போராடும் இலட்சிய உறுதி மிக்க அமைப்பின் பலம் இழப்பு மற்றும் அதன் கட்டுப்பாட்டு நிலப்பரப்பிழப்புகள் என்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் வேதனையில் ஆழ்த்தி இருக்கும் இந்த நிலையில் மேற்படி கேள்விக்கு விடை தேடுவது அவசியமாகிறது.

இந்த வினாவுக்கான விடை தேடல் விடுதலைப்புலிகள் என்ற அமைப்பின் மீது முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத.. மற்றும் பாசிசவாத மாயைகளை தகர்க்கவும் உதவும்.

விடுதலைப்புலிகள் என்ற அமைப்பை தமிழீழ மக்கள் உருவாக்க முற்பட்டத்தற்கான அரசியல் சமூகப் பின்புலம் பற்றிய தெளிவின்றி இந்தக் கேள்விக்கு விடை காண்பது அவ்வளவு இலகு அன்று.

தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகள் மறுக்கப்படும் வகையில் இலங்கைத் தீவின் ஆட்சி அதிகாரங்கள் சிறீலங்கா சிங்களப் பேரினவாதிகளிடம் பிரித்தானிய காலனித்துவவாதிகளால் கையளிக்கப்பட்டதில் இருந்து முனைப்புப் பெற்று வந்த தமிழர்கள் மீதான சிங்களவர்களின் பேரினவாத ஆதிக்கக் கொள்கைளே தமிழர்களிடத்தில் பிரிவினை என்ற நிலைப்பாடு தோற்றம் பெற முக்கிய காரணமாகும். அந்தப் பிரிவினை நிலைப்பாடே ஈழத்தின் தந்தை என்றழைக்கப்படும் தந்தை செல்வாவால் தமிழீழ தேச விடுதலைக்கான குரலாக பின்னர் அரசியல் பரினாம வளர்ச்சி கண்டது.

தந்தை செல்வா வெறுமனவே உணர்ச்சிப் பெருக்கெடுத்து தமிழீழத்தை உச்சரித்து விடவில்லை.அவர் காலத்தில், அவர் இந்திய நடுவன் அரசுகளின் (முன்னாள் இந்தியப் பிரதமர் சாஸ்திரி அரசில் இருந்து) ஆதரவுடன் சிங்களப் பேரினவாதத் தலைமைகளுடன் தமிழர்களின் அடிப்படை அரசியல் உரிமைக்கான குறைந்த பட்ச விருப்பையாவது நிவர்த்திக்கப் போட்ட பல ஒப்பந்தங்கள் செயலற்று, ஒப்பந்தம் போட்ட சிங்களத் தலைமைகளாலேயே கிழித்தெறியப்பட்ட நிகழ்வுகளில் இருந்துதான் முனைப்புப் பெற்றது.(அப்போதும் சரி இன்றும் சரி சிங்களவர்கள் தமிழர்களை ஏமாற்ற இந்திய மத்தியத்தத்துடன் போட்ட ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்படும் போதெல்லாம் இந்தியா தமிழர்களுக்கு நன்மை பயக்க எதையும் செய்ததில்லை என்பதை கவனிக்க வேண்டும்.)

அதுமட்டுமன்றி தொடர்ச்சியாக சிங்கள ஆட்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த தமிழர் விரோத.. அடக்குமுறைக் கொள்கைகள் மற்றும் அவர்கள் தூண்டிவிட்ட தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரங்கள், அரசியல், நிர்வாக மட்ட பாரபட்சங்கள், கல்வியில் தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட தரப்படுத்தல்கள் என்பன தமிழர்களின் தமிழீழக் கொள்கைக்கு வலுச் சேர்த்தன.

தந்தை செல்வாவின் சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களுக்கு எதிரான "தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமை வேண்டும்" என்ற வடிவில் அமைந்த சாத்வீக போராட்டம் தோற்றுப் போயிருந்த நிலையில் தான் தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க ஆயத்தமாகினர்.

அப்போது ஆட்சியில் இருந்த இந்திய ஆளும் வர்க்கமும் (இந்திரா காந்தி அரசு) அன்றைய உலக ஒழுங்கில் அமெரிக்காவுடனும் சீனாவுடனும் மாறி மாறி உறவாடிக் கொண்டிருந்த சிறீலங்காவின் இரண்டு பிரதான சிங்களப் பேரினவாதக் கட்சிகளினதும் கொட்டத்தை அடக்க தமிழ் இளைஞர்களின் தமிழீழ விடுதலைக்கான போராட்ட திரியை மூட்டி விட்டு அதுவிட்ட விடுதலைத் தீயில் குளிர்காய ஆரம்பித்தது.

இந்திராவின் நகர்வுகள் மிக கவர்ச்சிகரமானவை மட்டுமன்றி தந்திரமானவை. அவர் அன்றைய காலக்கட்டத்தில் அமெரிக்கா, சீனா என்று உறவாடிக் கொண்டிருந்த சிங்கள ஆட்சியாளர்களைப் பணிய வைக்க தமிழர்களின் விடுதலை வேட்கைக்கு உரமூட்டிய அதேவேளை இந்தியாவின் பிரதேச ஒருமைப்பாட்டை கருத்தில் கொண்டு தமிழர்களின் விடுதலை வேட்கையும் ஒரு எல்லை தாண்டக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்தவர்.

அதற்காகவே தமிழ் மக்கள் மத்தியில் எழுந்திருந்த தமிழீழக் கொள்கையை வெல்ல என்று ஒரு தனிப்பெரும் இயக்கத்தை ஆரம்பிக்க விடாமல் தமிழ் மக்களின் போராட்ட பலத்தை எப்போதும் தமது விருப்பப்படி நகர்த்திச் செல்லும் வகைக்கு பலவீன நிலையில் வைத்திருக்க, ஒரே கொள்கைக்காக பல தமிழ் இயக்கங்களை உருவாக்க அனுமதித்தார். இதில் இந்திய உளவு அமைப்புக்களின் பங்களிப்பும் மிக முக்கியமானது.

இப்படியான பின்னணியில் தமிழ் மக்களால் இந்திய நடுவன் அரசின் மற்றும் தமிழக அரசுகளின் அனுமதியோடு உருவாக்கப்பட்ட அமைப்புத்தான் தமிழீழ விடுதலைப்புலிகள்.

அன்றிலிருந்து இன்றுவரை கொண்ட கொள்கையான தமிழீழத் தனியரசு ஒன்றை இலங்கைத் தீவில் தமிழர்களின் பாரம்பரிய நிலைத்தில் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்ய நிறுவுவதே தமிழீழ விடுதலைப்புலிகளின் ஒரே கொள்கை.

இந்திய நடுவன் அரசின் போக்கோடு செல்லின் நிச்சயம் தமிழர்களுக்கான தேச விடுதலை சாத்தியப்படாது மாறாக இந்திய நடுவன் அரசுகள் தமது பிராந்திய நலனுக்காக எமது போராட்டத்தைக் கையாள்வதையே கொள்கையாகக் கொண்டிருக்கும் என்ற காரணத்தினால், இந்திய நடுவன் அரசின் உத்தரவுக்கு அமைய தமிழ் மக்களின் போராட்டம் இந்திய நலன்களுக்கு அப்பால் நகர்ந்திடாது இருக்க இந்திய உளவு அமைப்புக்களால் உருவாக்கப்பட்ட தமிழ் மக்களின் ஒருமித்த பலத்தைச் சீரழிக்க வகை செய்யும் ஒரே இலட்சித்திற்காக பல குழுக்கள் இயங்குதல் என்ற நிலையை தமிழீழ விடுதலைப்புலிகள் மாற்றி அமைத்து ஒரே இலட்சியத்திற்காக ஒட்டுமொத்த தமிழ்மக்களின் பலத்தையும் ஓரணியில் திரட்டிக் கொள்ள முனைந்தனர். அதுவே ஈழத்தமிழர்களின் போராட்டம் இந்தியாவின் எதிர்பார்ப்புக்களோடு இழுப்பட்டுக் கொண்டு செல்லாது அதைத் தாண்டி தமிழீழத் தனியரசை உருவாக்க வகை செய்யும் என்பதை அன்று உணர்ந்து கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமை அதைச் சுட்டிக்காட்டி தமிழ் இயக்கங்களை இலட்சிய உறுதியோடு ஒருமித்து ஓரமைப்பாகச் செயற்பட அழைத்தது.

ஆனால் விடுதலைப்புலிகளின் இத்திட்டத்தை அறிந்து கொண்ட இந்திய நடுவன் அரசும் அதன் உளவு அமைப்புக்களும் ஈழத் தமிழ் மக்கள் உருவாக்கிய விடுதலை அமைப்புக்களிடையேயே சண்டைகளை தூண்டி விட்டு தமிழர்களின் விடுதலைப் போராட்டம் இந்தியாவின் எதிர்பார்ப்புக்களை மிஞ்சி வளர்த்துவிடக் கூடாது என்பதை உறுதிப்படுத்த ஆரம்பித்தன.

இருந்தாலும் தமிழீழ விடுதலைப்புலிகள் தம்மால் இயன்ற அளவு தமிழ் மக்களின் போராட்ட சக்தியை ஒருங்கிணைக்க முனைந்ததுடன் தமிழ் மக்கள் மத்தியில் பலம் பெற்ற அமைப்பாகவும் இலட்சிய உறுதி மிக்க அமைப்பாகவும் வளரத் தொடங்கினர்.

அப்போதுதான் விடுதலைப்புலிகள் மீது இந்தியாவுக்கு பயம் தொற்றிக் கொண்டது. தமது எதிர்பார்ப்பையும் மீறி புலிகள் பலம் பெற்றுவிட்டால் தனது பிராந்திய ஆதிக்க நலனுக்கு அது சவாலாக அமைந்துவிடும் என்று பயந்தது. அதுமட்டுமன்றி புலிகள் தங்கள் ஆயுத பலத்தால் தமிழீழம் அமைத்துவிட்டால் அது இந்திய தேச ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாகி விடும் என்றும் பயந்த இந்தியா தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கவும் அவர்களுக்குப் பதிலாக வேறு அரசியல் தலைமைகளை தமிழ் மக்கள் மத்தியில் உருவாக்கி அவர்களிடம் தமிழீழத் தனியரசுக்கு குறைவான இந்திய தேச ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலற்ற ஒரு தீர்வை திணித்துவிடவும் முடிவுகட்டியது.

அன்றைய இந்திய ஆளும் வர்க்கத்தினரின் மேற்படி முடிவை அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி என்ற ஒரு அரசியல் அனுபவமற்ற குடும்ப அரசியல்வாதி ஒருவரை கொண்டியங்கிய இந்திய நடுவன் அரசுத் தலைமை மூலம் சாதிப்பது என்பதில் இந்திய கொள்கை வகுப்பாளர்களுக்கு அவ்வளவு சிரமம் இருக்கவில்லை.

இதன் அடிப்படையில் 1987 இல் சிங்களப் பேரினவாத அரசுடன் கூட்டுச் சேர்ந்து இந்தியா உருவாக்கிய சதித்திட்டமே சிறீலங்கா - இந்திய ஒப்பந்தமும் இந்திய அமைதிப்படையின் ஈழ வரவும்.

1987 ஒக்ரோபரில் இந்தியா தான் நினைத்தை சாதிக்கும் வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு சிறீலங்கா - இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த விடுதலைப்புலிகள் மீது போர் செய்கிறோம் என்ற போர்வையில் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்திற்கு சமாதி கட்ட ஆரம்பித்ததுடன் தனக்கு பணிய மறுத்த ஈழத்தமிழ் மக்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தது. பல தமிழ் மக்களை அவர்களின் ஊர்களை விட்டு நாட்டை விட்டு விரட்டி அடித்தது.

விடுதலைப்புலிகளும் இந்தியாவின் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டு அதற்கு மாற்று வழிகள் தேடி இந்தியப் படைகளுடன் அதுவும் உலகின் 4வது பெரிய படைகளுடன் தற்காப்புச் சமர் செய்தபடி பின்வாங்கி ஒரு மிகச் சிறிய, காடு சார்ந்த நிலப்பரப்புக்குள் ஒதுங்கிக் கொண்டனர்.

இந்தியப் படைகள் தமிழர் தாயகத்தை முற்றுமுழுவதுமாக ஆக்கிரமித்து நின்றதுடன் தினமும் புலி வேட்டை என்ற பெயரில் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தையும் விடுதலைப்புலிகளின் ஆதரவுத்தளத்தையும் கருவழிக்கும் செயலில் இறங்கினர்.

இந்த நிலையில் இந்திய எதிர்ப்பு கோசத்துடன், ஒரு காலத்தில் இந்திய அரசின் ஆதரவுடன் சிறிமாவோ பண்டாரநாயக்காவால் அழிக்கப்பட்டுவிட்டதாகக் கருதப்பட்ட ஜே வி பி என்ற சிங்கள ஆயுதப் போராட்ட அமைப்பு மீண்டும் கிளர்ச்சியில் ஈடுபடத் தொடங்கியது. அதனைக் கட்டுப்படுத்த, தனது ஆட்சியைத் தக்க வைக்க புலிகளுடன் கரங்கோர்த்த அன்றைய சிங்களப் பேரினவாதி ரணசிங்க பிரேமதாச விரும்பியோ விரும்பாமலோ இந்தியப் படைகளை இடைநடுவில் அதன் நோக்கங்கள் நிறைவேற முன் வழி அனுப்பி வைக்க முடிவு செய்தார்.

1990 இன் முற்பகுதியில் தனது புலி அழிப்புக் கொள்கை நிறைவேறாது தொட்ட குறை விட்ட குறைகளுடன் ஈழத்தை விட்டு வெளியேறிப் போன இந்தியா அன்றிலிருந்து விடுதலைப்புலிகளை அழிப்பதையே குறியாகக் கொண்டு இராஜதந்திர காய் நகர்வுகளைச் செய்யலானது.

இந்தியப் படைகளுக்கு ஈழக் களத்தில் சவாலாக இருந்த அம்சங்களாக புலிகளின் பொறிவெடிகளும் அதிரடி தாக்குதல்களும் ஊடுருவல்களும் கரும்புலித் தாக்குதல்களுக்கான முனைப்புக்களும் ஆகும்.

இந்த நிலையில் 1991 இல் ராஜீவ் காந்தி ஒரு குண்டு வெடிப்பில் கொல்லப்பட அது தற்கொலைக் குண்டென்றும் அதற்கு புலிகளே காரணம் என்றும் குற்றம் சுமத்தி புலிகள் இயக்கத்தை இந்தியாவில் தடை செய்ததுமன்றி பயங்கரவாத இயக்கமாகப் பிரகடனப்படுத்தியது இந்தியா. பின்னர் விடுதலைப்புலிகளை சர்வதே அளவில் தனிமைப்படுத்த இதே பயங்கரவாத உச்சரிப்பை காவித் திரிந்தது இந்தியா.

இதற்கும் ஒரு உள்நோக்கம் உண்டு. இந்திய அமைதிப்படை காலத்தில் தான் உயிருக்குப் பயந்து ஈழத்தில் இருந்து பல தமிழர்கள் புலம்பெயர்ந்து அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் அவுஸ்திரேலிய நாடுகளுக்குச் சென்றனர். அவர்கள் மத்தியில் புலிகளுக்குச் செல்வாக்கு இருந்தமை மற்றும் அவர்கள் புலிகளுக்கு ஆதரவு வழங்கியமை இந்திய உளவு அமைப்புக்களுக்கு தெரிய வந்தது ஒன்றும் பெரிய விடயம் அன்று.

காரணம் புலம்பெயர்ந்த தமிழர்களில் குறிப்பிடத் தக்க எண்ணிக்கையானோர் இந்திய அமைதிப் படையுடன் சேர்ந்தியங்கி புலி அழிப்பு என்ற போர்வையில் சொந்த மக்களையே கொன்றும் சித்திரவதை செய்தும் பிழைப்பு நடத்தியவர்கள். இவர்கள் இந்தியப் படைகளின் இந்திய உளவு அமைப்புக்களின் கூலிகளாகவே செயற்பட்டனர். அதையே புலம்பெயர் தேசங்களிலும் செய்ய ஆரம்பித்தனர். இன்று அவர்கள் சிங்கள பேரினவாத அருவருடிகளாகவும் செயற்படுகின்றனர். இப்படியானவர்களின் உதவியோடு, விடுதலைப்புலிகள் புலம்பெயர்ந்த நாடுகளில் வலுப்பெற்று வருவதை இந்தியா தொடர்ச்சியாகக் கண்காணித்துக் கொண்டதோடு புலிகளை சர்வதேச அளவில் தனிமைப்படுத்தும் திட்டங்களையும் தீட்ட ஆரம்பித்தது.

விடுதலைப்புலிகளை சர்வதேச பயங்கரவாத இயக்கமாக்க இனங்காட்டிக் கொள்ளும் அதேவேளை சர்வதேச நாடுகள் புலிகளுக்கு உதவுவதை தடுக்கும் வாய்ப்புக்களையும் இந்தியா தேடிக் கொள்ள ஆரம்பித்தது. அதுமட்டுமன்றி தான் செய்ய முற்பட்டு தோற்றுப் போன புலி அழிப்பை சந்திரிக்கா அரசைக் கொண்டு தொடர விரும்பியது.

அதற்காக முதலில் யாழ்ப்பாணத்தை சிங்களப் படைகள் கைப்பற்ற வேண்டும் என்பதை முதன்மைப்படுத்தியது இந்தியா. 1995 இல் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற மாதகல்,சித்தங்கேணி பகுதியில் இருந்து முன்னேறிய சிங்களப் படையினர் அராலியை அடைந்த போது இந்தியா வெளியிட்ட கருத்துக்கள் இதனை தெளிவுபடுத்தியது. இருப்பினும் அப்போதைய சிறீலங்கா பாதுகாப்புச் செயலர் அனுரத்த ரத்வத்த அந்த படை நடவடிக்கையை இடைநடுவில் முடித்துக் கொண்டு படைகளை பின்வாங்கிக் கொண்டார். அதன் பின் மிகப்பெரிய சிங்களப் படை வலுவுடன் சூரியக்கதிர் நடவடிக்கைகள் மூலம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினார். அதன் பின் வன்னியை பூரணமாகக் கைப்பற்ற முனைந்தார். இவற்றுக்கு எல்லாம் இந்தியா தனது ஆசீர்வாதங்களை வழங்கிக் கொண்டிருந்தது மட்டுப்படுத்திய நேரடிப்பங்களிப்புக்களையும் அளித்தது.

இதற்கிடையே சர்வதேச அளவில் இந்தியா சந்தித்த நெருக்கடிகள் பற்றி நோக்குவதும் அவசியம். 1990களின் முற்பகுதியில் இந்தியாவின் உற்ற நண்பனான சோவியத் உடைந்து சின்னாபின்னமாகியது.அச்சம்பவம் இந்தியாவுக்கும் அதன் தேச ஒருமைப்பாட்டுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறிடுமோ என்ற அச்சத்தை தோற்றுவித்ததுடன் தனக்கு அது போன்ற நிலை எழாமல் இருக்க புதிய உலக ஒழுங்குக்குள் தன்னை திணித்து வைக்க அவசரப்படுத்தியது. அதுமட்டுமன்றி பிராந்தியத்தில் சீனாவின் அபரிமித பொருளாதார வளர்ச்சியும் பாகிஸ்தானின் தீவிரவாத அணுகுமுறையும் அணுகுண்டு, ஏவுகணைச் சவால்களும் என்று இந்தியாவை நெருக்கடிகள் சூழத் தொடங்கி இருந்தன.அவ் வேளையில் 1990 களின் இறுதிப்பகுதியில் விடுதலைப்புலிகளும் ஓயாத அலைகள் படை நடவடிக்கைகள் மூலம் தாம் சிங்களப் படைகளிடம் இழந்த பகுதிகளை மீண்டுக் கொண்டு யாழ்ப்பாணம் வரை முன்னேறத் தொடங்கினர்.

இந்தியா யாரை முதலில் அழிக்க விரும்பியதோ அவர்கள் மீண்டும் பலத்துடன் இந்தியாவின் எதிர்பார்ப்புக்களுக்கு விஞ்சி போர்க்களத்தில் செல்வாக்குச் செய்வதை அறிந்த இந்தியா தனது பலத்தைக் காட்டி புலிகளைப் பணிய வைத்தது. இந்தியாவின் நட்பின்றி பிராந்திய ஒத்துழைப்பின்றி தமிழீழம் அமைவது சாத்தியமில்லை என்பதை உணர்ந்து கொண்ட விடுதலைப்புலிகளும் இந்தியாவின் சொல்லுக்கு பணிந்து சந்திரிக்கா அரசுடன் யுத்த நிறுத்தம் செய்து அமைதிப் பேச்சுக்குப் போயினர். அப்போதுதான் இந்தியாவுக்கு கொஞ்சம் நிம்மதி பிறந்தது.

ஆனாலும் புலிகளை இப்படியே விட்டால் தனக்கு எப்போது வேண்டும் என்றாலும் அது ஆபத்தாக அமையலாம் என்பதால் புலிகளை இந்த அமைதிப் பேச்சு வார்த்தையோடு பலவீனப்படுத்தி அழிக்க வேண்டும் என்று தீர்மானித்தது இந்தியா.

அதற்குள் செப் 11 தாக்குதல் அமெரிக்காவை ஆட்டிப் போட்டுவிட பயந்து போன உலக வல்லரசு பயங்கரவாதத்திற்கு எதிரான போரைப் பிரகடனம் செய்தது. (பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்பதில் வேறு பல உலக வல்லரசின் நலன் சார்ந்த ஆக்கிரமிப்பு நோக்கங்களும் உள்ளடங்கி இருக்கின்றன. அவை தனியே அலசப்பட வேண்டிய சமாச்சாரங்கள்.)

1983/6 களில் விடுதலைப்புலிகளை போராளிகள் அமைப்பாக உருவகித்து உதவி வழங்கிய இந்தியா அவர்களை உலக அரங்கில் தனிமைப்படுத்துவதை முதன்மையாகக் கொண்டு சிறீலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் என்ற தமிழ் கோடரிக்காம்பின் உதவியுடன் பயங்கரவாதிகளாக உலகில் பதிவு செய்ய முனைப்புக் காட்டுவதை வலுப்படுத்த ஆரம்பித்தது. அதன்படி இந்தியாவின் ஆலோசனையின் பெயரில் சிங்கள அரசின் தூண்டுதலால் விடுதலைப்புலிகள் அமைப்பை அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் தடை செய்தன.

அதுவும் சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னர் அமெரிக்காவின் கழுகுக் கண்கள் சோவியத்துக்கு எதிராகப் போராட அமெரிக்காவே வளர்த்தெடுத்த இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்கள் மீது தனது பயங்கரவாதப் பார்வையைத் திருப்பி அவற்றை பயங்கரவாதிகளாக இனங்கண்டு தாக்குதல் தொடுக்கும் தீர்மானத்தில் இருந்த காலத்தில் என்பதையும் கவனிக்க வேண்டும்.

விடுதலைப்புலிகளை உலக அரங்கில் பயங்கரவாதிகளாகச் சித்தரித்து வந்ததற்கான அறுவடையை இந்தியாவும் சிறீலங்காவும் பெறும் நேரம் நெருங்கியது. அமெரிக்கா இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள் மீதும் அதற்கு உதவிய நாடுகள் மீதும் பயங்கரவாதத்துக்கு எதிரான போரைத் தொடக்கியதும் அதற்குள் விடுதலைப்புலிகளையும் இழுத்துவிட்டு தமது நிறைவேறாத நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள இந்தியா ரகசியமாகவும் சிறீலங்கா பகிரங்கமாகவும் செயற்பட்டன.

புதிய உலக ஒழுங்கில் சீனாவின் அபரிமித பொருளாதார மற்றும் இராணுவ வளர்ச்சி அமெரிக்காவை தூக்கிவாரிப் போட இந்தியாவை வைத்து சீனாவை கட்டுப்படுத்த விரும்பியது அமெரிக்கா. சோவியத் கால பகமை மறந்து இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கி வரும் வேளையில் இஸ்லாமிய உலகில் தற்கொலைத்தாக்குதல் மூலம் தனது கொள்கைகள் நெருக்கடிகளை சந்திக்க ஆரம்பித்த வேளையில் பயங்கரவாதத்திற்கான போரையும் அமெரிக்க புஷ் நிர்வாகம் உச்சப்படுத்தியது. அதில் புலிகளைச் சிக்க வைத்து அழிக்க நினைத்தது இந்தியா.

அதற்கு ஈழத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த சமாதானப் பேச்சும் போர் நிறுத்த ஒப்பந்தமும் தடையாக இருப்பதை உணர்ந்த இந்தியா சிறீலங்காவிற்கு இராணுவ மற்றும் பொருளாதார உதவி அளித்து யுத்த வெறியைத் தூண்டி விட்டு சிங்களப் பேரினவாதிகளை யுத்த வெற்றிப் போதைக்குள் தள்ளியது. அதன் தொடர்ச்சியாக 2006 இல் சிறீலங்காவே ஒருதலைப்பட்சமாக யுத்த நிறுத்தத்தை முறித்துக் கொண்டு போரை ஆரம்பித்தது.

மேற்கு நாடுகளின் ஆதரவோடு தமது போராட்டத்தை சமாதான வழியில் வலுப்படுத்தி அதன் மூலம் இந்தியாவை தமது பக்கம் இழுக்கலாம் என்று புலிகள் போட்ட கணக்கையும் மிஞ்சி, இந்தியா புலிகளை அழிக்க தான் போட்டிருந்த கணக்கை கச்சிதமாக செயற்படுத்த ஆரம்பித்தது.

அதற்கு முன்னோடியாக தனது உளவு அமைப்புக்களின் உதவி கொண்டு சிறீலங்காவுக்குள் ஊடுருவி இருந்த றோ ஆட்களின் பலத்தைக் கொண்டு சிறீலங்கா சிங்கள ஆட்சியாளர்களுக்கு அதிகார, பதவி, பண ஆசைகளை காட்டியும் விடுதலைப்புலிகள் அமைப்புக்குள் பிளவுகளை தூண்டிவிட்டும் தமிழ் தலைவர்களைக் கொல்வதும் மற்றும் குண்டு வெடிப்புக்கள் போன்ற வன்முறைகளையும் தூண்டி விட்டது. இதன் மூலம் விடுதலைப்புலிகள் மீது போருக்கு முன்னான பலவீனப்படுத்தல்களைச் செய்ய ஆரம்பித்தது இந்தியா. புலிகளின் வழங்கற் கப்பல்களை காட்டிக் கொடுத்தன இந்தியாவும் அதன் நட்பு உலகமும். அக்கப்பல்களை இந்திய - சிறீலங்கா கூட்டுக் கடற்படைகள் சர்வதேசக் கடற்பரப்பு வரை சென்று தாக்கியழித்தன.

இந்தியா ஆசை காட்டியது போலவே போரும் தனக்கு சாதகமாக அமைவதைக் கண்ட சிறீலங்கா சிங்களப் பேரினவாத அரசு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து முழுவதுமாக விலகி இந்தியாவின் பூரண ஆதரவோடு நேரடிப்பங்களிப்போடு புலி அழிப்பு என்ற பெயரில் தனது நீண்ட நாள் கனவான இலங்கையில் சிங்கள பெளத்த தேசத்தை நிறுவும் திட்டத்தையும் தமிழின அழிப்பையும் செயற்படுத்த ஆரம்பித்து அதில் குறிப்பிடத்தக்க அளவு வெற்றியும் கண்டுள்ளது.

இந்திய நடுவன் காங்கிரஸ் அரசு.. புதிய உலக ஒழுங்கில் தன்னைச் சுற்றி உள்ள அமெரிக்கா போன்ற நண்பர்களுக்கு இந்தியா ஒரு பொருளாதார வளம் மிக்க பிராந்திய வல்லரசாக உருவாக சிறீலங்காவில் புலி அழிப்பு அவசியம் என்ற தோற்றப்பாட்டை நிலை நிறுத்திய பெருமையுடன் ராஜீவ் படுகொலைக்கு பழிவாங்கலையும் செய்த திருப்தியுடன் இருப்பதாகவும் காட்டிக் கொள்ள முனைகிறது.

அது இருக்க.. இப்போது தற்போதைய போர்க்களம் தோற்றிவித்துள்ள விளைவுகள் குறித்தும் சிறிது கவனம் செலுத்துவது நல்லது. பெரும் இடம்பெயர்வுகளோடு.. பெரும் உயிர் அழிவுகளோடு.. பெரும் சொத்தழிவுகளோடு தமிழ் மக்கள் தாம் முன்னெடுத்த போராட்டம் மீது வெறுப்புணர்வை உருவாக்கும் கைங்கரியத்தை எதிரிகள் எல்லோரும் கூட்டுச் சேர்ந்து லாவகமாகத் திட்டமிட்டு செய்கின்றனர்.

ஒரு புறம் ஆக்கிரமிப்பாளனின் கொடூர மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் போராட்டக் கருவை அழிக்க முனையும் அதேவேளை மக்கள் போராட்டத்தின் மீது சலிப்புற்று நலிவடைந்து அதைக் கைவிடும் வகைக்கு தூண்டப்படுவதும் நடைபெறுகிறது.

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைமை அழிகிறது.. தளபதிகள் அழிகின்றனர்.. ஆயுத களஞ்சியங்கள், கனக ரக ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு விட்டன.. புலிகளின் ஆயுதங்களைக் கொண்டு பல பட்டாலியன் சிங்கள இராணுவத்தை உருவாக்கலாம் என்றெல்லாம் பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன. இவற்றுக்கு காரண காரியம் இல்லாமல் இல்லை.

விடுதலைப்புலிகள் எனித் தலையெடுக்க முடியாத படிக்கு அழிக்கப்பட்டு வருகின்றனர் என்ற எண்ணத்தை போராடும் மக்கள் மத்தியில் விதைப்பதே இவற்றின் முதன்மை நோக்கம். மக்கள் மத்தியில் பெரும் உயிர் அழிவுகளை ஏற்படுத்தும் அதேவேளை போராளிகள் முற்றாக அழிக்கப்பட்டு வருகின்றனர் என்று இனங்காட்டுதலும் போராடும் மக்கள் போராட்டத்தின் மீது பூரண நம்பிக்கை இழக்கவும் அதன் மூலம் அவர்களை தமது வழிக்குக் கொண்டு வரவும் எதிரிகள் பலமாக முனைகின்றனர்.

இன்றைய இதே நடைமுறையை இந்திய அமைதிப்படை 1987-90 காலப்பகுதியில் மேற்கொண்டு விட்டதால் அது ஈழத்தமிழர் பலருக்கு பழக்கப்பட்டுப் போன விடயம். இருப்பினும் புதிய தலைமுறைகளுக்கு இது சவாலான விடயமே. காரணம் அவர்களே தமிழ் மக்களின் விடிவுக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய சக்திகளாக இருக்கின்றனர். அவர்களை நோக்கியே எதிரிகளின் பிரச்சாரங்கள் அதிகம் அமைந்திருக்கின்றன. இதன் மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கருவறுக்க நினைக்கின்றனர் எதிரிகள்.

இச்சவால் மிகு சூழலை தமிழர்களும் அவர்களின் போராடும் அமைப்புமான விடுதலைப்புலிகளும் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றனர் என்பதிலேயே எதிரிகளின் தற்காலிக இந்த வெற்றிகளும் கொள்கை திணிப்புக்களும் எவ்வளவு காலத்துக்கு தொடரக் கூடியவை அல்லது நடைமுறைச் சாத்தியமானவை என்பதை சொல்ல முடியும்.

தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற எண்ணமும் அதற்கான தேவைப்பாடும் இலங்கைத் தீவில் சிங்களவர்களால் உருவாக்கப்பட்டுள்ள நிலை உள்ளவரை தமிழர்களின் போராட்டத்தையோ அவர்களின் போராட்ட அமைப்பான விடுதலைப்புலிகளையோ யாராலும் அழிக்க முடியாது என்பது உறுதி.

நாம் தமிழர்களாக செய்ய வேண்டியது.. காலம் தகாத போது ஓட்டுக்குள் ஒழிந்திருக்கும் ஆமை காலம் தகும் போது தலையெடுத்து வெற்றிப் பயணம் செய்வது போல.. எமது இலட்சியத்தில் என்றும் உறுதியாக இருந்து எமது போராட்டம் வெல்லும் வரை தகாத காலங்களை அரசியல், இராஜதந்திர நகர்வுகள், பொருளாதாரப் பங்களிப்புகள் மற்றும் ஆளணி ஒற்றுமை மூலம் எதிரியின் நகர்வுகளை முறியடித்து வென்று தமிழீழத் தனியரசை நிறவுவதே மாண்ட தமிழ் வீரர்களினதும் தமிழ் மக்களினதும் கனவை மெய்ப்பட வைத்தலையாகும்..!

உலகில் புதிய வரலாற்றை தமிழர்கள் எதிரிகளுக்கு எழுதிச் சென்ற தடமும் தமிழீழ தேசத்தின் விடிவிலேயே தங்கி இருக்கிறது. அதற்காக நாம் பயணிக்க வேண்டிய நெளிவுசுழிவுப் பாதைகள் பல இருக்கின்றன. அவை எல்லாவற்றையும் பொறுமையோடு கடந்து எமது இலட்சியதை எந்த இன்னல்கள் வரினும் கைவிடாது சுமந்து அதை வெல்ல வைக்கும் செயலை உறுதியோடு பொறுமையாக விடாது செய்ய வேண்டும். அப்போதுதான் சர்வதேச, பிராந்தி்ய, பேரினவாதக் கொள்கை வகுப்பாளர்களின் ஆக்கிரமிப்பு அடிமைப்படுத்தல் கொள்கைகளை முறியடித்து தமிழர்களுக்கு மட்டுமன்றி உலகில் அடிமைப்பட்ட வாழ்வு வாழும் மக்களுக்கும் விடுதலைக்கான வழிகாட்டிகளாக எம்மை நாம் வரிந்திட முடியும். அதற்காக உழைக்க வாருங்கள் இனமானமுள்ள மக்களே..!

Labels: ,

பதிந்தது <-குருவிகள்-> at 7:00 AM

13 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

ஐயோ பாவம். நல்லா அழுவுங்கடே

Sat Apr 11, 11:52:00 AM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

இன்று ஈழத்தமிழனின் கண்ணீர் நாளை உங்களுக்கும் என்றாகும். பலமிக்கவன்.. பலமற்றவனை அழிக்க அடிமைப்படுத்த அனுமதிப்பின்.. உங்களின் நிலையும் ஒரு நாள் பலமற்ற நிலையாகும்.. அப்போது.. நிச்சயம் அழுவீர்கள்..! :(

Sat Apr 11, 12:54:00 PM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

//இன்று ஈழத்தமிழனின் கண்ணீர் நாளை உங்களுக்கும் என்றாகும். பலமிக்கவன்.. பலமற்றவனை அழிக்க அடிமைப்படுத்த அனுமதிப்பின்.. உங்களின் நிலையும் ஒரு நாள் பலமற்ற நிலையாகும்.. அப்போது.. நிச்சயம் அழுவீர்கள்..! :(//

கனவு கானும் வாழ்க்கை எல்லாம்
கலைந்து போகும் கோலங்கள் :)

Sat Apr 11, 03:21:00 PM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

உலகில் எல்லாரும் தான் கனவு காணினம். எல்லார் வாழ்க்கையும் நிலையில்லாத கோலம் தான். அதைப் புரிஞ்சு கொண்டீர்கள் என்றால் பெரிசா தத்துவம் கதைக்காமல்.. வாழும் வரை போராடி வாழ்வீர்கள். இன்றேல் அடிமையாகி மிதிபடுவீர்கள்..! :)

Sat Apr 11, 03:50:00 PM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

//உலகில் எல்லாரும் தான் கனவு காணினம். எல்லார் வாழ்க்கையும் நிலையில்லாத கோலம் தான். அதைப் புரிஞ்சு கொண்டீர்கள் என்றால் பெரிசா தத்துவம் கதைக்காமல்.. வாழும் வரை போராடி வாழ்வீர்கள். இன்றேல் அடிமையாகி மிதிபடுவீர்கள்..! :)//

ஆமாம் இப்படி பேசி பேசியே நல்லா மிதிபடுவிறாங்கப்பா. இன்னுமா உலகம் இவங்களை நம்புது. அவ்வ்வ்

Sat Apr 11, 05:10:00 PM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

என்னா செய்வது. நீர் கொடுத்த 10 பவுண்ட் காசுக்கு திரும்ப வாண வேடிக்கை நடக்கவில்லை என்ற ஏமாற்றம். இப்படி தான் பேசுவீர்கள்.

Sat Apr 11, 05:14:00 PM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

தோல்விக்கு பயப்பிடுகிறீர்கள் என்றால் நீங்கள் உலகில் வாழத் தகுதியற்றவர். உங்களோடு சமராடும் எதிரி ஒன்றும் மனிதனற்ற அசுரனோ தீரனோ அல்ல. உங்களின் உரிமையை அவன் தட்டுப்பறிக்கிறான். அவனும் மனிதனே.

பேசிப் பார்த்தோம்.. அமைதி வழியில் கேட்டுப்பார்த்தோம்.. எமது நிலத்தை விழுங்கித்தான் ஓய்வேன் எங்கிறான். அடித்துப் பார்க்கிறோம். எம்மாலும் திருப்பி சிங்களவனை அடிக்க முடியும். எதுவல்ல தேவை. எமக்குத் தேவை எமது மண்ணில் எமக்கான சுதந்திர வாழ்வு. என் வீட்டில் நான் சுதந்திரமாக வாழ வேண்டும். எனது உரிமையை என்னை ஆளும் தகவை நானே தீர்மானித்தபடி.

இன்னொருவன் தீர்மானிக்க நான் வாழ்வதும் ஒரு வாழ்வா..??!

சிந்தித்துப் பாருங்கள்.. உங்கள் வாழ்வும் ஒரு வாழ்வா என்பது புரிய வரும்..!

ஒரு கிளி கூட கூட்டில் அடைபட்டு வாழ்வதை விரும்பாது. சதா பறக்கப் போராடும். ஆனால் நீங்களோ சிந்திக்க தெரிந்த மனிதராக இருந்தும்.. அடுத்தவனுக்கு அடிமைப்பட்டு வாழ உங்கள் இனத்தை அனுமதிப்பதை பெருமையாக எண்ணுகிறீர்கள்.

அதற்குள் 10 பவுணுக்கு வெடிகொழுத்தவில்லை என்று நாம் வருந்துவதாகக் கூறுகிறீர்கள்.

நாம் வெடிகொழுத்துவது ஒன்றும் வேடிக்கை காட்ட அல்ல. எமது சுதந்திர வாழ்வை நிலைநாட்ட மட்டுமே..! புரிந்து கொள்ளுங்கள். பகுத்தறிவு இருப்பின்..! :)

Sat Apr 11, 05:29:00 PM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

@தோல்விக்கு பயப்பிடுகிறீர்கள் என்றால் நீங்கள் உலகில் வாழத் தகுதியற்றவர். உங்களோடு சமராடும் எதிரி ஒன்றும் மனிதனற்ற அசுரனோ தீரனோ அல்ல. உங்களின் உரிமையை அவன் தட்டுப்பறிக்கிறான். அவனும் மனிதனே.@

உரிமை என்பது மனித வெடிகுண்டு வைப்பதும் தமிழ் வெறி பேசுவதும் அல்ல.
இங்கு உரிமை போராட்டம் என்பது ஏழைகளை வெறி ஏற்றி மூளை சலவை செய்து போர் செய்ய தூண்டுவதே ஆகும்

பணம் உள்ளவர்கள் வெளிநாட்டில் இருந்து இணையத்தில் சண்டை போடுவதே உரிமை போராட்டம் ஆகாது.

@பேசிப் பார்த்தோம்.. அமைதி வழியில் கேட்டுப்பார்த்தோம்.. எமது நிலத்தை விழுங்கித்தான் ஓய்வேன் எங்கிறான். அடித்துப் பார்க்கிறோம். எம்மாலும் திருப்பி சிங்களவனை அடிக்க முடியும். எதுவல்ல தேவை. எமக்குத் தேவை எமது மண்ணில் எமக்கான சுதந்திர வாழ்வு. என் வீட்டில் நான் சுதந்திரமாக வாழ வேண்டும். எனது உரிமையை என்னை ஆளும் தகவை நானே தீர்மானித்தபடி.

இன்னொருவன் தீர்மானிக்க நான் வாழ்வதும் ஒரு வாழ்வா..??!@

இப்படி பக்கம் பக்கமாக பேசலாம்.பத்து டோலருக்கு பயன் இல்லை.
நீரே உன் வாழ்வை தீர்மானிக்க வேண்டும் என்றால் பையத்திய கார ஆஸ்பத்திரியில் தான் இருக்க வேண்டும்.

சுதந்திரம் என்பது மனித வெடி குண்டு வைப்பதும் துரோகி என்று பட்டம் கொடுத்து தமிழர்களை கொல்வதும் அல்ல.

பிரபாகரன் புகழ் பாடுவதும் தமிழக தலைவர்களை திட்டுவதும் தான் சுதந்திர போராட்டமா

@

சிந்தித்துப் பாருங்கள்.. உங்கள் வாழ்வும் ஒரு வாழ்வா என்பது புரிய வரும்..!

@

அப்படி போடு ராசா !!

@ஒரு கிளி கூட கூட்டில் அடைபட்டு வாழ்வதை விரும்பாது. சதா பறக்கப் போராடும். ஆனால் நீங்களோ சிந்திக்க தெரிந்த மனிதராக இருந்தும்.. அடுத்தவனுக்கு அடிமைப்பட்டு வாழ உங்கள் இனத்தை அனுமதிப்பதை பெருமையாக எண்ணுகிறீர்கள்.@

எல்லாரும் மனுசங்க தான் ராசா. இனம் மொழி எல்லாம் உயிர் இல்லாத தூடல்.அதுக்கு எல்லாம் ரொம்ப மரியாதை கொடுக்க தேவை இல்லை,

எப்போதும் அடுத்த்வங்களோட அனுசரிச்சு போவனும் அது தான் உலகம். நீ அடுத்தவனோட அன்பாக பழகு புது உலகம் தெரியும்.

நாங்களும் சிங்களவர்களும் சகோதரர்கள் இந்தியர்கள் எங்கள் விடயத்தில் தலையிட வேண்டாம் என்று சொன்ன வாய்களே இந்தியா எங்களுக்கு உதவ வேண்டும் என்று சொல்கிறது.

இது தான்யா உலகம். பெரிய மனுசங்க தங்க புழைப்புக்காக அடிச்சுபாங்க.. அதை வைச்சு உன் வாழ்க்கையை வீணாக்கதே குருவி.

பாரு ஈழம் தமிழன் நெருப்பு செருப்பு என்று பாட்டு எழுதின காசி ஆனந்தன் சென்னையில் அமர்களமாக செட்டில் ஆயிட்டாரு..எத்தனை காரு பங்களா.

ஆனா அவரு எழுதியன படிச்சு வாழ்க்கையை தொலைச்சவன் எத்தனை பேரு


ரொம்ப அடிபட்டது போல தெரியுது.பாத்து பக்குவமாக சொல்லிபுட்டேன்
:)

Sat Apr 11, 05:59:00 PM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

எனக்குப் புரியல்ல.. இந்தியா 13 இலட்சம் பேரை இராணுவத்தில ஏன் சேர்த்து வைச்சிருக்குது.. பாகிஸ்தான் போரில் சாவன் என்று தெரிஞ்சும் போர் விமானத்தை ஓட்டிச் சென்ர இந்திய விமானிக்கு பாராட்டு மழை பொழியுறம்.. ஆனால் ஒருவன் வெடி குண்டைக் கட்டிக் கொண்டு இலக்கை அழித்தால் தற்கொலை என்கிறோம்.

இந்திய ஒருமைப்பாடு.. இந்திய எல்லை என்று 13 இலட்சம் இந்திய இளைஞர்களை பலிக்கடாவாக்க இந்தியா ஏன் நினைக்கிறது.

நீங்கள் எனக்கு எழுதியதை அப்படியே அங்கே போட்டுப் பாருங்கள்.

ஏன் மக்களை அவரவர் சுதந்திரமாக அவரவர் தேசத்தில் அவரவர் பாரம்பரியத்தோடு வாழ விடுனம் இல்லை. எல்லாரும் இந்திய தேசியத்துக்க கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்ற அவசியம் இயற்கையில இல்லையே.

ஏன் பூமிப்பந்தில் எல்லைகளும் நாடுகளும் என்று மண்ணைப் பிரிக்கனும். எல்லோரும் எங்கும் அவரவர் உரிமையோடு வாழ அனுமதிக்கலாமே..??!

ஈழத்தமிழனுக்கு மட்டும் நாடு கூடாது. மிகுதி எல்லோருக்கும் நாடு வேண்டும்.

தமிழன் படை வைச்சிருக்கக் கூடாது.. மிச்ச எல்லாரும் வைச்சிருக்கலாம்.

அவரவர் படையில் தன் உயிரை துச்சம் என்று மதிச்சுப் போராடுறவனுக்கு பாராட்டு.. தன்னுயிரை தன் மண்ணுக்காக மக்களுக்காக விடும் ஈழத்தமிழன்.. மனித வெடிகுண்டு..??!

இந்திய விமானி பாகிஸ்தானுக்குள் ஊடுருவுது தற்கொலை என்று தெரிந்தும் போய் தாக்கின் வீரம்.. தமிழன் தாக்கின்.. அது மனித வெடிகுண்டு..??!

உலகில் இன்னொரு மனிதன் இன்னொருத்தனை ஆயுத பலத்தைக் காட்டி ஏய்க்கிறான். விலங்குகள்.. பறவைகள் அப்படியா செய்து. பறவைக்கு பாராளுமன்றமா நடக்குது. அதுஅது இயற்கையின் எல்லைக்குள் தானே தன் விதியை தீர்மானிச்சு வாழவில்லை. பறவை என்ன தேசம் எல்லை விசா போட்டா வைச்சிருக்குது. அது அது தனக்கு ஏற்ற சூழலில் குடியேறி தனக்கென்று கூடி கட்டி வாழுது.

ஏன் ஈழத்தமிழனுக்கும் உலகத்தமிழனுக்கும் அந்த உரிமை கூட இல்லை.

இவை மூளைச் சலவையல்ல. சிந்தித்திப் பாருங்கள். மனிதருக்குள் மனிதனே வேற்றுமைகளை தோற்றிவித்துவிட்டு ஆளுக்கொரு சட்டம் இயற்றி.. மக்களை அதிகாரத்தாலும் ஆயுதத்தாலும் எதிர்ப்பதை.

ஒரு பெண்ணுக்கு கூடாத கணவனோடு வாழ விருப்பமின்றில் பிரிந்து போக உரிமை அளிக்கும் மனிதன்.. இன்னொரு இனத்தோடு சேர்ந்து வாழ முடியாது எனும் போது.. சேர்த்து வைக்க முண்டி அடிப்பது ஏன்.

இந்திய தேசம்.. உணரனும் இதை. பாகிஸ்தான் பிரியலாம். பங்களாதேசைப் பிரிக்கலாம்.. ஆனால் பஞ்சாப்பும் காஞ்மீரும் ஈழமும் பிரியக்கூடாது. ஏன் அவர்கள் மக்கள் இல்லையா..??!

இந்திய தேசம் என்ற ஒரு மாயை நிலப் பிடிப்புக்காக மக்களின் சுதந்திரத்தைப் பறித்து அவர்களை அடக்கு இணைய வைத்துப் பார்க்க அவர்களை கொலை செய்யும் அரசுகளும் அவர்களின் படைகளும் நிறுத்தட்டும் கொடுமைகளை.


ஈழத்தமிழன் மனித வெடிகுண்டாக வேண்டிய தேவை இருக்காது. எமது மண்ணில் எம்மை வாழவிட்டால் நாம் ஏன் மனித வெடிகுண்டாக வேண்டும்.

நாம் இந்தியாவுக்கு வந்து இந்திய மக்களைக் கொன்றமா. ஏன் இந்திய இராணுவம் எம்மைக் கொல்ல வேண்டும். அதற்கு யார் அனுமதி கொடுத்தது..??! அவர்கள் மக்களைக் கொன்றால் அது நியாயம்.. நாம் இந்திய இராணுவத்தைக் கொன்றால்.. அதை ஏவியவனை தண்டித்தால்.. பயங்கரவாதம்.

நீங்கள் முதலில் மனிதத்தை மனிதமாக புரிந்து கொள்ளுங்கள். ஈழத்தமிழன்.. மனித வெடிகுண்டு என்று நோக்காமல்.. அவனின் தேவையில் உள்ள நியாயத்தை பாருங்கள். நிச்சயம் தெளிவு வரும். இதற்கு மூளைச்சலவை தேவையில்லை. காக்கா குருவி கூட பாரதியின் விடுதலையை உணரும். ஆனால் பாரதியின் பாரத தேசம் உணரவில்லையே.

இயற்கையில் இல்லாத இந்திய தேசம் தேவையா.. இயற்கையில் தமிழன் வாழ்ந்த இடத்தில் அவன் தன் தலைவிதியை தானே தீர்மானித்து வாழ்வது அவசியமா..??! இதையே சிங்களவனிடமும் கேட்கிறோம்.

சிந்தியுங்கள். :)

Sat Apr 11, 06:40:00 PM GMT+1  
Blogger சவுக்கடி செப்பியவை...

முகவரி இல்லா முண்டத்தை யெல்லாம் மதித்து விடை சொல்லிக் கொண்டிருப்பது வீண் வேலை!

Sat Apr 11, 08:01:00 PM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

savuccu.. உங்களின் ஆதங்கம் நியாயம் தான். ஆனால் இப்படி முகவரி இல்லாத பலருக்கு வரும் சந்தேகங்களில் நியாயமில்லையே. அதை நாம் சுட்டிக்காட்ட வேண்டிய ஒரு நிலைப்பாடு இருக்கிறது. ஏனெனில் அவர்களின் பெயருக்குத்தான் முகவரி இல்லை. அவர்களுக்கு இருக்குத்தானே. இங்கு எழுதும் செய்தி அவர்களையும் அவர்கள் போன்றோரையும் போய் சேரும் என்று நம்புகின்றோம்.

அதை கேட்பதும் விடுவதும் அவரவர் விருப்பு. நிச்சயம் இந்தியா போலவோ சிறீலங்கா போலவோ எங்களோடே கட்டிக்கிடந்து சாவுங்க என்று அவர்களை நோக்கிச் சொல்லமாட்டோம்..! :)

Sat Apr 11, 09:17:00 PM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

அநாமதேயமே நீ என்ன கவியரசனா?

Sat Apr 11, 10:41:00 PM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

kuruvikal thanks 4 u r reply

Mon Apr 13, 12:11:00 AM GMT+1  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க